Tuesday, October 01, 2013

டைப் அடிக்கத்தெரிஞ்சவன் எல்லாம் எழுத்தாளனா? - ஜெயமோகன் விளாசல் @ த தமிழ் ஹிந்து

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?

 

இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள். 


அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். 



அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள். 


ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன். 


அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளை என்னால் மிகத் தெளிவாகவே யூகிக்க முடிகிறது. அங்கே அதுவரை பாடப்பட்டவற்றைப் பாட்டு என்று சொல்லுவதே மிகை. ஒரு பெரும் பாடகர் பாடியதும் அப்பாடல்கள் சாதாரணமாக ஆகிவிட்டன. அங்கே அத்தனை பேரும் உற்சாகமாகப் பாடியமைக்குக் காரணம், அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான். 



10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உரை யாடலில் என் நண்பரான தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சொன்னார், “நிபுணர்களை ஒழிப்பதுதான் வருங்காலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தனித்தன்மையாக இருக்கும்.” 



“எப்படி?” என்றேன். 


“யார் பார்வையாளர்களோ அவர்களிடம் இருந்தே கலைஞர்கள் வரட்டும். பேச்சாளர்கள் வரட்டும். அவர்களே பாடி, அவர்களே பேசி, அவர்களே ரசிக்கட்டும்.” 


எனக்குச் சந்தேகம், “அதெப்படி? ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும் என்றால், அதில் ஒரு தேர்ச்சியும் நுட்பமும் தேவை அல்லவா? அதை ஒரு நிபுணர்தானே கொடுக்க முடியும்? பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனை நேரம் அதைக் கேட்டுக்கொண்டிருப்போம்?” 


“கேட்பார்கள்” என்றார் தயாரிப்பாளர். 


“அந்த உளவியலே வேறு. இன்று சாமானியன் தொலைக்காட்சியில் ஏராளமான நிபுணர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்குக் கிடைக்கும் புகழை மட்டும்தான் அவன் அறிகிறான். அதற்குப் பின்னால் உள்ள கடும் உழைப்பையும் தனித்திறமையையும் அவன் உணர்வதில்லை. தான் சாமானியன் என்று அவனுக்குத் தெரியும்.



 பொறாமையால் அவன் புகழ்பெற்றவர்களை வசைபாடுவான். அலட்சியமாகத் தூக்கி எறிந்து கருத்து சொல்வான். கிண்டலடிப்பான். நாம் அவனிடம் சொல்கிறோம், சரி நீயே வா. வந்து பாடு, ஆடு, பேசு. தன்னைப் போன்ற ஒருவனைத் தொலைக்காட்சியில் பார்த்தால் அவனுக்கு நிபுணர்களிடம் ஏற்பட்ட மன விலக்கம் ஏற்படுவதில்லை.” 




அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்து பெருவெற்றி பெற்றது. பின்னர், அதைப் போன்ற நிகழ்ச்சிகளின் அலை ஆரம்பித்தது. இன்று தொலைக்காட்சிகளில் என்ன நடக்கிறது? கத்துக்குட்டிகள் வந்து நின்று கூவுகிறார்கள். அவர்களைப் போல கோடிக் கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். நிபுணர்கள் பேசினால் கேட்க ஆளில்லை. எதைப் பற்றியும் மேலோட்டமாகக்கூடத் தெரியாதவர்கள் கூடி அமர்ந்து மாறி மாறிக் கூச்சலிட்டுப் பேசும் விவாத நிகழ்ச்சிகள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன.



அவற்றைப் பார்ப்பவர்களின் மனநிலையைக் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறேன். பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள். 



பார்வையாளர்களைப் பங்கேற்பாளர் களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள். 



இதை ஒருவகை ஜனநாயகமயமாதல் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த சிந்தனையாளர்கள்கூட, இன்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் அடிப்படையான ஓர் அம்சம் உண்டு என்பதில் ஐயமே இல்லை. சாமானியனின் குரல் இன்று ஊடகங்களை நிறைத்திருக்கிறது. அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நேரடியாகவே பதிவாகின்றன. 



ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும். 


ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது. எது எல்லாராலும் முடியுமோ அதையே செய்து ரசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வட்டத்துக்குள் கண்ணை மூடிக்கொண்டு முடிவில்லாமல் சுற்றிவருவது போன்றது இது. 


