Sunday, November 04, 2012

தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி @ தீராநதி

ஒரு படைப்பாளிக்கு அவசியமானது – தமிழச்சி தங்கபாண்டியன்

 

 

கவிஞர் தமிழச்சி 2004-கிற்கு பிறகு அறியப்பட்ட பெண் கவிஞர். பன்முகப் பரிமாணம் கொண்டவர். நேரடி அரசியலுக்கு சென்றபிறகும் இலக்கியம் குறித்த உரையாடலை தொடர்ந்து கொண்டிருப்பவர்.



தீராநதி:
உங்களுடைய பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு என்ற சிறு கிராமம். உங்களின் அப்பா தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தென் தமிழகப் பகுதியில் முக்கிய பிரமுகராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். அரசியல் செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பப் பின்புலத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களின் பால்ய பருவம், சிறு வயது வாசிப்பு அனுபவம், இலக்கியத்தின் மீதான தேடல் என்று உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு நமது பேச்சைத் தொடங்கலாமா?




தமிழச்சி தங்கபாண்டியன்:

அப்பா முதலில் திராவிட கழகத்தில் உறுப்பினராக இருந்து பெரியாரின் தொண்டனாக அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக செயலாற்றிக் கொண்டிருந்தார். பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அதன் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் எங்கள் பகுதியில் செயலாற்றினார். அந்த நேரத்தில் பெரியாருடைய, பேரறிஞர் அண்ணாவுடைய கருத்துக்களும் விவாதங்களும் வீட்டில் நடந்து கொண்டிருக்கும். சிறு பிள்ளைகளான நாங்கள் அதைக் கேட்டும் கேட்காமலும் விளையாடிக் கொண்டிருப்போம். என்னுடைய ஒன்றாம் வகுப்பையும் மூன்றாம் வகுப்பையும் என் கிராமத்து பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். அப்போது ”டபுள் பிரமோஷன்” என்ற ஒன்று இருந்ததினால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லை. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டேன். அதற்கடுத்த என் படிப்பை விருதுநகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன்.



பண்டைய தமிழிலக்கியத்தினுடைய பரிட்சயம் திராவிட இயக்கத்தினருக்கு இருக்கக் கூடிய அளவிலான பரிட்சயமாகத்தான் அன்றைக்கு என் இலக்கியப் பரிட்சயம் இருந்தது. பக்தி இலக்கியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனது எட்டாம் வகுப்பு காலகட்டத்தில் கிடைக்கிறது. ஏனென்றால், நான் அப்போது முறையாக பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தேன். அப்போது ஆண்டாளின் பாசுரங்களின் வழி பக்தி இலக்கியம் என்ற ஒரு அறிமுகம் நிகழ்கிறது.
தீராநதி:



தனியாக ஒரு ஆசிரியரிடம் பரதம் கற்றீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்:
தஞ்சை நடராஜன் என்பவர்தான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம்தான் அரங்கேற்றம் நடத்தக்கூடிய அளவிற்கு பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். ஆக, இந்த அளவிற்குத்தான் என்னுடைய பள்ளிப் பருவத்து இலக்கியப் பரிட்சயங்கள் இருந்தன. இது முடிந்து மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.ஏ.வும், தியாகராயர் கல்லூரியில் எம்.ஏ.வும் படித்தேன்



. பி.ஏ. படிக்கின்ற காலத்தில் அதாவது 80களுக்கு பிற்பகுதியில் ஒரு பரவலான இலக்கிய அறிமுகம் எனக்கு கல்லூரி வட்டாரத்தின் மூலமாகக் கிடைத்தது. அதுவரைக்கும் நான் அறிந்திருந்த இலக்கிய வாசிப்பு என்பது சிவசங்கரி, ரமணிசந்திரன், இந்துமதி என்ற அளவில்தான் இருந்தது. கல்லூரிக்குள் வந்தபிற்பாடுதான் சாவி ஆசிரியர் நடத்திய ”திசைகள்” என்ற பத்திரிகை அறிமுகம் கிடைத்தது. பிறகு மீராவின் ”அன்னம்” மிகத் திருப்புமுனையாக அமைந்த என் இலக்கிய வாசிப்பைச் சொல்ல வேண்டும் என்றால், அது என்னுடைய முதுகலை படிப்பைத்தான் சொல்வேன். சுப்பாராவ் என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் முதுகலையில் படித்தேன். இன்றைக்கும் தமிழிலக்கியத்தில் பரவலான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருக்கின்ற பேராசிரியர் சிவராமன் என்னுடைய ஆசிரியர். அவர் டி.ஹெச். லாரன்ஸ’ல் பி.ஹெச்.டி முடித்தவர். அதே போல நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமும் ஒரு தீர்க்கமான விமர்சனப் போக்கும் கொண்ட பேராசிரியர் சுகுமாரன் என் ஆசிரியர். இவர் லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். கி.ஆ.பெ.வின் பேரன் இவர். முற்றிலுமான நவீன தமிழலக்கிய போக்குகளுக்குள் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்தவர் சுகுமாரன் அவர்களும், மதுரை தியாகராசர் கல்லூரியும்தான். ஆனால், இலக்கியம் என்றால் என்ன என்ற புரிதலை எனக்கு உண்டாக்கிக் கொடுத்தவர் என்றால், அவர் என் பேராசிரியர் சுப்பாராவ் அவர்கள்தான். அதற்கு முன்னால் நான் மேலோட்டமான இலக்கியம் படித்துவிட்டு, மேட்டுக் குடித்தனமாக அலம்பித் திரியும் ஒரு பெண்ணாகவே இருந்திருப்பேன் என்று இன்றைக்கு என்னால் கணிக்க முடிகிறது. சுப்பாராவ்தான் தாய்மொழி இலக்கியம் என்பது ரொம்ப முக்கியம். தாய்மொழியில் உங்களுடைய படைப்புத் திறனைப் பற்றி யாருடைய உதவியும் இன்றி ஒரு பத்து வார்த்தை எழுதிக் கொண்டு வாருங்கள். துணைக்கு ஷெல்லியையோ, ஷேக்ஸ்பியரையோ கூப்பிடக்கூடாது என்பார். மொழி என்பது ரொம்ப முக்கியம். அலங்காரமற்ற சொற்கள் என்பது மிக முக்கியம் என்பார். அப்போது நான் மிக அலங்காரமான நடையில் எழுதுவேன். ”மெட்ட ஃபாரிக்கல் மெர்மைடு” என்றுகூட என்னை கேலி பேசுவார். வெறும் கமா, கமாவாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று நம்பிக் கொண்டிருந்த என் எண்ணத்தை உடைத்தவர் சுப்பாராவ்தான்




மனதை பயிற்சி செய்வதற்கு செவ்வியல் படிப்பென்பது மிக முக்கியம் என்று அடிக்கடி சொல்லுவார். சுப்பாராவ் காண்ட், ஹெகல், மார்க்ஸ் இந்த மூன்றிலுமே மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையும், அதை இன்றைய நடைமுறைக்குள் எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் என்று சொல்லுவதில் தீர்க்கமான ஒரு பார்வையையும் கொண்டிருந்தார். அந்தப் பார்வைகள் எல்லாம் எனது வளர்ச்சிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்று சொல்வேன். என்னுடைய எம்.பில் பட்டத்திற்கான ஆய்வு ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்”-ஐ நிறுவிய பிரியாட்டிரிஸ் வெப் என்ற பெண்மணியின் சுயசரிதை பற்றியது. அவர் விக்டோரியன் சொஸைட்டி என்று சொல்லப்படுகின்ற மேல்தட்டு ஆங்கில குடிமகளாக இருந்த போதும், எப்படி லண்டன் கூலித் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனித்தார். அதிலிருந்த வாழ்க்கைக்கான விஷயத்தை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன்.




இவர் ஃபேபியன் வெப் என்ற பொருளாதார நிபுணரைத் திருமணம் செய்து கொண்டவர். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ தத்துவத்தை எப்படி தன் வாழ்க்கையோடு பொருத்தி வாழ்ந்து காட்டினார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யும்போது காரல் மார்க்ஸ’ன் கம்யூனிஸ தத்துவத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டாகிறது. அதோடு தமிழ் நவீன இலக்கியத்தின் பரிட்சயம் என்று கிடைக்க ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியத்தைப் படிப்பதாகட்டும், தி. ஜானகிராமனைப் படிப்பதாகட்டும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளைப் படிப்பதாகட்டும் எல்லாவற்றையும் இவரது அறிவுரையின் பேரில்தான் ஆழமாகப் படிக்க ஆரம்பித்தேன்.




