1. வேண்டாம் வேறொரு முகத்தின் விஸ்வரூபம்!
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக எழுந்து நிற்கும்
பிரச்னைகளால் பாதிக்கப்படப் போவது ஒரு தனி மனிதன்தானே என்று, அறி வுலகம்
விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாகாது. மதநல்லிணக்கம் ஆழமாக
வேரூன்றியிருக்கும் தமிழ் மண்ணில் ஒரு திரைப்பட எதிர்ப்பு தவறான
பாதிப்புகளை உருவாக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இங்கே
அனைவருக்கும் உண்டு. பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்ட போதும் அமைதி காத்த
பண்பாளர்கள் தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள். 'விஸ்வரூபம்’ படம்
இஸ்லாமியரைக் காயப்படுத்துவதாக இன்று ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள்
போர்க்கொடி தூக்கியுள்ளன. பிரச்னை நீதிமன்றத்தில் போய் நின்றி ருக்கிறது.
இந்த விரும்பத்தகாத சூழல் எங்கே போய் முடியும் என்பதுதான் கேள்வி.
ஓர் அமெரிக்கர் தயாரித்து வெளியிட்ட ‘Innocence Of Muslims’ என்ற
திரைப்படத்தின் நோக்கம் மனிதகுலத்தின் அழகிய முன்மாதிரியாய் அரபு நிலத்தில்
வலம் வந்த இறுதி இறைத்தூதர் நபி களாரையும், இஸ்லாமையும்
இழிவுபடுத்துவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தப் படம்
திரையிடப்படுவதை இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து அணிவகுத்தது நியாயமான
நடவடிக்கை.
ஆனால் கமல்ஹாசன், இஸ்லாமுக்கு எதிரானவர் இல்லையே.
பயங்கரவாதிகளாய், மதத்தின் பெய ரால் மனிதகுலத்தை அழித்தொழிக்க முயலும் மோச
மான அடிப்படை வகுப்புவாதியராய் ஆயுதம் ஏந்திநிற்கும்
கூட்டம் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களை
எவ்விதம் ஆதரிக்க முடியும்?
பின்லேடனையும், தலி பான்களையும் இஸ்லாமியர்
என்பதற்காகவே, இங்குள்ள இஸ் லாமியர்கள் ஆதரிக்கக்கூடுமா? தன்னை ஓர் இந்து
சந்நியாசி என்று நித்தியானந்தன் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக, அந்த
வேடதாரியை எல்லா இந் துக்களும் ஏற்பது தகுமா?
குஜராத் கலவரத்தில் மோசமான
மிருகங்களைப் போல் வெறிபிடித்து ஊழித் தாண்டவம் நடத்தியவர்களை நாம் நியாயப்
படுத்த இயலுமா? மிருகப் பண்புகள் மிக்கவரை மனிதர்களாக மாற்றுவதற்குத்தான்
மதம்; மனிதர்களை மிருகங்களாக்குவது எந்த மதத்துக்கும் நோக்கம் இல்லை.
'ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிட்டும்’
என்பதுதானே நபி மொழி. 'முஸ்லிம் அல்லாத ஒருவனுக்கு, முஸ்லிம் அநீதி
இழைத்தாலோ, அவனது உரிமையைப் பறித்தாலோ, அவனுடைய சக்திக்கு மீறியச் சுமைகளை
அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக
எடுத்துக்கொண்டாலோ, நான் மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த
முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில், முஸ்லிம் அல்லாதவனின்
வழக்கறிஞராக வாதாடுவேன்’ (நபி மொழித் தொகுப்பு) என்று வாய் மலர்ந்த
அருட்பெருங் கருணை வள்ளல் அல்லவா பெருமானார்!
'அல்லா வழங்கியவற்றில்
இருந்து உண்ணுங்கள்; பருகுங்கள். பூமியில் குழப்பம் உண்டாக்கித்
திரியாதீர்கள்’ என்று அறிவுரை வழங்குவது அல்லவா திருமறை! அல்லாவின்
திருநாமங்களில் ஒன்றாக 'அஸ்ஸலாம்’ என்பதற்குப் பொருள் 'அமைதியை
வெளிப்படுத்துபவன்’ என்பதுதானே. 'வஸ்ஸில் ஹு ஹைர்’ (சமாதானமே சிறந்தது)
என்பதன்றோ இறைவனின் மாசற்ற மறை வாசகம். 'வாய்மொழியாலும், கைகளாலும்
அடுத்தவருக்குத் தீங்கிழைப்பவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது’ என்று
தீர்ப்புரைக்கும் அன்பு வழிப்பட்ட சமயத்தின் பாதையிலா தலிபான்களின் பயணம்
நடக்கிறது? இவர்களை எதிர்த்து எழும் 'விஸ்வரூபம்’ சாந்தியும் சமாதானமும்
நாடும் மனங்களை எப்படிக் காயப்படுத்த முயலும்?
'அழிவுப் போர் நடத்தப் புறப்படும் போதெல்லாம் தலிபான் தீவிரவாதிகள்
திருமறையை வாசிப்பதுபோன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும்,
திருமறையின் வசனங்கள் ஒலிக்கப்படுவதும் எங்கள் உணர்வுகளைக் காயப்
படுத்துகின்றன’ என்று முஸ்லிம் அமைப்புகள் மனவருத்தத்தைப் பதிவுசெய்துள்ளன.
இதைக் கமல்ஹாசன் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகள்
வழி தவறியவர்கள்; மனப் பிறழ்வில் வன்முறையை வாழ்நெறியாக வரித்துக்
கொண்டவர்கள்; தாங்கள் 'ஜிஹாத்’ என்ற புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக
ஆழ்மனதில் நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் எதைச்செய்தாலும் இறை வனை
முன்நிறுத்தியே செய்யப் பழ கியவர்கள். 'விஸ்வரூபம்’ காட்சிகள் இந்த
யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், கமல்ஹாசன் இரணப்பட்ட
இருதயங்களுக்கு மதிப்பளித்து அந்தக் காட் சிகளை வெட்டிவிட முன்வருவது
நல்லது.
மகாபாரதத்தில் வரும் குரு க்ஷேத்திரம்உண்மை நிகழ்வன்று; அது ஓர் உயர்ந்த
உருவகம். ஒவ்வொரு மனித மனத்திலும் தீய எண் ணங்களும், நல்லெண்ணங்களும்
கலந்தே காட்சி தரும். இரண்டுக்கும் இடைவிடாமல் நடக்கும் போரே
குருக்ஷேத்திரம். மனித இனம் உள்ள கடைசி நாள் வரை இந்தப் போர்
நடந்துகொண்டுதான் இருக்கும். சூஃபிக்கள் பார்வையில் 'ஜிஹாத்’ என்னும்
புனிதப் போர் உடல் வலிமையைக் கொண்டு உலக அரங்கில் நடப்பது அன்று. அது
உள்ளத்துக்குள் படிந்து கிடக்கும் தீய எண்ணங்களை அழித்தொழித்து இறைவனின்
இருப்பிடமாக மனதை மாற்ற நடப்பது. இந்தப் புனிதப்போர் எல்லா இடங்களிலும்
நடக்கட்டும். 'விஸ்வரூபம்’ இந்தப் போருக்கு எதிரானது இல்லை.
