அழகிரியிடம் அட்டாக் கேட்ட 5 சத்தியங்கள்!
>>சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி ஒரு ஃபவர்புல் பதவி.
>>தி.மு.க-வில் ஏதாவது ஒரு பதவி.
>>பொட்டு சுரேஷ§க்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது.
>>இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டும்.
>>மதுரை
உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கும் 100 சென்ட் இடப் பிரச்னையில் நான்
தலையிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு எதிராகப் பஞ்சாயத்து செய்து அந்த
லாட்டரி அதிபருக்கு சாதகமாகச் செய்து விட்டனர். அதில் 50 சென்ட் நிலமாவது
எனக்கு வாங்கித்தர வேண்டும்.
-''இந்த ஐந்து கோரிக்கைகளை அழகிரியிடம் வைத்து சத்தியம்
கேட்டார் அட்டாக் பாண்டி'' என்று, போலீஸ் கஸ்டடி விசாரணையில் விஜய பாண்டி
சொல்லி, திகிலைக் கிளப்பி உள்ளாராம்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹோட்டல்
அறையில் ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு நடந்தது. அப்போது
மு.க.அழகிரியிடம் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தாராம் அட்டாக் பாண்டி.
'கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி.. இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலயும்
அரசியல் ரீதியாக நான் ரொம்பப் பாதிக்கப்பட்டு விட்டேன். இதிலிருந்து விடுபட
நீங்கள்தான் உதவ வேண்டும்... பொட்டு சுரேஷ் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக
இருக்கக் கூடாது. அவரது முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும்' என்றும்
அட்டாக் கேட்டாராம். 'அட, அவரும் உன்னை மாதிரித்தானே பாதிக்கப்
பட்டிருக்கார். அவரை எப்படி விட முடியும்?'' என்றாராம் மு.க.அழகிரி.
சந்திப்பு முடிந்த பிறகு, ஜனவரி 31-ம் தேதி திடீரென
பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். சென்னை சம்பவத்தை அட்டாக் பாண்டியின்
அக்கா மகன் விஜயபாண்டி விலா வாரியாக வர்ணித்துள்ளதாக போலீஸ் வட்டாரம்
சொல்கிறது.
விஜயபாண்டி மற்றும் ஆரோக்கிய பிரபு ஆகிய இருவரையும்
பிப்ரவரி 19-ம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து
விசாரித்தனர். அவர்கள் சொன்ன பகீர் ரகத் தகவல்கள் போலீஸ் வட்டாரத்தையே
கலங்க வைத்துள்ளது.
சென்னை ஹோட்டலில் என்ன நடந்தது?
''சென்னை ஹோட்டலில் கீழே நின்றிருந்தோம். சிவப்பு
விளக்கு வைத்த கார் இருந்தது. போலீஸ் செக் யூரிட்டிகள்
நின்றுகொண்டிருந்தனர். டெல்லிக்கு மு.க.அழகிரி செல்ல வேண்டிய விமானம்
இரண்டு மணிநேரம் லேட் ஆனதால், அங்கே தங்கியிருந்தார். அவர் ஒரு அறையிலும்
அவரது மகன் துரை தயாநிதி இன்னொரு இடத்திலும் இருந்தனர். முதலில், துரைதான்
அட்டாக்கிடம் பேசிவிட்டு, பிறகு, அழகிரி இருந்த அறைக்கு அழைத்துச்
சென்றார். அங்கேதான் பேசி இருக்கிறார்கள்.
அப்போது அங்கே நடந்ததை
ரிசப்ஷனில் காத்திருந்த என்னிடம் அட்டாக் திரும்பி வந்து சொன்னார்.
'பொட்டுவால் எங்களுக்குப் பெரிய தலைவலி. குடும் பத்துக்கும் தொந்தரவு'
என்று அழகிரி சொன்னதாக அட்டாக் எங்களிடம் சொன்னார். 'நீங்க என்ன
சொல்றீங்களோ? அப்படியே செய்றேன்' என்று அட்டாக் சொல்லி இருக்கிறார்.
அதன்பிறகு, கொஞ்சநேரம் அமைதியாக இருந்த அட்டாக், பிறகு ஆவே சமாக மாறினார்.
'ஆள் ரெடி பண்ணுங்க' என்று எங்களிடம் சொன்னார். பிறகு நான் அதற்கான
ஏற்பாடுகளைச் செய்தேன்'' என்று முடித்தானாம் விஜயபாண்டி.
போலீஸின் அன்பான விசாரணை!