தீராநதி:
கல்விச் சூழலோடு கூடிய இலக்கிய பரிட்சயம் என்பது உங்கள் விஷயத்தில் சாத்தியமாகி இருக்கிறது. உங்களின் பேராசிரியர் சுப்பாராவ் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருக்கு தமிழ் செவ்வியல், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் ஆழ்ந்த புலமை இருந்ததா?




தமிழச்சி தங்கபாண்டியன்:
தமிழ் செவ்வியல் இலக்கியம் சம்பந்தமான ஆழ்ந்த அறிதல் அவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்குக் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய மாணவர்களாகிய சிவராமனுக்கோ, சுகுமாரனுக்கோ அந்தப் புலமை ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் சுப்பாராவைப் பொறுத்த அளவில் தெலுங்கு இலக்கியம் சார்ந்த ஒரு தெளிவு இருந்ததாகத்தான் நான் உணருகிறேன். அவர் தெலுங்கு மொழியில் பிரசித்தி பெற்ற பல நல்ல கவிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். ஸ்ரீநாரயணகுருவின் கவிதைகளையெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 



கத்தாரின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர், நான் ஒரு ஆந்திர விவசாயக் குடியிலிருந்து வந்தவன் என்பதை பெருமை பொங்க அடிக்கடி சொல்லுவார். மண் சார்ந்த – கிராமம் சார்ந்த மக்கள் எதை நமக்கு வாழ்வியல் அனுபவமாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதை நாம் படைப்பாக்க வேண்டும் என்ற பார்வையை அவர்தான் எனக்கு வழங்கினார். உதாரணமாக, தயிர் உறை ஊற்றுவதை ஒரு முக்கியமான பண்பாகப் பேசுவார். அதை ஒரு ஆந்திர விவசாயப் பெண் எப்படி திறம்படச் செய்கிறார். அது ஒரு கைவினைப் பொருள் செய்வதற்கு ஈடான காரியம் என்பார். இந்த மாதிரியே வாழ்வியல் அறிவைப் பற்றி பல விதங்களில் விளக்கிக் காட்டுவார். தமிழிலக்கியத்தைப் பற்றிய அறிமுகத்தை அவர் எங்களுக்குக் கொடுக்காவிட்டாலும் ஐரோப்பிய, பிரிட்டிஷ் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த அறிவை அவர்தான் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.




தீராநதி:
இந்த மாதிரியான புரிதலோ வாசித்த நீங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?



தமிழச்சி தங்கபாண்டியன்:



ஆழ்ந்த படிப்பனுபவத்தின் காரணமாக ஏதாவது எழுதலாம் என்று நினைக்கின்றபோது கவிதை என்பது அகவயமான வெளிப்பாடு என்று அச்சமயத்தில் தோன்றியதால் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் எழுதியவை மிகவும் சாதாரணமானவை. ”மாரி” என்ற தலைப்பில் வானம் பார்த்து பயிரிடும் மானாவாரி விவசாயிகள் எப்படி அவல நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பது பற்றி எழுதினேன். அது புதுக் கவிதையா? மரபுக் கவிதையா? என்பதெல்லாம் தெரியவில்லை. என் கவிதையைப் பொறுத்த அளவில் என் கவிதை தனக்கான வடிவத்தை தானே தீர்மானிக்கும் என்பதில் அன்று தொட்டு இன்றுவரை தெளிவாக இருந்திருக்கிறேன் என்று இன்றைக்குப் படுகிறது. எந்த முன் தயாரிப்போடும் நான் கவிதைக்குள் போகவில்லை. தியாகராயர் கல்லூரியில் வெளியான ”அருவி” என்ற இதழில் அக்கவிதை வெளியானது. அதன் பிற்பாடு நல்ல வாசிப்பிற்கு பிறகுதான் கவிதையை நாம் அணுகவேண்டும் என்ற ஒரு உணர்வு உண்டாகிறது. மேத்யூ அர்னால்டு, அய்.ஏ.ரிச்சர்ட் சொல்வது மிக முக்கியம் ஆனால் அவர்கள் சொல்வதை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதையைப் படிக்கக்கூடாது என்று எண்ணினேன். அதை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க்கவிதை எழுதமுடியாது. ஆகவே ஏறக்குறைய ஏழு, எட்டு வருடங்கள் இது சார்ந்தே என்னுடைய தமிழ் வாசிப்பை பெருக்கினேன்.




இரண்டாயிரத்திலிருந்து நிறைய கவிதைகளை எழுத ஆரம்பித்தாலும் 2004-ல்தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ”எஞ்சோட்டு பெண்” என்ற தொகுதியை வெளியிட்டேன். என் கவிதைகளை நான் முழு தொகுப்பாக கொண்டுவர வேண்டும் என்று நினைத்தபோது இரண்டு விஷயங்களில் நான் தெளிவாக இருந்தேன். ஒன்று – என்னுடைய கவிதை என்னுடைய கவிதைகளுக்காக மட்டுமே பேசப்பட வேண்டும். இரண்டு – என்னுடைய எந்தப் பின்புலமும் இருக்கக்கூடாது. என் தந்தையினுடைய எந்த செல்வாக்கும் என்மீதும் என் கவிதைகள் மீதும் விழக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆகவேதான் அத்தொகுப்பு மிகத் தாமதமாக ”மித்ர” பதிப்பகம் மூலம் வெளியாயிற்று.





