Thursday, January 31, 2013

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

அ தி.மு.க-வில் தங்களுக்குப் பிடித்த நபர் யார்? மறைக்காமல் சொல்லுங்கள்?''
''எனது மிகுந்த மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒரே ஒருவர் இருந்தார். அவரும் மறைந்துவிட்டார். அவர்தான் அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!''



ச.புவனேந்திரன், தேனி.


 '' 'தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறை யில் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களால் கூற முடியுமா?''


''தி.மு.க. எப்போதும் ஒளிவு மறைவற்ற இயக்கம். அதன் வரவு - செலவுக் கணக்குகள் முறையாக வருமான வரித் துறைக்குத் தாக்கல் செய்யப்பட்டுவருவது மட்டுமல்லாமல்; தணிக்கைக் குழுவின் மூலம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுக் குழுவில் வைக்கப்படுகிறது. இதற்கும் மேலதிகமான தகவல் உங்களுக்கு வேண்டுமாயின், நீங்கள் கழகத்தின் பொதுக் குழுவில் இடம்பெற வேண்டும்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''தங்கள் மனைவி துர்கா கடவுளை வழிபடுவது அரசியலாக்கப்படுகிறதே?''

 ''ஆன்மிக ஈடுபாடு என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பொறுத்ததுதானே? அதனை அரசியல் ஆக்குவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆகாதே. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அறிஞர்அண்ணா அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்ததை ஏன் மறைக்க வேண்டும்?''


த.சத்தியநாராயணன், அயன்புரம்.


''உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள நினைக்கும் கேள்வி?''


 ''  'தலைவர் கலைஞர் அவர்க ளும், பொதுச் செயலாளர் பேராசிரி யர் அவர்களும், கழக முன்னணியின ரும், கழகச் செயல்வீரர்களும், கழக உறுப்பினர்களும், இளைஞர் அணி யினரும், மகளிரும், பொதுமக்களும் என் மீது பொழிந்துவரும் பாசத்துக்கும் அன்புக் கும் எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்?’ என்ற கேள்விதான்!''


இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.


''புரட்சித் தலைவர், கலைஞர் இருவரின் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?''


''என் வார்த்தைகளைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே இதைப் பற்றிச் சொல்லிஇருக்கிறார்.


அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்...


'தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் நோய் பரவிக்கொண்டு இருந்த காரணத்தால், குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். நான் இருந்த வீட்டுக்கு அப்போது 12 ரூபாய் வாடகை. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.


அப்போது அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால், இறுதியில் நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும் நான் கழகத்தின் பொருளாளராக வும் இருக்கும் அளவுக்கு அந்த ஈர்ப்பு வலிமை யானது. கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமை யும் புகழும் என்று யாராவது நினைத்தால், அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகள் எல்லாம் தேடி வந்து அமைவதற்கு முன்பே, பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருந்தவர் கலைஞர். நான் முதன்முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் என்பது. அந்தப் பட்டத்தை எனக்குத் தந்தவர் கலைஞர்’. கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு, சரித்திரத்தில் சான்றாவணமாக நின்று நிலைத்துவிட்ட நட்பு!''


கு.அரவிந்தராஜ், சேலம்-6.


''தி.மு.க. ஆட்சியைத் தோற்கடித்த மக்கள் மீது கோபமே இல்லையா?''


'' 'மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று மக்களாட்சித் தத்துவத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பிறகு, பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர, யார் மீதும் கோபம்கொள்வதோ, யாரிடமும் குறை காண்பதோ தேவை இல்லாதது. பெரும்பான்மை மக்களின் முடிவுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, அதைக் களைய அயராது காரியமாற்ற வேண்டும்!''


மு.சந்தோஷ்குமார், திருவான்மியூர்.


''உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார் யார்?''


''தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் வீரமணி, அண்ணன் துரைமுருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், திருச்சி என்.சிவா, ஆ.ராசா என என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் பட்டியல் நீளமானது.''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.


''உங்கள் பிறந்த நாள் அன்று என்ன செய்வீர்கள்?''


''எனது பிறந்த நாளில் காலையில் நானும் எனது மனைவியும் எனது பெற்றோரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வது வழக்கமான முதல் கடமை. அதனைத் தொடர்ந்து இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடுதல், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்துக்களைப் பெறுவேன்.


அதன்பிறகு, அண்ணா சாலை மேம்பாலம் அருகேயுள்ள பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளியில் பயிலும் சிறுமலர் பள்ளிக்குக் குடும் பத்துடன் செல்வேன். அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகின்ற மனநிறைவான பணியை ஒவ் வொரு ஆண்டும் தவறாது செய்துவருகிறோம்.''


போஸ்டல் சந்தானம், முத்துப்பேட்டை.


