Wednesday, May 29, 2013

தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!


தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!

ஒரு போதை நிலவரம்

டி.எல்.சஞ்சீவிகுமார், ஓவியம்: ஹாசிப் கான்

பூரண மதுவிலக்கு கோரி நடையாக நடக்கிறார் வைகோ. ராமதாஸ், தமிழருவி மணியன் தொடங்கி காங்கிரஸின் ஞானதேசிகன் வரை மதுவிலக்கை அமல்படுத்த அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். தியாகி சசிபெருமாள் வாரக் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார். தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் மனதில்கூட அப்படி ஓர் எண்ணம் இழையோடுவதாகச் செய்திகள் கசிகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன? பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நீங்களே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும்!  

முன்பெல்லாம் டாஸ்மாக் கடைக்குச் சென்று ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை மதுபானம் வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட முடியும். ஆனால், இப்போது கேட்கும் பிராண்ட் கிடைப்பது குதிரைக்கொம்பு. 'கேட்ட குவார்ட்டர் கிடைக்காதது ஒரு குற்றமா?’ என்று உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு, இதன் பின்னணியில் இயங்குவது அசுர அரசியல்!

வெளியே தெரியாத ஒரு சிறு புள்ளிவிவரம்... ஒரு டாஸ்மாக் கடையில் உயர் ரக மதுபானப் பெட்டி ஒன்றை (48 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கியது) விற்பனை செய்தால் அந்தக் கடையின் பணியாளருக்குக் கிடைக்கும் கமிஷன் 25 ரூபாய். இது அரசாங்கம் கொடுப்பது அல்ல... சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் கொடுப்பது. தங்கள் நிறுவனத்தின் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு ஒரு பணியாளருக்கே இவ்வளவு ரூபாய் கமிஷனாகத் தர முன்வரும் மதுபான நிறுவனங்கள், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் சுமார் 50 லட்சம் பெட்டிகளைத் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் சங்கிலித் தொடர் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எவ்வளவு லட்சம் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும்?  

சரி, அப்படி கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து கொள்முதல் 'செய்யப்படும்’ மதுபானங்கள் முழுமையாக விற்பனையாகின்றனவா? இல்லை... இல்லவே இல்லை! ஏனெனில், மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் லாபத்துக்காக வாடிக்கையாளர்கள் விரும்பாத, மார்க்கெட்டில் விலைபோகாத மதுபானங்களே அதிக அளவில் டாஸ்மாக்கால் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்படிக் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக்கில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் மதுபானங்களின் மதிப்பு மட்டும் சுமார் 2,465 கோடி ரூபாய்! இவ்வளவு மதிப்புள்ள மதுபானங்கள் தேக்கம் அடைந்திருக்கும் நிலையிலும், மேலும் மேலும் விற்பனை ஆகாத, சந்தையில் டிமாண்ட் இல்லாத மதுபான வகைகளையே கொள்முதல் செய்து குவிக்கிறதே டாஸ்மாக்... ஏன்?  

பொதுவாக, தமிழகத்தில் ஆட்சி மாறினால் காட்சி மாறும். புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக்கப்படுவது முதல் தலைமைச் செயலாளர் டம்மி ஆக்கப்படுவது வரை தலைகீழ் மாற்றங்கள் நிகழும். சாமான்ய வாக்காளன்கூட உணரும் அரசியல் சுழற்சி இது. ஆனால், சாராய வியாபாரத்தில் மட்டும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறார்கள் அரசியல்வாதிகள். கடந்த தி.மு.க. ஆட்சியில் சசிகலா சம்பந்தப்பட்ட மிடாஸ் நிறுவனம் எந்த அளவுக்குக் கோலோச்சியதோ, அதைவிட அதிகமாகவே தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சுகின்றன தி.மு.க. பிரமுகர்களின் மதுபான ஆலைகள்! (பார்க்க பெட்டிச் செய்தி)


தமிழகத்தில் தற்போது 11 மதுபான ஆலைகள் இருக்கின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் ஓரிரு நிறுவனங்கள் தவிர, மற்றவை அனைத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் முக்கியஸ்தர்கள்தான் நேரடி, மறைமுகப் பங்குதாரர்களாக இருக்கின்றனர். மேற்கண்ட நிறுவனங்களிடம் மதுபானம் கொள்முதல் செய்வது தொடங்கி டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளை வரையறுப்பது வரை முடிவெடுக்கும் அதிகாரம்கொண்ட கமிட்டி ஒன்று இருக்கிறது. அந்தக் கமிட்டியின் தலைவராகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழக உள்துறைச் செயலர் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பதவி, துறையின் அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அப்போதே இது பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.  