ஊடகத்தின் இந்தப் போலி ஜனநாயகம் நிபுணர்களை அடித்து வெளியே துரத்திவிட்டதைக் காணலாம். சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அதற்குள் வந்த உலகின் முதல்நிலைச் சிந்தனையாளர்களான ஜாரேட் டயமண்ட், டெஸ்மண்ட் மோரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களெல்லாம் விரைவிலேயே அதிலிருந்து அகன்றுவிட்டார்கள். அதில் சாமானியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே இடம் என அவர்கள் அறிந்துகொண்டார்கள். இன்று இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அப்பால் தங்கள் அறிவியக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையாளர்களே அதிகம். 


தொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.
ஜெயமோகன், எழுத்தாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: [email protected] 


 மக்கள் கருத்து 


1. அறிஞர்கள்தான் பேசவேண்டும் மற்றவர்கள் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. அனைவரும் பேசுவதுதான் ஜனநாயகம் என்றுதான் சொல்கிறார். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் எழுதுவதையும் சொல்வதையும் கொஞ்சம் கவனிக்கலாமே என்கிறார். அப்போதுதான் கவனிக்கவும் தெளிவாகப் பேசவும் கைவரும். நம்மைப்போன்றா இன்னொருவர் எழுதுவதை "மட்டுமே"வாசிக்கும்போது இந்தமாதிரித்தான் ஆகும். இங்கே கருத்துச்சொன்ன சிலர் தயவுசெய்து அவர்களின் தரத்தைவிட கொஞ்சம் மேலே உள்ள விஷயங்களை வாசிக்க முயற்சி செய்யவும் 



2  இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் கொஞ்சம் மிகையோ என்று வாசிக்கும்போது தோன்றியது. ஆனால் கீழே வந்துள்ள குறிப்புகளை பார்க்கும்போது மிகச்சரியாக கணித்குத்தான் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு வாதம் முன்வைக்கப்பட்டால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுகூட பார்க்காமல், அதன் தர்க்கம் என்ன என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், மனதுக்குத் தோன்றுவதை உடனடியாக எதிர்வினையாக எழுதிவிடுகிறார்கள். இந்த வழக்கம் ஏன் வருகிறதென்றால் முகநூலினால்தான். இதுதான் டீக்கடை சர்ச்சை. யாரும் யாரையும் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருப்பது. மற்றவர் சொன்னதை பொருட்படுத்தாமல் பேசுவது. இதன் அபாயத்தைத்தான் ஆசிரியர் சொல்கிறார்


எந்த ஒரு கலைஞரும் தன்னுடைய தனி திறமை சிறந்து இருந்தால் யாரலும் எந்த நிலையாலும் ஓரங்கட்டமுடியாது. இதை எல்லாம் கடந்து தான் அவரின் திறமை முன்னிற்கும். அதே போல தான் ஒரு துறையில் உள்ள நிபுணத்துவம் பெற்றவர்களும், அவர்களுடைய நிபுணத்துவம் சிறந்த நிலையில் உள்ளவரை மட்டுமே அவர்களுக்கு வரவேற்ப்பு இருக்கும். சரியான திறமை நிறைந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் எங்கும் புறக்கணிக்கபடமாட்டார்கள், இது உங்களுக்கு தெரியாதா என்ன ? சமூக வலைத்தளங்கள் ஜனநாயக களமா...? சமூக வலைதளங்களில் நிபுணத்துவம் புறக்கணிக்க படலாமா என்ற தலைப்பு இல்லையே.... உங்களுடைய தலைப்பு என்னவோ அதற்கேற்ற பதில் தான் நான் தந்துள்ளேன்... பொச்சரிப்பு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியது உங்களின் தரம்தாழ்ந்த மனநிலையை பிரதிபளிக்கும் ஒன்று...



