Saturday, March 02, 2013

செங்கோட்டை பாசஞ்சர் - தாமிரா - சிறுகதை

லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?'' என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் கலெக்டர் கொடி அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. சமயங்களில் இப்படித்தான் எல்லாம் சொல்லிவைத்தபடி நிகழ்ந்துவிடுகிறது. ஆல்வின் சொன்ன வார்த்தைகள் என்று இல்லை... இன்று நான் இந்த ரயிலில் பயணப்பட வேண்டும் என முடிவெடுத்ததும், என் அருகே ஆல்வின் வந்து அமர்ந்ததும்கூட அப்படித்தான்.



 'செங்கோட்டை பாசஞ்சர் இன்னைக்கித்தான் கடைசி நாள். அந்த ரயில நிறுத்தப்போறாவளாம்!’ என தாணம்மை, நேற்று இரவு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். நானும் அதை செய்தித்தாளில் படித்திருந்தேன். மீட்டர் கேஜை பிராட்கேஜாக மாற்றப்போகிறார்கள் என்றது செய்தி.
''அடக்கோழி மாதிரி வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடக்காம ஒரு சுத்து போயிட்டு வந்தாத்தான் என்ன...'' என்று பொதுவாகச் சொல்வதுபோல அம்மா என்னிடம் சொன்னாள். இப்போதுஎல்லாம் அம்மாவும் நானும் சுவரோடுதான் பேசிக்கொள்கிறோம். 



45 கடந்த பிறகு, அம்மாவிடம் எதற்கு இப்படி ஒரு முரண் என்று எனக்குப் புரியவில்லை. எனக்கும் இந்த ரயிலுக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய தொடர்பு இல்லை. சில சமயம் கல்லிடைக்குறிச்சிக்குப் போகும்போது செங்கோட்டை பாசஞ்சரில் போயிருக்கிறேன், அவ்வளவுதான். ஆனாலும், 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு ரயில் வண்டியை நிறுத்தப்போகிறார்கள் என்கிற ஒரு பொதுவான உணர்வில்தான் நான் வந்தேன்.



ரயில் தினம் கொண்டாடுவதுபோல மிகப் பெரிய விழாவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ரயில் பெட்டிகளின் வாசலில் கால்வைத்து நிற்க இயலாத அளவுக்குக் கூட்டம். ஆனால், இருக்கைகள் எல்லாம் காலி யாகத்தான் இருந்தன. பயணப்பட்ட எல்லோ ருமே ஏதோ ஒரு வகையில் இந்த செங்கோட்டை பாசஞ்சருடன் தொடர்பு உடையவர்களாக இருந்திருக்கக்கூடும். நெடுநாள் பிரிவுக்குப் பின் சந்திக்கும் உற்சாகம் எல்லோருடைய முகத்திலும் இருந்தது.



வந்த நிமிடத்தில் இருந்து ஆல்வின் துறுதுறுவென இருந்தான். எல்லா கம்பார்ட்மென்ட்டிலும் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தான். ''ஹாய்... ஐ’யம் ஆல்வின்'' - ஒரு இசை நளினத்தோடு தன் பெயரை அறிமுகம் செய்தபடி இருந்தான். கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு புகைப் படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டு இருந் தான். அந்தக் கூட்டத்தில் யாரோடும் ஒட்டுதல் இல்லாமல் ஒற்றை ஆளாக இருந்தது நான் ஒருவன் மட்டும்தான். என்னால் நெடு நேரம் வெளியே நின்று வேடிக்கை பார்க்க முடியவில்லை. ஒரு ஜன்னல் ஓர இருக்கையைத் தேர்ந்தெடுத்து நான் ரயிலுக்கு உள்ளே இருந்தபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.


கலெக்டர் கொடி அசைக்கவும் ரயில் நகரவும் அவன் என் அருகே வந்து அமர்ந்து 'ஐ லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?’ எனக் கேட்கவும் சரியாக இருந்தது. நான் இயல் பாக இருப்பதுபோல ஒரு பாவனையை வர வழைத்துக்கொண்டு, ''என் பேரு ராகவன்'' என்றேன். அவன் சிரித்தபடி 'ஐயம் ஆல்வின்’ என்றான்.