பொதுவாக, டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுப்படி, சாதாரண ரக மதுபானங்கள் 40 சதவிகிதம் (மானிட்டர், ஓரியன் பிராந்தி, ஓல்டு மங்க் ரம் போன்றவை) நடுத்தர ரகம் 40 சதவிகிதம் (எம்.சி., எஸ்.என்.ஜே., டே அண்ட் நைட் பிராந்தி, பேக் பைப்பர் விஸ்கி போன்றவை), உயர் ரகம் 20 சதவிகிதம் (மார்பியஸ், பிரிட்டிஷ் எம்பயர், ஹாப்சான்ஸ் பிராந்தி, சிக்நேச்சர் விஸ்கி) என மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும். உயர் ரக வகை மதுபானங்கள் டாஸ்மாக்கின் சில்லறை விற்பனையில் அதிக அளவு விற்பனை ஆகாது என்பதாலேயே இப்படி ஒரு முடிவு. ஆனால், துறையின் அமைச்சர் எப்போது டாஸ்மாக் கமிட்டியின் தலைவராக மாற்றப்பட்டரோ அப்போது 'கன்செய்ன்மென்ட் ஆர்டர்’ என்கிற ஒரு புதிய விதிமுறை புகுத்தப்பட்டது. அதாவது, எந்த மதுபான ரகம் அதிகம் விற்பனை ஆகிறதோ அந்த மதுபானத்தைக் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்பதே அந்த விதி.

''மேலோட்டமாகப் பார்த்தால் இந்த முடிவு நியாயமானதாகப்படும். ஆனால், அதில் இருக்கும் அரசியல் வேறு. ஒரு குறிப்பிட்ட ரக மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டு, டாஸ்மாக்கின் சில்லறை விற்பனைப் பிரிவுக்குச் சென்று வாடிக்கையாளர் கைகளுக்குச் சென்று காசாக மாறினால் மட்டுமே அது விற்பனை ஆனதாக அர்த்தம். ஆனால், குடோனில் இருந்து கடைகளுக்குக் குறிப்பிட்ட ரக மதுபானங்களை அனுப்பிவிட்டாலே அந்த ரகம் விற்பனை ஆகிவிட்டதாகக் கணக்குக் காட்டப்படுவதுதான் அந்தப் புதிய விதிமுறையின் நடைமுறையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆர்டர் அளிக்கப்படுகிறது.


 சரக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால், அவற்றை வாங்குவதில் குடிமகன்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால், டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுபானங்கள் விற்பனை ஆகாமல், தேங்கிக்கிடக்கின்றன. நிறைய கடைகளில் அவற்றை வைக்க இடம் இல்லாமல், அருகில் இன்னொரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து இருப்பு வைத்திருக்கிறார்கள்!'' என்கிறார்கள் ஊழியர்கள். ஒரு கடையின் ஒருநாள் விற்பனையைப் பொறுத்து, அதைப் போல் அதிகபட்சம் 10 மடங்கு மதிப்பு கொண்ட மதுபானங்களை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் கடையில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் காப்பீடு கிடைக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், இப்போதோ நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் விற்பனை ஆகும் கடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம். மேற்கண்ட மோசடிக் கொள் முதல் விதியும் தூக்கி எறியப்பட்டுவிட்டது. எந்தச் சாராய ஆலை நிறுவனங்கள் அதிகம் கமிஷன் அளிக்க முன்வருகின்றனவோ, அவற்றின் மதுபான வகைகள்தான் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆனால், இவ்வளவு முறைகேடுகள், ஊழல்கள் நடந்தும் டாஸ்மாக் நிர்வாகம் லாபத்தில்தானே இயங்குகிறது. அந்த வருவாயை வைத்துத்தானே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிற கேள்வி எழலாம். நியாயமான சந்தேகம்தான்! இவ்வளவு சீர்கேடுகளைத் தாண்டியும் டாஸ்மாக் கொள்ளை லாபத்தில் கொழிப்பதற்குக் காரணம், அவ்வளவு அநியாயமாகக் குடிக்கிறார்கள் தமிழகக் 'குடி’மகன்கள்! அப்படி எனில், டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீராக்கினால், இன்னும் எவ்வளவு லாபம் குவியும். (அதற்காக டாஸ்மாக்கை லாபகரமாக நடத்துங்கள் என்று சொல்லவில்லை!)