மத்திய
தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலர் லீலா சாம்சன், 'சில முஸ்லிம் அமைப்புகள்
'விஸ்வரூபம்’ தடைசெய்யப்பட வேண்டும்’ என்று போராடுவது கலாச்சார
பயங்கரவாதம் (Cultural Terrorism) வளர்வதற்கு வழி வகுத்துவிடும். எந்த மதம்
சார்ந்தவரின் மனதையும் புண்படுத்துவதுபோல் இந்தப் படத்தில் ஒரு காட்சியும்
இல்லை. தடைசெய்யப்பட வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது சட்டபூர்வமான
தணிக்கை அமைப்பை அவ மானப்படுத்தும் செயலாகும். தணிக்கைக் குழுவின்
சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, திரையரங்குகளில் படம் வெளியிடப்படுவதைத்
தடுக்கவோ, அதைப் பார்க்கும் உரிமையை மக்களிடமிருந்து பறிக்கவோ, எந்த
அமைப்புக்கும் அதிகாரம் இல்லை’ என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இஸ்லாமிய சகோதரர்கள் யோசிக்க வேண்டும். சிவாஜி கணேசனுக்குப் பிறகு,
தமிழகம் கண்டெடுத்த இணையற்ற நடிப்பாற்றல் கொண்ட கலைஞர் கமல்ஹாசன்.
'களத்தூர் கண்ணம்மா’வில் ஆதரவற்ற அனாதைச் சிறுவனாய் 'அம்மாவும் நீயே’
பாடலுக்கு அழகாக வாயசைத்துத் தன் நிராதரவான நிலையை வியக்கத்தக்க
விழியசைவிலும், சோகம் ததும்பும் முகபாவத்திலும் நேர்த்தியாக வெளிப்படுத்திய
தருணத்திலிருந்து, இந்தியக் கலையுலகின் தவிர்க்க முடியாத நவரச நாயகனாய்
கால நடையில் வளர்ந்து, நடிப்பில் விசுவரூபம் காட்டி நிற்பவர் கமல்.
'பதினாறு வயது’ முதல் 'அன்பே சிவம்’ வரை நடிப்பில் அவர் காட்டிய
பரிமாணங்களை இன்னொருவரால் எளிதில் காட்ட இயலாது. ஈட்டிய பணத்தைப் பல்வேறு
தொழில்களில் முதலீடு செய்து இறுதி நாள் வரை இன்பமான வாழ்க்கைக்கு வழிதேடிக்
கொள்ளும் நடிகர்களுக்கு நடுவில், பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுப்
படவுலகில் கையைச் சுட்டுக்கொள்ளும் கலைத் தாகமுள்ள கமல், தமிழினம் பெருமை
கொள்ள வேண்டிய மனிதர்.
ரஜினிக்கும் கமலுக்கும் தமிழகம் கொடுத்தது அதிகம்.
அதற்குக் கைம்மாறாகத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள்
இருவரும் கொடுத்தது மிகமிகக் குறைவு. இந்த விமர்சனம் எனக்கு எப்போதும்
உண்டு. ஆயினும் 90 கோடி ரூபாய் செலவழித்து மூன்று மொழிகளில் எடுத்த படத்தை
வெளியிட முடியாமல் துடிக்கும் ஒரு கலைஞனின் வலியை என்னால் பூரணமாக உணர
முடிகிறது. அடுத்தவர் வலி உணர்ந்து அதற்கு மருந்திடுவது அல்லவா உண்மையான
மதம்; அதுதானே உன்னதமான ஆன்மிகம்.
வீடற்ற, வேலையற்ற, இலக்கின்றிப் பயணிக்கிற ஏழைகளைத் தான் நடிக்கும்
ஒவ்வொரு படத்திலும் 'டிராம்ப்’ (tramp) என்ற பாத்திரத்தின் மூலம்
நகைச்சுவை இழையோட ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க சமூகத்தின்
முதலாளித்துவ முகமூடியை விலக்கி, அதன் ஈரமற்ற இதயத்தைத் தோலுரித்துக்
காட்டிய 'குற்றத்துக்காக’ சார்லி சாப்ளின் மீது கம்யூனிஸ்ட் சாயத்தைப்
பூசி, அவரை நாடு கடத்தி 20 ஆண்டுகளுக்கு மேல் அலைக்கழித்துக்
காயப்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். சார்லி சாப்ளின் என்ற மகா
கலைஞனுக்கு நேர்ந்த துயரம் மதம் காரணமாக நம் மகா கலைஞர் கமலுக்கும்
நேர்ந்து விடலாகாது.
'பம்பாய்’ படத்தில் முஸ்லிம்களுக்குச் சார்பான காட்சிகள் இடம்
பெற்றிருப்பதால், அந்தப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று
மிரட்டல் விடுத்த பால்தாக்கரேவைச் சந்தித்து, பணிவாக அவர் இட்ட நிபந்தனைகளை
ஏற்றுக்கொண்ட மணிரத்னத்தின் படைப்புரிமை சிவசேனாவின் இந்துத் துவத்தால்
பறிக்கப்பட்டது கலாசாரப் பயங்கரவாதம் என்றால், இன்று 'விஸ்வரூபம்’ வெளிவர
அனுமதிக்க மாட்டோம் என்று அடம்பிடிப்பதை எந்தப் பெயரில் அழைப்பது?
நேற்று துப்பாக்கி; இன்று விஸ்வரூபம்; நாளை அமீரின் ஆதிபகவன் என்று
தொடர்வது சிந்தனைச் சர்வாதிகாரத்துக்கான சமிக்ஞை. விஜயின் தந்தை இயக்குநர்
சந்திரசேகரன், எதிர்ப்பை வெளிப்படுத்திய அமைப்புகளுடன் சமரச முயற்சியில்
ஈடுபட்டு, அவர்கள் நிபந்தனைகளை ஏற்றுச் சில காட்சிகளை நீக்கிய பிறகு,
'துப்பாக்கி’ திரைக்கு வந்தது. இஸ் லாமியரைப் புண்படுத்தும் காட்சிகள்
'துப்பாக்கி’யில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது.
தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகும் ஒவ் வொரு படமும் ஏதோ ஒரு
சமூகத்திடம் இன்னொரு 'சான்றிதழ்’ வாங்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
வலுப்பெறுவது சமூகத்துக்குச் சரியானது அன்று.
'இஸ்லாம் சமயம் சகிப்புத்தன்மையற்றது’ என்று அமெரிக்க, ஐரோப்பிய
ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு தவறான கற்பிதத்தை நிலைநிறுத்த நீண்ட காலமாக
முயன்று வருகின்றன. அன்பு சார்ந்த, அனைவரையும் சகோதரர்களாகப் பாவிக்கும்
பண்பை அடித்தளமாகக் கொண்ட, துயருற்றுத் தவிக்கும் ஏழைக்கும் பாழைக்கும்,
அனாதைக்கும் அகதிக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காகவே 'ஜகாத்’ என்னும் தானம்
வழங்குதலை முக்கிய மார்க்கக் கடமையாக வலியுறுத்திய நேரில் சந்திக்கும்
தோழர்களை மார்புறத் தழுவி மனித நேயத்தை வெளிப்படுத்துகிற, முதற்பார்வையில்
முகமன் கூறும்போது 'அஸ்ஸலாமு அலைக்கும் - வ அலைக்கும் வஸ்ஸலாம்’ என்று (
உங்களுக்கு அமைதி கிட்டுவதாக) பாசத்தைப் பகிர்ந்துகொள்கிற சமயம், சிலரது
உணர்ச்சியின் வெளிப்பாடுகளால் தவறான புரிதலுக்கு உட்படலாமா?
கமல்ஹாசன் தயாரித்த 'ஹே ராம்’ திரைப்படத்தில் காந்திக்கு எதிரான
காட்சிகளை அமைத்தார். காந்தியை விமர்சிக்கும் வசனங்கள் அந்தப் படத்தில்
இடம் பெற்றிருந்தன. அது படத்தின் போக்கில் தவிர்க்க முடியாதது. அதற்காக
மகாத்மாவுக்கு எதிரான மனிதர் கமல்ஹாசன் என்று எந்தக் காந்தியவாதியும் கொடி
பிடிக்கவில்லை. 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்கு மகாத்மா அல்ல. அவர்
எனக்கு நண்பர். என்னால் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் என்னுடன்
பேசாமலேயே செத்துப் போய் விட்டாரே என்ற வருத்தம் உண்டு’ என ஒரு முறை கமல்
குறிப்பிட்டிருந்தார். அப்படிப் பேசுவது கமலுக்கான அடையாளம். இதை எந்த
காந்தியச் சிந்தனையாளரும் அதிகப் பிரசங்கித்தனம் என்று எண்ணவில்லை.
'விஸ்வரூபம்’ படம் வெளிவருவதும், வராமல் போவதும், கமல்ஹாசன் லாபமடைவதும்
நட்டப் படுவதும் ஒரு தனிநபர் விவகாரம். இதற்காக நீங்கள் மெனக்கெட்டு எழுத
வேண்டுமா என்று கேட்கலாம். மீண்டும் சொல்கிறேன். இது தனிநபர் பிரச்னை
இல்லை. 'நாங்கள் நினைப்பதைத்தான் நீ எழுத வேண்டும். நாங்கள் விரும்பும்
விதத்தில்தான் உன் எந்தப் படைப்பும் இருக்க வேண்டும். நாங்கள்
சொல்வதற்கேற்பவே நீ சிந்திக்க வேண்டும்’ என்று சிலர் சமூகத்தின்
சட்டாம்பிள்ளைகளாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு கட்டளையிடப்
புறப்பட்டு விட்டால், கலாசார பயங்கரவாதம் வேறொரு வடிவில் விசுவரூபம்
கொள்ளும். அப்போது படைப்பாளியின் சுதந்திரம் பறிபோகும். பாசத்தின் அகோரப்
பசிக்கு அறிவுலக நியாயங்கள் அனைத்தும் இரையாகும்.
படம்: சொ.பாலசுப்பிரமணியன்
2.மதச்சார்பற்ற தேசத்தைத் தேடிச் செல் வேன்’ என்று, கமல் உருக்கமாகச்
சொன்னது, முஸ்லிம் சமூகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர்
கமலுக்கு ஆதரவு நிலையையும், மற்றவர்கள் தாங்கள் எடுத்த
எதிர்ப்பு முடிவிலும் உறுதி யாகவும் இருக்கின்றனர்.
கமலைச் சந்தித்துப் பேசி இருக்கும் காங் கிரஸ் எம்.பி. ஆரூணிடம்
பேசினோம். ''முஸ் லிம்கள் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது.
'விஸ்வரூபம்’ விவகாரத்தில் எங்கள் சமூகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு
விடக்கூடாது என்பதால்தான் கமலைப் பார்த்தோம். கமல் வியாபார ரீதியில் படம்
எடுக்கிறார். அதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை
விட்டே வெளி«யறுகிறேன் என்று கமல் வருந்தும் நிலைக்கு நாம் அவரைத் தள்ளி
இருக்கிறோம். 'விஸ்வரூபம்’ விவகாரம் இப்போது திசை திருப்பப்படுகிறது.
'துப்பாக்கி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருந்ததால் நீக்கச் சொன்னோம்.
அதேபோல், இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதை நீக்க
கமல் தயாராகத்தான் இருக்கிறார். நான் கமலைச் சந்தித்துப் பேசியதைக் கூட
சிலர் குற்றம் சாட்டு கிறார்கள். ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை''
என்றார் தைரியமாக.
நடுநிலையான
கருத்துக்களைப் பதிவு செய்யும் கவிஞர் இன்குலாப், இந்த விவகாரத்தில் என்ன
சொல்கிறார்? ''கருத்துச் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல.
கருத்தில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். எதிர்மறையான கருத்துகளை முன்
வைக்கலாம். அதற்காக, கருத்தை முடக்குவது தவறு. கருத்துச் சுதந்திரம் பற்றி
கமல் போன்றவர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை. கதா நாயகன், வில்லன் என்ற
சினிமா கருத்துக்கள்தான் கமல் சினிமாவிலும் பிரபதிபலிக்கிறது. படத்தில்
சித்திரிப்புகளை உரு வாக்கும் போது வேறுபட்ட பார்வை கமலுக்கு இல்லை.
தீவிரவாதத்தைக் காட்டுவதாகச் சொல்லிவிட்டு அதன் புனைவுகளைத்தான் சொல்ல
முற்படுகிறார். இதை 'குருதிப்புனல்’ படத்திலேயே பார்த்து விட்டோம். தொடர்
நிகழ்வுகள்தான் முஸ்லிம்களை இந்த அளவுக்கு கோபப்பட வைத்திருக்கிறது.
