Tuesday, November 06, 2012

ஏ ஆர் ரஹ்மானுடன் இளையாராஜா பணி ஆற்றுவாரா? குமுதம் VS இளையராஜா

http://www.outlookindia.com/images/rehman_illayaraja_20090309.jpg 

இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)#Ilayaraja


பண்ணைபுரத்து இராசையா இப்போது எப்படி இருக்கிறார் ?


- பெ.கணேஷ் பாபு, திருநெல்வேலி.



அவனா? அவன் எப்போதோ செத்துப்போய் விட்டான்! அவனைச் சுமந்து கொண்டல்லவா நான் அலைகிறேன்!





பிறந்த ஊருக்கு, ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?


- க.பா.மூர்த்தி, மதுரை.






பிறந்த உலகிற்கு இசையால் சேவை செய்கிறேன்!



“கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் தங்களின் பின்னணி இசை “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தின் பின்னணி இசை, “16 வயதினேலே” திரைப்படப் பாடல் “செந்தூரப்பூவே” பாட்டுக்கு முன்னர் வரும் புல்லாங்குழல் இசை இவையெல்லாம் காடு, மலை, கடல் கடந்து செல்கிறது. எந்த மனநிலையில் தங்களுடைய இந்த இசை வடிவங்கள் உயிர் பெருகின்றன?


-ஆர்.பூவராகசுவாமி, கடலூர்.




இதற்கு மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனம் தானாகவே ஒருநிலைப்பட்டு விடும். அது காட்சிகளுக்கு தகுந்தவாறும் உயிரின் உணர்வுகளுக்கு ஏற்றவாறும் பலவிதமான ஸ்வரங்களை இசை எடுத்துக்கொண்டு தகுந்த, அதற்கேற்ற இசைக்கருவிகளில் ஒளிக்கும்போது கேட்பவர்களைக் கண்டிப்பாக மெய்மறக்கச் செய்துவிடும்.


இதற்கு இதை உருவாக்கும் ஆள் அங்கே இருக்கக் கூடாது. அவன் மறைந்து போனால்தான் இது சாத்தியமாகும். இல்லை என்றால் அவனது ஈகோதான் இசையாக வெளிவரும்.



நீங்களும் ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு முயற்சி செய்யக் கூடாது?


- எஸ்.வி.பார்த்தசாரதி, திருச்சி.



“ஆஸ்கார்” விருது என்பது ஒரு ஐந்தாறு பேர் கொண்ட குழு. இந்தக் குழு தீர்மானிப்பதுதான் உயர்ந்தது என்று அர்த்தமில்லை! அதைவிடச் சிறந்த இசை அவர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கலாம். விருதிற்காக விண்ணப்பம் செய்த படங்களுக்குள்ளும் கலைஞர்களுக்குள்ளும் மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.


இதற்குப் போய் நான் விண்ணப்பம் போட்டு...


‘ஐயா ஐயா இதைக் கேளுங்கள் நான் நன்றாக இசையமைத்திருக்கிறேன்’ என்று கேட்கவேண்டுமாக்கும்? அடப் போங்கய்யா!?




தங்களின் பதில்கள் எல்லாம் உங்களின் நிலையில் இருந்தே சொல்லப்படாலும் – கேட்டவர் மனதையோ அல்லது வாசகர் மனதையோ – புண்படுத்தி விடக்கூடும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா?


- கே.மோகன் தமிழ்ச்செல்வன், சென்னை.



அடடா! இதை மறந்து விட்டு எத்தனையோ பதில்களைச் சொல்லி விட்டேனே!


நல்லவேளை இப்போது ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி! மிகவும் நன்றி!


நான் யதார்த்தமான பதிலைத்தான் சொல்லி வருகிறேன். பல உண்மைகளை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூடுமான வரை கொஞ்சம் உள்ளடக்கியே எழுத முயற்சித்தேன். இதிலும் என்னையும் மீறி என் பதில் யாரையவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது வேறு சொல்ல முடியாத வேதனை உணர்வாக ஏற்படுத்தியிருந்தாலோ இதன் மூலமாக சத்தியமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.



மனமது செம்மையாக, முதலில் நாம் என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?


-ஆ. தனபால், சென்னை.91


மனம் செம்மையாக – எந்தப் பயிற்சியுமே தேவையில்லை! எந்த ஒரு எண்ணமும் எழாமல் பார்த்துக் கொண்டால் போதும்! பதில் சுலபம்! செய்து பார்த்தால் நடக்கின்ற காரியமா? எனப் பின்னால் புரிந்து கொள்வீர்கள்.