''நான் எப்பவுமே இப்படித்தான் முன்னப்பின்ன தெரியாதவங்கன்னாகூடச் சட்டுனு பேசிருவேன். இப்ப எனக்குப் பேசணும்போல இருக்கு. என்ன கேட்டேன்... ஆங்... ஐ லவ் யூவுக்கு என்ன வயசு இருக்கும்..? வெள்ளைக்காரன் வர்ற துக்கு முன்னால நம்ம ஆளுங்க எப்படிக் காதலைச் சொல்லி இருப்பாங்க..? அத விடுங்க... காதலைக் காதல்னு தெரிய றதுக்கு முன்னால எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணி இருப்பாங்க?''- அவன் பேச்சு முழுக்க சுவாரஸ்யமான கேள்விகளோடு இருந்தது.


நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். ரயில் மெள்ள வளைந்து டவுனை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது.


''ஆயிரம் சொல்லுங்க சார்... பெருவிரல்ல தரையைக் கீறி அரை வட்டம் போட்டு ஒரு கள்ளச் சிரிப்புல சம்மதம் சொல்றதுக்கு முன்னால கோடி ஐ லவ் யூ கூட நிக்க முடியாது. இங்க வந்திருக்கற பாதிப் பேரு, மனசுக்குள்ள இருக்கிற காதலுக்காகத்தான் வந்திருக்காங்க. அந்தா... அடி மடியில சின்டெக்ஸ் டேங்க் வெச்சிருக்காரே அந்தப் பார்ட்டி பேரு பஷீரு... இந்த டிரெய்ன்ல மட்டும் அவருக்கு மூணு லவ்வு ஓடினது எனக்குத் தெரியும். 'இனி மேல் நான் இசக்கியம்மாளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்’ அப்படின்னு அப்பாலஜி லெட்டர் எழுதிக் குடுத்தவரு சார் அவரு'' எனச் சொல்லிச் சிரித்தான்.


எனக்கு அவன் பேச்சில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அதே சமயம் அவனை நிராகரிக்கும் மனசும் இல்லை. நான் எதையும் காட்டிக்கொள்ளாமல் 'ம்’ கொட்டியபடி கேட்டுக்கொண்டு இருந்தேன். ரயில் டவுன் ஸ்டேஷனுக்கு வந்து நின்றதும் ஒரு துளிக் கண்ணீரோடு அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி, ''நானும் என் காதலியோட ஞாபகமாத்தான் மும்பைல இருந்து வந்திருக்கேன் சார்'' என்றான். இந்த ரெண்டு மணி நேர ரயில் பயணத்துக்காக அவன் மும்பையில் இருந்து வந்திருந்தது எனக்கு அவன் மீது மேலதிகமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.



''இந்த ஸ்டேஷன்லதான் சார் அவள முதன்முதலாப் பாத்தேன். அப்ப செங்கோட்டைல இருந்து தினமும் இந்த டிரெய்ன்ல வருவேன். சேவியர்ஸ்ல படிச்சிட்டு இருந்தேன். இந்த செங்கோட்டை பாசஞ்சர் எனக்கு ஒரு ஃப்ரெண்டு சார். அவளை இவந்தான் அறிமுகம் பண்ணிவெச்சான்'' - ஆல்வின் தன் காதலியைப் பற்றி சொல்லத் தொடங்கியதும் ரயில் ஒரு சின்னக் குலுங்கலோடு புறப்பட்டது.



