Saturday, November 10, 2012

கண்ணதாசன் மகள் விசாலி கண்ணதாசன் பேட்டி

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று எழுதியதை மெய்ப்பிக்கிறார் கண்ணதாசன். ஆமாங்க, அப்பாவின் அசரீரிதான் என் இலக்கியங்கள் என்கிறார் அவரின் மகள் விசாலி.

விசாலியின் ஐந்து வயதுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் முன்பே கண்ணதாசனுக்கு காலனின் அழைப்பு வந்துவிட்டது.  அந்த சோகம் வாட்டியிருக்கிறது விசாலியை.  அதனால்தான் அப்பாவின் பாடல்கள்தான் எனக்கு அம்மாவானது என்கிறார் விசாலி.

அம்மாதான் எனக்கு தந்தையுமானார். இப்போ கணவர்தான் தாயும், தந்தையுமானார் என்று உணர்வுப்பூர்வமாக தன்னை விவரித்தார் விசாலி.
                                                   

‘’அவரு மாதிரியே உயரம்.. அவரு மாதிரியே நெறம்.. அவரு மாதிரியே கண்ணு..அவருமாதிரித்தான் பார்க்குற..அவரு மாதிரித்தான் நடக்குற.. அவரு மாதிரித்தான் சிரிக்குற..ஒன்ன பார்க்குறது அவரப்பார்க்குற மாதிரியே இருக்கு சாலான்னு சொல்லுவாங்க அம்மா. நான் மட்டுமில்ல அப்பாவும் உன்ன சாலான்னுதான் கூப்பிடுவாங்கன்னு சொல்லுவாங்க அம்மா.

அம்மா என் கூட விழாக்களுக்கு வரும்போது, ‘அவரோடயும் விழாக்களுக்கு வருவேன். இப்ப ஒன்கூடயும் வர்றேன். ஒரு வித்யாசமும் தெரியல. அவருக்குஇருந்த கம்பீரம் ஒனக்கும் இருக்கு. உன்ன விசாலின்னு சொல்லக்கூடாது. புடவகட்டின கண்ணதாசன்னுதான் சொல்லனும்’னு என்னை அப்பாகவே பார்ப்பாங்க, எனக்கு அப்பாவாக இருந்த என் அம்மா.’’ என்று சொல்லும் விசாலி, அப்பாவுக்கு பதினைந்தாவது குழந்தை. அம்மாவுக்கோ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.
                                                                  
                               

‘அப்பாவோட சொத்துன்னு எனக்கு எதுவும் கொடுக்கல. ஆனா நிலம், பணம்தான் சொத்துன்னும் நான் நினைக்கல. ‘ஒருவன் பூமியில் எவ்வளவு இடம் வைத்திருக்கிறான் என்பது பொருட்டே அல்ல. உலக இன்பங்களை அனுபவித்து லயிக்க உள்ளத்தில் எவ்வளவு பெரிய இடம் வைத்துள்ளான் என்பதே முக்கியம்.( தான்எழுதி வரும் ‘சிந்தித்தேன்.. சிந்தியதேன்’ என்ற தொகுப்பிலிருந்துசொன்னார்.)

ஆனா, யாருக்கும் இல்லாத பெரிய சொத்து ஒன்னு எனக்காக விட்டுட்டுபோயிருக்கிறார் அப்பா. அப்பா கடைசியா எழுதுன பாட்டு ‘கண்ணே கலைமானே’தான்அது. மூன்றாம் பிறை படத்துக்காக எழுதிய அந்த பாட்டுதான் எனக்கான பெருஞ்சொத்து.

அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்புன போது(1981) டைரக்டர் பாலுமகேந்திரா வந்திருக்கிறார். அப்பா காரில் உட்கார்ந்துகிட்டே அந்தபாட்டை எழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்த பாட்டுக்கான சூழலை அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர். நாயகி ஸ்ரீதேவி குழந்தைத்தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சிலகாட்சிகளை சொல்லியிருக்கிறார். அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர். சாலா இப்படித்தான் என் காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும் என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப்பாட்டைஎழுதிக்கொடுத்திருக்கிறார்.

அந்தப்பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப்பற்றி அம்மாகிட்ட நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்கன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச்சொல்லிவிட்டு கிளம்பி போகும் போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகிசூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.

அந்த பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானால் அர்த்தம் எடுத்துக்கொள்ளட்டும்.. ஆனால் அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு. நானே அந்த பாட்டை சுழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக்கொள்வேன்.

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக்கொள் என்று எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறேன்..

நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு துக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தாலாட்டு. சின்ன வயசில் நான் தூக்கம் வராமல் அழுதுகொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச்சொல்லுறேன்..’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.

அம்மா பாடும் தாலாட்டை விட அந்த பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும்’’ என்று சொல்லிவிட்டு இந்தப்பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்றுசொன்னபோது விசாலியின் வார்த்தைகளில் கணத்த சுமை இருந்தது.

‘’அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் - ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல.

அவனும் நானும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணே கலை மானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக்கொள்ளவேயில்லை.

இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு.

கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்’’என்றசுமைமிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடிவந்து காதில் கிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

‘’அப்பா எனக்காக இன்னொரு பெருஞ்சொத்து கொடுத்திருக்கிறார். வெளியூரில் இருந்த அப்பாவுக்கு நான் பிறந்த செய்தி கிடைத்ததும் எனக்காக எழுதினபாட்டுதான் அது.

சித்திரை மாதம்

திருவம்மாவாசை

சத்தியமகவாய்

தாய்விசாலாட்சி

அவதரித்ததை என்

அகக்கண் அறியும்


ஆண்மை அதிலே

பிறக்குமானால்

அவலம் சோகம்

அடிக்கடி நிகழும்


பெண்மை அதிலே

பூத்துக் குழுங்கினால்

ஞானம் பெருமன

நவில்வது வேதம்! - என்று அப்பா எழுதியிருக்கிறார்.


அப்பா இன்னொரு கவிதையும் எழுதியிருக்காங்க. ( ஒரு சின்ன சிரிப்புக்குப்பின் ) நான் பிறந்த சமயம் ( 1977 ) சென்னையில் ஒரு கவியரங்கத்தில் அப்பாகலந்து கொண்டிருந்திருக்காங்க. அப்போ அப்பாவுக்கு ‘அழுகை’ தலைப்பு கொடுத்திருக்காங்க.

எனக்கு இப்போ பொருத்தமான தலைப்புதான் கொடுத்திருக்காங்க என்று சொல்லிவிட்டு கவிதை வாசித்திருக்கிறாங்க. அந்தக்கவிதையின் முடிவில் ‘என்னை ஆசையாய் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள்’ என்று முடிச்சிருக்காங்க. (மீண்டும் ஒரு சின்ன சிரிப்புக்குப் பின் )

அப்பா கடைசியா படைச்சது ஏசு காவியம். நான் முதன்முதலா எழுதின கவிதை ஏசு பற்றித்தான். கிருஸ்துமஸ் எனும் தலைப்பில்தான் ஏழு வயதில் அந்தக்கவிதையை எழுதினேன்.

அப்பா கூட பதினேழு வயதில்தான்(1944) முதல்கவிதை எழுதினார். அவரு மகள் ஏழு வயதிலேயே கவிதை எழுதிவிட்டாய் என்று என்னை கொண்டாடினாங்க.

மாட்டுத்தொழுவத்திலே தேவன் மனிதரிலே தேவன் மனிதனாக வந்த புனிதன் என்று அந்தக்கவிதையில் எழுதியிருப்பேன். இத்தனை சின்ன வயதில் எப்படி இப்படி எழுத முடியும். மனிதரிலே புனிதன் என்று ஏழு வயதில் எப்படி எழுத முடிந்ததுன்னு என்னை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க.

ஆனால் அம்மா மட்டும், ‘ நீ எழுதல சாலா.. நீ எழுதுகோல்தான். உன்னை பிடிச்சு அப்பாதான் எழுதுறாரு’ன்னு சொன்னாங்க. அப்பாவின் அசரீரிதான் என் எழுத்துக்கள் என்பது அப்போது எனக்கும் தெரியல.

அந்த ஒரு கவிதைக்கு பிறகு நான் எதுவும் எழுதல. ஒரு கவியரசரின் பொண்ணு இப்படி இருக்கலாமான்னு அம்மா என்னை சும்மா இருக்க விடல.

அப்பா எழுதுன கவிதைகள், பாடல்கள், இன்னபிற இலகியப்படைப்புகள் எல்லாவற்றையும் படிக்கச் சொல்லுவாங்க. அவற்றை படிக்காமல் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் காதை திருகி படிக்கச்சொல்லுவாங்க. அம்மா காதைத்திருகி திருகி நான் அப்பாவின் படைப்புகளை படிச்சேன்.

