Sunday, June 02, 2013

விமானப் பயணிகள் கவனிக்க...


சென்ற வாரம் ஹாங்காங் விமான பயணத்தின் போது எனக்கு நடந்த அனுபவம் இது...


விமானம் பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பயணிகள் பெட்டிகள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எனது பை இடம் மாறி இருந்ததைக் கவனித்தேன். சரி, வேறு யாரோ தனது பையை வைப்பதற்காக இடம் மாற்றி வைத்திருக்கக் கூடும் என்று நினைத்தேன்.

ஹாங்காங் நெருங்கியவுடன், ஏதோ ஒரு உள்ளுணர்வில், இடம் மாறி இருந்த எனது பையைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அதிலிருந்த எனது நகைகள் மற்றும் ரொக்கப் பணம் காணவில்லை.

மொத்தம் 120 பயணிகள். நானும், எனது கணவரும் உடனடியாக விமானத்தின் இருபக்க கதவையும் மூடச் சொல்லிச் கத்தினோம்.

நிதானமாக எங்கள் அருகில் வந்த விமான பணிப்பெண், செக்யூரிட்டியை அழைத்திருப்பதாகவும் அதற்குள் பயணிகள் வெளியேற அவசரப்படுவதாகவும் தெரிவித்தாள்.

நானும் என் கணவரும் எங்களால் இயன்ற அளவு பயணிகளைத் தடுக்க போராடிக் கொண்டிருந்தோம்.

இதற்குள் மேலும் சில பயணிகள், தங்களது உடமைகளும் இதுபோல் களவு போன அனுபவங்களை வருத்தத்துடன் பகிர்ந்தனர்.

அப்போது எனக்கு முன்னால் நின்றிருந்த ஒருவர் தனது பையிலிருந்து நகைகள், காமிரா, பணம், டாலர் நோட்டுக்களை நைஸாக நழுவ விடுவதைப் பார்த்தேன். அந்த சமயத்தில் போலீஸ் மற்றும் செக்யூரிட்டியும் வந்துவிட என் பொருட்கள் எனக்குக் கிடைத்தன.

மேலும், இதுபோல அடிக்கடி திருட்டுகள் விமானத்தில் நடைபெறுகிறது என்பதும் தெரிய வந்தது.

பயணிகள் திரைப்படம் பார்க்கும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் சரியாகக் கணக்கிட்டு பின் வரிசையில் உட்கார்ந்து, திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனராம்.

இதோ எனது அறிவுரை:
கையில் எடுத்துச் செல்லும் எந்தப் பையாக இருந்தாலும், பூட்டு போட்டு விடுங்கள்.

காலுக்குக் கீழேயே உங்கள் பை இருந்தாலும், அது பூட்டப்படாமல் இருந்தால் பாதுகாப்பானது அல்ல. சென்ற வாரம் ஒரு பயணியின் பையிலிருந்த சிறு பர்ஸ், அவர் தூங்கும்போது பக்கத்துப் பயணியால் களவாடப் பட்டுவிட்டது.
நகைகளை அணிந்து கொள்வதே பாதுகாப்பு.

விமானத்தில் வருபவர்கள் எல்லாம் ரொம்ப கண்ணியமானவர்கள் என்று எண்ணி ஏமாறாதீர்கள்.

- லக்ஷ்மி நடராஜன், திருப்பூர்