தீராநதி:
ஏழு, எட்டு வருடங்கள் தொடர் வாசிப்புக்காக நீங்கள் ஒதுக்கிய காலத்தில் வாசிக்கப்பட்ட கவிஞர்கள் யார் யாராக இருந்தார்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
பழந்தமிழ் இலக்கியம் குறித்தும், நமது மரபான அகம் புறம் குறித்த தேடலும் இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்றைக்கு வரை அதுகுறித்த பெரும் புலமை எனக்கில்லை என்றாலும் ஒரு சிறு அறிமுகம் கிடைத்திருக்கிறது, என்றால் அது அந்த வாசிப்பால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியச் சூழல் சார்ந்து அந்தக் காலத்தில் எனக்கு ஆத்மாநாம் அறிமுகமாகிறார். சிறு பத்திரிகை என்ற தீவிரமான ஒரு இலக்கியச் சூழல் இருக்கிறது. அதில் பெண் கவிஞர்களான சுகந்தி சுப்ரமணியம், இரா. மீனாட்சி, லதா ராமகிருஷ்ணன், பெருந்தேவி என்ற கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவந்தது அந்தச் சமயத்தில்தான். இவர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் என்னை மிக பாதித்த கவிஞர் இரா. மீனாட்சிதான். அவர் எனக்கு ஒரு ”ஐகான்” ஆகவே இருந்தார் என்றுகூட சொல்லுவேன்.
அவரின் மொழி என்பது முழுவதுமான ஒரு பெண் விடுதலையையும் பெண்ணிய மொழியையும் கொண்டிருந்தாலும் நிலம் சார்ந்த – இயற்கை சார்ந்த ஒரு நுண்ணுணர்வை அவரிடம் நான் கற்றேன். இதே காலத்தில் 80-84-ல் ஈழக் கவிதைகளும் வரத்தொடங்குகின்றன. சிவரமணி, செல்வி இவர்களின் கவிதைகளை வாசித்தேன். இந்தக் கவிதைகள் வேறு உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தது. போர்ச்சூழல் சார்ந்து ஒலிக்கும் பெண்களின் குரலை வெளிப்படுத்துவதாக இவர்களின் கவிதைகள் இருந்தன. ஆத்மாநாமின் அறிமுகம் மிக மிக முக்கியமானதாக எனக்கு இருந்தது. சுதந்திரத்தினூடே நவீன மனம் சார்ந்து எழக்கூடிய பிரச்னைகளும் எதற்குள்ளும் வாழமுடியாது வெளியேற விரும்புகின்ற ஒரு படைப்பாக அவரது படைப்புகள் எனக்குப்பட்டன. கவிதை என்பது நிரோஸ’யஸ் என்பதின் முழு உருவமாக அவர் எனக்குத் தெரிந்தார். அதேபோல நகுலனின் கவிதைகளையும் அச்சமயத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன்.
தீராநதி:
அப்பாவினுடைய அரசியல் அடையாளம் என்பது தன் மீது விழக்கூடாது என்ற தெளிவோடு எழுத வந்திருக்கிறீர்கள். தன் கவிதைகள் கவிதை என்ற அம்சத்திற்காக மட்டுமே பேசப்படவேண்டும் என்றும் விரும்பியிருக்கிறீர்கள். ஆனால் முதல் தொகுப்பிற்கு உங்களுக்கென்று ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுக்கும்போது ”தமிழச்சி” என்று மிக பட்டவர்த்தனமாக பெயரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அரசியல் சார்ந்த குறுக்கீட்டை நீங்கள் விரும்பாவிட்டாலும் ஆழ்மன ரீதியாக நீங்கள் திராவிட அரசியலுக்கும் அதன் கருத்தாக்கத்திற்கும் ஆட்பட்டிருக்கிறீர்கள் என்ற வெளிப்பாடாகவே அப்பெயர் புலனாகிறது. இந்தப் பெயருக்கான அடையாளம் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
அந்த அடையாளம் கண்டிப்பாக என் தந்தை சார்ந்த ”தமிழ் அடையாளம்”தான். அந்த அடையாளத்தை மிகத் தெளிவாக நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்ததென்று திராவிட இயக்கத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும்தான் சொல்வேன். நீங்கள் குறிப்பிட்டபடியே அதற்கான ஓர்மையை ஆழ்மனத்தில் எனது அப்பா அப்போதே பதித்திருக்கலாம். தமிழ் வாழ்வு சார்ந்த, தமிழர் பண்பாடு சார்ந்த ஒரு புரிதலையும் அது குறித்தான ஒரு பெருமையையும் அந்த இயக்கம்தான் என்னுடைய வளர் பருவத்தில் எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. அதிலே எனக்குப் பெருமிதம் உண்டு.
அப்போது என்னுடைய புனை பெயர் குறித்து பலர் விமர்சித்தார்கள். ”உங்களுடைய பெயர் fundamental ஆக இருக்கிறது” என்று சொன்னார்கள். ”நான் தமிழச்சி” என்று நீங்கள் சொல்லுவதால் தமிழ், தமிழச்சி என்ற ஆதிக்க மனப்பான்மையை அது நிறுவுவதாக ஒரு சாரார் சொன்னார்கள். இரண்டாவது வகைப்பட்டவர்கள் அதை மிகத் தெளிவாக எடுத்துக்கொண்டார்கள். இதுதான் உங்களுக்கான அடையாளம் என்பதற்கான பக்குவம் இருப்பதாகச் சொன்னார்கள். ”ஒரு தமிழ்ப்பெண், அதில் என் கிராமம் சார்ந்த அடையாளமும் இருக்கிறது என்று துணிந்து சொல்வதை நீங்கள் ஏன் ஆதிக்க மனோபாவம் இருப்பதாகப் பார்க்கிறீர்கள். அதைச் சொல்லுவதற்கான மனப்பக்குவமும், துணிவும் எனக்கிருப்பதாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அப்போது நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன். ஆங்கிலத்திலேயே படித்த, ஆய்வு செய்த ஒரு பெண்ணாக என்னை நான் முன் நிறுத்தாமல் என் மண் சார்ந்த, என் மொழி சார்ந்த, என் வேர் சார்ந்த ஒரு படைப்பாளியாக என்னை முன்நிறுத்தும்போது இவர்கள் வரவேற்கத்தானே வேண்டும்?
தீராநதி:
மூன்றாம் வகுப்பிற்கு பிற்பாடு முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்வி என்பதுதான் உங்களின் முதுகலை படிப்பு வரைக்கும் இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும், சில்வியா பிளாத்தையும் இயல்பாகப் படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு பாடத்திட்டத்திலேயே இருந்திருக்கும். ஆனால் உங்களின் முதல் கவிதைத் தொகுதியை நீங்கள் வெளியிடும்போது அதிலுள்ள கவிதைகள் முழுக்க மக்கள் மொழியிலானதாக வெளிப்பட்டிருக்கிறது. ”சனங்களின் கதை” மூலமாக தமிழ்க்கவிதை வடிவத்தை வட்டார தனிமையலாக முன்வைத்த பழமலய்யின் வழித்தோன்றலாக நீங்கள் வெளியில் அறிமுகமாகிறீர்கள். முதல் தொகுதிக்கு முன்னுரை கூட பழமலய்யிடமே வாங்கி இருக்கிறீர்கள். இந்த முரணை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்:
திருமணம் வரைக்கும் முழுக்க முழுக்க விடுதி வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கிறது. விடுதியை விட்டு எனது சொந்தக் கிராமத்திற்குச் செல்லும்போது தாய் தந்தையிடம் பேசுவது அல்லது கடித பரிவர்த்தனைகள் நடத்துவது எல்லாமே இயல்பான என் தாய் மொழியாகத்தான் இருக்கிறது. என்னுடைய அப்பா ”மிசா”வில் ஒரு வருட காலம் சிறையில் இருந்தார். அப்போது எனக்கு எழுதிய கடிதங்கள் முழுவதும் தமிழ் மொழியில்தான் வந்திருக்கிறது. எவ்வளவு தூரம் ஆங்கில வழியில் நீங்கள் படித்தாலும் எனது உணர்வுபூர்வமான மொழியை நான் தாய்மொழியில்தான் செய்யமுடியும். என்னுடைய தாய், தந்தை இருவரும் பள்ளி ஆசிரியராக இருந்தவர்கள். கிராமத்தில் சக வயது பிள்ளைகளுடன் நொண்டிக் குதிரை, பச்சைக்குதிரை தாண்டும் போதோ கோலி, பேந்தாக்குண்டு விளையாடும் போதோ ஒரு மணல் தள்ளி விளையாடும் போதோ என்னுடைய அத்தனை வெளிப்பாடுகளும் எளிமையான கிராமம் சார்ந்ததாகவே அதன் மொழியாகவே இருந்திருக்கிறது. ஆக, படைப்பு என்று வரும்போது அது ஓர் இயற்கையான செயலாகத்தான் நிகழ்கிறது. இந்தத் தெளிவை அதாவது ஆங்கில இலக்கியத்தோடு மட்டுமே பயணம் போகாமல் தன் சொந்த மக்களின் மொழியில்தான் வரவேண்டும் என்ற தெளிவை எனக்குக் கொடுத்தது ஐரோப்பிய இலக்கியங்களும், ஆங்கில இலக்கியங்களும், திராவிட இயக்கப் பின்புலமும்தான். என்று சொன்னால் மிகையாகாது. உதாரணத்திற்கு சினுவா ஆச்சிபி சொல்வார். ”உங்களுடைய படைப்பை உங்களுடைய கிராமத்தின் புழுதி படிந்த ஒரு கிளைச் சாலையிலிருந்து தொடங்குங்கள்” என்று. இந்தத் தெளிவை எனக்கு ஆங்கில படிப்பு கொடுத்திருக்கிறது. இன்றைக்கும் ”சுமதி” என்று என் பெயர் சொல்லி அழைக்கத் தெரியாமல் ”செமதி” என்று அழைக்கக்கூடிய மக்கள் என் கிராமத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் நான் வருகிறேன். அந்த மொழியில் தானே என் படைப்பும் வரமுடியும்? கவிதையை கருத்தும், அனுபவமும் கலந்த கலவை என்று சொல்லலாம். அனுபவத்தில் உண்மையும், அது சார்ந்த சிறு நெறிப்படுத்தலும் இருக்கவேண்டுமென்றால் நம் மொழியில்தான் நாம் சொல்லவேண்டும். எனது திராவிட இயக்க மரபும் இதற்கு ஓர் அடிப்படை என்பது இங்கு மிக முக்கியமானது.