கஸ்டடியில் மூன்றாவது நாள், போலீஸின் அன் பான விசாரணை
ஆரம்பிக்க... விஜயபாண்டியின் பேச்சு அங்குமிங்கும் அலைபாய்ந்ததாம். 'பொட்டு
சுரேஷ் கொலைக்குப் பிறகு அட்டாக்கை எங்கே பார்த்தே?’ என்று
விஜயபாண்டியிடம் கேட்டபோது, 'மைசூரில் சந்தித்தோம். யார், யார் எப்படி
வாக்குமூலம் கொடுக்கவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார்.
அவர்களும் அவர்
சொன்னபடிதான் வாக்குமூலங்களை போலீஸில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில்
என்னிடம், 'நீ போய் கோர்ட்டில் சரணடைந்து விடு. நீ போலீஸில் என்ன சொல்ல
வேண்டும் என்று உனக்குத் தகவல் வரும்' என்றார். அதன்படியே, சட்டம் தெரிந்த
பிரமுகர் ஒருவர் மூலம் 'அழகிரி, துரை தயாநிதி பெயரை நீ சொல்லலாம்’ என்று
தகவல் வந்தது. வழக்கு விஷயங்களுக்காகத் தேவைப்படும் பணம் அப்போதுதான்
தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்றும் கூறினார். அதன்படிதான் உங்களிடம்
சொல்லி இருக்கிறேன்'' என்றானாம் விஜயபாண்டி.
''அழகிரி, துரை தயாநிதி பெயர்களை விஜயபாண்டியை விட்டு
முதலில் சொல்லச் சொல்கிறார் அட்டாக் பாண்டி என்றால், வேறு ஏதோ சதி
செய்கிறார் என்று அர்த்தம். முன்னுக்குப் பின் முரணாக அவரின் ஆட்களை
போலீஸிடம் பேசவிட்டுக் குழப்பப் பார்க்கிறார். அழகிரியிடம் ஏதோ நிபந்தனைகளை
வைத்து பிளாக்மெயில் செய்கிறார். அதற்காகத்தான் விஜயபாண்டியை விட்டு ஒரு
'ஷாக்' கொடுத்துவிட்டு, அடுத்து தனது கோரிக்கைகள் நிறைவேறுவதற்காகக்
காத்திருக்கிறார். அட்டாக் போலீஸில் சிக்கும்போது, தங்களையும்
சொல்லிவிடுவாரோ? என்ற பீதியில் அழகிரியையும் துரை தயாநிதியையும் தவிக்க
விட்டிருக்கிறார்.
முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த
வழக்கில் இருந்து அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய்
நகர்த்துகிறாரா? என்று சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.
ஆனாலும் விஜயபாண்டி சொன்னதையெல்லாம் வீடியோ பதிவுசெய்து, வாக்குமூலமாக மேலிடத்துக்கும் அனுப்பி விட்டதாம் போலீஸ் தரப்பு.
துப்பு சொல்லும் பொட்டு தரப்பு
பொட்டு சுரேஷின் அனுதாபிகள் தரப்பில், ''எங்கள் அண்ணன்
கொலையில் இருந்து தப்பிக்க, அட்டாக் ஏதாவது தந்திரம் செய்வார். அவரது
சகாக்களை விட்டு முதலில் போலீஸை ஆழம் பார்க்கிறார். நம்பாதீர்கள்'' என்று
திரும்பத் திரும் பச் சொல்லி வருகிறார்களாம். மதுரையில் உள்ள பொட்டு
சுரேஷின் நலம்விரும்பி ஒருவர் கூறும்போது, ''தினகரன் பத்திரிகை அலுவலகம்
எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில், தன்னை ஏவியது யார்
என்று அட்டாக் கடைசி வரை சொல்லவே இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் அடித்து
விசாரித்தபோதும்கூட சொல்லவில்லை.
ஆனால், எந்த நேரமும் சொல்லி விடுவேன்
என்று மறைமுக பிளாக்மெயில் செய்தே, வாரியத் தலைவர் பதவியை வாங்கினார்.
ஜெயம் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அட்டாக்கின் தலையீடு பற்றி ஊரில்
அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த விவகாரத்தில் தன்னை போலீஸ் நெருங்க
விடாமல் பார்த்துக்கொண்டார். இவைபோக, பணம் வரும் பல்வேறு கான்ட்ராக்ட்களைப்
பெற்றார். அப்படிப்பட்ட கேரக்டர் அட்டாக் பாண்டிக்கு உண்டு. அதுபோலவே
இப்போதும் எங்கள் அண்ணன் கொலை வழக்கில் அழகிரிதான் செய்யச் சொன்னார்...