அப்போ எல்லாம் தொணதொணன்னு யார் கிட்டேயாவது பேசிக்கிடே இருப்பேன். சும்மா பேசிக்கிட்டே இருக்கியே எதாவது ஒரு கலையை வளர்த்துக்கொள்ளுன்னு சொல்லுவாங்க. அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு அப்போதெரியல’’ என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தவர்,

சில காலங்களாகத்தான் நான் பேச்சை குறைத்துக்கொண்டேன். நட்பு வட்டத்தைசுறுக்கிக்கிட்டேன். என்னை வாயாடின்னு சொல்லுவாங்க. இப்போ அனாவசிய பேச்சுக்கு இடங்கொடுக்கக் கூடாதுன்னு மொபைல் போன் கூட தவிர்த்துவிட்டேன் என்று தான் இப்போது வெளியுலகை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தைச் சொன்னார்.

இலக்கியம், சினிமா, டிவி நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் என்று பரபரப்பாய் இருந்தவர் திடீரென்று இருக்குற இடமே தெரியாமல் இருப்பதற்கான காரணத்தைச்சொன்னார்.
‘கம்மங்காடு’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பொண்ணா இப்படி என்று ஆச்சர்யப்பட வைத்தது.விசாலியின் வீட்டு முகப்பில் சிவாலயம் என்று எழுதப்பட்டிருந்ததற்கானஅர்த்தம் அப்போதுதான் புரிந்தது. பொதுவாக சிலருடைய வீட்டு முகப்பில்எழுதப்பட்டிருப்பது போல் இங்கேயும் எழுதப்பட்டிருக்கு என்று நினைத்ததுதவறு என்பதை உணர முடிந்தது.
                                                       

‘’மரியாதைக்குரிய டைரக்டர் பாலசந்தர்சார் கேட்டுக்கிட்டதால வானமேஎல்லை படத்தில் நடிச்சேன்.

கம்மங்காடு..கம்மங்காடு...காடை இருக்கு பசியோடுன்னு ஆடுனேன்.

விருப்பப்பட்டுத்தான் நடிச்சேன். ஆனா அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இதுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க.

அப்பா இருந்திருந்தா நான் செய்த பலவற்றை மன்னித்திருக்க மாட்டார். ஒவ்வொரு மனிதரிடமும் நிறை குறைகள் உண்டு. அப்படித்தான் கலைஞருக்கும்.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்வதென்றால் அவருடைய நிறைகுறைகள் இரண்டையும் பற்றி சொல்லணும். அவர் என் திருமணத்துக்கு எல்லாம் வந்திருக்கிறார். ஆனால் நான் மனசில் வச்சிப்பார்க்காம அவரின் குறைகளை மட்டுமே நிறைய பேசிட்டேன். இப்போது அதெல்லாம் தவறு என்று உணந்திட்டேன்.

அதுக்காக இதைப்போய் அவருகிட்ட சொல்லனும்னு நினைக்கல. என் மனசுக்கு தவறுன்னு படுது. திருத்திக்கிட்டேன்; அவ்வளவுதான். இது என்னோட குணம்.

எழுதுறது ஒன்னு பேசுறது ஒன்னு ஆனா நடக்குறது ஒன்னுன்னு வைரமுத்து சாரை நான் கடுமையா விமர்சனம் பண்ணுனேன். அது தப்புன்னும் உணர்ந்திட்டேன்.‘கலங்கம் வந்தாலென்ன பாரு..அதுக்கும் நெலான்னுதான் பேரு..அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..’ன்னு அவரு எழுதுன வரிகள கேட்கும் போதெல்லாம் அவர தவறா விமர்சனம் பண்ணியிருக்க கூடாதுன்னு நினைக்குறேன்.

இது எல்லாத்தையும் இப்போ எழுதிக்கிட்டு இருக்குற ‘சத்தியவாக்கு’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்குறேன்.

டிவி நிகழ்ச்சி தொகுப்புகளில் பெரும்பாலும் பெண்ணியம் பேசவேண்டியிருக்கு. அது எனக்கு ஒத்து வரல. நான் எல்லாத்தையும் பொதுவான பார்வையில் பார்க்குறேன். அப்படியே பேசினாலும் என்ன.. அங்கே இருக்குறவங்க கைதட்டுவாங்க. அவ்வளவுதான்.

வெளி நிகழ்ச்சிகளுக்கு போவதையும் தவிர்த்திட்டேன். பணம் இருக்கும்ரசிகர்கள் தங்களின் அபிமானத்துக்குரியவர்களை தங்கள் இடத்துக்கே அழைத்து வருகிறேன் என்று அவர்கள் வட்டத்தில் சவால் விட்டு சிரிக்கிறார்கள்.