தீராநதி:
உங்களுக்கான கவிதை மொழியைத் தேர்ந்தெடுத்ததைப் போலவே அந்தக் கருத்தியல் சார்ந்து இயங்கக்கூடிய பழமலய் என்ற மூத்த கவிஞரின் முன்னுரையையும் வாங்குகிறீர்கள். உங்களுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு என்று வருகிறபோது அதன் மொழி மாறுகிறது. சொல்லப்படும் உத்தி, விதம் மாற்றமடைகின்றன. அதற்கு தகுந்த கருத்தியலில் இயங்கக்கூடிய பிரம்மராஜனின் முன்னுரைக்குச் செல்கிறீர்கள். கவிதை குறித்த ஒரு கருத்தியலிலிருந்து வேறு கருத்தியலுக்கு நீங்கள் நகர்ந்து வரும் அடையாளமாக இதைக்கொள்ளலாமா?





தமிழச்சி தங்கபாண்டியன்:
இந்த நகர்வு என்பது ஒரு படைப்பாளிக்கு ரொம்ப முக்கியமான விஷயம். முதல் தொகுப்பை எடுத்துக்கொண்டால் மிக நெகிழ்ந்த ஒரு நடையாக – ஒரு விரிவடைந்த நடையாக அது இருக்கும். கவிதைக்கு செறிவும், அடர்த்தியான நடையும், கட்டுமானமும், சொல்ல வந்ததை மிகக் குறைந்த வார்த்தைகளில் அதே சமயம் வலிமையாக சொல்லவேண்டும். அதுதான் கவிதை. அந்த அம்சத்தோடு சொல்லக்கூடிய திறன் என் முதல் தொகுப்பில் எனக்கு குறைவாகத்தான் கை வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அன்றைக்கு நான் கையாண்ட கருப்பொருள். என்னுடைய கவிதை அந்த சமயம் அந்த மொழியைத் தானே எடுத்துக்கொண்டது. உதாரணத்திற்கு அந்தக் கவிதைகள் முழுக்க கதைப் பாடல்களாக இருக்கும். ஆக அதற்கு பழமலய் முன்னுரை வழங்கினால் சரியாக இருக்குமென்றெண்ணி அவரிடம் போகிறேன். ”சனங்களின் கதை” என்ற கவிதைத் தொகுப்பின் மூலமாக என்னை ஆகர்ஷ’த்திருந்த கவிஞர் அவர். அப்போது அந்தக் கவிதைத் தொகுதியில் வருகின்ற கதாப்பாத்திரங்களை எல்லாம் ஆவணமாகப் பதிய வைக்கவேண்டும் என்று நினைத்து அந்த மக்களையெல்லாம் புகைப்படமாக பதிய வைத்தேன். இந்த யோசனையை அறிவுமதிதான் கொடுத்தார். இது வெறும் புகைப்படங்களின் தொகுப்பாக இருக்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். அறியப்படாத மக்களின் ஆவணமாக இந்தத் தொகுப்பு இருக்கிறது என்ற கருத்தைக்கூட அப்போது பாரதிபுத்திரனும், க. பஞ்சாங்கம் அவர்களும் பதிவு செய்திருந்தார்கள். பூர்வ குடிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான காலனிய சொல்லாடலில் ஆங்கிலேயர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு என்னவென்றால் பூர்வ குடியினருக்கும், நமக்கும் இருக்கின்ற சில தடைகளை மொழியின் மூலம் மாற்றலாம் என்று அவர்கள் (ஆங்கிலேயர்கள்) நம்பினார்கள் என்ற குறிப்பு வருகிறது. ஆக, மொழி என்பது கவிதையில் ஒரு இறுக்கமான வடிவத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது ஒரு பிரக்ஞை பூர்வமான செயல்பாடு என்றுகூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். விரிவாகச் சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை அதற்கென்று இருக்கின்ற உரைநடையில் நீங்கள் சொல்லிவிடலாம். ஒரு விஷயத்தை கவித்துவமாகச் சொல்ல ஆசைப்படும்போது அந்த கவித்துவ உச்சத்தைத் தொட முயலும்போது எனது மொழி மாறுகிறது. படிமங்கள் மாறுகிறது. அந்தச் சமயத்தில் நான் மிகவும் நேசிக்கின்ற கவிஞர் பிரம்மராஜன் எனது கவிதை ஓட்டத்தைச் சரியாக வெளிக்கொண்டு வருவார், நான் எந்தத் தளத்தில் இருக்கிறேன் என்பதை அவரால் சொல்லமுடியும் என்பதால் நான் அவரிடம் முன்னுரைக்காகச் செல்கிறேன். கவிதை குறித்த தெளிவான ஒரு புரிதல் உடையவர் அவர் என்பதாலும்தான் அவரைத் தேர்தெடுத்தேன். அடுத்து என்னுடைய கவிதை எப்படிப் போகுமென்று எனக்குத் தெரியாது.
தீராநதி:
அடுத்து தன் கவிதை எப்படி போகுமென்பது உங்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு கவிஞனுக்கும் தெரியாதுதான். பிரம்மராஜன் கவிதையில் ஆண் மொழி, பெண் மொழி என்றெல்லாம் தனித்தனியாக இல்லை என்ற கருத்தியலுடையவர். ஆனால் சமகால பெண்கவிஞர்களோ பெண்மொழியை பிரதானமாக வென்றெடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறார்கள்? பிரமராஜனின் கருத்தோடு நீங்கள் ஒன்றிப் போகிறீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




கவிதை என்பது ஆண் பால், பெண்பால் என்ற எல்லையைக் கடந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான். பெண்ணிற்கான ஒரு மொழி, பெண்மொழி, பெண்ணியம் என்ற ஒரு போக்கு இன்றைக்கு இருந்தாலும் கூட, என்னுடைய கவிதைகள் என்பது அப்படி ஒரு கருத்தியலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எழுதும் பெண்படைப்பாளி நான் என்பதை பிரம்மராஜனால் சரியாக கணிக்கமுடியும் என்று நினைத்தேன். அவரும் அதையே சொல்லியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
தீராநதி:
கவிதையில் ஆண்மொழி, பெண் மொழி என்பது வெளிப்பாட்டளவில் எந்தளவிற்கு சரியாக, உண்மையாக இருக்கும் என்பது குறித்து இன்றைய வரைக்கும் ஒரு விவாதம் நடந்து தான் கொண்டுருக்கிறது. ஒரு படைப்பை சிருஷ்டிக்கும் போது ஆண் என்ற பிரக்ஞையோடு பெண் என்ற பிரக்ஞையோடு உண்டாக்குகிறார்கள் என்று கூட பொது அளவிட்டில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் தன்னையே அறியாமல் பெண், ஆண் என்ற அனடயாளத்தை ஒரு படைப்புக்குள் நாம் விட்டு விட்டுதான் செல்கிறோம். இதை ஒரு படைப்பின் நியதி என்ற அளவில் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நமது மொழி என்பது பொது தளத்தில் ஆண் சார்பு உள்ள ஒரு மொழியாகத் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்கிறதா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




எனக்கு அதில் கருத்து மாறுபாடே கிடையாது. பொதுவான தளத்தில் கட்டப்பட்டிருக்கின்ற ஆண்மொழி என்ற தளத்திலிருந்து விலகி வரவேண்டும் என்பதை பெண் கவிஞர்கள் ஒரு முக்கியமான விஷயமாக செய்கிறார்கள். ஆண் சார்ந்த ஒரு மொழியாகவே, நமது பொதுத்தளத்தில் மொழி என்பது இருக்கிறது என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. ஆனால் பெண்மொழி, பெண்உடல் என்று ஒரு விஷயத்திற்குள்ளாக மட்டுமே கவிதையின் எல்லையைக் குறுக்குவதை நான் ஏற்கவில்லை. கவிதையில் அதுவும் ஒரு போக்கு. ஜனநாயக ரீதியில் அந்தக் குரலையும் நாம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும். அது மிக முக்கியமான குரலும்கூட.
தீராநதி:



படைப்பை பொறுத்தளவில் பல்வேறு குரல்கள் ஒலிப்பதைதான் ஜனநாயகத்தின் குறியீடாக கொள்ள முடியும். உங்களின் சக கவிஞர் தோழியுமான கவிஞர் கனிமொழி ஒரு நேர்காணலில் பெண்ணிய விடுதலை என்ற குரல் கூட ஒரு விதத்தில் ஆணாதிக்கத்தின் மறுவடிவம் தான் என்ற தொனியில் பேசி இருந்தார். நீங்களும் இதை ஆணாதிக்கதின் மறு வடிவமாகவே பார்க்கிறர்களா?