மதச்சார்பற்ற நாட் டைத் தேடுகிறேன் என்று அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்
போதே அவர் மதச்சார்புள்ள நிலையில்தான் இருக்கிறார் என்பது தெரிகிறது.
மதவெறிச் சித்திரிப்புகளைப் படத்தில் காட்டி இருந்தால் அதற்காக எழும்
போராட்டத்தை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்'' என்கிறார் ஆணித் தரமாக.
முஸ்லிம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின்
எம்.எல்.ஏ. ஜவாஹி ருல்லாவிடம் பேசினோம். ''தன்னுடைய பெயரில் ஹாசன் என்று
இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் கமலுக்கு நேர்ந்த
அவமானத்தைக் கமல் மறந்து விட்டாரா? அப்துல் கலாமுக்கும்
ஷாருக்கானுக்கும்கூட இதுபோன்ற அவமானங்கள் ஏற்படும் போதும் சாதாரண
முஸ்லிம்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். எங்கள் வலியை அனுபவமாக அறிந்த
பிறகும் கமல் எங்களைக் காயப்படுத்தலாமா?
அவர் நஷ்டம் அடைய வேண்டும் என்பது
எங்கள் நோக்கம் அல்ல. 'உன்னைப் போல் ஒருவன்’ படம் வந்தபோதே அதில் சில
காட்சிகள் எங்களை பாதிப்பதாக இருந்ததை அவரிடம் முறையிட்டோம். 'முஸ்லிம்களை
உயர்வாகச் சித்திரித்து நிச்சயம் ஒரு படம் எடுப்பேன்’ என்று எங்களிடம்
சொன்னார். அதுதான் 'விஸ்வரூபமா’? முள்ளிவாய்க்காலில் தமிழர்கள்
கொல்லப்பட்டதையும், கூடங் குளம் விவகாரத்தையும், குஜராத் கலவரம், பாபர்
மசூதி இடிப்பு என எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே... அதை எல்லாம் எடுக்
கலாமே?
இப்போது கொதிக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் இதற்கு முன் சில
படங்கள் தடை விதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள்? மகாத்மா காந்தியைக்
கொடூரமாகச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம்
கோட்சே. ஆனால், பழியை முதலில் முஸ்லிம்கள் மீதுதானே போட்டனர். அதேதான்
விஸ்வருப விவகாரத்திலும் நடக்கிறது'' என்று வெடித்தார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, ''படத்தில்
முஸ்லிம்களின் உணர் வைப் பாதிக்கும் விதத்தில் காட்சிகள் இருந்தது.
ஆரம்பத்திலேயே இதுபற்றி கமல் பேசி இருந்தால், பிரச்னை இந்த அளவுக்கு
வெடித்து இருக்காது. தன்னுடைய வியாபாரத்தில் ஒரு பிரச்னை என்று வந்ததும்
இந்தியாவை மதச் சார்புள்ள நாடு என்கிறார். நாங்கள் எல்லோரும் இங்கே
இருக்கும் எல்லோருடனும் சகோதர்களாகத்தான் பழகி வரு கிறோம். கமல் தன்னுடைய
வியாபாரத்துக்காக எங்கள் உணர்வுகளை உரசிப்பார்க்க வேண்டாம்'' என்கிறார்
கோபத்தோடு.
சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!
- எம்.தமிழ்ச்செழியன்
3. ஊர்
ரெண்டுபட்டால் கூத்தாடி க்குக் கொண்டாட்டம் என்பார் கள். கோலிவுட்டில்
கூத்தாடிகளே இரண்டுபட்டுக் கிடப்பதால், அரசாங்கத்துக்குக் கொண்டாட்டம்!
கண் வலி ஏற்பட்டு சிவந்த கண்களைக் கண்டிருப்பீர்கள்; குடித்துச் சிவந்த
கண்களைப் பார்த்து இருப்பீர்கள்; கடந்த 20 நாட்களாக உறக்கம் இன்றி
கவலையால் கண்கள் சிவந்து, கமல் திரிந்து கொண்டு இருக்கிறார்.
நடிகர் சங்கம்
அ.தி.மு.க-வில் இருந்தாலும் மீடியாக்களில் கமலுக்கு ஆதரவாக கணீர் குரல்
கொடுக்கிறார், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி. அதேசமயம் அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த
விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. கமலுக்கு கை கொடுத்தால், இணக்கமாக
இருக்கும் அ.தி.மு.க. உறவில் பிணக்கு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால்,
'விஸ்வரூபம்’ தொடர்பான கமென்ட்களைத் தவிர்க்கிறார் என்கிறது விவரம் அறிந்த
வட்டாரம்.
பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் சண்டை போட்டால், ஓட்டுகிற பேருந்தை எல்லாம்
அதே இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் போராடுகின்றனர். ஒரு வக்கீலிடம்
சண்டை போட்டால் பேசினால், ஒட்டுமொத்த வக்கீல்கள் சங்கமே போராட்டத்தில்
குதிக்கிறது. உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமலுக்கு ஒரு பிரச்னை
என்றால், அவர் சார்ந்துள்ள நடிகர் சங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து
கமலே பலமுறை வேதனை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
'நடிகர் கமல்ஹாசனை கவுன்சில் கண்டு கொள்ள வேண்டாம், ராஜ்கமல்
ஃபிலிம்ஸின் தயாரிப்பாளர் கமலை தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ள
வேண்டாமா?’ என்று குமுறல் குரல்கள் கேட்கின்றன. ஒரு பக்கம்
எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் ஆகியோரின் குடுமிப்பிடிச் சண்டை... இன்னொரு
பக்கம் 'படம் தயாரிப்போர் சங்கம்’ ஆரம்பிக்கும் புது கோஷ்டி என்று
குஸ்திமேளா நடந்து வருகிறது அங்கே. இதற்கு இடையில் கமலை அம்போ என்று
விட்டுவிட்டனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமலுக்கு ஆதரவு இல்லை. இயக்குநர் கமலுக்கு
இயக்குநர்கள் சங்கத்தில் இருந்தும் பெரிதாக ஆதரவு இல்லை. அதன் சங்கத்
தலைவர் பாரதிராஜா ஆதரவுக் குரல் கொடுக்கிறார். ''தலிபான் நாட்டில் நடந்த
ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக எடுப்பது, படைப்பாளியின் தார்மீக உரிமை.
அப்படி எடுக்கக் கூடாது என்று தடுப்பது யார்?'' என்று கமலுக்கு வக்காலத்து
வாங்குகிறார். கமலுக்கு வரிந்துகட்டிக்கொண்டு பாரதிராஜா ஆதரவு தெரிவிக்க,
கமலின் குருநாதர் பாலசந்தர் 'விஸ்வரூபம்’ குறித்து இதுவரை ஏனோ வாய்
திறக்கவில்லை.