நான் அந்தப் பாடகியின் பெயரை சொல்ல விரும்பல. ஆனா அவர் பட்ட அவமானத்தை சொல்லுறேன். நான் நெடுநாள் ரசிகர். எனக்காக நீங்கள் வந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாடவேண்டும். உங்கள் பாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அந்தப் பாடகியும் சென்றிருக்கிறார். அங்கே போனால் அவருக்கு அதிர்ச்சி. பார் டான்ஸ் நிகழ்ச்சியில் பாடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று மனம் புழுங்கியிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது வாங்கிய பணத்துக்காக இரண்டு பாடலை பாடிவிட்டு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே தவிர்த்துவிட்டேன். அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் நான் அப்படிச்சொல்லல. எந்த ரசிகர் எப்படிப்பட்டவர் என்று இனங்காண வேண்டிய அவசியம் இல்லாமல் தான் என் பாதை இப்போது மாறிவிட்டது.

‘சிவசக்தி’ என்று நான் இசையமைத்து பாட்டு எழுதி, பாடியிருக்கும் பக்திஆல்பம் விசயமாக இளையராஜா சாரை பார்க்கப்போனேன். அப்போ 'அப்பா கண்ணன் மேல்ஈடுபாடு உள்ளவர். நீங்க சிவன் மேல ஈடுபாடா இருக்குறீங்க. பரவாயில்ல என்று சிரித்துவிட்டு கண்ணனைப்பற்றி ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க என்றார்.

என் சோம்பேறித்தனத்தை அறியாத அவர் ஒரு வாரம் கழிச்சு பாட்டுஎழுதியாச்சான்னு கேட்டார். ரெண்டு நாள்ல எழுதிக்கொடுத்திடுறேன்னு சொன்னேன். இதே அப்பான்னா டக்கு டக்குன்னு எழுதிக்கொடுத்திடுவாங்க’ன்னு சொன்னார். நான் இப்டித்தான்னு சிரித்தேன். பரவாயில்ல டைம் எடுத்தே எழுதிக்கொடும்மான்னு சொன்னார்.

‘கண்ணனுக்கு என்ன வேணும்’னு எழுதிக்கொடுத்த அந்த பாட்டு தனம் படத்தில் இடம்பெற்றிருந்தது.
அது என்னவோ தெரியல எனக்கு நவீன இலங்கியங்கள் மீது நாட்டமில்லாம போயிட்டு. மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதிவந்திருக்குறேன். அதுவும் இப்போது ஏன் எழுதுனோம்னுதான் தோனுது. எத்தனையோ புத்தகங்கள் எழுதிவிட்டேன். ஆனா இப்போ எழுதிக்கிட்டு இருக்குற சத்தியவாக்கு புத்தகத்தை தான் முதல் படைப்பாக நினைக்கிறேன்.

அப்பா இறந்த சில நாட்களிலேயே என்னை சென்னை ஸ்ரீகாளிகாம்பாளிடம் தத்து கொடுத்திருக்காங்க அம்மா. அந்த அம்மாதான் எனக்கு இன்னொரு அம்மா. அப்போதிலிருந்தே எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.

வளர்ந்து விட்ட பிறகு சிவன் மீதுதான் அதீத ஈடுபாடு உண்டு. அதுவும் திருவண்ணாமலை சென்று வந்த பிறகு நான் தீவிர சிவபக்தையாகி விட்டேன்.

அப்பா தீவிர கண்ணன் பக்தனாக இருந்தார். ஆரம்பத்தில் அவர் நாத்திகவாதியாக இருந்ததை அவரே மனம் வருந்தி ‘நாத்திகம் -என் இருண்ட காலம்’ என்று சொல்லியிருக்காங்க.

‘இருபதில் ஏதோ..ஏதோ...என்று தூண்டப்படுகின்ற கற்பனைகள், அறுபதில் இதுதானா.. இதுதானா...என்று அடங்கிவிடுகிறது. ஆக, அந்த அறுபதிற்குரிய பக்குவத்தை இருபதிலேயே அடைந்துவிட ஆன்மீகம் மேற்கொள்வோமானால் இடைப்பட்ட நாற்பது வருட காலம் உண்மையாக வாழ்ந்தவன் என்ற கவுரவப்பட்டத்தை எப்படியேனும் நம் வாசலுக்கு கொண்டு வந்துவிடும்.’ (சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

திருவாடுதுறை ஆதீனம் மூலமாக சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு போய் கற்றுவருகிறேன். ஒரு மனிதனை நல்வழிப்படுத்துதல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை எல்லோருக்கும் ஏற்ற வகையில் எளிமைப்படுத்தித் தரும்முயற்சியில் இருக்கிறேன்.