தமிழச்சி தங்கபாண்டியன்:
ஆணாதிக்கத்தின் மறு வடிவம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஆணாதிக்கத்தின் தூண்டுதலினால் வரக்கூடிய வெளிப்பாடு என்று தான் சொல்வேன். தாகூர்கூட மண்ணிலிருந்து விடுதலை பெறுவது மரத்திற்கு சுதந்திரமாகது என்று சொல்வார். அதைப் போலத்தான் பெண்ணியமும். பெண் விடுதலை என்பது ஆண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆக, ஆணுக்கான பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு பெண்விடுதலையைத்தான் எங்களைப் போன்ற கவிஞர்கள் முன்வைக்கின்றோம். அதனால்தான் பிராந்திய பெண்ணியம் என்ற ஒரு கருத்தியலை நான் முன்வைக்கின்றேன். மேலைய பெண்ணியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அளவு கோல்கள் மிக முக்கியமானவை. இதற்கான ஒரு வெளியை உருவாக்கக் கூடிய பொறியை தூண்டுகின்ற விஷயமாக ஆணாதிக்கம் என்பது இருக்கிறது என்று சொல்வேன்.



தீராநதி:
பெண்ணியத்திற்குள் பிராந்தியம் என்ற கருத்தியலை நீங்கள் முன்வைப்பதற்கு இன்றைக்கு நடப்பில் இருக்கக் கூடிய பின்காலனிய போன்ற தத்துவங்கள் உதவக்கூடும். அந்தத் தத்துவப்பார்வைதான் உங்களுக்கு இதை வழங்கியும் இருக்கிறது என்றே நம்புகிறேன். ”எஞ்சோட்டு பெண்” என்ற உங்களின் தொகுப்பின் மூலம் பாரதி மரபு வழி வந்த பெண்ணாக அடையாளப் படுத்திக் கொண்டீர்கள். இரண்டாவது தொகுப்பான வனப்பேச்சியின் மூலம் தன் மரபு சார்ந்து மக்கள் சார்ந்து மண் சார்ந்து ஒலிக்கக் கூடிய காவல் தெய்வமான நாட்டார் வழி பெண்ணாக அடையாளம் கொள்கிறீர்கள். தமிழ்ச் சமூகம் இப்படி பல்லாயிரக்கணக்காண காவல் தெய்வ வழிபாட்டைக் கொண்டியங்கும் பன்முக பண்பாடு கொண்ட ஒரு சமூகம். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமோ ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற சிந்தாந்தத்தைக் கொண்டியங்கும் ஓர் அரசியல் இயக்கம். இங்கு சிறு நெருடல் எழுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?



தமிழச்சி தங்கபாண்டியன்:




மிக நுட்பமான ஒரு கேள்வி இது. அந்தப் பெயரிலேயே ஒரு தகவலை வைத்துதான் அந்தத் தலைப்பை நான் வைத்தேன். உக்கிரமான, மண்ணிற்கு மிக நெருக்கமான, அதே சமயம் ஒரு சமூகத்திற்கான காவல் தெய்வமான அவளை நான் எப்படி சோட்டு பருவத்திலிருந்து இன்றைக்கு வரை தூக்கிக் கொண்டிருக்கிறேன். வனத்தில் இருக்கும் அவளை எப்படி ஒரு நகரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறேன். என்னுடைய சிக்கல்களைப் பேசுகின்ற ஒரு பெண்ணாக எப்படி அவளை நான் கொண்டு வருகிறேன் என்பதெல்லாம் மிக முக்கியமாவை.
இவளை ஒரு ”ஐகான்” ஆக நான் முன்வைக்கவில்லை. நான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு மாற்றாக இவளை நான் முன் வைக்கவில்லை. ஒருகுரலாகத் தான் வைக்கிறேன். என்னைப் போலவே பிராந்திய தமிழ் கிராமத்து மண் சார்ந்த அடையாளத்துடன் இயங்குகின்ற பெண்ணினுடைய குரலாக வனப்பேச்சி என்பவள் வருகிறாள். அவள் இன்றைக்கு இருக்கின்ற மெட்ரோ பாலிடென், காஸ்மோ பாலிடென் லிபரலைஷேசன் குளோபளைஷேசன் என்று சொல்லப்படுகின்ற முற்றிலும் வேறான ஒரு வெளிக்குள் வரும்போது அவளுக்கு எற்படுகின்ற சிக்கல்கள், சிதைவுகள், ஒன்றாமை தனிமைத் துயர், இவற்றால் எப்படி உபாதைக்குள்ளாகிறாள் என்பதை வனப்பேச்சியின் மூலம் நான் ஒரு பெண்ணின் அவஸ்தைகளை முன்வைக்கிறேன்.




இன்றைக்கு இருக்கின்ற உலகமயமான நாகரிக உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேன். எப்படி எதிர்கொள்கிறேன் என்பதன் பெண் குரலாகவே இங்கு ”வனப்பேச்சி” வருகிறாள். நாகரிகத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் எதிரானவர் இல்லை நாம். அதன் வளர்ச்சி நம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் இந்த மாதிரியான வளர்ச்சிகள் வருகின்ற போது நம்மண்ணிற்கே உரித்தான திணை மரபையும், ஆதாரங்களையும் நாம் கொஞ்சம் காப்பாற்றி வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. நீங்கள் கேட்பதைப் போல அண்ணாவின் அரசியல் சித்தாத்தத்துக்கு எதிரான ஒரு தத்துவமாக மாற்றி இதை நான் முன்வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை இப்பொழுது.
தீராநதி:
பின் காலனியம் போன்ற தத்துவங்கள் நடப்பில் இன்றைக்கு விவாதிக்கக் கூடிய ஒன்றாகவும், அதை முன் வைத்து நம் சமூகத்தின் அடையாளங்களை, வேர்களை மீட்டெடுக்கும் வேலைகளைப் பிரதானப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம். நீங்களே குறிப்பிட்டது போல ”திணை” வாழ்க்கையில் பல்வேறு தெய்வங்கள் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சுருக்கி ஒரு தெய்வ வழிபாடு என்பதை அண்ணா முன் வைக்கிறார். அண்ணாவின் அரசியல் தத்துவ அறிவைக் குறைத்து மதிப்பிட முடியாவிட்டாலும், அவரின் இச்சித்தாந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணருகிறீர்களா? ”திணை” பண்பாட்டை வெறும் படைப்பு ரீதியாக மட்டுமே காப்பாற்றுவது என்பதை விட அரசியல் ரீதியாக காப்பாற்றுவது முக்கியமில்லையா?
தமிழச்சி தங்கபாண்டியன்:




அதில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. ஏனென்றால் இந்தக் குழு சார்ந்த வாழ்க்கையில் சேர்ந்து, கூடி, கொண்டாடி உணவையோ, கள்ளையோ பகிர்ந்து ஒரு காவல் தெய்வத்தினை, ஒரு இடத்தில் வழிபடுவது என்பது வேறு. அதையே இன்றைக்கு மாற்றாக முன் வைக்கும் போது அது ஒரு இந்துத்துவா பெரும் தெய்வமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே அதை அரசியல் கட்சிகள் மிக கவனமுடன் அணுகவேண்டிய பொறுப்பு இருக்கிறது. திணைக்கோட்பாடு பல்வேறு பண்பாட்டு அடுக்குகள் கொண்டது. ஆக, இந்தத் திணைக்கோட்பாட்டை பிரதிபடுத்துகின்ற ஓர் அடையாளமாக இது இருக்கும் என்ற ஒரு சின்ன காரணத்திற்காக அண்ணாவின் கொள்கைக்கு மாற்றாக நாம் இதை முன் வைக்க முடியாது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன் வைத்துச் செல்வதே உகந்த வழியாக இருக்குமென்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. நானும் நம்புகிறேன்.
தீராநதி:
நீங்கள் இந்துத்துவ சக்திகளின் செயல்கள் குறித்து பேசியதனால் இதைக் கேட்கிறேன். இன்றைக்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் வந்தவுடன் இந்துத்துவ சக்திகளின் ”பதற்றக்குரல்கள்” வலுவாக சேர்ந்து ஒலிக்கின்றனவே, ஏன்?
தமிழச்சி தங்கபாண்டியன்:




எனது தலைவரே சொல்லி இருப்பதைப் போல ஒரு தமிழர் ஐந்தாவது முறையாக முதல்வராக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து, தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்துகின்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அக்குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன. அதற்கு சரியான சமீபத்திய உதாரணம் ”சென்னை சங்கமம்” கலைநிகழ்ச்சி. அது குறித்து காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள் சில இருந்தாலும் வேறு எந்த ஆட்சியில் தமிழர்களின் பண்பாட்டை அடையாளப்படுத்துகின்ற இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன? தமிழ் குறித்த விவாதங்கள் – தமிழர் பிரச்னை குறித்த போராட்டங்கள் வேறு எந்த ஆட்சிக் காலத்தில் எழுந்திருக்கிறது. ஆக, இப்படியான வெளியை உண்டாக்கித் தருகின்ற செயல்பாடுகள் இந்தத் ”தமிழ்” முதல்வரது ஆட்சியில் நடைபெறுவது இந்துத்துவ சக்திகளை எரிச்சல் கொள்ளச் செய்கின்றன என்பதே உண்மை.




தீராநதி:
முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் படைப்புகள் குறித்த ஆய்வுகள், அது சமூகத்திற்குள் நிகழ்த்திய தாக்கங்கள் பற்றிய விவாதங்கள் உருவாவதற்கு முன்பாகவே அவரை இலக்கியத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான சகல வேலைகளும் வேக வேகமாக நடக்கின்றன. நான் கூட அவரின் நெருங்கிய அலுவலக உதவியாளனாகப் பணியாற்றி இருக்கிறேன். அவர் எழுத்தின் மீது வைத்திருக்கின்ற பொறுப்புணர்வை நேரில் கண்டிருக்கிறேன். அவரது ”தூக்கு மேடை” உள்ளிட்ட பல நாடகங்கள் தமிழுக்கு முக்கியமானவை. இந்த அப்புறப்படுத்துதல் பற்றிப் பேசுங்களேன்?




தமிழச்சி தங்கபாண்டியன்:
அவரது தமிழ்ப் பங்களிப்பு அசைக்கமுடியாததது. மிக முக்கியமாக அவரது நாடகங்கள் பற்றி எடுத்துக் கொண்டோம் என்றால், அந்தக் காலத்தில் தலைவர் கலைஞர் உட்பட இரண்டே பெயர் தான் ”பர்மா”வுக்கும் ”ரங்கோன்”னுக்கும் புலம்பெயர்த்தவர்களைப் பற்றி நாடகம் எழுதி இருக்கிறார்கள். தலைவர் கலைஞரின் அந்த நாடகங்கள் குறித்து எந்த நவீன இலக்கியவாதிகளும் பேசியதும் இல்லை. விவாதித்ததும் இல்லை. அதே போல எம்.ஆர்.ராதா அவர்களும் நாடகம் எழுதி இருக்கிறார். இந்த மிக முக்கியமான பதிவை இவர்கள் இருவரும்தான் செய்திருக்கிறார்கள். நாடக வரலாற்றை எடுத்துக்கொண்டால் மறுமலர்ச்சிக் காலங்களில் பிரெஞ்சு நாடகத்தில் வரக் கூடிய ”மோலியர்” பற்றி எல்லோரும் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கான மிக முக்கியமான வேலையை அவருடைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார்.




நம் சமூகம் உலுத்துப்போய், புரையோடிப் போய் இருந்த விளிம்பு நிலை மக்கள் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாத ஒரு கால கட்டத்தில் மக்களை நேரடியாக போய்ச் சேருகின்ற ”நாடகம்” என்ற ஒரு சாதனம் மூலமாக வலிமையான மாற்றத்தை நம் சமூகத்திற்குள் நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி அந்தச் சமூகத்திற்குள் ஒரு கலகத்தை உருவாக்கியதோ அந்த அளவுக்கு நிகரான வேலையைக் கலைஞர் அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இதை நானும் ஒரு நாடகக் கலைஞர் என்ற முறையில் பெருமையாக சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைக்கு வருகின்ற நவீன இலக்கியவாதிகள் அதுவெல்லாம் வெறும் பிரச்சாரம் – கலைவடிவம் அல்ல என்று சொல்லலாம். அப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அந்தக் காலகட்டத்தில் ஒரு ”புரட்சி”யின் குரலாக வெளிப்பட்ட நாடகங்கள் அந்தக் குரலில்தான் பேசும். பேச வேண்டும். அதுபோலவே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான நமது மரபின் அச்சிலே தலைவருக்கிருக்கின்ற ஆழ்ந்தப் புலமையும், வெளிப்பாடுகளும் மிகக் காத்திரமானதொரு படைப்பாளி அவர் என்பதை நிறுப்பிக்கிறது.
தீராநதி:



மறைமலை அடிகள் முன் வைத்த சைவம் சார்ந்த தமிழுணர்ச்சிக்கும் திராவிட இயக்கம் முன் வைத்த அடுக்கு மொழி தமிழுணர்ச்சிக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போலவே திராவிட இயக்க இலக்கியம் என்பது ஓசை நயத்தோடும், ஒலி நயத்தோடும், எதுகை மோனையோடும் தான் வெளிப்பட வேண்டும் என்ற போக்கு இருந்தது. இன்றைக்கு திராவிட இயக்கம் சார்ந்து இயங்கக் கூடிய எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் மொழி நடையைப் பின்பற்றத் தொடங்கி இருப்பது கூட எங்களுக்குக் கிடைத்த முழு வெற்றியைத்தான் அது காட்டுகின்றது என்று சில நவீன இலக்கியவாதிகள் ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். இவர்களின் விமர்சனத்தை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் மொழிநடை திராவிட இயக்கப் போக்கின் மொழி நடையை ஒத்தாக இல்லை. ஆகவே இதைக் கேட்கிறேன்?
தமிழச்சி தங்கபாண்டியன்:



மிக எளிதாக என்னால் இந்த விமர்சனத்திற்குப் பதில் சொல்ல முடியும். ஒரு படைப்பாளியின் எழுத்தை தீர்மானிப்பதற்கு அந்தச் சமூகத்தினுடைய காலகட்டம் மிக மிக முக்கியமானது. அதை விட்டுவிட்டு ஒரு படைப்பாளியின் எழுத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. ”வானம்பாடி” இயக்கத்தின் மீது கூட இந்த விமர்சனத்தையேதான் வைத்தார்கள். தமிழிலக்கிய கவிதையின் வரலாறு, சமகாலப்போக்கு குறித்து புத்தகம் எழுதுகின்றவர்கள் வானம்பாடிகள் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எழுதுகின்ற மோசடியும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒலி நயமும், ஓசை நயமும் தமிழ்க் கவிதை மரபுகளிலே வரக்கூடிய ஒன்று. அதை யாரும் மறுக்க முடியாது. சந்த நயம் என்பது மரபுக் கவிதையில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பண்பு.