அன்புள்ள Ayesha Farook, சொல்வதன் அடிநாதம் என்ன என்று தெரிந்துகொள்ளாமல் "உடனடியாக எதிர்வினை ஆற்றியே ஆகவேண்டும்" என்ற உந்துதலால் சொல்லப்பட்டது இது. கட்டுரையின் மையப்பொருள் ஜனநாயக எதிர்ப்போ, சாமான்யனும் எழுதுகிறானே என்ற பொச்சரிப்போ அவன் எழுதுவது வரவேற்பு பெறுகிறது என்ற பொறாமையோ (யார் அப்படி தொடர்ந்து எழுதி தொடர்ந்து வரவேற்பு பெறும் எழுத்தாளனல்லாத சாமான்யன் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ? தொடர்ந்து ஒருவன் எழுதி, தொடர்ந்து வாசக வரவேற்பும் பெரும்போதே, அவன் தனது துறையில் தேர்ச்சி பெற்று வருகிறான் என்பதும் அவன் அதற்கப்புறமும் சாமான்யன் அல்ல, ஒரு எழுத்தாளனே என்பதும் உங்களால் புரிந்துகொள்ள இயலாதா ?) இல்லை. துறை சார்ந்த நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டு நிபுணத்துவம் இல்லாத சாமான்யர்களை மட்டுமே முன்னிறுத்தும் மைய நீரோட்ட ஊடக நிகழ்ச்சிகள் அறிவியக்கம் அல்ல, அதற்கு துறை சார்ந்த வல்லுனர்களையே நாடவேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். மட்டுமல்ல, சமூகம் எனும்போது ஜனநாயகம் வந்துவிடுகிறதுதான். ஆனால் எந்த ஜனநாயகமும் நிபுணர்களை புறக்கணித்தால் அது வளர்ச்சி அடையாமல் தேங்கிப்போகவேண்டியதுதான்.


எனக்கு தெரிந்து டி.வி விவாதங்களில் நிபுணர்களை உள்ளடக்கிதான் பேசுகிறார்கள். ஜெ அவர்களை நிபுணர்கள் இல்லை என்கிறாரா? யார் நிபுணர். நிபுணரை எப்படி அடையாளம் காண்பது? நிபுணரை அடையாளம் காணுதலில் தமிழ் சூழலில் என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் சொல்லி இருந்தால் அவர் பார்வையின் முழு அளவு தெரிந்து இருக்கும். சும்மா போகிற போக்கில் ஏதாவது சொல்லி போவது சரி இல்லை.


Ramiah Ariya Tamil Writer at Writer
சமூக வலைத் தளங்களைப் பற்றிப் பேசும் பொழுது, இதற்கு “முன்னால்” என்ன இருந்தது என்று நாம் முதலில் யோசிக்க வேண்டும். உண்மையில் ஊர் திண்ணைகளில் சிலர் கூடிப் பேசுவது என்றும்; வாசகர் வட்டங்கள் என்றும் நிகழ்ந்த பல விவாதங்கள் இப்பொழுது சகலருக்கும் “பதிப்பிக்கும்” திறன் வந்திருக்கிறது. அவ்வளவு தான். ஜெயமோகனின் கட்டுரைக்குச் சரியான பதில் இது தான் – பழைய வாசகர் வட்டங்களைப் பற்றி அவர் கருத்து என்ன? சங்கீதக் கச்சேரியைச் சேர்ந்து அலசிய ரசிகர்கள் குழுக்களைப் பற்றி அவர் கருத்து என்ன?அவை நிபுணத்துவத்திற்கு எதிரானவை என்று அவர் நினைத்தாரா என்ன?


சாமானியன் ஒருவன் நிபுணனாக மாறும் ஆரம்ப புள்ளியாக தொலைகாட்சியும் வலை தளங்களும் மாறும் சாத்தியம் உண்டு . நிபுணனும் ஆரம்பத்தில் ஒரு சாமானியனாக இருந்திருக்கலாம் என்பதை உணரவேண்டும் . நிபுணன் தன் இடம் பறிபோகும் என்ற அச்சத்தை கை விட்டு சாமானியரின் குறைகளை களைந்து முன்னெழ உதவினால் உத்தமம் .



8 Balasubramanian Ponnuswami at Tamil Nadu Agricultural University ஜெயமோகனின் இந்த வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை: "தொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.



9  இதுல இவர் குறிப்பிடும் "Richard Dawkins", இன்றும் மிகத்தீவிரமாக ட்விட்டரில் இயங்கி வருகிறார்



10  
இன்று காலையில் புதியதலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் இக்கட்டுரை குறித்து பேசப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற "கருத்து நிபுனர்களில்" ஒருவரான தியாகு சரமாரியாக ஜெயமோகனை வசை பாடினார். இந்த ஆசாமி ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு வரியையாவது படித்து புரிந்துகொள்ள முயன்றதற்கான தடயமே அவர் பேச்சில் இல்லை.ஜெயமோகன் இக்கட்டுரையில் வைத்துள்ள விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் அமைந்தது அவரது பேச்சு.



இன்று காலையில் புதியதலைமுறை தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் இக்கட்டுரை குறித்து பேசப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற "கருத்து நிபுனர்களில்" ஒருவரான தியாகு சரமாரியாக ஜெயமோகனை வசை பாடினார். இந்த ஆசாமி ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு வரியையாவது படித்து புரிந்துகொள்ள முயன்றதற்கான தடயமே அவர் பேச்சில் இல்லை.ஜெயமோகன் இக்கட்டுரையில் வைத்துள்ள விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் அமைந்தது அவரது பேச்சு.



