Friday, July 05, 2013

தர்மபுரி இளவரசன் -கொலையா? தற்கொலையா?

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வன்முறை சம்பவங்கள்:

இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ஜெய்சந்திரன், சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசராணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆட்கொணர்வு மனுவை, தேன்மொழி வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் தெரிவித்தார். நீதிபதிகள், வழக்கை இன்று, ஜூலை 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திவ்யா, "எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. அம்மாவுடன் இருப்பேன். என் தந்தை இறந்ததை ஈடு செய்வேன்' என, தெரிவித்தார். இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில், இளவரசன் உடல், நேற்று பிற்பகலில் கிடந்தது. அவர் ஓட்டிச் சென்ற, "பல்சர்' பைக், அந்த பகுதியில் இருந்தது.

தர்மபுரி ரயில்வே போலீசார், கூறியதாவது:

குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவையில் இருந்து, பிற்பகல், 1:20 மணிக்கு, மும்பை செல்லும், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்துள்ளார். ரயில் தண்டவாளத்தில், தலை வைத்து படுத்திருந்தால் மட்டுமே, உடல் துண்டாகும். ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்வோரின் உடல், தூக்கி வீசப்படும். இளவரசன், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகையில், ""திவ்யாவின் பேட்டியை, காலையில் படித்து, இளவரசன் கதறி அழுதான்; நாங்கள் ஆறுதல் கூறினோம். காலை, 10:00 மணிக்கு, செலவுக்கு பணம் கேட்டான். நான், வங்கி ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்தேன். அதன் பின், பிணமாக என் மகனைப் பார்க்கிறேன்,'' என்றார். இளவரசன், ரயிலில் அடிபட்டு கிடந்த இடத்தில், மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டவாளம் அருகே கிடந்த உடலை, எடுக்க விடாமல், உறவினர்கள் தடுத்தனர். இதனால், மாலை, 4:30 மணி வரை, உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், போலீசார் திணறினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டை பாக்கெட்டில் காதல் கடிதங்கள்:

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின், சட்டை பாக்கெட்டில் இருந்து, இரண்டு கடிதங்களை, போலீசார் கைப்பறியுள்ளனர். கடந்த, 2011ல், திவ்யாவுக்கு, எழுதிய கடிதமும், திவ்யா, இளவரசனுக்கு எழுதிய கடிதமும் அவை. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை, போலீசார் கூற மறுத்து விட்டனர். இந்த கடிதங்கள், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்கள் ஆகியவை, இளவரசன் ரயில் முன் பாய்ந்து இறந்திருப்பதை, உறுதி செய்வதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை, 5:10க்கு, பெங்களூருக்கு செல்ல, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி நோக்கி வந்தது. அந்த நேரத்தில், இளவரசனின் பிணத்தை எடுக்க விடாமல், உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் சிவாடியில் நிறுத்தப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு, தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், ஐந்து மாவட்ட, எஸ்.பி.,க்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மாவட்ட கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்:

கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இளவரசனின் உறவினர்கள், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பதாகக் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் அதிகரித்தது. சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி.,க்கள் ஆஸ்ராகார்க், செந்தில்குமார் ஆகியோர், அங்கு கூடியிருந்தவர்களிடம், பேச்சு நடத்தினர். "பரிசோதனை மூலம் மட்டுமே, கொலைக்கான காரணத்தை, தெரிந்து கொள்ள முடியும். எனவே, பிணத்தை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, மாலை, 5:45 மணிக்கு, உடலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிலர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, கடைகளை தாக்கினர். தொடர்ந்து, கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுதும், பதற்றம் நிலவி வருவதால், 144 தடை உத்தரவு விதித்து, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார். போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல், கிராமப் பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.



மக்கள் கருத்து 



1. திரைக்கதையை போல சம்பவங்கள் நடந்தாலும் காதலர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடம்...




2. நம்பமுடியவில்லை கொலையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு . இந்த காதல் தேவையா ...எத்தனை சண்டை, வீடுகள் நாசம் அடிதடி ...கடைசியில் எல்லாம் போச்சு வாழகத்துக்கங்கடா 



3. கொடுமையான வேதனை என்று தான் வர்ணிக்க தோன்றுகிறது. காதல் உன்னதமானது அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத இருவரின் இனக்கவர்ச்சி ஈர்ப்புக்கு பெயர் காதல் அல்ல. இந்த பெண்ணின் செயலும் இளைஞரின் முடிவும் ஒரு பாடம். காதல் வேறு. பருவ வயதில் ஏற்படும் இன கவர்ச்சி என்பது வேறு. 



4 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் அத விட்டு இப்படி கோழை தனமாக உயிரை விடுவதால் என்ன பயன் போன உயிர் திரும்பி வருமா.இளவரசன் பொறுமையோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திவ்யா மனசு மாறி ஒரு நாள் திரும்பி வந்து இருப்பார்.மனதளவில் தைரியம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த முடிவாகவே கருதுகிறேன்...மிகவும் வருத்தமான செய்தி...


5. பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாத வரை பிரச்சனை இல்லை எப்போது இந்த 10 எக்ஸாம் வரும்போது ஜாதி செர்டிபிகாடே வாங்க அரம்பிதொமோ அப்பொழுது தான் ஜாதி வெறி வெளியில் வர அரம்பிர்கர்த்து..அதுவே வளர வளர அதிகமா ஆகிறது...முதலில் இந்த ஜாதியை certificate ஒழித்து வருமானத்தை அடிப்படையாக கொண்டு மற்றம் செய்ய வேண்டும்... ஆனால் அதை செய்தால் என்ன செய்வார்கள்????????? 


6. ஜாதி வெறி பிடித்து அலையும் மனிதர்களை கண்டால் சவுக்கடி கொடுக்க தோன்றுகிறது. பலர் இங்கே காதலால் தான் ரெண்டு உயிர்கள் போய்விட்டன என்று காதலை குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு ஜாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா? காதல் புனிதமானது என்று பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கூறியுள்ளனர். எவரும் இதுவரை புனிதமான ஜாதி என்று எதையும் குறிப்பிடவில்லை. காதலிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கும் பலர் கருத்தை மாற்றி கொள்ளவேண்டும். இந்த ஜாதி வெறி, வரதட்சணை பிணி ஒழிய, கலப்பு திருமணமே சிறந்த மருந்து. 


தமிழ்நாட்டினுடைய கோர முகம் தெரிகிறது இளவரசனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டிகொள்கிறேன் . 


8. எல்லா மீடியாக்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து இளவரசன் "தற்கொலை" செய்துகொண்டான் என்று முடிவு செய்துவிட்டன. எதற்கு இந்த அவசரம்? கோர்ட் முடிவு செய்யட்டுமே இது கொலையா இல்லை தற்கொலையா என்று. அதுவரை மீடியாக்கள் பொறுமை காப்பது நல்லது.