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடைமுறைகள் குறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டேன். தன் பெயரையோ, பொறுப்பையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் பகிர்ந்துகொண்டது பகீர் தகவல்கள். ''துறைரீதியிலான எந்தச் செயல்பாடுகளுக்கும் கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டுமே எங்கள் வேலை. டாஸ்மாக் கடைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவருக்கு நெருக்கமான ஒரு அதிகாரிதான் மொத்த முடிவுகளையும் எடுக்கிறார். இருவரும் பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் கைகள்கூடக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் முதல்வருக்குத் தெரியுமா... தெரியாதா என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது!'' என்றார்.

2012-13ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்தத் துறைகளின் வருவாய் சுமார் 1 லட்சத்து 500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக்  நிறுவன விற்பனை மூலம் திரட்டப்பட்டது. இந்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் மீதான விவாதங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் தமிழகத்தின் பட்ஜெட்டை மட்டும் அல்ல... அரசியலை, பணப்புழக்கத்தை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட சமூகத்தின் எதிர்மறை நிகழ்வுகளை... எதிர்காலத் தமிழகத்தின் கணிசமான பகுதியை மறைமுகமாக நிர்ணயிப்பது சாராய ஆலை அதிபர்கள்தான். கசப்பான உண்மை என்றாலும் இது நம் சாபக்கேடு!

இப்போது நீங்களே சொல்லுங்கள்... தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமா?


யார் யாரிடம் எந்தெந்த நிறுவனங்கள்?

கோல்டன் வாட்ஸ் டிஸ்டெல்லரீஸ். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா தொடர்புடைய நிறுவனம் இது.


 எலைட் டிஸ்டெல்லரீஸ். தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் இதன் உரிமையாளர்.


 எஸ்.என்.ஜே.டிஸ்டெல்லரீஸ். இதன் இயக்குநர்கள் ஜெயமுருகன், கீதா. கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த ஜெயமுருகன்.


 கால்ஸ் டிஸ்டெல்லரீஸ். காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். தி.மு.க. முகாமில் நெருக்கமான தொடர்புடையவர்.


 இம்பீரியல் ஸ்பிரிட்ஸ். உரிமையாளர் தரணிபதி ராஜ்குமார். இவரது தந்தை கிருஷ்ணசாமி கவுண்டர் தி.மு.க. ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்தவர்.

 மிடாஸ். சசிகலாவின் உறவினர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்.

இது போக, திண்டுக்கல் அருகே ஆளும்கட்சியின் முக்கியப் பிரதிநிதிகள் இருவர் அனுமதி பெற்று ஒரு சாராய ஆலையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி தொடங்கலாம்!

லேபிள் கலாட்டா!  
.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தங்களுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி அளிக்கும்படி மதுபான ஆலை அதிபர்கள் கேட்டார்கள். சட்ட நடைமுறைகளால் கொள்முதல் விலையை உயர்த்த முடியாது என்று கைவிரித்தது அரசு. அதைச் சமாளிப்பதற்கு இன்னொரு குறுக்கு வழியைச் சொல்லித் தந்தார்கள் அதிகாரிகள். அதாவது, ஏற்கெனவே இருக்கும் பிராண்டின் பெயரில் சப்ளை செய்தால் தானே கொள்முதல் விலையை உயர்த்தித்தர முடியாது? புதிய பிராண்டுகளை உருவாக்கி, அடிப்படைக் கொள்முதல் விலையை உயர்த்தி சப்ளை செய்யுங்கள். 

அந்த பிராண்டுகளுக்கு அதிக விலை தருகிறோம் என்று ரூட் போட்டுக்கொடுத்தார்கள். அதாவது, மதுபான பாட்டிலின் லேபிளை மட்டும் மாற்றுவது. இதனால்தான் மேன்சன் ஹவுஸ் பிராந்தி, மேன்சன் ஹவுஸ் அல்ட்ரா ஆனது. கிங்ஃபிஷர் ஸ்டிராங் பியர், கிங்ஃபிஷர் சுப்பீரியர் ஸ்டிராங் ஆனது. இப்படியாக உருவானவைதான் லா மார்ட்டின், பிரிட்டிஷ் எம்பயர், எம்.ஜி.எம். கோல்டு, மென்ஸ் கிளப், அரிஸ்டோகிராட், ராயல் அக்கார்டு போன்றவை எல்லாம். இன்றும் வாரத்துக்கு நான்கைந்து புது பிராண்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி வெறும் லேபிள்கள் மட்டும் மாற்றப்பட்ட மதுபானங்களுக்குக் 'குடி’மகன்கள் கொடுக்கும் கூடுதல் விலை எவ்வளவு தெரியுமா? குவார்ட்டருக்கு ரூபாய் 10 முதல் 30 வரை. அரசு கொடுக்கும் கூடுதல் கொள்முதல் விலை ரூபாய் 5 முதல் 10 வரை. இரண்டுமே... மக்கள் பணம்தான்!

thanx - vikatan 

 readers views

1.வார்த்தைக்கு வார்த்தை அம்மா, புரட்சி தலைவி என்று சொல்லும் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் இந்த மதுக்கடை புறச்சியைப் பற்றித்தான் சொல்கிறார் என்பது தெளிவாகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கும் வந்ததிலிருந்து மக்கள் நல திட்டங்களில் வறட்சிதான். மதுக்கடையில் மட்டும் திமுக வை விட, அதிமுக புரட்சி படைத்துள்ளது.