ஆன்மீக ஈடுபாடு பற்றி சிலர் ஆச்சர்யமாக பார்க்குறாங்க. ‘நான் ஒரு லூஷூமதிரியே பேசத் தீர்மானித்து பிதற்றத் தொடங்கியதும்தான் கண்ணாரக் கண்டுகளித்தேன் எனக்கு அறிவுரை வழங்க வந்த அத்தனை லூஷூகளையும்.’ (சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

சதா சர்வ காலமும் ஆன்மீக தேடலிலேயே இருந்து வருவதால் வேறு எதையும் நினைக்கவோ செய்யாவோ முடியல. என் பிள்ளைக்கு பாடமெடுப்பதோ, பள்ளிவிழாக்களுக்கு தயார் செய்வதோ, நண்பர்களோடு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதோ, என்று எதுவுமே செய்யாத இந்த பொறுப்பற்ற தாய் தெரியாமல்ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தந்துவிட்டேன்...அது சிவாயநம.

இப்போ இருக்குற காலத்துல குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம்.’தொலைக்காட்சியில் ஆணுறைக்கான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க என் எட்டு வயதுமகன் என்னிடம் திரும்பி என்னம்மா அர்த்தம் என்ன அர்த்தம் என்று விடாமல் கேட்க நான் அமைதியாவே உட்கார்ந்திருப்பேன்..அடி வயிற்றில் நெருப்போடு.

எத்தனையோ முறை கேட்டும் பதில் வராததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வரும்போது அதை மவுனமாக கவனிக்கிறான். இப்போதுதான் நான் உணர்கிறேன்..என் அடிவயிற்று நெருப்பு நெஞ்சுவரை பரவுவதை!’(சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

அம்மா (வள்ளியம்மை ) வைணவ கல்லூரியில படிச்ச தமிழ்ப்புலவர்.  என்னை சென்னைக்கல்லூரியில பி.ஏ. ஆங்கிலம் படிக்க வச்சாங்க. அவுங்களும் 45 வயதுல இறந்துட்டாங்க.

அப்பாவும் இல்ல..அம்மாவும் இல்ல..இந்த சமயத்துலதான் அம்மா இறந்த ஆறு மாசத்துல அவர( மனோகரன்) கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

உன் உயரதுக்கு ஏற்றமாதிரி, வாயாடித்தனத்துக்கு ஏற்றமாதிரி யாரு வரப்போறாரோன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கு ஏற்ற மாதிரியே ஆர்டர் பண்ணி வந்தது மாதிரி அவர் எனக்கு கிடைச்சிருக்கிறார்.

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றைப்போல என்னை நினைக்கிறார். பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்.’’

-என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பூனைக்குட்டி தாவி வந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டது.

தூக்கி எடுத்து முத்தமிட்டார். பின்னர் மடியில் போட்டுக்கொண்டு தடவிக்கொடுத்தார்.‘’அப்பாவுக்கு நாய் மேல் ரொம்ப பிரியம். அவர் வளர்த்த நாய்க்கு‘சீசர்’ன்னு பேர் வச்சிருந்தார். சீசர் இறந்த பிறகு அதன் சோகம் தாங்காமல்‘என் இனிய சீசர்..’ என்று கவிதை எழுதி அந்த கவிதையில் சீசரின் பிரிவுத்துயரத்தை சொல்லியிருந்தார்.

எனக்கு பூனைகள் மேல் பிரியம். நான் விஷ்வாவை (குழந்தையை) கொஞ்சுவதைவிடவும் இந்த மியாவ்’வைத்தான்.அதிகம் கொஞ்சுவேன். அதனால் விஷ்வா அடிக்கடி சண்டை பிடிப்பான்.

அப்பாவை எல்லோரும் குழந்தை மனசுன்னு சொல்லுவாங்க. நிறைய நேரங்களில் அவர் குழந்தை மாதிரித்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

ஒரு நாள்(1962) மதியம் தூங்கி எழுந்தவருக்கு தீடீர் எண்ணம் வந்திருக்கு.நாம இறந்திட்டா என்ன நடக்கும். எல்லோரும் என்ன பண்ணுவாங்க’ன்னு பார்க்கஆசைப்பட்டிருக்காங்க.

உதவியாளரை அழைத்து திடீரென்று இறந்துவிட்டதாக எல்லோருக்கும் தகவல் அனுப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. அவரும் அப்படியே செய்ய, அலறி அடிச்சுக்கிட்டு எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்.

எம்.எஸ்.வி. சார், இயக்குநர் ஸ்ரீதர் சார் என்று சினிமா, அரசியல்பிரபலங்கள் அத்துனை பேரும் வந்துட்டாங்களாம். அவரோட உடம்பு இன்னும் வரல..ஆஸ்பத்திரியில இருக்குன்னு சொல்லவும் எம்.எஸ்.வி.சார் அழுதிருக்கிறார்.ஸ்ரீதர் சார் புகம் பொத்தி அழுதிருக்கிறார்.