துரைதான் செய்யச் சொன்னார்.. என்று மறைமுகமாகத் தகவலைப் பரப்பிவிடுகிறார்
என்றே நாங்கள் நினைக்கிறோம். எங்கள் அண்ணனுக்கும் அழகிரி
குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது
இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு முக்கியமான எந்த ஒரு
மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.
எதிர்வாதம் பண்ணும் அட்டாக் தரப்பு..!
அட்டாக்கின் நெருங்கிய சட்டம் தெரிந்த நண்பர்களிடம்
பேசியபோது, ''கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிலை இல்லாமல் தவித்தார் அட்
டாக். ஓடஓட விரட்டிக்கொண்டே இருந்தனர். அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், கேட்கவே
வேண்டாம்... படு ஸ்பீடில் துரத்தினர். தான் உயிர் வாழப் புகலிடம் தேடி
ஸ்டாலினிடம் போனார். பொட்டுவுக்கும் அட்டாக்குக்கும் மோட்டிவ் உண்டு என்பது
ஊர் உலகத்துக்கே தெரியும். இதையே ஒரு சான்ஸாகக் கருதி பழி அட்டாக் மீது
திரும்பும் என்பதைத் திட்டம் போட்டு, யாரோ அட்டாக்கின் ஆட்களைப் பிடித்து
இந்த அசைன்மென்ட்டைத் தந்திருக்க வேண்டும். அட்டாக் கூடிய விரைவில்
வருவார். அப்போது எல்லா வினாக்களுக்கும் விடை தெரிந்து விடும்'' என்று
அப்பாவியாகச் சொல்கிறார்கள்.
மௌன வேடிக்கை பார்க்கும் போலீஸ்...
அட்டாக் கோஷ்டியினர் ஒருகோணத்திலும் பொட்டு தரப்பினர்
இன்னொரு கோணத்திலும் தகவல்களைச் சொல்லிவர... மௌனமாக வேடிக்கை பார்க்கிறது
போலீஸ். பொட்டுவைக் கொலை செய்தது 'அட்டாக்’தான் என்பதில் உறுதியாக
இருக்கிறது. இருந்தாலும், இரு தரப்பினர் சொல்வதையும் புறக்கணித்து
விடவில்லை அவர்கள். பொட்டு கொலைக்குப் பிறகு, சரணடைந்த ஆட்களில் சிலர் துரை
தயாநிதியின் நண்பர்கள் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். கிரிக்கெட்
விளையாடும் அணியில் பொட்டுவின் சகாக்களும், அட்டாக்கின் உறவினரான
இளைஞர்களும் இருக் கிறார்கள். இதை வைத்து, பொட்டு கொலை ஏற்பாடுகளில்
உதவியவர்கள் என்ற பட்டியலில் சிலர் பெயர்களைச் சேர்த்து இருக்கிறார்கள்.
ஆனால், போலீஸ் அதை கிராஸ்செக் செய்தபோது, அது பொய் என்று தெரிந்து
மேற்கொண்டு விசாரிக்கவில்லை. ஏன் துரை நண்பர்களையும் இதில் இழுத்து விடு
கிறார்கள் என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைக்கவில்லை. பொட்டுவின்
பினாமிகள் யாராவது இந்தக் கொலையை பின்னணியில் இருந்து செய்தார்களா என்ற
கோணங்களிலும் விசாரிக்கிறார்கள்.
'அட்டாக் பாண்டிக்கு யாரோ மாஸ்டர் ப்ரெய்ன்
இருக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. அதேபோல், சட்ட ஆலோசனை
விவகாரங்களைக் கவனிக்க, எங்கிருந்தோ திடீர் திடீரென்று உத்தரவுகள்
வருகின்றன. இந்த செலவுகள் எப்படி நடக்கிறது என்பதையும் உன்னிப்பாகக்
கவனித்து வருகிறோம்’ என்கிறது போலீஸ்.
''விஜயபாண்டியின் வாக்குமூலத்தில் மு.க.அழகிரியையும்
துரை தயாநிதி¬யும் சொல்கிறான். ஆனால், 'அவர்களை நேரடியாக சென்னை ஒட்டலில்
இவன் பார்க்கவில்லை என்றும், அட்டாக் கூறியதை வைத்து சொல்வதாகவும்’
எங்களிடம் சொல்கிறான். எனவே, அட்டாக் பிடிபட்ட பிறகு, எங்களிடம் அந்த
ஹோட்டல் சந்திப்பு பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள
வேண்டும். அதன்பிறகுதான், அழகிரி, துரை தயாநிதிக்கு சம்மன் அனுப்பும் படலம்
தொடங்கும். ஒருவேளை, சென்னை ஹோட்டலில் அழகிரியோ, துரை தயாநிதியோ இருந்து
பொட்டு பற்றி பேசி இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்தால், இந்தக் கொலை
வழக்கில் சதி என்ற பேனரில் அவர்கள் பெயரை நிச்சயமாகச் சேர்ப்போம்''
என்கிறார்கள்.
