Friday, November 09, 2012

ரஜினியையே மிரள வைத்த சிங்கம் புலியின் காமெடி கலக்கல் ஃபிளாஸ்பேக்

http://3.bp.blogspot.com/-qcJOahhcl_k/T9QjkCvLNII/AAAAAAAABkU/FivvUWhQTfY/s1600/9.jpg 
 
நீ நல்ல திருடன்டா ?

எஸ்.கலீல்ராஜா
சின்ன வயசுல டூரிங் டாக்கீஸ்ல 'மனோகரா’ படம் பார்த்துட்டு இருந்தேன். அதுல வில்லன் ஆக்ரோஷமா 'கேசரி வர்மா’, 'கேசரி வர்மா’னு கத்துனான். 'யோவ், ரவையைப் போட்டுக் கிண்டுனா கேசரி தன்னால வரும்யா’னு சத்தமா கமென்ட் அடிச்சேன். தியேட்டரே கை தட்டிச் சிரிச்சது. பின்னாடி இருந்து பொடனியில படீர்னு அடிவிட்டார் சிவாஜி ரசிகர் ஒருத்தர். அப்படி ஆரம்பிச்சதுதான் நம்ம காமெடி வாழ்க்கை'' - ரசித்துச் சிரித்தபடி தன்னுடைய காமெடி அனுபவங்களைப் பேச ஆரம்பிக்கிறார் சிங்கம்புலி.



''ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்தான். நாம கொஞ்சம் சேட்டை பார்ட்டி. அதனால, ரகளைக்குப் பஞ்சமே கிடையாது. 'அருணாச்சலம்’ ஷூட்டிங் நடந்தப்போ நான் சுந்தர்.சி-யோட அசிஸ்டென்ட். எல்லாப் படங்கள்லேயும் ரஜினி பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவார். ஆனா, அந்தப் படத்துல செலவழிக்கக் கஷ்டப்படுவார். அப்படி ஒரு கதை. ரகுவரன் அண்ட் கோவைப் பழி வாங்க ரஜினி பார்ல உட்கார்ந்து 'இனிதான் ஆரம்பம்’னு ஒரு லெட்டர் எழுதுவார்.



 அந்த லெட்டரை ஆர்ட் டிபார்ட்மென்ட்ல எழுதிக் கொடுத்தாங்க. ரஜினிக்கு அந்தக் கையெழுத்து பிடிக்கலை. உடனே எல்லாருக்கும் ஒரு பேப்பர் கொடுத்து எழுதச் சொன்னாங்க. நான் எழுதினது ரஜினிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'யார் கையெழுத்து இது?’னு சுந்தர்.சி விசாரிக்க, 'சிங்கம்புலி’னு சொல்லியிருக்காங்க. அவருக்கு பயங்கர ஷாக். 'அப்படி ஒரு பேர்ல எனக்கு ஒரு அசிஸ்டென்ட் இருக்கானா?’னு மிரண்டுட்டார். ஏன்னா, அவருக்கே தெரியாம அவர் அசோசியேட் மூலமா அவருக்கு அசிஸ்டென்ட்டா நான் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.

 http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-32_720_southdreamz.jpg


 உடனே ரஜினி 'பேரு சிங்கம்புலியா... நல்லா இருக்கே. படத்துக்கு டைட்டில்கூட வைக்கலாம்’னு உற்சாகமாகிட்டார். ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி கிளம்பும்போது என்னைப் பார்த்து 'இன்னைக்குத்தான் ஆரம்பமா?’னு சிரிச்சார். அன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூக்கமே வரலை.



ஜூரிச் போய் இருந்தோம் 'ரிஷி’ படத்துக்காக. சரத்குமார், மீனா, பஞ்சு அருணாச்சலம்னு ஒரு பெரிய கேங். ராத்திரி 11 மணி. அறையைவிட்டு வெளியே வந்தேன். தூரத்துல ஒரு பார் தெரிஞ்சது. அங்கே போய் சாப்பிடக் கீழே இறங்கினா, ரிசப்ஷன்ல பயங்கரக் கூட்டம். அங்கே வாழ்ற தமிழர்கள் சரத்தையும் மீனாவையும் பார்க்கக் கிளம்பி வந்துட்டாங்க.