''ஒரு தேவதை, பாசஞ்சர் டிரெய்ன்ல வந்தா எப்படி சார் இருக்கும்? அப்படித்தான் இருந்தது எங்க முதல் சந்திப்பு. அன்னைக்கு நான் லட்சுமி தியேட்டர்ல படம் பாத்துட்டு, டவுன் ஸ்டேஷன்ல டிரெய்ன் ஏற வந்தேன். நான் வரும்போது டிரெய்ன் மூவ் ஆயிட்டு இருந்தது. ஓடி வந்துட்டு இருக்கும்போதே ரயில் என்னைக் கடந்து ஓடிட்டு இருந்துது. ஒரு ஜன்னலுக் குள் சிண்ட்ரெல்லா டிரெஸ்ல இருந்தா அவ. காலேஜ் டிராமால போட்ட வேஷத்தைக் கலைக்காம வந்திருந்தா. நான் அந்த ஜன்னல்கிட்ட போயி 'ரொம்ப அழகா இருக்கீங்க’னு சொன்னேன். அவ்வளவுதான்... டிரெய்ன் வேகம் எடுத்திருச்சு. என்னால அந்த டிரெய்ன்ல ஏற முடியல.



அதுக்கப்புறம் அவள என்னால ரெண்டு, மூணு நாளாப் பாக்க முடியல சார். உண்மையச் சொல்றதா இருந்தா, அவள அடையாளம் தெரியல. தேவதையை எப்படி சார் பாவாடை தாவணில அடையாளம் கண்டுக்க முடியும். ஆனா, அவ என்னை ஞாபகம் வெச்சிருந்தா. 'உன்னைத் எனக்குத் தெரியும்டா’ங்கிற மாதிரி ஒருநாள் ஒரு வெக்கத்தை வீசுனா பாருங்க... அழகு சார். கிட்டத்தட்ட ரெண்டு மாசம் சார், டிரெயின் கல்லிடைக்குறிச்சி வந்ததுமே நான் வாசலுக்கு வந்து நிப்பேன். அவ சிரிச்சுட்டே வண்டில ஏறுவா. அவ்வளவுதான்... ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டோம். ஆனா, அவ்வளவு பேசிப் பழகின மாதிரி ஒரு நெருக்கம் இருக்கும். தினமும் எப்படா கல்லிடைக்குறிச்சி வரும்னு பாத்துட்டே இருப்பேன். மனசுக்குள்ள தடக்கு தடக்குனு ஒரு ரயில் ஓடிட்டு இருக்கும். செங்கோட்டைல இருந்து கல்லிடைக்குறிச்சி வர்றதுக்குள்ள அப்படி ஒரு தவிப்பு இருக்கும்.  



அப்பதான் சார் 'கடலோரக் கவிதைகள்’ ரிலீஸாகி இருந்தது. அது என்னவோ எங்களுக்காகவே அந்தப் படத்துல பாட்டு எழுதின மாதிரி இருக்கும்... ஒரு நாள் நான் வாசல்ல நின்னு சத்தமா 'மனசு தடுமாறும்... அது நெனச்சா இடம் மாறும்’னு பாடிட்டு இருந்தேன். பாத்ரூம் போற மாதிரி என்னைக் கடந்துபோனவ 'மனசு இடம் மாறிடுச்சு’ன்னா. ஐய்யோ... அப்படியே டிரெய்ன்ல இருந்து குதிச்சிரலாமானு இருந்துது. பாத்ரூம் போயிட்டுத் திரும்பி வர்றப்ப 'இப்படி’ ஒரு வார்த்தை சொல்லாத மாதிரியே போனா. அப்ப அவ கண்ணுக்குள்ள ஒரு சிரிப்பு இருந்துது பாருங்க சார்... அடடடடா!



20 வருஷத்துக்கு முன்னால காதலிச்சவன் எல்லாம் குடுத்து வெச்சவன் சார்... அப்ப காதல் ரொம்ப அழகா இருந்தது. என்ன ஒண்ணு, தனியா சந்திச்சுப் பேசறதுக்கு ஒரு இடம் கிடைக்காது. அதுவும் திருநெல்வேலிக்காரங்க ரொம்பப் பாவம் சார்... சயின்ஸ் சென்டர், ரயில்வே ஸ்டேஷன்... விட்டா கோயில், சர்ச் இதைத் தவிர சுதந்திரமா எங்கயும் சந்திக்க முடியாது சார். நாமளும் இப்படிப் பாத்துட்டே காலத்தைக் கடத்திருவோம்னுதான் சார் நெனச்சேன். ஏன்னா, எனக்குப் பொண்ணுககிட்ட பேசற தைரியம் கிடையாது. ஆனா, என்னைவிட அவ தைரியமான பொண்ணு சார்.