அட்டாக் அரெஸ்ட்டில் அடங்கி இருக்கிறது பொட்டுவின் வழக்கு.
- ஆர்.பி.
நன்றி - ஜூ வி
வாசகர் கருத்து
1. முன்னோட்டமாக இப்படிச் சொல்லி வைத் தால்தான் இந்த வழக்கில் இருந்து அவர்கள்
காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காய் நகர்த்துகிறாரா? என்று
சந்தேகப்படுகிறோம்'' என்கிறது போலீஸ் தரப்பு.
பொய் சாட்சியாக எவ்வளவு பொய்களை கூறினாலும் டிஃபென்ஸ் வக்கீல் அதை உடைத்தெறிந்து விடுவார், இது போலீசுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பொய் வழக்காக அழகிரி மேல் புனைந்தாலும் பாட்டிக்கு மீண்டுமொரு முறை குட்டு விழும் நீதிமன்றத்தில்
பொய் சாட்சியாக எவ்வளவு பொய்களை கூறினாலும் டிஃபென்ஸ் வக்கீல் அதை உடைத்தெறிந்து விடுவார், இது போலீசுக்கு தெரியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பொய் வழக்காக அழகிரி மேல் புனைந்தாலும் பாட்டிக்கு மீண்டுமொரு முறை குட்டு விழும் நீதிமன்றத்தில்
2. அவர் உத்தமரா இல்லையா என்பது அல்ல. இவ்வளவு அப்பட்டமாக ஒரு காரியம் செய்து
பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் அளவு.. யோசிக்காமலா செய்வார்?
3. பொட்டு-வால் குடும்ப பிரச்சனை; அட்டாக் பாண்டி ஏற்கெனவே 5 விஷயங்களை கேட்டு
ப்ளாக் மெயில் செய்கிறான். ஒருத்தனை கொலை செய்து இன்னொருத்தன் மேல் பழியை
போட்டுவிட்டால் பிரச்சனை எல்லாம் முடிந்தது. கூட்டி கழித்து பார்த்தால்
கணக்கு சரியா வருதோ?
4. இந்த வழக்கோடு அழகிரியின் அரசியலை அடக்கும் முடிவாக இருக்கலாம். எது நடந்தாலும் நல்லதே.
5. நாடாளு மன்ற தேர்தல் அறிவிச்ச உடனே ரெண்டு பேரையும் லிஸ்ட்ல சேருங்க
பையன்அப்ஸ்கான்ட் ஆவாரு அப்பா சரம் அடைவார் இதையே 2 மாசம் நியுசா போட்டு
பேர பங்க்சர் ஆக்கி 40 சீட்லயும் அந்த கும்பல மன்ன கவ்வ வைச்சுரலாம் .
மத்தில இருக்கும் செல்வாக்க வைச்சு ஜெ. அரசுக்கு கெட்ட பேரு
வரணும்கரதுக்காக தமிழ் நாட்டுக்கு நிதி, கரண்ட் , தண்ணி எல்லாம் சரியாய்
கிடைக்க விடாம ரொம்ப பிரச்சனை பண்றாங்க
6. சிவப்பு விளக்கு வைத்த காரில் வலம் வருகிற மாதிரி ஒரு ஃபவர்புல்
பதவி.......தப்பே இல்லை......அழகிரி மத்திய அமைச்சராக இருக்கும்போது,
அட்டாக் ஒரு பதவி எதிர்பார்ப்பது தப்பே இல்லை........இரண்டு கோடி ரூபாய்
பணம் வேண்டும்.......அமௌண்ட் மிக கம்மியாய் இருக்கே.......செய்திருக்கும்
வேலைக்கு ஏத்த மாதிரி கூலியை கேளுங்கப்பா......எவ்வளவு கேட்டாலும்
தருவாங்க.......ஏனெனில், அவ்வளவு இருக்கு அவிங்க கிட்டே.....
7. எங்கள் அண்ணனுக்கும் அழகிரி குடும்பத்தினருக்கும் இடையே ஏதோ சில
மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்திருக்கலாம். கொலை வரை போகும் அளவுக்கு
முக்கியமான எந்த ஒரு மோட்டிவும் இல்லை'' என்கிறார்களாம்.*** ஆதிக்க
அரசியலில் அனைத்தும் சாத்தியமே.