Sunday, September 22, 2013

சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா , 21 9 13 to 24 9 13

திரைப்படங்களில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிளைத் தவிர்க்க வேண்டும் என்று திரைப்படத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.


மேலும், திரைப்படத் துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது தலைமையிலான அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை குத்துவிளக்கேற்றி, சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:


மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா.


சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன.
இந்தக் கலைகளோடு அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன.
அதனால் தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்துக்கு இருக்கிறது.
நான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத் திரைப்படத்துக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டது. அதனால் சிறு முதலீட்டுப் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
சுதந்திரமாகச் செயல்படும் திரைப்படத் துறை: தயாரிப்பாளர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் விருது தோற்றுவிக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பெண்களை உயர்வாக சித்திரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், காணொலித் திருட்டுத் தடுப்புப் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. திருட்டு விடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் என் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
இளைய தலைமுறையிடம்... திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும் நல்ல கருத்துகளை, முற்போக்கு சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், ஜாதி மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்றும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா

Indian cinema 100th Celebration : Free shows in Malls

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.


 இதையொட்டி விழாக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மால் தியேட்டர்கள், மற்றும் பிரிவியூ தியேட்டர்களில் முக்கியமான, புகழ்பெற்ற சினிமாக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது.


 சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் இதனை நடிகை தேவயானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர் சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



சத்யம், அபிராமி, உட்லட்ஸ் ஃபோர் பிரேம் தியேட்டர்களில் 24ந் தேதி வரை பழைய திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.


 ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண், செம்மீன் (மலையாளம்), பங்காரத மனுஷ்ய (கன்டனம்), ஒலவும் திரவும் (மலையாளம்), சங்கொள்ளி ராயண்ணா (கன்னடம்) ஆகிய படங்களை சத்யம் திரையரங்கில் பார்க்கலாம். பாசமலர், நாடோடிமன்னன், சாட்டை, பருத்தி வீரன், அரவான், அடிமைப்பெண் (தமிழ்) மாயாபஜார், மகதீரா (தெலுங்கு), சத்திய ஹரிச்சந்திரா (கன்னடம்) ஆகியவை அபிராமியில் திரையிடப்படுகிறது. சிரித்து வாழ வேண்டும், ஆண்டவன் கட்ளை, சவாலே சமாளி, கலாட்டா கல்யாணம், ஆகியவற்றை உட்லண்ட்டிலும், பங்காரத மனுஷ்ய, பாண்டவ வனவாசம், சவுத்துக்குன்ன அம்மாயிலு, குண்டம்ம கதா (தெலுங்கு) காவ்ய மேளா தெலுங்கு, கௌரவம் (தமிழ்) ஆகியவற்றை ஃபோர் பிரேமிலும் காணலாம்.


thanx - dinamani, dinamalar