ஞானிகள், யோகிகள், மகான்கள், சித்த புருஷர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார்கள் இவர்களெல்லாம் கண்டுணர்ந்து பரவசப்பட்ட அனுபவங்களைப் போல நீங்கள் அடைந்த அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?


- ஆ.செல்வம், சென்னை.



அதை யாரும் யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. கொடுக்க வாங்கிக்கொள்ளும் பொருளுமில்லை; கொடுக்காமல் மறைத்து வைக்கும் பொருளுமில்லை. எல்லோரிடத்திலும் – ஏன் எங்கும் எங்கெங்கும் இருக்கும் ஒரே உண்மை அது மட்டும்தான்!


அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் என்றாலும் – பகவான் ஸ்ரீ ரமணர்தான் – அதைக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை. நீங்கள் கேட்கலாம் – யாராலும் கொடுக்க முடியாது என்றீர்களே? என்று. ஆம் – அப்படிப்பட்ட ஒன்றைத் தரக்கூடிய ஒரே ஒருவர்தான் பகவான் ரமண மகரிஷி!



பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் சதவீதம் இசைஞானிக்கு எத்தனை?

- பி.கே.பாபு, திருநெல்வேலி.



பெரிய தவறுகளைக் கூட விட்டு விடலாம் – ஆனால் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது!


அதாவது, என்னுடைய தவறுகளை! அதைத் திருத்திக் கொள்ளவே இந்தப் பிறவி ஏற்பட்டது என்று முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்.




இசைஞானி அவர்களே, ஒரு இயக்குநர் உங்களிடம் வந்து நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து இசையமைக்க வேண்டுமென்று கூறினால் நீங்கள் அதை ஏற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து இசையமைப்பீர்களா? (கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


- டி.மோகன்ராஜ், வாலாஜாபாத்.




அப்படி இனிமேல் ஒன்றும் பணியாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் என்னுடன் 500 – படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார் – இதையும் அவர்தான் சொல்ல வேண்டும்.



உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம், அகம்பாவம் பற்றி?


- எ.சி.பி.தாஸ், திருத்துறைப்பூண்டி.



அவ்வப்போது எங்கே தோன்றுகிறது! அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?



(ராஜபவனி தொடரும்)


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)


நன்றி - குமுதம் ,

இசை ஞானி இளையராஜா ரசிகர்கள் இவரை ட்விட்டரில் தொடர்ந்தால் அவர் பற்றிய  செய்திகள் , அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அப்பப்ப அப்டேட் செய்யப்படுகிறது

IlaiyaraajaFans (@)

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPp1TNk8w1pjQaInv72SlT8ilW6UFSyPRtA2sCQ3nd0Yz-QIvGKqU4SHrOGgw4uzZD5rkXrMJ2WZbmBy7VKmLcAL8alKkmsxb82UoF5l73imbrBmkyVTqJrM-Uss3FQcQr21NFvdzKEJqj/s400/rahman+function.jpg

இளையராஜாவின் இசைக்குழுவில்,  11 வயதில் கீ -போர்டு வாசிப்பவராகச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்,  இன்று உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

 

 

தன் இசைக் குழுவில் ஏ.ஆர். ரஹ்மான் எப்படிச் சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறுகிறார்……
மூடு பனி
படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  கீ -போர்டு வாசிப்பவர், குடி போதையில் வந்திருப்பது தெரிந்தது.   உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன்.   ‘கீ -போர்டு’  வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை.   அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து,  “எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான்.  அவன் ஓரளவு  கீ -போர்டு  வாசிப்பான்.  அழைத்து வரட்டுமா ? ” என்று கேட்டார்.  “இதென்ன கேள்வி ?  உடனே அழைத்து வாருங்கள் ” என்றேன்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள்.  நான் அந்தச் சிறுவனிடத்தில் கீ-போர்டில் வாசிக்க வேண்டிய குறிப்பை கொடுத்தேன்.அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன்.  அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான்.  பாடலும் நன்றாக அமைந்தது.

 

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல.  இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப் தான் அவர்.  இந்த திலீப் தான் பின்னாளில் ஏ.ஆர். ரஹ்மானாக இசை உலகுக்கு வந்தார்.


நன்றி - Balhanuman's Blog

 

http://www.tamiluk.net/wp-content/uploads/2012/04/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.jpg