அஜித்தும் கமலும்!
கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதிக்கு, 'பாசக்காரத் தலைவனுக்கு
பாராட்டு விழா’ நடத்தினர். மேடையில், 'இந்த மாதிரியான விழாக்களுக்கு
வரச்சொல்லி சில நபர்கள் நடிகர், நடிகைகளை மிரட்டுகிறார்கள்’ என்று
பொதுவாகப் பேசினார் அஜித். கருணாநிதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த
ரஜினி, அஜித் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார். மறுநாளே அஜித்
மிரட்டப்பட, கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து மேடையில்
பேசியதற்காக 'ஸாரி’ கேட்டார் அஜித். அப்போது அஜித்துக்கு ஆறுதலாக இருந்தவர்
ரஜினி. இப்போது கமலுக்கு ஆதரவாக முதல் அறிக்கையை அஜித் வெளியிட்டது கமல்
ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
''அன்று அஜித்துக்கு ஏற்பட்ட நிலைதான் இன்று கமலுக்கு ஏற்பட்டு
இருக்கிறது'' என்று சொல்பவர்கள், ''தன்னுடைய பிறந்த நாளுக்கு போயஸ்
கார்டன் சென்று ஜெயலலிதாவிடம் ஆசி வாங்கிய கமல், அதன்பிறகு நடந்த
ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில், 'வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர
வேண்டும்’ என்று பேசியதைப் பார்த்து உஷ்ணமானார் ஜெயலலிதா. மறுபடியும் கமல்
தன்னை வந்து சந்திப்பார் என்று எதிர்பார்த்தார். கமல் கண்டுகொள்ளாமல்
'விஸ்வரூபம்’ பட ரிலீஸில் இறங்கினார். அப்போதுதான் முஸ்லிம் விவகாரம்
தலைதூக்க, கடுப்பான ஜெயலலிதா, அதை வைத்து கமலுக்கு எதிராகக் காய்
நகர்த்தினார்'' என்கின்றனர். ஆனால், ''சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்காகவே
'விஸ் வரூபம்’ படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில் எந்த அரசியல்,
வியாபார பின்புலமும் இல்லை'' என்று மறுக்கிறார் ஜெயலலிதா.
கண்ணீர்விட்ட ரசிகர்கள்!
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பலமுறை... பிலிம்ஃபேர் விருது பலமுறை
பெற்ற நடிகர் கமல், கடந்த 30-ம் தேதி தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் அளித்த
பேட்டியைப் பார்த்து அவரது ரசிகர்கள் கண்ணீர்விட்டு கதறினர். ''நான் சிவாஜி
மடியில் அமர்ந்தவன், ஜெமினியிடம் நடை பயின்றவன், எம்.ஜி.ஆர். தோளில்
வளர்ந்தவன். அவர்தான் என்னை தோளுக்கு மேல் உயர்த்தி உலகத்தின் உயரத்தைக்
காட்டியவர்.
நான் ராமநாதபுர அரண்மனையில் பிறந்தவன். இப்போது இங்கே
ஆழ்வார்பேட்டையில் இருக்கும் எனது அலுவலகம் ஒரு வகையில் அதே ராமநாதபுர
அரண்மனைக்கு சொந்தமானது. இந்த இடம், கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும்
எனது சொத்துக்கள் எல்லாவற்றையும் அடகு வைத்து சினிமா எடுத்து இருக்கிறேன்.
'விஸ்வரூபம்’ படத்துக்காக எல்லாச் சொத்துப் பத்திரங்களையும் பண
முதலீட்டாளரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன். படம் ஜெயித்தால், பணம் கிடைத்
தால், எனது சொத்துக்கள் என்னிடமே திரும்பி வரும். இல்லைஎன்றால், எல்லாச்
சொத்துக்களும் பறிபோய்விடும். சாப்பிட எனக்கு நிறைய வீடுகள் இருக்கின்றன.
தங்குவதற்குத்தான் வீடு
இல்லை.
நமது முன்னோர் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொல்லி
இருக்கிறார்களே. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதச்சார்பில்லாத மாநிலம்
இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இந்தியாவில் இல்லையென்றால், என்ன
செய்வது? உலகில் வேறு பகுதியில் அதுமாதிரி இடம் இருந்தால் அங்கே
குடிபெயர்வேன்'' என்று, கமல் பேசி முடித்தபோது, கண்களில் கூடுகட்டி இருந்த
உப்புநீர்க் குடம் உடைந்து போனது.
'நாட்டைவிட்டு வெளியேற விட மாட்டேன்...’ என்று, தேனியில் இருந்து கமல்
ரசிகர் ஒருவர், 10 ஆயிரம் ரூபாய் செக்குடன் கண்ணீர் மல்க கமலின் ஆபீஸில்
ஆஜரானார். இப்போது, தேனி ரசிகரின் பாணியைப் பின்பற்றி தமிழகம் முழுவதும்
இருந்து கமல் ரசிகர்கள் கையில் காசோலையோடு ஆஜராகி வருகின்றனர். நேற்று வரை
கமல் விஷயத்தில் பாராமுகமாக இருந்த திரைப்பட உலகம், 'நான் நாட்டைவிட்டு
வெளியேறுகிறேன்’ என்ற கமலின் பேச்சுக்குப் பிறகு, கொஞ்சம் கூச்சம் அடைந்து
அவரது அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தனர்.
பாரதிராஜா, மணிரத்னம், வைரமுத்து,
விஜயகுமார், ராதாரவி, சிவகுமார், சூர்யா, கார்த்தி, குஷ்பு, ராதிகா,
சினேகா-பிரசன்னா, என்று நட்சத்திரங்கள் கமலைச் சந்தித்து கண்ணீர் விட்டனர்.
அன்று மாலை 5 மணிக்கு கமலிடம் செல்போனில் பேசிய ரஜினி, அலுவலகத்துக்கு
வருவதாகக் கூறினார். ''வேண்டாம். சுற்றிலும் மீடியாக்கள் இருக்கின்றன.
நீங்கள் வந்தால், பிரச்னை வேறுவிதமாக திசை திரும்பிவிடும்'' என்று அன்பாக
மறுத்து விட்டார் கமல்.
திரை உலகினரின் யு டர்ன்!
பிப்ரவரி 1-ம் தேதி ரிலீஸாகும் 'விஸ்வரூபம்’ இந்திப் பதிப்புக்காக
31-ம்தேதி காலை கமல் மும்பைக்குச் சென்று விட்டார். அதனால், முஸ்லிம்
தலைவர்களுடன் கமல் சார்பில் இயக்குநர் அமீர், சாருஹாசன் இருவரும்
பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த 31-ம் தேதி, காலை, திரையுலகினர்
அனைவரும் கமல் ஆபீஸில் சந்திக்கிறார்கள் என்று தெரிவித்தனர். ஆனால்,
தென்னிந்திய வர்த்தக சபைத் தலைவர் கல்யாணம், தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குநர்கள் சங்கத்
தலைவர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர் வரவில்லை.