''அவங்க ரெண்டு பேர்கூட எப்படி யாவது போட்டோ எடுக்கணும்னு வந்திருக்கோம். அவங்க ரூம் நம்பர் தெரியலை''னு சொன் னாங்க. 'இப்போ அவங்களைப் பார்க்க முடியாது’னு கலைஞ்சு போகச் சொன்னேன். 'நீங்க எங்கே இந்நேரம் வெளியில போறீங்க?’னு கேட்டாங்க. விஷயத்தைச் சொன்னதும், 'எங்க ஊருக்கு வந்துட்டு நீங்க செலவு பண்ணக் கூடாது’னு சொல்லி, எக்கச்சக்கமா சரக்கு வாங்கிக் கொடுத்துட்டாங்க. போதையில அன்பாகி, 'நோட் பண்ணிக்கோங்க,  மீனா ரூம் நம்பர் 107, சரத்குமார் ரூம் நம்பர் 112,  செகண்ட் ஃப்ளோர் ரைட் சைடு’னு சொல்லிட்டு, என் ரூம்ல போய் செட்டில் ஆகிட்டேன்.



மறு நாள் காலையில நாலு மணிக்கு எந்திருச்சு கீழே வந்தா... சரத், மீனா சிவந்த கண்ணோட, ரொம்ப டயர்டு ஆகி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. போட்டோ ஷூட்லாம் முடிஞ்சதும் 'எவன் எங்க ரூம் நம்பர்லாம் சொன்னான்னு தெரியலை. திபுதிபுனு வந்துட்டாங்க. நைட்டு ஃபுல்லாத் தூக்கம் இல்லாம போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தோம்’னு ரெண்டு பேரும் புலம்பினாங்க. 'ஆஹா! போதையில போட்டுக்கொடுத்துட்டோமே’னு நான் நைஸா எஸ்கேப் ஆகிட்டேன். இன்னைக்கு வரைக்கும் ரூம் நம்பர் சொன்னது நான்தான்னு சரத்துக்கோ மீனாவுக்கோ தெரியாது!




சுவிட்சர்லாந்து போய்ட்டு வந்தப்ப ஃப்ளைட்ல ஒரு போர்வை கொடுத்தாங்க. அழகா எம்ப்ராய்டரி பண்ணி, பளிச்சுனு இருந்துச்சு. எனக்கு அதை வீட்டுக்குக் கொண்டுவந்துடணும்னு ஆசை. ஏர்போர்ட்ல பிடிச்சுக்கிருவாங்களோனு பயம் வேற. சென்னை வந்து இறங்கினப்ப, பஞ்சு அருணாசலம் சார்கிட்ட... 'சார், குளிர்அடிக்குதா?’னு அவருக்கு அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டேன்.




 அவர் போர்த்திட்டுப் போனதால யாரும் எதுவும் கேட்கலை. 'புலி உன்னை மாதிரி ஒரு புள்ளை பொறக்கணும்டா’னு பயங்கரமா நெகிழ்ந்துட்டார். கார் பார்க்கிங் வந்ததும் நான் பெட்ஷீட்டை எடுத்து மடிச்சு என் பைக்குள்ள வெச்சேன். திரும்பிப் பார்த்தவர், 'நீ ஒரு நல்ல திருடன்டா’னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போய்ட்டார்!

'நான் கடவுள்’ படத்துல ஒரு செவுட்டு சாமியார் நடிச்சார். ஷூட்டிங் அப்போ யாரோ ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அவரை மரியாதைக் குறைவாப் பேசிட்டான்போல... கோவிச்சுக்கிட்டு கிளம்பிட்டார். 'அவரைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா’னு பாலா சொன்னதும் அவரைத் தேடி வந்தேன்.