நற்சிந்தனையாளர்களுக்கும் வெகுசனங்களுக்கும் இருக்கும் இடைவெளியை இதுபோன்ற கட்டுரைகள் மேலும் அதிகப்படுத்தும். பெரும்பாலும், ஊடகங்கள் வெகுசனங்களின் கருத்துக்களை யாராவது துரை நிபுணர்களை பங்கேற்க வைத்துத் தான் நடத்துகிறார்கள். இவரை யாரும் அழைப்பதில்லையா? எதற்காக., யாரை என்று குறிப்பிட்டுக் கூறினால் நல்லது.



13 vishwa
நற்சிந்தனையாளர்களுக்கும் வெகுசனங்களுக்கும் இருக்கும் இடைவெளியை இதுபோன்ற கட்டுரைகள் மேலும் அதிகப்படுத்தும். பெரும்பாலும், ஊடகங்கள் வெகுசனங்களின் கருத்துக்களை யாராவது துரை நிபுணர்களை பங்கேற்க வைத்துத் தான் நடத்துகிறார்கள். இவரை யாரும் அழைப்பதில்லையா? எதற்காக., யாரை என்று குறிப்பிட்டுக் கூறினால் நல்லது.




சமூகம் என்று வரும் போதே அதில் ஜனநாயகம் வந்துவிடுகிறது. ஒரு நிபுணத்துவம் பெற்றவர் மட்டுமே தன் சிந்தனைகளை எண்ணங்களை எழுத முடியும்,வடிவமைக்க முடியும் என்றில்லை. சொல்ல வந்த கருத்தை ஒரு சமானியனும் புரியும் வகையில் எழுதுவதிலே ஒருவரின் எழுத்து வெற்றி பெறுகிறது. அதை ஒரு சமானியனும் எழுதலாம் அல்லது நிபுணத்துவம் கொண்டவரும் எழுதலாம். நாம் எழுதுவதை விட ஒரு சாமானியர் எழுதுவது வரவேற்ப்பு பெறுகிறதே என்று பல எழுத்தாளர்களுக்கு மனதில் ஒரு காழ்புணர்ச்சி உள்ளது.அவர்கள் மனதில் என்றும் ஒரு சாமானியன் எழுதுவதை விட தங்கள் எழுத்துக்கே வரவேற்ப்பு இருக்க வேண்டும் என்கிற மனநிலை உள்ளது. அந்த மனக்குமறல் கூட சிலர் தங்களின் பெயரை கருதி வெளிபடுத்துவது இல்லை, சிலர் அதை வெளிப்படுத்தி அவமானமும் படுகின்றனர். புத்தக வடிவில் எழுத திறமை இல்லாவிட்டாலும் ஒரு சாமானியரும் கண்டிப்பாக ஒரு சிறந்த எழுத்து படைப்பை கொடுக்க முடியும் என்பதற்கு இந்த சமூகதளங்கள் ஆதாரம். நிபுணத்துவரின் எழுத்துக்கள் போல சாமானியர் எழுதினால் பளப்பளக்காது ஆனால் சாமானியன் சொல்ல வந்த கருத்து பாமரனுக்கு உடனே சென்றடையும்.



15  Sakthivel Sakthi good at own business
சமூக வலைதளங்கள் ஜனநாயகக் களமா? ஜெயமோகன் அவர்களின் கட்டுரை படித்தேன். திரைப்படங்கள் வெற்றி பெற மிக முக்கிய காரணம் மனிதனின் உளவியல்தான். தான் செய்ய இயலாததை ஆனால் செய்ய வேண்டியதை திரையில் கதாநாயகன் செய்வதை ரசிக்க ஆரம்பித்ததால் திரைப்படங்கள் வெற்றி பெற்றது. அதைப்போலத்தான் தொலைக்காட்சியில் பார்வையாளர்களை பங்கேற்க வைத்து உளவியல் அடிப்படையில் தொலைக்காட்சிகள் வெற்றி பெற முயற்சி செய்கின்றன. இதில் அடிமைத்தனமாவது என்னமோ பாமர ஜனங்கள்தான்.


நன்றி - த ஹிந்து


டிஸ்கி - டைட்டில்  சும்மா அட்ராக்சனுக்கு , ஜெமோ அப்படி சொல்லவில்லை, ஆனால் அவர் சொல்ல வந்த அர்த்தம் அதுதான்.