அடுத்தது, சமூக மாற்றத்திற்காகக் கவிதையை ஒரு பெரிய சக்தியாகப் பயன்படுத்திய காலத்தில் கவிதையின் மொழி என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் பெரும் மக்கள் திரளை உங்களை நோக்கி இழுக்க முடியும். அந்த நேரத்தில் நகுலனுடைய ”நீங்கள் ராமச்சந்திரனா என்றேன்? ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை” என்ற கவிதையை முன் வைக்க முடியாது. அகவயமான என்னுடைய தனிமனித சிக்கல்களை மட்டுமே பேசுவது இலக்கியம் என்று உங்களை நீங்கள் சமூகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிற கோழைத்தனத்தை ”திராவிட இயக்கமோ” ”வானம்பாடி” இயக்கமோ என்றைக்கும் செய்ததே கிடையாது. இன்குலாப் அய்யா மீது கூட நவீன இலக்கியவாதிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். ”படகோட்டிச் செல்கின்ற படகுக்காரரே மிக மெதுவாகப் போங்கள் வழியில் இருக்கின்ற வாத்து முட்டைகள் உடைந்து விடாமல் படகை செலுத்துங்கள்” என்று அகவயமான அழகான கவிதையை அவர் எழுதி இருக்கிறார். இப்படி அகவயமான கவிதை எழுதிய அவர்தான் சமூகம் சார்ந்த பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆக, நீங்கள் கவிதைகளில் சொல்கின்ற விஷயம் உங்களின் மொழியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது ஒன்று.
இரண்டாவது; நான் எழுத வருகின்ற இன்றைய சமூகச் சூழல் எப்படி இயங்குகிறதோ அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறேன். இது இயல்பானதொன்று. அப்படிப் பார்த்தால் எனக்கான மொழியைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் ஐரோப்பிய மேலை இலக்கியத்திற்கு வேண்டுமென்றால் நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். இல்லை என்றால், எனக்கான மொழியை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு எங்களுக்கு முன்னால் இயங்கிய தமிழ்ப் பெண் கவிஞர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். ஆண்டாளின் மொழி என்பது புரட்சியான ஒரு கவித்துவ மொழி. ”உன்னுடைய மார்பைச் சேராத என்னுடைய கொங்கைகளைத் திருகி எரிவேன்” என்ற ஆண்டாளின் பாடலை விட வேறு என்ன புதியதாக சொல்லி விட முடியும். ஆக, நானும் சக கவிஞர்களும் வெள்ளிவீதி ஆண்டாளின் வாரிசாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
தீராநதி:



ஆண்டாளைப் பற்றி உங்களின் பேச்சு போனதால் இதைக் கேட்கிறேன். ஆண்டாள் என்பவள் ஒரு பழங்குடி மரபில் வந்த பெண். இதைத்தான் வைணவ மரபு பிறகு உள்வாங்கிக் கொள்கிறது. ”வில்லி” ”குடும்பம்” ”வேடன்” ”கந்தன்” என்ற பழங்குடி இனத்தில் ”வில்லி” இனத்திற்கும் கந்தன் இனத்திற்கும் இடையில் நடந்த ஊடாட்டத்தில் அவர் மணம்புரிவதை தவிர்த்ததாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இன்றைக்கு ஆண்டாளை முன் வைக்கின்ற பெண் கவிஞர்கள் இது பற்றி விவாதங்களையெல்லாம் முன்னெடுப்பதாகத் தெரியவில்லையே?
தமிழச்சி தங்கபாண்டியன்:
முருகனுக்கும் இதுதான் நிகழ்ந்தது. ”தெய்வானை” என்ற ஒன்றே முதலில் கிடையாது. வள்ளிதான் வேட்டுவக்குடி தலைவனுடைய மனைவி என்ற குறிப்புகள் இருக்கிறது. தெய்வானை என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். பிறகு முருகன் சுப்ரமணியன் ஆகிறார்.
தீராநதி:
பெண்படைப்பாளிகளிடம் இதுபோல ஒரு ”மறு வாசிப்பு” தேவையில்லையா? அதைக் கேட்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன்:
கண்டிப்பாகத் தேவை. அகலிகையையோ, ஆண்டாளையோ மறுவாசிப்பு செய்வதோடு நாம் மறுகட்டமைப்பும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தீராநதி:




உங்களுக்கு கவிதையில் இருக்கின்ற ஈடுபாட்டைப் போலவே நாடகத்திலும் நடனத்திலும் இருக்கிறது. நீங்கள் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவல் வாசிப்பில் கூட நாடகக் கலைஞராக வெளிப்பட்டு இருக்கிறீர்கள்.
நான் என்ன கேட்க வருகிறேன் என்றால், இந்த நவீன நாடகங்கள் தமிழ் மரபில் ஊடாடி வந்த தியேட்டர் ஃபார்மை இழந்து விட்டது. அல்லது கை நழுவிப் போக விட்டு விட்டது என்கிறார்கள். உதாரணமாக ஊரில் பொது வெளியில் நாடகம் நிகழ்த்தப்படும் போது அந்தப் பார்வையாளன் எப்போது வேண்டுமென்றாலும் வெளியேறி தன் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு மறுபடியும் நாடகத்திற்குள் நுழைவார். இதற்கான சுதந்திரம் நமது நாடக மரபில் திளைத்த ஒன்று. ஆனால் இன்றைக்கு நவீன நாடகங்கள் அரங்கத்திற்குள் நம்மை அடைக்கச் செய்து சமூகத்திற்கும் நமக்குமாக இருந்த ஒரு பொது வெளியைக் காலி செய்து விட்டது. நாடகத்திற்கான (அ) கூத்திற்கான வடிவத்தைக் கையிலெடுத்த நவீன நாடகவாதிகள் அதிலிருந்த சுதந்திரத்தன்மையைப் பறித்து விட்டார்கள் என்கிறார்கள்? நவீன நாடகம் என்ற பெயரில் நாடகத்தின் அம்சத்தையே ந. முத்துசாமி சிதைத்து விட்டார் என்கிறார்களே?



தமிழச்சி தங்கபாண்டியன்:




அதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். முத்துசாமி அய்யாதான் கூத்து என்ற ஒன்றையே அறிமுகப்படுத்துகிறார். அதன் பிறகுதான் கூத்து என்ற கலை வடிவம் பெரிய திருப்பத்தை அடைந்தது. நாட்டார் மரபையோ, கூத்து மரபையோ, செவ்வியல் நாடகமரபையோ நாம் கொண்டு வந்து அரங்கத்திற்குள் நிகழ்த்தும் போது மிக முக்கியமான ஒரு பங்களிப்பை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் அதோடு நின்று விடாமல், அதை பரீட்சித்து பல வடிவங்களோடு தொடர்படுத்தியோ விரிவுபடுத்தியோ செல்லும் போதுதான் அடுத்த தளத்திற்கு நாம் போக முடியும். இராமாணுஜம் அய்யா பங்களித்து இருக்கிறாரே. ஆக, இந்த மாதிரியான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இதையும் தாண்டி தேரிக்காடுகளிலே முருக பூபதி நிகழ்த்துகின்ற நாடகங்கள் மிக முக்கியமானவை. அதில் அவர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அந்த மண்ணிலேயே நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் குறிப்பிட்டதைப் போல பங்கேற்பவர்களுக்கும் நாடகத்தை நிகழ்த்துபவர்களுக்கும் உள்ள சுதந்திரத்தைக் கொடுக்கின்ற ஒரு வடிவமாக அது இருக்கிறது. 



நவீன நாடகத்தை எடுத்துக்கொண்டால் அ. மங்கை, பிரசன்னா ராமசாமி, கருணாபிரசாத், வெளி ரங்கராஜன் இவர்கள் எல்லோருக்கும் மரபு சார்ந்த பிரக்ஞை என்பது இருக்கிறது. நவீன பரீட்சித்தலும் இருக்கிறது. கருணா பிரசாத் தன்னுடைய ”அரவான்” நாடகத்தை அலையன்ஸ் பிரான்சைஸ’ன் பின்னால் திறந்த வெளியில் தான் நடத்தினார். மரபு சார்ந்த பிரக்ஞை இருந்தாலும் நமது கலை வடிவத்தை நாம் பிற கலாச்சாரத்தோடு இணைத்து எடுத்துச் செல்கின்ற ஒரு கட்டாயமும் தேவையும் இன்றைக்கு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு கிராமத்தில் நடைபெறுகின்ற ஒரு ராவணக் கூத்தையோ அரிச்சந்திரன் நாடகத்தையோ இங்கே இருக்கின்ற பிரெஞ்ச் பார்வையாளர்களுக்கு அல்லது மிக்ஸ்டு காஸ்மோபாலிடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்தாக வேண்டிய நிலைமை இருக்கிறது. அப்படித்தான் உங்கள் கலை வடிவத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி வரும் போது புரசையிலே நடக்கக் கூடிய கண்ணப்பத்தம்பிரானின் கூத்தை நேரில் போய் பார்க்கின்ற வாய்ப்பென்பது எத்தனை நபர்களுக்கு வாய்க்கும். நம்முடைய தமிழ் வடிவத்தை அந்த மண்ணிலிருந்து கொண்டுவர முடியாது என்ற நோக்கத்தை வைத்துக் கொண்டிருந்தால், அது பிறருக்குச் சென்று செல்லக்கூடிய சாத்தியங்கள் குறைந்து போகும்.