இயக்குநர் பாலா, சிவகுமார், பிரபு, கார்த்தி, மாதவன், ராதிகா, பெப்சி
தலைவர் அமீர் ஆகியோர் மட்டும் சந்தித்தனர். 31-ம் தேதி மதியம் முதல்வரின்
பேட்டி வெளியாகும்வரை கமல் அலுவலக மாடியில் இவர்கள் காத்திருந்தனர்.
அதன்பிறகு, 'மதச்சார்பு இல்லாத மாநிலம் நோக்கிப் போகிறேன்’ என்று கமல்
கண்கலங்கிய அதே இடத்தில், ''நாங்கள் புரட்சித்தலைவி முதல்வருக்கு நன்றி
சொல்கிறோம்'' என்று யு டர்ன் போட்டனர். இந்த டயலாக், ரசிகர்கள் யாருக்கும்
புரியவில்லை.
''கடந்த 15 நாட்களாக கமல் கஷ்டப்பட்டபோது சினிமாவில் இருக்கும் ஒரு
அமைப்புகூட ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை'' என்று, இவர்களைப்
பார்த்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இறுகிய முகத்தோடு எல்லோருக்கும்
பெரிய கும்பிடு போட்டு வழியனுப்பினர்.
சினிமாவில் கர்ஜிப்பவர்கள், பறந்து பறந்து தாக்குபவர்கள், பஞ்ச் டயலாக்
உதிர்ப்பவர்கள்... 'விஸ்வரூப’ விவகாரத்தில் பொட்டிப் பாம்பு மாதிரி
பதுங்கிக் கிடந்ததுதான் வருத்தமளிக்கிறது!
- நமது நிருபர்கள், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்
4. மதப் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, குறுக்கு வழியில் தணிக்கைச்
சான்றிதழ்.. இப்படி எல்லாவிதத்திலும் முட்டுக்கட்டைப் போட்டுப் பார்த்தாகி
விட்டது. 'விஸ்வரூபம்’ படம் எடுத்ததை விட அதை ரிலீஸ் செய்வதற்குத்தான்
பாடாய்படுகிறார் கமல்ஹாசன்.
திரைப்படத்தை வெளியிடுவதில் யாரும் தலையிடக்கூடாது என்று, கமல் தரப்பில்
கடந்த 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் சார்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், தமிழக அரசு சார்பில்
தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனும், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த
பாண்டியனும், இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்புவும்
வாதிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 11-வது நீதிமன்றத்தின் காட்சிகள் விறுவிறுப் புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தன.
தனி நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு வாதாடத் தொடங்கினார் ராஜ்கமல்
இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸின் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: '''விஸ்வரூபம்’
திரைப்படத்துக்கு 31 மாவட்ட கலெக்டர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து
உள்ளனர். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன், அவர்கள் காவல் துறையை
ஆலோசிக்கவில்லை. எங்களுக்கு நோட் டீஸ் அனுப்பவில்லை. 'விஸ்வரூபம்’ திரைப்
படத்தை வெளியிடுவதால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று
கலெக்டர்களிடம் யாரும் புகார் கொடுக்கவும் இல்லை.
இதிலிருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது.
சினிமோட்டோகிராஃப் சட்டப்படி, மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைத் துறை,
தணிக்கைச் சான்றிதழ் வழங்கிய பிறகு மாநில அரசு அந்தத் திரைப் படத்துக்குத்
தடைவிதிக்க முடியாது. அதனால்தான், குறுக்கு வழியில் சட்டம் - ஒழுங்குப்
பிரச்னையை காரணம் காட்டி 144-வது தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
'விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இந்திய முஸ்லிம்கள் தவறாக
சித்திரிக்கப்படவில்லை. அதில் கதாநாயகன் மட் டும்தான் இந்திய முஸ்லிம்.
அந்தப் பாத்திரம் நல்லவிதமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான்,
முஸ்லிம்கள் பெரு வாரியாக வசிக்கும் ஹைதராபாத்திலும் முஸ்லிம்கள் மட்டுமே
வசிக்கக்கூடிய கேரளாவின் மலபாரிலும் 'விஸ்வரூபம்’ எந்தச் சர்ச்சையும்
இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் எப்படி சட்டம் -
ஒழுங்கு பாதிக்கும்? சிலரின் நியாயமற்ற கோரிக்கைக்காக, தனி மனிதனின்
கருத்து சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. அமிதாப் பச்சன் நடித்த 'ஆரக்ஷன்’
என்ற திரைப்படத்துக்குப் பஞ்சாப்பிலும் உத்தரப்பிரதேசத்திலும் இதேபோல் தடை
விதிக்கப்பட்டது. அதை எதிர்த்த வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,
ஒரு சிலரின் அபத்தமான அச்சத்துக்காக ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது
என்று தடையை நீக்கியது. திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் ஒவ்
வொரு நாளும் கமல்ஹாசனுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். ஆகவே, தடையை
நீக்க வேண்டும்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன்: சட்டம்-ஒழுங்குக்கு
ஆபத்து நேரிடும் சூழ்நிலை உருவானால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த அடிப்படையில்தான் தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்துக்குத் தணிக்கைக் குழுவின்
தலைவர்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியும்.
ஆனால், 'விஸ்வரூப’த்துக்கு
அவர் சான்றிதழ் வழங்கவில்லை. சம்பந்தம் இல்லாத ஐந்து பேர் கொண்ட
ஆய்வுக்குழுதான் சான்றிதழ் வழங்கி உள்ளது. ஆய்வுக்குழு அளித்த சான்றிதழை
தணிக்கைக் குழு வழங்கியதாக ஒப்புக் கொள்ள முடியாது. மேலும் இப்போது நான்
சொல்லப்போகும் விஷயம் சரியாகவும் இருக்கலாம்... தவறாகவும் இருக்கலாம்...
தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடக்கின்றன.
தனி புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்றம் அதை விசாரிக்க வேண்டும்.
வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் (குறுக்கிட்டு): தணிக்கைக் குழுவில் முறைகேடு
நடப்பதாக அரசின் தலைமை வழக்கறிஞர் சொல்கிறார். அவர் சொல்வது தமிழக
அரசாங்கமே சொல்வது போன்றதுதான். இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் மை
லார்ட்.