இதையெல்லாம் மாடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த அப்பா இதுக்கு மேலயும் தாமதிக்கக்கூடாதுன்னு இறங்கிவந்திருக்காங்க.

என்னய்யா இப்படி பண்ணிட்டேன்னு அழுதவர்கள் எல்லோரும் பொய்க்கோவம் காட்டியிருக்கிறார்கள்.

அம்மாவும் சரி, அவரும்(கணவர்) சரி, என்னைப்பற்றி தெரிந்தவங்களும் சரி,என்னை குழந்தைன்னுதான் சொல்லுவாங்க. என்னை புதுசா பார்க்குறவங்க.. நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்துட்டு ஆள் வளர்ந்த அளவுக்கு மெச்சூர் இல்லேன்னு சொலிட்டுப் போவாங்க.

அந்த அளவுக்கு இருக்கும் என் குழந்தைத்தனம். நானும் என் விஷ்வாவும் சேர்ந்துட்டா போதும் வீடே ரெண்டாகும். இந்த குழந்தைகளையும் வச்சிக்கிட்டு சமாளிக்க முடியலியேன்னு அவரு தலையில கையை வச்சிக்கிட்டு உட்கார்ந்திடுவாரு.

‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..பார்வையிலே குமரியம்மா..பழக்கத்திலே குழந்தையம்மா! என்று அப்பா எழுதியபாடல் எனக்காவே எழுதப்பட்டிருக்கு என்று சொல்வாங்க அம்மா. இப்போ அவரும்அப்படித்தான் சொல்றாரு.

மேடைகளில் நான் பேசுவதை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கிறீங்க என்று அவரிம் எல்லோரும் கேட்கிறார்களாம். அவருக்குத்தானே தெரியும் நான் வீட்டில் குழந்தைன்னு’’பெரிதாக சிரித்தார். தந்தையைப் போலவே தன்னையும் அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள் என்றார். அழைப்புகள் இருந்தும் தான் இன்னும் வராமல் இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

‘’அப்பா 1949ல் திமுகவில் ஆரம்பகால உறுப்பினர். 1957ல் திமுக சார்பில் திருக்கோஷ்டியூர் இரண்டாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்துவிட்டார். காங்கிரஸிலும் இருந்தார்............

அப்பாவிடம் சகிப்பு தன்மையும் கொஞ்சம் பணிந்து போகும் குணமும் இருந்தது. அதனால் அவர் அரசியலில் இருந்தார். என்னிடம் பணிந்து போகும் குணம் இல்லை.நான் எப்படி அரசியலுக்கு வரமுடியும்.

மேலும், அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோரையும் ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளனும், கூழைக்கும்பிடு போடனும். இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.

‘நான் ஒரு ஞானக்குழந்தை/நான் ஒரு தெய்வப்பறவி/நான் ஒரு வள்ளலின்வழித்தோன்றல்/நான் மனிதருள் ஒரு மாணிக்கம்/என்ன கைகொட்டிசிரிப்பீரோ?/பிறன் ஒருவனை நான் இப்படியெல்லாம் புகழ்ந்து அதன் மூலம் ஏதோஒன்றை அடைந்து அதன் வழியே நான் மகிழ்ச்சி பெருவேன் என்று இருந்தால் அந்த மகிழ்ச்சியை என்னை நானே புகழ்ந்து பெற்றுவிடப்போகிறேன்.

இதற்கு பேர்தான் தன்னையே நேசிக்கும் கலை. இது கைவரப்பெற்றால் உலகையே ஆளும் மகாராஜாவைக்கூட உனக்கு மேற்பட்டவனாகப் பார்க்கத் தோன்றாது. இதுவே மனிதகுலம் பெறவேண்டிய தனித்துவம்.

எந்த நாய் இன்னொரு நாய்க்கு பாராட்டு விழா எடுக்கிறது. பன்றிக்கு பன்றி சால்வையா போர்த்திவிடுகிறது. மாறுங்கள் மனிதர்களே. இல்லையேல் மாறிவிடும் மிருகங்கள்.(சிந்தித்தேன்..சிந்தியதேன்...)

இதனால் தான் நான் அரசியலுக்கு வரத்தயங்குகிறேன். மற்றபடி அரசியல் குறித்த அறியாமை எல்லாம் என்னிடம் இல்லை’’ என்றார்.