2. திமுக, அதிமுக இரண்டும் ஒரே (ஊழல்) குட்டையில் ஊறிய இரு மட்டைகள் ' என்று சும்மாவா சொன்னார் கர்ம வீரர் காமராஜர் ! சசி கலாவுக்கும் , டிஆர்பாலுவுக்கும் ஒரு கேள்வி ! அமிர்தமும் ஓர் அளவிற்கு மேல் போனால் விஷமாகி விடுமே ! வரும் போது எதை எடுத்துக் கொண்டு வந்தீர்கள் ? போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகப் போகிறீர்கள் ? இத்தனை குடும்பங்கள் வயிறெரிந்தால் அந்தப் பாவம் உங்கள் இருவரையும் சும்மா விடுமா? விடாது ! அது இறைவன் ஆணை!

3. மதுக்கடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறாயிரம் தாலிகள் அடகு கடைக்கு ஹிந்தி பயில போகின்றன, மதுகடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறுநூறு தாலிகள் கழுத்தில் இருந்து இறங்குகின்றன... ஆம், அரசு தரும் "தாலிக்கு தங்கம் திட்டம்" ரொம்ப முக்கியமாக்கும்....


4. பாஸ்பரஸ் குண்டு போட்டு 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே என்ற மிருகத்தை விட இவர்கள் கொடியவர்களே!

இந்தியாவின் முக்கிய பிரச்சினை புற்றீசல் போல் மக்கள் தொகை பெருக்கம். இப்படி மதுவை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்க்க வெண்டும். இந்தியாவில் எல்லாவற்றிக்கும் தட்டுப்பாடு - தண்ணி, மின்சாரம், மணல், நிலம் ... ஒன்றை தவிர அது தான் மக்கள் தொகை. மக்கள் தொகை பெருக்கத்திற்கு முன் இந்த மது ஒன்றுமில்லை. முதலில் இதை நிவர்த்திக்க போராடுங்கள்.

6. ஒரு காலத்தில் இதே திராவிட கட்சிகள் ஜமீந்தார்கலையும் நிலசுவந்தார்களையும் கையை காட்டி ஏழையின் சிரிப்பில் இறைவனை காட்டுகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி இன்று அனைத்து திராவிடகழக கட்சிகாரர்கள் பெரிய நிலசுவாந்தார்கள் ஆகிவிட்டர்கள் ஆனாலும் இன்னும் தமிழர்கள் இவர்களை இனம் கண்டு கொள்ளவில்லை உதாரணம் கருணாநிதி,மாறன் குடும்பங்கள்,இந்திய அளவில் எடுத்தால் மத்தியில் சோனியா குடும்பம் மகாராஷ்ட்ராவில் சரத்பவார் குடும்பம் சிவசேன குடும்பம்,நிதீன்கட்காரி குடும்பம் உ பில் மாயாவதி,முலயன்சிங்க்ஹ் குடும்பம் ஆந்திராவில் மறைந்த முதல்வரின் குடும்பம்,கர்நாடகாவில் ரெட்டி குடும்பம் இவ்வாறு அடிக்கிக்கொண்டே போகலாம்,ஒட்டு மொத்தமாக இந்தியாவில் உள்ள எந்த அரசியல் வாதியும் யோக்கியர்கள் இல்லை என்பது தெள்ள தெளிவு.

7. இந்த மதுவெனும் குடும்பத்தை வெட்டி அழிக்கும் கோடாரியை தினமும் குடித்து நாசம் செய்யும் பெருங்குடிகாரர்களே, இது தினமும் குடும்பத்தினரை துன்புறுத்தி,குருதி கண்ணீர் சிந்த வைப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு முறை, ஒரே ஒரு குடுவை, நஞ்சை குடித்து விட்டு மடியக்கூடாது?.... உங்களது பிரிவை எண்ணி உங்களது குடும்பத்தினர் ஒரு வாரம் வேண்டுமானால் அழுவார்கள், அதன் பிறகு உங்களது குடிவெறி தந்த பெரும் தொல்லைகள் எல்லாம் தொலைந்து, நன்குழைத்து நிம்மதியாக வாழ்வார்கள்....