அ.த.வ: எனக்கும் சட்டம் தெரியும். கடவுள் ஒருவரைத்தவிர இங்கு வேறு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.
நீதிபதி: நீதிபதிக்கும் நீங்கள் பயப்பட மாட் டீர்கள் என்று சொல்கிறீர்கள் (நீதிமன்றத்தில் சிரிப் பொலி).
அ.த.வ.: நான் அப்படிச் சொல்லவில்லை மை லார்ட். இந்திய முஸ்லிம்களை தவறாக
சித்திரிக்க வில்லை என்று மனுதாரர் சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால்,
ஆப்கன் முஸ்லிம், இந்திய முஸ்லிம் என்றெல்லாம் யாரும் பிரித்துப்
பார்ப்பதில்லை. உலகம் ஒரு கிராம மாகச் சுருங்கி உள்ள நிலையில், ஆப்கன்
முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்தால், அது இந்திய முஸ்லிம்களையும்
பாதிக்கும். மேலும், இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் (கமல்) விற்று
விட்டார்.
இப்போது படத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. எனவே,
அவர் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடி
யாது. தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். ஆனால்,
அவர்கள் எந்த வழக்கையும் தொடுக்கவில்லை. எனவே, இவர்கள் தாக்கல் செய்துள்ள
மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன்: கருத்துத்
தெரிவிக்கவும் வர்த்தகம் செய்யவும் மனுதாரருக்கு உரிமையை வழங்கி உள்ள அதே
அரசியல் சாசனம்தான், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் கடமையையும்
உரிமையையும் எங்களுக்கு வழங்கி இருக்கிறது. 'விஸ்வரூபம்’ திரைப்படத்தை வெளி
யிடுவதால் நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். வெளியிட்டால்
பல உயிர்களுக்கு சேதம் ஏற்படும். உயிரா? அல்லது பணமா? என்பதை நீதிபதி
அவர்கள் முடிவு செய்து தீர்ப்பளிக்க வேண்டும்.
முஸ்லிம் அமைப்புக்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சங்கரசுப்பு: சேது
சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ராமர் பாலம் என்ற கருத் தைக் காரணம்
காட்டி சிலர் பிரச்னை செய்தனர். அந்த உணர்வுக்கு மதிப்பளித்து, அந்தத்
திட்டம் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதே
உணர்வோடுதான், இப்போது 'விஸ்வரூபம்’ திரைப்படத்துக்குத் தடை கேட்கிறோம்.
-இப்படியான இரண்டு தரப்பு வாதங்களும் மாலை ஆறு மணிக்கு முடிந்தது.
அதன்பிறகு, தீர்ப்பை இரவு எட்டு மணிக்கு வழங்குவதாக சொன்ன நீதிபதி
வெங்கட்ராமன், இரவு 10.15-க்குத் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில்,
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கலெக்டர்கள் விதித்த தடை உத்தரவுக்கு தடை
விதிக் கிறேன் என்றார்.
இரவோடு
இரவாக, தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ் வீட்டுக்குச் சென்ற
தமிழக அர சின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மேல் முறையீடு
செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
இதனால், இந்த வழக்கு மறுநாள், (30-ம் தேதி) நீதிமன்றத்துக்கு வந்தது.
அன்று இந்த வழக்கை தற் காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ், நீதிபதி
அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் முன்பு வாதிட்ட தமிழக அரசின்
தலைமை வழக்கறிஞர், ''கலெக்டர்களின் தடை உத்தரவை எதிர்த்து இவர்கள்
நீதிமன்றத்துக்கு வந்திருக்கக் கூடாது. கலெக்டரிடம் சென்றுதான்
முறையிட்டிருக்க வேண்டும். அங்கு நிவாரணம் கிடைக்காத பட்சத்தில்தான்
நீதிமன்றத்துக்கு வர வேண்டும். மேலும், தனி நீதிபதி அளித்த உத்தரவில்
மனுதாரரின் கோரிக்கை மட்டுமே பரிசீலிக்கப்பட்டது. எதிர் மனுதாரர்களின்
கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்குத்
தடை விதிக்க வேண்டும்'' என்றார்.
தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ், கமல் தரப்பு வழக்கறிஞரிடம்:
கலெக்டரின் தடை உத்தரவு பற்றி நீங்கள் கலெக்டரிடம் ஏன் முறையிடவில்லை?
எடுத்த எடுப்பிலேயே நீதி மன்றத்துக்கு வந்து, நீதிமன்றத்தை ஏன் போலீஸ்
கமிஷனர் அலுவலகமாக மாற்றுகிறீர்கள்?
பி.எஸ்.ராமன்: திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை
என்று சிறப்புச் சட்டம் இருக்கும்போது, அதைப் பின்பற்றாமல் தடை உத்தரவு
என்ற தனிச்சட்டத்தைப் பின்பற்றி கலெக்டர்கள் தடை உத்தரவு
பிறப்பித்துள்ளனர். அதனால்தான் நாங்கள் நீதிமன்றம் வந்தோம். தனி நீதிபதி
உத்தரவு இப்போதுவரை நடைமுறையில் உள்ளது. ஆனால், போலீஸும் தாசில்தார்களும்
'விஸ்வரூபம்’ படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்து வருகின்றனர். இதனால்,
பல தியேட்டர்களில் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ்: இருதரப்பு சம்பந்தப்பட்ட
வழக்கில் மனுதார ரின் கோரிக்கையின் அடிப்படையில் மட்டும் தனிநீதிபதி
உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர் மனு தாரர்களிடமிருந்து அவர் எந்த
விளக்கத்தையும் பெறவில்லை. எனவே, இந்த வழக்கில் வரும் திங்கள் கிழமைக்குள்
அரசுத் தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விளக்கத்தைப் பெற்ற
பிறகு தனி நீதிபதி, வரும் 6-ம் தேதியோ அல்லது வேறு தேதியிலோ இறுதி
உத்தரவைப் பிறப்பிக்கலாம். அதுவரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத்
தடை விதிக்கப்படுகிறது.
பிப்ரவரி 6-ம் தேதியாவது 'விஸ்வரூப’த்துக்கு விடிவு பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
- ஜோ.ஸ்டாலின்,
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
5. முதல்வர் ஜெயலலிதா பேட்டி முடிந்ததும் நம் முன் ஆஜர் ஆனார் கழுகார்.
'' 'விஸ்வரூபம்’ மேட்டர் நொடிக்கு நொடி விஸ்வரூபம் ஆகிக்கொண்டு
இருப்பதுதான் இன்றைய ஸ்பெஷல் என்பதால், அதை முதலில் சொல்லி முடித்து
விடுகிறேன்'' என்று பீடிகை போட்டபடி கழுகார் தொடங்கினார்.