தனது அறியாத வயதில் தந்தை இற்ந்துவிட்டார் என்றும் அவர் இன்றுஇருந்திருந்தால் இரண்டு கேள்விகள் கேட்டிருப்பேன் என்றும் பேச்சின் திசையைமாற்றினார். ‘’ஆண் வேசி வீட்டுக்கு போய்விட்டு வந்தாலும் நல்ல மனைவி இன்முகம் காட்டுவாள் என்று அப்பா எழுதியிருக்காங்க. இது ஆணாதிக்கம்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படித்தான் இருக்கனும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  சமமான பார்வை வேண்டும்.

அப்புறம் ஒன்னு, ‘என்னதான் நெஞ்சக்காயங்களுக்கு மருந்து போட்டு விடுகிறது என்றாலும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும் ஒரு வகை வக்கிரம்தானே..(அப்பா மன்னிப்பீராக..) என்று தான் எழுதிவரும் சிந்தித்தேன் சிந்தியதேனிலிருந்து சொன்னார்.

தந்தை செய்ய வேண்டும் என்று நினைத்து காலனின் அழைப்புக்கு இணங்கி ஓடிவிட்டதால் முடியாமல் போன காரியங்களை தான் செய்திருப்பதாகவும்குறிப்பிட்டார்.

‘’பதினான்கு வயதில் நான் எழுதிய ‘கிருஷ்ண கானம்’ நூல் வெளியீட்டு விழாசென்னை சோழா ஓட்டலில் நடந்தது.  இந்த விழாவுக்கு ம.பொ.சி. ஐயா வந்தார்.அப்போது அவர் என்னிடம், ‘அப்பா எனது வாழ்க்கையை எழுதப்போவதாக சொன்னார்.அதில் அவர் அதிகம் ஆர்வம் வைத்திருந்தார். எனக்கு கொடிப்பினை இல்லை. அதான் அதற்குள் அவர் போய்விட்டார் என்றார்.

அதனாலென்ன நான் இருக்கிறேனே என்றேன். அவரும் உன்னால் இது முடியுமா என்றெல்லாம் கேட்கவில்லை. எழுது என்றுவிட்டார்.

அவர் கூடவே ஒரு வருடம் இருந்து அவர் சொல்லச்சொல்ல எல்லாவற்றையும் கேட்டு தொகுத்து ‘ம.பொ.சி. ஒரு சகாப்தம்’ என்று எழுதினேன். அதுவும் மரபுக்கவிதை வடிவில் எழுதினேன்.

நீ எழுதல..உன்னை கண்ணதாசன் எழுத வச்சிருக்கிறாரு என்று அவர் என்னைபாராட்டினார். அது உண்மைதான். அந்த பதினான்கு வயதில் இவ்வளவு பெரியவிசயங்களையும் பொறுமையாக கேட்டறிந்து எழுதும் பக்குவம் எனக்கு எப்படிவந்தது. அது எனக்குள் இருந்து அப்பா எழுதியது.

அர்த்தமுள்ள இந்து மதம், இயேசுகாவியம் எழுதிய அப்பா அடுத்து குரான் பற்றி எழுதும் தீவிரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

அந்த குறையை நான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

திருக்குறளில் காமத்துப்பாலுக்கு எளிய வடிவில் புதுக்கவிதை நடையில் விளக்கஉரை எழுதியிருக்கும் (1977) அப்பா, அடுத்து அறம்,பொருள் இரண்டையும் எழுதிமுடிக்க பகவான் ஆரோக்கியத்தை எனக்கு அருள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அப்பாவுக்கு பகவான் ஆரோக்கியத்தை அருளவில்லை. அறம்.பொருள் இரண்டுக்கும் நான் விளக்க உரை எழுதப்போகிறேன்’’ என்றவர், தந்தைதயாரிப்பாளராக இருந்து மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன்,வானம்பாடி, ரத்தத்திலகம், கருப்புப்பணம் என்று நிறையப்படங்களை தயாரித்தார்.

அதை நினைவுபடுத்தியதோடு இல்லாமல் நாமும் அப்படிச்செய்வோம். அதுக்கான ஆரம்பம்தான் இது என்று தன் கணவர் ரஷ்ஹவர், ஜாஸ்த்ரி, கேட் உமன் என்று வெளிநாட்டு படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருதாக குறிப்பிட்டார்.

5000 திரைப்பாடல்கள், காவியங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள், புதினம்,சுயதரிதை என நூற்றுக்கும் வேற்பட்ட நூல்களை படைத்திருக்கிருக்கும் கண்ணதாசனுக்கு ‘கண்ணதாசன் பல்கலைக்கழகம், கண்ணதாசன் அறக்கட்டளை என்றெல்லாம் கொண்டுவர வேண்டும்’ என்று சொன்னதோடு இல்லாமல் அதற்கான முயற்சியில் தன் கணவர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தந்தை பல பரினாமங்களில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் ஒரே கோணத்திலேயே பார்க்கிறார்கள் என்று குறைபட்டுக்கொண்டார்.