அப்போ கொசகொசனு தாடி வளர்த்து பிச்சைக்காரன் கெட்டப்ல இருந்தேன். ஒரு பாத்திரக் கடையில போய், 'அந்தச் செவுட்டு சாமி எங்கே இருக்காரு?’னு கேட்டதும் கடைக்காரர் டென்ஷன் ஆகிட்டார். 'ஏன்டா உன் குரூப்பைச் சேர்ந்தவன் எங்க இருக்கான்னு உனக்குத்தான்டா தெரியும். என்கிட்ட வந்து கேக்குற?’னு எகிறினார். இப்படி ஒவ்வொரு இடத்திலேயும் செமையா திட்டு வாங்கி, கடைசியா ஒரு தியேட்டர்ல அவரைக் கண்டுபிடிச்சேன். அவருக்கு டெய்லி செகண்ட் ஷோ பாக்குற பழக்கம்.




தியேட்டர்ல புடிச்சு, 'இந்தப் படத்துல நடிச்சா உங்க ரேஞ்சே வேற. நிறையப் பணம் கிடைக்கும். எல்லாருக்கும் உங்களை அடையாளம் தெரியும்’னு சொன்னதும், 'தம்பி... புகழ், பணம் வேணாம்னுதான் நான் துறவி ஆனேன். இதை நீ புரிஞ்சுக்க... பாலாகிட்டயும் சொல்லு’ன்னார். பதிலைக் கேட்டு ஆடிப்போய்ட்டேன். அப்புறம், 'கூட ரெண்டு பொட்டலம் தர்றேன் சாமி!’னு சொன்னதும் 'சிவன் பாதை... சிவன் போதை!’னு கிளம்பி வந்துட்டார். அப்புறம் அவருக்கு ராஜ மரியாதைதான். 'சாமி தூங்கினாரா?’, 'சாமியார்கிட்ட யாரும் வம்பு இழுத்தாங்களா?’, 'அவர் ரூம்ல ஃபேன் ஓடுதா?’னு யூனிட்டே தவம் கிடந்துச்சு.



பாலா 'பி ஸ்டுடியோஸ்’னு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருந்த சமயம். அப்போ நல்ல செவப்பா, பிரெஞ்ச் தாடி வெச்சுக் கிட்டு ஒருத்தர் வந்தார். எங்களை மீட் பண்ணினவர், 'சார்... உங்க கம்பெனியை இன்டர்நேஷனல் லெவல்ல கொண்டுபோயிரலாம். அதுக்கு நிறைய கார்ப்பரேட் பிளான் வெச்சிருக்கேன்.

http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-58_720_southdreamz.jpg



இது தமிழ் சினிமாவுக்கே புதுசு’னு ஏதேதோ சொன்னார். பாலா சீரியஸாகி, 'சிங்கம்புலி வழக்கம்போல இந்த ஆளை எதுவும் காமெடி பண்ணிராதே... நாமளும் வாழ்க்கையில உருப்பட ஒரு சான்ஸ் வருது. விட்றக் கூடாது’னு அவர்கிட்ட இருந்து நம்பர் வாங்கினார். ஒரு நாள் அந்த பிரெஞ்ச் தாடிகூடப் பேசிட்டு இருக்கும்போது பெட்ரோல் பத்தி டாபிக் ஓடுச்சு. 'அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லயே பதினாலு மணி நேரம் ஆகுதுங்கிறாங்க. அதுக்கு எவ்வளவு ஒயிட் பெட்ரோல் செலவுஆகும்?’னு நான் யதார்த்தமா கேட்டேன். அதுக்கு அந்தத் தாடி, 'நாமதாங்க லூஸு மாதிரி பெட்ரோல் செலவு பண்ணிட்டு இருக்கோம். ஃபாரின்காரன்லாம் பயங்கர விவரம்’னு ஒரு பிட்டு போட்டார்.