'' 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிட 15 நாள் தடை என்பதைத் தொடர்ந்துதான்
விவகாரத்தின் காரம் கூடியது. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்பதில்
முஸ்லிம் அமைப்புகளைவிட, ஆட்சி யாளர்களும் போலீஸும் அதிக ஆர்வத்துடன்
இருந்ததாகவே செய்திகள் பரவின. சேட்டிலைட் உரிமை என்றும் ப.சிதம்பரத்தை
ஆதரித்து கமல் பேசினார் என்றும் எத்தனையோ தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறக்க
ஆரம்பித்தன. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலையேபடாமல், கமல் படத்தை
எப்படியும் வெளியிட அனுமதித்துவிடக் கூடாது என்பதில் அரசாங்க வக்கீல்கள்
காரியம் ஆற்றினர். நீதிபதி வெங்கட்ராமன் முன்பு ஆஜரான அட்வகேட் ஜெனரல்
நவநீதகிருஷ்ணன் முடிந்தவரை தன்னுடைய அஸ்திரத்தை பிரயோகித்தார்.
ஆனால்,
படத்தை வெளியிடலாம் என்று அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்பே வந்தது.
உடனடியாக, உயர் நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு அப்பீலுக்குச் சென்று தடை
வாங்கினர். வரும் திங்கள் கிழமை வரை தடை இருக்கிறது. அதுவரை சினம்
கொண்டவராக தனிமையில் வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டு இருந்த கமல்,
வெளிச்சத்துக்கு வந்து பேச ஆரம்பித்தார். அவரது ரசிகர்களும் வீதிக்கு வர
ஆரம்பித்தனர். நடிகர்களும் ஒவ்வொருவராக கமலை ஆதரிக்கத் தொடங்கினர்.
அரசாங்கம் நெருக்கடியைச் சந்திக்க இதுவே முக்கியக் காரணம் ஆனது.''
''ம்!''
''சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பல ஊர்களில் படத்தை
ஓட்ட ஆரம் பித்தனர். அப்போது, தியேட்டர்களுக்குள் புகுந்த போலீஸ் படை,
'உடனடியாக ஷோவை நிறுத்துங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எங்களால்
பாதுகாப்புத் தர முடியாது’ என்று கைவிரித்து படத்தை நிறுத்தினர்.
அதுதான்
கமல் மற்றும் சினிமா ஆட்களை வீட்டை விட்டு வெளியில் வர வைத்தது. தேர்தலில்
பங்கேற்காத அமைப்பின் தலைவர் ஒருவர் கமலுக்கு ஆறுதல் சொல்லி பேசி
இருக்கிறார். அப்போது, பல விஷயங்களைப் பேசிய கமல், தனக்கும்
ஜெயலலிதாவுக்குமான சினிமா காலத்து அறிமுகங்களைச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தலைவர், கருணாநிதியிடம் இதைக் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார். இதைத்
தொடர்ந்துதான் கருணாநிதி மிகநீண்ட அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை
முதலமைச்சரின் கவனத்துக்கு உளவுத் துறை கொண்டுபோய்ச் சேர்த்தது. 'கமல்ஹாசனை
இவர்தான் தூண்டி விடுறாரா?’ என்ற அர்த்தத்தில் சீறி இருக்கிறார் ஜெயலலிதா.
சில டெல்லி சேனல்கள், 'இது கமல்ஹாசனுக்கும் ஜெயலலிதாவுக்குமான யுத்தம்’
என்று ஃப்ளாஷ் போட ஆரம்பித்ததும், அவரது சீற்றம் அதிகரித்தது. உடனே,
அறிக்கை வெளியிட ஜெயலலிதா தயார் ஆனார்.''
''அப்படியா?''
''நிலைமையின் சீரியஸ் உணர்ந்து தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்தை வியாழக்
கிழமை காலை அழைத்துப் பேசினார். அறிக்கை விட்டால் மாலையில் வரும், மறுநாள்
காலையில்தான் அது பொது மக்களை அடையும் என்பதால், பிரஸ்மீட் வைத்து அதை ஜெயா
டி.வி-யில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு
செய்யச் சொல்லி இருக்கிறார்.
மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
பத்திரிகையாளர்களை முதல்வர் கோட்டையில் சந்தித்தார். ஒரே ஒரு பிரச்னைக்காக
தனியாக ஒரு பிரஸ்மீட் வைத்தாக வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா இறங்கி வந்ததையே
அது காட்டியது. இறுக்கமான முகத்துடன் ஜாக்கிரதையான வார்த்தைகளுடன்
பேசினார். '524 தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ ரிலீஸ் ஆனால், அத்தனை
இடத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு அரசிடம் ஸ்ட்ரென்த் இல்லை’
என்பதுதான் அவரது முக்கியமான விளக்கம்.
ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமை
கொடுப்பதில் கமல் தடுமாறியதாகச் சொல்லப்படும் செய்தியை அவராகவே
நிருபர்களிடம் சொன்னார். தனக்கும் ஜெயா டி.வி-க்கும் எந்தச் சம்பந்தமும்
இல்லை, அதனுடைய செயல்பாடுகளில் தான் தலையிடுவது இல்லை என்றும் சொன்னார்.
ப.சிதம்பரம், பிரதமர் ஆவது பற்றிய சர்ச்சையையும் அவரே மீடியாவிடம்
சொன்னார். 'அதைச் சொல்வதற்கு கமலுக்கு உரிமை இருக்கிறது’ என்று சொன்னதோடு
நிறுத்தி இருக்கலாம். 'யார் பிரதமர் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது 100
கோடி மக்கள்தானே தவிர, கமல்ஹாசன் அல்ல’ என்று கிண்டல் அடித்தார். 'பல கோடி
போட்டு படம் எடுத்துள்ளேன் என்பது எல்லாம் அவரது சொந்தப் பிரச்னை’ என்றும்
சொல்லி இருந்தார். ஒன்றிரண்டு துணைக் கேள்விகளுக்கு மட்டும் அனுமதித்து
விட்டு, விறுவிறுவென உள்ளே போய்விட்டார்.''
''முதல்வர் பிரஸ்மீட் வைக்க வேறு ஏதாவது உள் காரணங்கள் இருக்குமா?''
''கமல் படத்தை வைத்து கிளம்பும் சர்ச்சைகள், ஆட்சி மீது அதிக
அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது என்பதுதான் உண்மை. அதில் இருந்து
தப்பிக்கும் வகையில்தான் முதல்வர் இந்தத் தன்னிலை விளக்கத்துக்கு
முன்வந்தாராம். ஆட்சியாளர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறதா இல்லையா என்ற
பட்டிமன்றம் மட்டும் தொடர்ந்து நடக்கிறது'
நன்றி - ஜூ வி