Monday, October 14, 2013

Gravity (2013) - சினிமா விமர்சனம்


தினமலர் விமர்சனம்


நிகழ்விற்கும் கனவிற்கும் பாலமிடும் விஷுவல் மீடியா தான் சினிமா.  சினிமாவை கனவுத் தொழிற்சாலை, ட்ரீம் ஃபாக்டரி இப்படி பல வார்த்தைகளை கொண்டு வர்ணனை செய்வதும் உண்டு. சமீபகாலத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே காமெடி, காதல் டிராமா, ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் இப்படி பல வகையில் வெளிவந்தன. பொதுவாக நாம் வாழ்வில் கண்ட மனிதர்கள், காணக் கூடிய நிகழ்வுகள், அமானுஷ்யங்கள், அடல்ட் நய்யாண்டி, ஹீரோயிசம் இப்படி பல அடித்தட்டில் கதைக்களங்கள் அமைந்திருந்தன. இப்படி பல வகையில் பல படங்கள் வெளிவந்தும், திரையரங்கின் தேவையை உணர்த்திய படங்கள், விரல் விட்டு எண்ணக் கூடியதாகத்தான் அமைந்திருந்தது.  இந்த வரிசையில் முக்கிய அங்கம், ஏன் முதன்மையான அங்கம் என்று கூட கூறும் அளவிற்கு அமைந்திருந்த ஒரு படம் தான் கிராவிட்டி.

படத்தின் கதையை இருவரிக்குள் அடக்கிவிடலாம். இன்ஜினியர் சாண்ட்ரா புல்லக், விண்வெளி வீரர் ஜார்ஜ் க்ளூனி இருவரும் விண்வெளியில் விபத்துக்குள்ளாகின்றனர். விண்வெளியிலிருந்து தப்பித்து இவர்கள் தரை இறங்கினார்களா என்பது தான் கதை.

கதையை கூட சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், அக்கதை அமைந்திருந்த கட்டமைப்பு தான் பிரமிக்க வைக்கிறது. வானம் சுழல்வது போன்ற காட்சி, வானை நோக்கி ஓர் சிறிய கல் வருவது போல் தோன்றுகிறது. அருகே வர வர, கல் ஒரு மனிதனாகவும் வானம் உலகமாகவும் மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனியில் வரவழைத்துவிட்டது முதற்காட்சியின் பிரம்மாண்டமே.

சினிமாவில் ஒலிவடிவம் எத்தனை முக்கிய அம்சம் என்பதை கிராவிட்டி அற்புதமாக உணர்த்தியது.  விண்வெளியில் ஸ்பேஸ் விண்கலத்திற்குள் அமர்ந்திருக்கும் பெண் கத்துவது வெளியே எப்படி கேட்கும், அடைக்கப்பட்டுள்ள அறையில் அமைந்திருக்கும் அமைதியையும், வேகமாகச் சுழலும் காற்று எற்படுத்திய சலசலப்பையும் கிராவிட்டி அற்புதமாக பதிவு செய்திருந்தது.

நிறைய காட்சிகள் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. சாண்ட்ரா புல்லக் சிந்தும் கண்ணீர் துளியில் அவர் முகத்தை பிரதிபலித்திருந்த விதம், விண்களத்தில் மிதக்கின்றவர் மண்ணிற்கு வருகையில் நடக்கத் திணரும் காட்சி நேர்த்திக்கு ஒரு சான்றாகத் தோன்றியது.

விண்கல உடையுடன் நடிகர்கள் சுழன்று கொண்டே இருக்கும் பொழுது கூட அத்தனை வியப்பாக தோன்றவில்லை. ஒரு காட்சியில் சாண்ட்ரா புல்லக், விண்கல உடையின்றி ஸ்பேஸ் ஷட்டில் விசையினால் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பார். எப்படித்தான் இதைப் படமாக்கியிருப்பார்களோ!!!  விந்தை.

ஜார்ஜ் க்ளூனி, சாண்ட்ரா புல்லக் படத்தில் இவ்விரண்டு நடிகர்கள் தான்.  வெறும் இருவரை வைத்து படம் டாக்குமென்டரி போல்தான் பிரயாணிக்கும் என்று எதிர்பார்த்தால் திரைக்கதையில் வரும் அசாத்திய திருப்பங்கள் சாமான்ய ரசிகனைக் கூட ரசிக்க வைக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் காமரோன் இப்படி ஹாலிவுட்டின் பல ஜாம்பவான்கள் பாராட்டியது சும்மா இல்லை என்பதை படம் பார்க்கும் அனைத்து ரசிகர்களாலும் உணர முடியும்.

ப்ளைண்ட் ஸைடில் சாதாரண கதாபாத்திரத்திற்கே நடிகை ஸாந்திரா புல்லக் ஆஸ்கர் பெற்றார். இந்தப்படத்திற்கெல்லாம் சொல்லவா வேண்டும்!!!  

‘எங்கே போகுதோ அங்கே போகிறோம் நாமும்’ என்ற வைரமுத்துவின் வரிகளை மெய்ப்பித்துள்ளது இப்படம். விண்வெளி பற்றி படித்திருப்போம், விண்வெளி ஆராய்ச்சியாளர் பற்றி கேள்விப்பட்டிருப்போம் விண்வெளிக்கே போய் பார்க்கும் வாய்ப்பை இப்படம் ஏற்படுத்தித் தந்துள்ளது.  மாணவர்கள் இப்படத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.

மொத்தத்தில் ‘‘கிராவிட்டி’’ - ‘‘க்ரியேட்டிவிட்டியின் உச்சம்’’. குமுதா மட்டுமில்லிங்கோ குடும்பமே ஹேப்பி.  

thanx -  dinamalar


  • நடிகர் : ஜார்ஜ் க்ளூனி
  • நடிகை : சாண்ட்ரா புல்லக்
  • இயக்குனர் :அல்போன்சா கவுரான்