Wednesday, November 07, 2012

கிரேசிமோகன் காமெடி கலக்கல்கள், பதில்கள் @ கல்கி

சென்னை : கிரேசிமோகனின், "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் 400வது நாடக விழா, வரும் 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேடையேற்றப்பட்ட, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு, இதன் 400வது நாடக விழா, நாரத கான சபாவில், வரும் 24ம் தேதி நடக்கிறது. நூற்றுக்கணக்கான, "டிவி' சேனல்கள், பட்டிமன்றங்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகள் என, பொழுதுபோக்குக்கு குறைவில்லாத இந்த காலகட்டத்தில், இவைகளுடன் நாடகங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணமாக,"சாக்லெட் கிருஷ்ணா' நாடகம் மேடையேறுகிறது.



இது குறித்து, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் நாயகன் மாது பாலாஜி கூறியதாவது: இந்நாடகத்தின் 300வது விழாவில் நான் பேசும் போது, "எங்கள் நாடகக் குழு 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது' என்று சொன்னவுடன், பலத்த கைத்தட்டல் எழுந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "இது சாதாரண விஷயம் தானே, இதற்குப் போய் ஏன் கை தட்டுகிறீர்கள்?' எனக் கேட்டேன். பார்வையாளர் ஒருவர், "ஒரு குடும்பமே இத்தனை வருடங்கள் ஒன்றாக இருப்பது பெரிய விஷயம். நீங்க ஒரு குழுவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறீங்களே...' என்றார். நாங்கள் எங்கள் நாடகக் குழுவினரை, ஒரு கூட்டுக் குடும்பமாகத் தான் பார்க்கிறோம். விவேகானந்தர் கல்லூரியில் நான் படித்த போது, அனைத்துக் கல்லூரி நாடகப் போட்டியில், என் அண்ணன் கிரேசி மோகன் கதை, வசனத்தில் நகைச்சுவை நாடகம் போட்டோம். அதில் பரிசு வாங்கிய பிறகு, தனியாக நாடக கம்பெனி ஆரம்பித்தோம்.

இன்று வரை 5,000க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தி விட்டோம். இன்றும் என்னுடன் படித்தவர்கள் தான், எங்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரேசி கிரியேஷனுடைய முந்தைய நாடகங்கள், "மீசையானாலும் மனைவி, ஜுராசிக் பேபி' போன்றவை, 500 முறை நடத்தப்பட்டாலும், "சாக்லெட் கிருஷ்ணா' பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நாடகத்திற்கு, நிறைய குழந்தைகளும் வந்தனர். குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியதில் ஆத்ம திருப்தியாக இருக்கிறது. குழந்தைகளின் திருப்தி தான், இந்நாடகத்தை 400வது முறையாக மேடையேற்றச் செய்துள்ளது. இந்நாடகத்தை 100 தடவைக்கு மேல் பார்த்த நான்கு குழந்தைகளை, 400வது நிகழ்ச்சியின் போது கவுரவிக்கிறோம். தமிழ் நாடக உலகில், "சாக்லெட் கிருஷ்ணா' நிறைய வசூல் செய்துள்ளது. மாநகரங்களில் மட்டுமல்லாது, குக்கிராமங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளதால், இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் கமலஹாசனை சாக்லெட் கிருஷ்ணாவின் 300வது நிகழ்ச்சிக்கு அழைத்த போது, அவரால் வர முடியவில்லை. 400வது நிகழ்ச்சிக்கு வருகிறார். இவ்வாறு மாது பாலாஜி கூறினார்.

நன்றி - கல்கி , தினமலர், யூ டியூப்