ஒரு நாள்... 'இப்படியே பாத்துட்டே இருந்தா போதுமா? பேச மாட்டீங்களா?’ன்னா. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. 'ஐ லவ் யூ... உங்க பேரு என்ன?’னு கேட்டேன். பயங்கரமா சிரிச்சா, 'பேரே தெரியாம, ஐ லவ் யூ வா?’னு சொல்லிட்டுச் சிரிச்சா... அன்னைக்குப் பூரா அந்தச் சிரிப்பு என்கூடவே இருந்தது சார். சயின்ஸ் சென்டர்ல சந்திக் கறதுனு முடிவு பண்ணி னோம். சயின்ஸ் சென்டர் போனதும் எனக்குக் கைகால் உதறல் எடுத்தது. பாக்கற எல்லாருமே தெரிஞ்சவங்க மாதிரியே இருந்தாங்க. ஆனா, அவ தைரியமா இருந்தா.


'என் பேரு பரிமளா... நான் சாரள் தக்கர் காலேஜ்ல படிக்கறேன். அப்பா லோக்கல் போஸ்ட் மாஸ்டர். போன வருஷம்தான் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தோம். கிளியோபஸ் மாஸ்டர்கிட்ட வயலின் கத்துக்கறேன். உன்னை எனக்கு ஆறு மாசமாத் தெரியும்’னா. நானும் அப்ப கிளியோபஸ் மாஸ்டர்கிட்டதான் கிடார் கத்துக்கிட்டேன்.''



ஆல்வின் மெள்ள கண் மூடி... ''சைலன்ட் நைட் ஹோலி நைட் ஆல் இஸ் காம் ஆல் இஸ் ப்ரைட் ரவுண்ட் யூ வெர்ஜின் மதர் அண்டு சைல்டு'' எனப் பாடத் தொடங்கினான். அவன் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் இருந்தது.


''எனக்காக சர்ச்சுக்கு வருவா... பிரேயர்ல கலந்துக்குவா. 'கண்ண மூடினா மனசுக்குள்ள முருகன் இருக்கறான்... காதுக்குள்ள பிதா சுதன் பரிசுத்த ஆவியால் எம்மை ரட்சிப்பீராக ஆண்டவரே... நல்லாத்தான் இருக்கு ஆல்வின்’னு சொல்வா.


என்ன பிரேயர் பண்ணினேனு கேட்டா, 'எனக்கு ஆல்வின் வேணும்னு கர்த்தர்கிட்ட கேட்டேன்’னு சொல்வா. எல்லா சாமிகிட்டயும் அவ ஒரே ஒரு கோரிக்கைதான் சார் வெச்சா, அது ஆல்வின் வேணும்கிறதுதான். எல்லா சாமியும் ஏமாத்திருச்சு சார்'' - ஒரு பாவப்பட்ட குரலில் ஆல்வின் இதைச் சொன்னான்.



எனக்கு ஆல்வினைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்னில் இருந்து ஆறேழு வயது சின்னவனாகத்தான் இருப்பான். அவனைத் தோளில் சாய்த்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. சட்டென்று பாடுவதை நிறுத்திவிட்டு ''அவ எப்படித் தெரியுமா சார் இருப்பா..? மரியன்னை கைல இருக்கற ஆட்டுக்குட்டி மாதிரி இருப்பா...'' என்றான் ஆல்வின். அவன் இந்த வார்த்தையைச் சொல்லவும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு கனத்த மௌனம் இருந்தது.


ஆல்வின் என்னை ஏறிட்டுப் பார்த்து விரக்தியாகச் சிரித்தபடி... ''அவ ஞாபகமா இருந்த ஒரே ஒரு விஷயம், இந்த செங்கோட்டை பாசஞ்சர்தான் சார். இப்ப அதுவும் போகப்போகுது'' என்றான். எனக்கு ஆல்வின் இதோடு கதையை நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது. இதற்கு மேல் கதை கேட்கும் வலிமை எனக்கு இல்லை என்றே உணர்ந்தேன்.


