Sunday, March 31, 2013

கலைஞரைப்போல் ஜெ வும் ஈழ விஷயத்தில் நாடகமாடுகிறாரா?

ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பம்!
கொதிக்கும் மாணவர்கள்
மக்களுக்கான மாணவர்களின் போராட்டத்தைத் தேர்வும் விடுமுறையும் மட்டுப்படுத்திவிடும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு என்று உறுதிப்படுத்துகிறது மாணவர்களின் எழுச்சி. 


சென்னை மெரினா தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு இருந்த மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ''எக்ஸாம், இன்டர்னல் மார்க், எதிர்காலம் என எங்களை மறைமுகமாக மிரட்டி, போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என, சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்.


 எங்கள் போராட்டம் தொடரும். இது, முழுக்க முழுக்கத் தமிழக மாணவர்களின் உணர்ச்சிப் போராட்டம். 'இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தர வேண்டும். வரும் ஜூன் மாதம் ஐ.நா-வில் நடக்கும் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவந்து அங்கு நடந்தது இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - இதுதான் எங்கள் கோரிக்கை.


அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக. இவர்கள் நாடகங்களாலும் வார்த்தை ஜாலங்களாலும் ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது.  தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்துக்குச் சென்று, 'எங்களுக்கு வாக்களித்தால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் நான் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்றார்.


 தேர்தலில் வென்றதும் அந்த மக்களின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். இது, பச்சைத்துரோகம் இல்லையா? இதே துரோகத்தைத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் செய்கிறார். கருணாநிதியின் கபட நாடகம் முடிந்து இப்போது ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முன்னர்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என இதே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானம் என்ன ஆனது?


இலங்கையில் வாழும் நம் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 'சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்காவிட்டால், தமிழகத்தில் இருந்து எந்த வரியும் செலுத்த மாட்டோம். மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்’ என, மத்திய அரசுக்கு கெடு விதிக்கட்டும்.


 இரண்டு கேரள மீனவர்களைக் கொன்றதற்காகக் கொதிக்கும் பிரதமர் மன்மோகன், தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்கிறார். தமிழ் மக்களைக் கோமாளிகள் என அரசியல் சக்திகள் நினைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்​பட்டதற்கும் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை​யாடப்​பட்டதற்​கும்காரணம், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் துரோகம்தான். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்.


எங்கள் போராட்டம் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இனி, போராட்டத்தின் வடிவை மாற்றிக்கொள்வோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்போம். சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் இருக்கும் கடைக்கோடி தமிழன் வரை சென்று ஈழத் தமிழரின் அவலத்தைச் சொல்வோம். '' என்றார் உறுதியான குரலில்.


முதன் முதலில் போராட்டத்தைத் தொடங்கிய சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், மேலும் எழுச்சியோடு தொடர்ந்து போராடிவருகிறார்கள். அண்ணா நகர் ரவுண்டானாவை முற்றுகையிட்ட அனைத்துக் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்த லயோலா மாணவர்களைக் கைதுசெய்து செனாய் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தது காவல் துறை. மாலையில் விடுதலையாகி வெளியே வந்த செம்பியன், ''மாணவர்கள் தொடங்கிய இந்தப் போ​ராட்டம், இப்போது மக்கள் போராட்டமாக மாறிவருகிறது. எங்கள் போராட்டம் எப்போதும் அற வழியைப் பின்பற்றும். இலங்கையில் விடியல் பிறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.



தொடர்ந்து பேசிய ஜோ.பிரிட்டோ, ''எங்​களுக்குக் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றோ, எங்கள் சொந்த நலனுக்காக​வோ போராடவில்லை. நம் இன மக்களுக்காகப் போராடுகிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் போராட்டத்தில் வன்முறையைக் கலக்க நினைக்கிறது. திருச்சியில் அத்தனை மீடியாவுக்கும் முன்னால் அரிவாள், கம்பு கட்டை​களுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல் துறை. அற வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வன்​முறையை அவிழ்த்துவிடுவது நியாயமா?'' என்றார் ஆவேசமாக.



மாணவர்களின் தன்னலமற்றப் போராட்​டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.


- நா.சிபிச்சக்கரவர்த்தி 

படங்கள்: வி.விஷ்ணு

 readers view"

1. இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் மத்திய அரசில் ஆட்சியில் இல்லாத கட்சி, மற்றும் இந்த பிரச்சனையில் எப்போதும் ஒரே கொள்கை உள்ள கட்சிகள், அமைப்புகள் இவற்றின் ஆதரவு தேவை. அவர்கள் ஆதரவின்றி மத்திய அரசுக்கு "அழுத்தம்" தர இயலாது. மொத்த போராட்டமும் இந்த விஷயத்தில் செயலாற்றக் கூடிய மத்திய அரசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தனிமையில் போராடும் நிலை ஏற்பட கூடாது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம். 



2.  தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் செய்தது பச்சை இனத் துரோகம்."

இது 100% உண்மை. மாணவர்கள் ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தால்தான் மத்திய அரசில் இருந்து தி.மு.க வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதேபோல மம்மியையும் சட்ட மன்றத்தில் தீர்மானம் போட வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தாத்தா செய்த துரோகம் வெளிப்படையாக தெரிந்தது. இனிமேல் மம்மி போடும் வேஷமும் ஒன்னு ஒண்ணா தெரியவரும். 



3.  ஜெயலலிதாவின் நாடகம் ஆரம்பமாகிவிட்டது..... நடுநிலை என்று காமிக்கரதுக்க்காக மாணவர்கள் ஜே. பேரையும் இதுல சேர்க்க வேண்டியதா போச்சு. தனி ஈழம் வேண்டும் என்பதை 2009 தேர்தல் அறிக்கைல ஜே. வாக்குருதி குடுத்திருக்காங்க - இது வரைக்கும் எந்த தலைவரும் குடுக்காத வாக்குறுதி. ஆனால் மக்கள் 2009ல துரோக கும்பலுக்கில்ல ஓட்டு போட்டு டெல்லிக்கு அமைச்சு வைச்சாங்க 



4. அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும், அபோதுதான் இந்த போராட்டம் வெற்றி பெரும்....இல்லை என்றால் சிங்கம் 5 மாடு கதைதான் !!1