‘’அப்பா ஒரு திறந்த புத்தகம். எதையும் அவர் ஒளித்து வைக்கவில்லை. மது,மாது என்கிற கோணத்திலேயே அவரை பெரும்பாலும் பார்க்கிறார்கள். கண்ணதாசன்காரைக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி’ன்னு பாடுறாங்க.

அவர் பிறந்த சிறுகூடல்பட்டியில் சின்னவங்க, பெரியவங்க எத்தனையோ பேர் வந்துமண்ணை தொட்டு கும்பிடுவதை நானே பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.’’என்றார்.

தன் தந்தை இறந்தபோது நாலறை வயதில் தான் செய்த அறியாமையை எண்ணி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

‘’அமெரிக்காவில் சிகாகோ ஆஸ்பத்திரியில் வச்சிருந்தாங்க அப்பாவை.(24.71981) இரண்டு மாசத்துக்கு பிறகு(17.10.1981, சனிக்கிழமை, இந்தியநேரப்படி 10.45க்கு) இறந்திட்டார்.

விமானத்தில் அப்பாவின் சடலத்துடன் அம்மாவோடு நானும் வந்திருக்கிறேன்.அப்பாவின் சவப்பெட்டி மேல் ஏறி விளையாடியதும் அம்மா அழுதபடியேஅதட்டியிருக்கிறாங்க.

 சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் (20.10.1981)பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்திருக்கிறார்கள்.   போட்டோ ப்ளாஸ்களுக்கு சிரித்திருக்கிறேன்.

அந்த நாலரை வயதில் நான் ரொம்ப புஸ்டியாக இருந்திருக்கிறேன். அதனால்தான்,கண்ணதாசன் சடலத்துடன் அவரது பத்து வயது மகள் வந்தார் என்று பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்’’ என்றவர், தான் அர்த்தமற்ற 15வதுகுழந்தையாக அப்பாவுக்கு பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
                                                   

நீ எழுதல சாலா.. அப்பாதான் உனக்குள் இருந்து எழுதுறாருன்னு அம்மா சொன்னதை இப்போதுதான் உணர்கிறேன். எழுத ஆரம்பிக்கும் வரை என் மனநிலை வேறு. எழுதனும் என்று உட்கார்ந்துவிட்டால் என் மனநிலை எனக்கே ஆச்சர்யாமக இருக்கு.எனக்குள் அசரீரியாய் இருந்து என்னை எழுதவைப்பதும் அப்பாதான்.

அப்பா ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன நிறைய விசயங்கள் நடந்திருக்கு. 18வயசில சாலா நல்ல நிலையில இருப்பான்னு சொல்லியிருக்காங்க அப்பா. அது நடந்துச்சு.

எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான நெல்லைக்கண்ணன் ஐயாவும், தமிழருவி மணியன் ஐயாவும் என் மேடைப்பேச்சைக் கேட்டு ‘அப்பா பேசுனது மாதிரி இருக்குன்னு’ சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேர் என்னை ‘நீ கண்ணதாசனின் மிச்சம்’னு சொல்லியிருக்காங்க. அதை காப்பாற்றனும்னு உணர்கிறேன்.

அப்பா அமெரிக்கா செல்லும்போது அம்மாவிடம் நான் திரும்பி வருவேன் என்பது நிச்சயம் இல்லைன்னு சொன்னவங்க சாலாவ பத்திரமா பார்த்துக்கோன்னு சொன்னதோடு மட்டுமில்லாம, ‘சாலாவுக்கு நான் வானவீதியில் இருந்து வாழ்த்துப்பாபாடிகிட்டே இருப்பேன்’ன்னு சொல்லியிருக்காங்க.

எழுதிமுடித்துவிட்ட போதெல்லாம், நல்ல விசயங்கள் பேசிமுடித்துவிட்டபோதெல்லாம், நல்ல விசயங்கள் செய்து முடித்துவிட்ட போதெல்லாம், மனசுக்கு சந்தோசமான நேரத்துல எல்லாம் நான் வான வீதியை பார்க்கத் தவறுவதில்லை’’என்று நெகிழ்ந்தவர் நெஞ்சோடு பூனைக்குட்டியை அணைத்துகொண்டு அண்ணாந்து பார்த்து கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டார்.

எழுத்தாக்கம் : கதிரவன்
 நன்றி - நக்கீரன்