''என்கூட வாசல் வரைக்கும் வர்றீங்களா?''


நான் எதுவும் சொல்லாமல் அவனோடு சென்றேன். வாசல் அருகே இருந்த வாஷ் பேசினுக்கு மேல் கை காட்டி, ''அங்க பாருங்க சார்'' என்றான். அவன் கை காட்டிய திசையில் உற்று நோக்கியபோது ஒரு இதயம் படம் வரைந்து அதற்குள் 'பரி - ஆல்வின்’ என எழுதப்பட்டு இருந்தது.


''அது பரிமளாவோட கையெழுத்து. என்னையும் இந்த எழுத்தையும் சேர்த்து ஒரு போட்டோ எடுங்க சார்'' என்றான். நான் கைகள் நடுங்க அவனது செல்போன் கேமரா வில் போட்டோ எடுத்தேன்.


அந்த போட்டோவைப் பார்த்தபடியே இருந்தான். ''டிரெய்ன்ல, பஸ்ல, எதாவது ஒரு சுவத்துல இப்படிப் பேர் எழுதிவெச்சிருந்தா அத ஒரு கிறுக்கலாப் பாக்காதீங்க சார்... அது ஒரு வலி, வாழ்க்கை. இதை எழுதும்போது அவ்வளவு மகிழ்ச்சியா இருந்துது. இப்பப் பாக்கும்போது அவ்வளவு அழுகையா வருது. பரிமளா போட்டோகூட எங்கிட்ட கிடையாது சார். ஆனா, இந்த எழுத்தைப் பாக்கறப்ப அவ முகம் மனசுல வந்து போகுது சார்'' என்றான்.


நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். தூரத்தில் யாரோ, என்னவோ சொல்லி பெருஞ்சிரிப்பாகச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். ஆல்வினை எதுவும் பாதிக்கவில்லை. அவன் தனது கடந்த காலக் காதலுக்குள் கரைந்துபோயிருந்தான். 'ஏதோ ஒரு புள்ளியில், ஆறாத ஒரு காயத்தை நான் அவனுக்குள் ஏற்படுத்திவிடுவேனோ?’ என்கிற பயம் என்னுள் எழுந்தது.


''பரின்னா என்ன தெரியுமா சார்..?'' ஆல்வின் மீண்டும் பேசத் தொடங்கினான். ''இல்ல... தெரியல' அவன் பேச்சுக்குள் கலந்துவிடாத ஒரு இடைவெளியை நான் எனக்குள் வரையறுத்துக்கொண் டேன்.


''நான் அவகிட்ட கேட்டேன் சார். 'பரின்னு பாதிப் பேரை எழுதுறியே... முழுப் பேர் எழுதப் பயமா?’னு கேட்டேன். சிரிச்சுட்டே 'இல்லையே... பரின்னா என்ன?’னு கேட்டா. நான் 'குதிரை’னு சொன்னேன்.


'ஆமா, நான் உன் குதுரக் குட்டி. அதான் பரின்னு போட்டிருக்கேன்னா’ என்று சொல்லிய படி, கதவின் மீது தலை சாய்த்து நின்றான் ஆல்வின். அவன் தலையசைவில் இட வலமாக ரயிலின் ஓசை நகர்ந்துகொண்டு இருந்தது.


''ஏன் பிரிஞ்சீங்க?'' நான் இந்தக் கேள்வியைக் கேட்கவும் ரயில் சேரன்மகாதேவி ஆற்றுப்பாலத்தை மெள்ள ஊர்ந்தபடி கடந்தது.