ஆஹா! புது மேட்டர் ஒண்ணு சொல்லப்போறார்னு ரெண்டு பேரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். ''ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகுதுல்ல... ஒரு லெவலுக்குப் போனதும் ஃபளைட்டை அப்டியே நிறுத்திருவாங்க. பூமி சுத்தி அமெரிக்கா வந்ததும் அப்டியே கீழே இறக்கிருவாங்க. ஏற இறங்க மட்டும்தான் பெட்ரோல் செலவாகும்’னு சொன்னாரு பாருங்க. பாலாவுக்கு முகம் பேயறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. என்னைத் திரும்பிப் பார்த்தவர், 'ஏன் புலி... நாம லூஸா... இல்லை அந்த ஆளு லூஸா?’னு கேட்டார். 'அண்ணே, என்னைக் காமெடி பண்ண வேண்டாம்னு சொன்னீங்க. ஆனா, அவன் நம்மளைவெச்சுக் காமெடி பண்ணிட்டு இருக்கான்!’னு சொன்னேன். பாலா சிரிச் சுட்டார்!




தேனிப் பக்கம் 'பேரழகன்’ படம் ஷூட்டிங். என்னை ட்ராப் பண்றதுக்காக சூர்யா என் வீட்டுக்கு வந்தார். என் அம்மா பயங்கரமா வாய் பேசும். அவர் வீட்டுக்கு வந்ததும், 'நீ எதுவும் வாயை விட்றாதே. எது பேசினாலும் பக்குவமாப் பேசு’னு சொன்னேன். ரொம்ப நேரம் பேசமாலேயே இருந்துச்சு. சூர்யா கிளம்பும்போது, 'பார்த்துப்பா, உங்கப்பா முருகன் வேஷமாப் போட்டு சம்பாதிச்ச காசு. பாத்து செலவு பண்ணு’னு வாயை விட்ருச்சு. அமைதியா என்னைத் திரும்பிப் பார்த்து 'நல்ல அம்மா... நல்ல புள்ளை’னு சொன்னார். அதுக்கப்புறம் எப்போ வீட்டுக்குக் கூப்பிட்டாலும், 'இல்லைஜி... உங்க வீட்டுல அம்மா இருப்பாங்கள்ல... நான் அப்புறம் வர்றேன்!’னு எஸ்கேப் ஆகிருவார்.




அஜித்தோட 'உன்னைத் தேடி’ ஷூட்டிங்குக்காக ஜெர்மன் போயி ருந்தப்ப அவர்கூட ஒரு நாள் ஷாப்பிங் போயிருந்தேன். அவர் கடைக்குள்ள ஷாப்பிங் பண்ணிட்டு இருக்க, நான் ஷாப்பிங் மாலை சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். அங்கே ஐஸ்வர்யா ராயைவிட அழகான பொண்ணு ஒண்ணு, அதே ஜாடையில யார் மடியிலோ படுத்துட்டு இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. நேரா அஜித்கிட்ட போய்,  'ஜி ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ணு இருக்கு. பேசிப் பார்க்கலாம்.



 ஓ.கே-னு சொன்னா சினிமாவுல நடிக்கவைக்கலாம்’னு சொன்னேன். அவர் 'எதுக்குத் தேவை இல்லாத வேலை புலி; கௌம்பலாம்’னு சொன்னார். நான் விடலை. நானும் அவரை நச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனேன். என்கூட வந்தவர், அந்தப் பொண்ணைப் பார்த்ததும் செம டென்ஷன் ஆகிட்டார். 'யோவ், இது ஐஸ்வர்யா ராய்தான்யா.. அங்கே ராஜீவ் மேனன் நிக்குறார் பாரு. சாங் எடுக்க வந்திருக்காங்க. உனக்குப் பொண்ணைப் பார்த்தா கண்ணு போயிருமே. விட்டா என்கிட்டயே, நான் அஜித் மாதிரி இருக்கேன்னு சொல்லுவபோல’னு செம பரேடு. அப்புறம் அஜித் புண்ணியத்துல ஐஸ்வர்யா ராய்கிட்ட நாலு வார்த்தை ஜொள்ளிட்டுக் கிளம்பினேன்!


http://gallery.southdreamz.com/cache/actors/singam-puli-director/jeeva-divya-spandana-singam-puli-still-photos-94_720_southdreamz.jpg

 நன்றி - விகடன்