தீராநதி:
இங்கு தான் சிறு நெருடல் அல்லது சங்கடம் உருவாகிறது. வெளிநாட்டவர்கள் நமது மரபைப் புரிந்து கொள்வதற்காக அரங்கத்தில் இந்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பல ஆண்டுகாலமாக தமிழ்க் கலைத் தன்மையான ஒரு வாழ்க்கையை மட்டுமே நம்பி வாழ்கின்ற மண் சார்ந்த கலைஞர்களிடமிருந்து சில அம்சங்களை மட்டும் எடுத்து, அதன் ”மாதிரியை” மட்டுமே வெளிநாட்டவரிடம் இவர்கள் காண்பிப்பதனால் அதையே வெளிநாட்டவர்கள் ”அசல்” வடிவமாக நம்பிவிட மாட்டார்களா? பேராசிரியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வியல் சார்ந்து இயங்குகின்ற அசல் கலைஞர்கள் நொடித்துப் போக செய்து விடுகிறார்கள் அல்லவா?



தமிழச்சி தங்கபாண்டியன்:



மேலை நாடுகளில் இன்றைக்கு எழுந்திருக்கின்ற முக்கியமான குற்றச்சாட்டு இதுதான். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் சடங்குகளையோ பண்புகளையோ காட்டாமல் ”அறிமுகம் செய்கிறோம்” என்ற பெயரில் திணை குடிகளிடமிருந்து (indegenoustribe) மரபை அபகரித்து பன்னாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்கிறார்கள். என்பதுதான் அது. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை. அப்போது இரண்டுவிதமாகத்தான் இப்பிரச்னையை நாம் அணுக முடியும். அந்தக் கலைஞர்களையே இங்கு அழைத்து வந்து அவர்களையே இங்குள்ள பார்வையாளர்களுக்கு அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டச் சொல்லி அறிமுகம் செய்வது. அதற்கான சூழல் தமிழகத்தில் வந்தால் நன்றாகதான் இருக்கும். டெல்லியில் ”நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா” இருக்கிறது. பெங்களூரில் ”ரங்கஷங்கரா” இருக்கிறது. அதேபோல ஓர் அரங்கம் இங்கிருந்தால் அது சாத்தியப்படும். கூத்து நடக்கும் ஊருக்கே சென்று பார்வையாளர்களைப் பார்க்கச் செய்வது என்ற இந்தப் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்று தான் நினைக்கிறேன்.




தீராநதி:
நாடகவியலாளர்கள் தமிழகத்தில் பல காலமாக முன் வைக்கும் கோரிக்கை தமிழகத்திற்கு என்று ஒரு நாடகப்பள்ளி வேண்டும் என்பது. உங்களைப் போன்றவர்கள் அரசின் அருகாமையில் இருப்பவர்கள் என்ற வகையில் இதற்காக ஏதாவது முயற்சி எடுத்து வருகிறீர்களா?




தமிழச்சி தங்கபாண்டியன்:


இதுவரைக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஒரு தி.மு.க. குடும்பத்தைச் சார்ந்தவள் என்றாலும் கூட, இப்போதுதான் இந்த அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கான ஒரு வாசல் திறக்கும் காலத்தில் அதற்கான முயற்சியை நிச்சயம் எடுப்பேன் என்றுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். ஏனென்றால், இது ஒரு முக்கியமான விஷயம். ”நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா”வை போலவே இங்கும் ஒரு அமைப்பு இயங்கும் அளவிற்கு ஒரு தனி பாரம்பரியமும், அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளதுதான் தமிழ் நாடகங்களும் தமிழ் நாடக மரபுகளும் என்றால் மிகையல்ல.



தீராநதி:


நாடகக் கலைஞர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அதே அளவுக்கு நாடக ஒப்பனை உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களும் முக்கியமானவர்கள். சேலம், ஆத்தூர் மாதிரியான பகுதிகளில் கண்ணாடிக் கூத்து என்று அறிமுகப்படுத்தப்படுகின்ற கலைஞர்களின் ஒப்பனை பொருட்களை, உடை அலங்காரங்களைத் தயாரிக்கின்ற தொழிலாளர்கள் இன்றைக்கு அத்தொழிலை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் கூலிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். கலைஞர்களைக் காப்பாற்ற முயற்சித்ததைப் போலவே இந்த நாடக, கூத்து உபகரணம் தயாரிக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதா?




தமிழச்சி தங்கபாண்டியன்:



இந்த முயற்சிகளும் கண்டிப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக இந்த விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாற்றுப் பாலினர் என்று சொல்லப்படுகின்ற ”திருநங்கை”களுக்காக தனியாக ஒரு வாரியம் அமைத்தது, நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக தனியான ஒரு நலவாரியம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான்.




சென்னை சங்கமத்திற்காக பங்கேற்க வந்தவர்களை தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் முதல்வர் கலைஞர். அப்போதுதான். 200 ரூபாயாக இருந்த உதவித் தொகையை 1000 ரூபாயாக மாற்றினார். கூத்து கட்டுகின்ற, கரகக்கலைஞர்களான பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் நாடகங்களில் நடிக்க முடியாது என்பதால் ஆண்களுக்கு தனி வயது வரம்பையும், பெண்களுக்கென்று தனி வயது வரம்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்களுக்கு 32 வயதிலேயே அந்த உதவித் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றறிவித்திருக்கிறார். அச்சமயத்தில் ஒப்பனைக் கலைஞர்களுக்கான இந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கான கள ஆய்வைச் செய்து தாருங்கள் என்று முதல்வர் கேட்டிருக்கிறார்.





தீராநதி:


பெர்டோல் ப்ரக்ட், மகா ஸ்வேதா தேவி, கேரளப் பெண் எழுத்தாளர் ஸ்ரீகுமார், அருந்ததி ராய், பாப்லோ நெரூடா, ழான் பால் சார்த்தர் போன்ற பல எழுத்தாளர்கள் அரசியல் இயக்கம் சார்ந்த நிலைப்பாடு, இயக்கச் செயல்பாடு என்று இயங்கிக் கொண்டிருந்தவர்கள். இயங்கிக் கொண்டிருக்கிறவர்கள். எழுத்தையும் இயக்கச் செயல்பாட்டையும் இரு கண்ணென கொள்பவர்கள். சுகுதகுமாரி (ஸ்ரீகுமார்). அமைதிப் பள்ளத்தாக்கு பிரச்னையில் தீரமாக நின்று போராடியவர். பெர்டோல் ப்ரக்ட் தன் அரசியல் இயக்கச் செயல்பாட்டிற்காக நாடு கடத்தப்பட்டவர். 


ஆனால் இங்கு பெர்டோல் ப்ரக்ட் மாதிரியான படைப்பாளியை மொழிபெயர்ப்பவர்கள் படைப்பை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். அவர்கள் இயக்கச் செயல்பாட்டிற்கு சம்பந்தமற்றவர்களாக இருக்கிறார்கள். ஃபேன் காற்றில் உட்கார்ந்து கொண்டு பேராசிரியர் பணியில் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு சௌகர்யமாக வாழ்ந்து வருபவர்களாக இருக்கிறார்கள். பெர்டோல் ப்ரக்ட் போன்றவர்கள் இயக்கச் செயல்பாட்டிலிருந்துதானே தன் படைப்புக்கான தீரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு இயக்கச் செயல்பாடென்பது முக்கியமானதல்லவா?





தமிழச்சி தங்கபாண்டியன்:



மிக மிக அவசியமானது அது. அதை மறுதலித்துவிட்டு உங்களுடைய வாழ்க்கையையோ, படைப்பையோ முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியாது. இந்தக் கேள்விக்கு அறம் சார்ந்து நான் ஒரு பதிலைச் சொல்ல வேண்டுமென்றால் நானே அந்த இயக்கப் பணியைச் செய்யத் தொடங்கவில்லை. ஆகையால் தார்மீக ரீதியாக நான் மற்றவர்களின் மீது இக்குற்றச்சாட்டை வைக்க முடியாது. இனிமேல் வரப்போகின்ற என்னுடைய வாழ்க்கைதான் இதற்கான பதிலைத் தரமுடியும் என்று நம்புகிறேன்



.
நன்றி : தீராநதி 2008