''எல்லாக் காதலுக்கும் உள்ள பிரச்னைதான். அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. அவங்க கோவைக்குப் போனாங்க. அவங்க அப்பா அவளுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. அப்புறம் ஒருநாள் மீட் பண்ணோம். நாங்க தைரியமா சந்திச்ச ஒரே சந்திப்பு அதான் சார். மரியா கேன்டீன்ல வெச்சுப் பேசுனோம்... நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு பேசுறேன். 'மரணம் அழகாத் தெரிஞ்சாலே, காதல் அங்க அழுத்தமா இருக்கு’னு அர்த்தம் சார். எனக்கு அப்படியே செத்துப்போயிரணும்னு தோணுச்சு.''


'ஆல்வின் நீயும் நானும் ரெண்டு உசிரு இல்ல... உங்க அப்பா - அம்மா. எங்க அப்பா - அம்மா. அண்ணன் - தம்பினு எட்டு உசிரு... எல்லாத்தை யும் அழிச்சுட்டு காதலைக் காப்பாத்தி என்ன பண்ணப்போறோம். எனக்குச் சாகறதுல உடன் பாடு இல்லை’ன்னா பரிமளா.


ப்ச்... விட்டுக்குடுத்துட்டேன் சார் என் பரிக் குட்டிய... விட்டுக்குடுத்துட்டேன். அவ நல்லா இருக்கணும். அதைத் தவிர எனக்கு எந்த எண்ணமும் இல்ல. அப்ப அவளக் காப்பாத்தற தைரியமும் வலிமையும் எனக்கு இல்ல!''


''அப்புறம் நீங்க பரிமளாவைப் பாக்கவே இல்லையா?''


''கல்யாணத்துக்குப் பிறகு, எப்படியோ என் நம்பரை வாங்கி ஒரு தடவை பேசினா சார். 'எங்க வீட்டுக்காரர்கிட்ட உன்னைப் பத்திச் சொல்லிட்டேன். அவர் நம்ம காதலைப் புரிஞ்சிட்டார். நீ ஒரு முறை வீட்டுக்கு வா’னு சொன்னா... நான் போகல. அது முறை இல்ல... ஐய்யோ... மிஸ் பண்ணிட்டோமேங்கிற ஃபீல் வரக் கூடாது. அதான் அவாய்ட் பண்ணிட்டேன். அதுக்கு மேல அவகூட பேசவும் விரும்பல. நம்பரை மாத்திட்டு ஊரைவிட்டுப் போயிட்டேன்.


கடைசியா, இந்த டிரெய்ன்ல அவ ஞாபகமா ஒரு டிராவல் பண்ணணும்னு தோணுச்சு. அவ வருவானு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது சார். வந்ததும் எல்லா கம்பார்ட்மென்ட்டுக்கும் ஓடிட்டே இருந்தேனே... அவளைத் தேடித்தான் சார். ஆனா, ஏமாந்துட்டேன் சார். என்னைக்காவது ஒரு நாள் அவளைச் சந்திக்கணும். அது இயல்பா... தற்செயலா அமையணும்... அமையும்!'' என்றான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அமைதியாக இருந்தேன்.


செங்கோட்டை வரை வருகிறேன் என்ற ஆல்வின் கல்லிடைக்குறிச்சியிலேயே இறங்கி விட்டான். அவள் நினைவாக அந்த ரயிலடியில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, திரும்ப நெல்லைக்கே போவதாகச் சொன்னான். ரயில் கிளம்பும் வரை அவனுக்குக் கையசைத்து விடைகொடுத்து விட்டுத் திரும்பினேன்.



அம்பையைக் கடந்து ரயில் ஒரு சீரான சுதியில் போய்க்கொண்டு இருந்தது. ஆல்வினின் 'சைலன்ட் நைட் ஹோலி நைட் ஆல் இஸ் காம் ஆல் இஸ் ப்ரைட்...’ சன்னமாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருந்தது.


நான் ஆல்வினிடம் பரிமளா இனி வர மாட்டாள்... ஒரு விபத்தில் மரணம் அடைந்துவிட்டாள் என்று சொல்லி இருக்க வேண்டும். எனக்குள் வெறும் நினைவாக வாழ்கின்ற பரிமளா, ஆல்வினுக்குள் ஓர் அழகிய காதலாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டேன்!


thanx - vikatan