''உங்களுக்குப் பிடித்த விளையாட்டு, விளையாட்டு வீரர் யார்?''


''பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்.

விளையாட்டு வீரர் - சச்சின் டெண்டுல்கர்.''

ஜி.கருப்பையா, பொள்ளாச்சி.

''பள்ளிப் பருவத் தோழர்கள் இன்றும் உங்களிடம் நட்பு பாராட்டுகிறார்களா?''


''பள்ளிப் பருவத்தில் என்னுடன் சிநேகம் கொண்ட 40-க்கும் மேற்பட்ட நண்பர்களை நான்கு மாதத்துக்கு முன்னர் எனது வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, கலந்துரையாடி மகிழ்ந்தேன்.


சிறந்த பேச்சாளர் சுகிசிவம், திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் 'சிறை’ பிரசன்னா உட்பட மேலும் சில பெண் நண்பர் களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இப்படியான சந்திப்புகள் போக கடிதங்கள், தொலைபேசி வாயிலாகவும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறேன்.''


மு.தியாகராஜன், ஆழ்வார் திருநகர்.


''நாளுக்கு நாள் இப்படி இலவசங்களை வாரி வழங்குவது நல்லதா?''


''இலவசங்கள் வழங்குவதில் தவறு இல்லை. 'பசி என்று வருபவனுக்கு உண்ணு வதற்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’


என்பதை நாங்களும் அறிவோம். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம். எனினும் 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ அல்லவா?பசித்த வனுக்கு உடனடியாக உணவளித்து, அவன் பசி ஆறியதற்குப் பிறகு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வழியைக் கற்பித்துப் பயிற்சி அளிப்பதே தொலைநோக்கில் நன்மை அளிப்ப தாக இருக்கும். எல்லாரும் எல்லாமும் பெற இயலாத இந்தியா போன்ற ஒரு நாட்டில், இல்லா தோர்க்கு அவர்களிடம் இல்லாததை அவர் களாகவே பெற்று நுகரும் நிலை உருவாகிடும் வரை இலவசங்களை வழங்குவதில் தவறு இல்லை.''


சு.அருளாளன், ஆரணி.


''மேயர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்?''


''மக்களுக்கான நிர்வாகமாக அது அமைய வேண்டும். எல்லா வகையிலும், எந்த நிலையிலும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதே நல்ல நிர்வாகத்துக்கான அழகு. அத்தகைய நிர்வாக அமைப்புதான் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் உயிரோட்டம் உள்ள அமைப்பாகத் திகழும்.''


சு.இராமஜெயம், ஆற்காடு.


''தனிமையை விரும்பினால் நீங்கள்செல்லும் இடம் எது?''


''மாமல்லபுரம்!

ஒரு பக்கம் பல்லவர் காலத்துச் சிற்பங்கள்... இன்னொரு பக்கம் ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கும் அலைகள். தனிமையை நாடும் மனம் கலையோடும் அலையோடும் கலந்துவிடும்.''


ப.கணேஷ், சென்னை-8.


''தி.மு.க-வின் எதிர்காலம்?''


''சூரியன் மறையும். ஆனால், உதிக்கும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.


காலம் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைகொண்டு இருப்பது இல்லை. வசந்த காலம், வேனிற் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் எனப் பருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இது தனிமனித வாழ்க்கைக் கும் ஓர் இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக் கூடியதே. தனி மனித வாழ்க்கையில் ஏற்ற இறக் கங்கள், ஓர் இயக்கத்தில் மேடு பள்ளங்கள் என்பதை இயல்பானது என்ற அளவிலேதான் பார்க்க வேண்டும். தி.மு.க-வின் எதிர்காலம் ஏற்றமானது என்பதைக் காலம் கட்டாயம் நிரூபிக்கும்!''


ஆ.மணி, உத்திரமேரூர்.


''ஜெயலலிதாவை நேருக்கு நேர் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படிச் சந்தித்திருந்தால், என்ன பேசிக்கொண்டீர்கள்?''


''இரண்டு முறை சந்தித்துள்ளேன்.


2.3.2002 அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது கழகப் பொதுச் செயலா ளர் பேராசிரியருடன் நானும் கலந்துகொண்டேன். பதவியேற்றுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.


10.2.2005 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய 'மண்ணின் மைந்தன்’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 11 லட்சம், 'கண்ணம்மா’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 10 லட்சம்... ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சம் நிதியை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக அப்போது வழங்கி னேன். என்னிடம் இருந்து காசோலை யைப் பெற்றுக்கொண்ட முதலமைச் சர் ஜெயலலிதா, 'அப்பா நலமாக இருக்கிறாரா?’ என்று கேட்டார். 'நலமாக உள்ளார்’ என்று கூறினேன். எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவுதான்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html


பாகம் 5 -நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை?  http://www.adrasaka.com/2013/01/blog-post_635.html