Wednesday, October 31, 2012

என்னை கவர்ந்த பிரபல ட்விட்டரின் கடிதம்

வசந்த் (@)

தோழர் சதீஷுக்கு வணக்கம்,

நான் நேற்று உங்களுடனான உரையாடலை தொடங்கியதற்கு காரணம் நீங்கள் அச்சமயத்தில் எழுதிய ட்வீட் மட்டுமல்ல,அதற்கு முன் நீங்கள் எழுதிய தமிழ் டிவிட்டர்கள் மற்றும் பாடகி சின்மயிக்கு இடையேயான பிரச்சனை பற்றிய பதிவும் கூட. அது ஒரு நடுநிலைமை பார்வையாக எனக்கு தெரியவில்லை, அதற்காக நீங்கள் இந்த விசயத்தில் நடுநிலைமையுடன் தான் இருக்கவேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல.


முதலில்,நாகரீகம் மட்டும் கட்டுபாட்டுடன் கூடிய கருத்துச் சுதந்திரம் என்பது இணையத்தில் எதிர்பார்க்ககூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு ஏன் கருதுகிறேன் என்றால் நான் முன்னொரு முறை சொன்னது போல் நாகரீகம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது, கரண்டி மூலம் மட்டுமே உணவை உண்ணும் மக்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் கையினால் பிசைந்து உணவை உண்பவர்கள் நாகரீகம் அற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.




ஆனால் இதில் உள்ள நியாயம் இருவருக்கும் வெவ்வேறானது. ஒருவரின் நாகரீகமானது அவரின் கடந்து வந்த வாழ்க்கை, பொருளாதார சூழல், சுற்றி உள்ள மனிதர்கள் என்று பல காரணிகளால் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்வர்ட்டர் & ஜெனரேட்டர் போன்ற கருவிகள் உடைய பணக்காரர் மின்வெட்டு ஏற்படுகையில் அலட்டிக் கொள்ளமாட்டார், ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை,ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்கு அடியில் ஒற்றை மின்விசிறியின் துணையால் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்ப்பட்டால் வட்டாரவழக்கை தான் துணை கொள்வார், இவர்களுக்கு இடையேயான பொருளாதார வித்தியாசத்தை கணக்கில் கொள்ளாதவர்கள் பின்சொன்னவரின் வட்டார வழக்கை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே கிடையாது.



அதுமட்டுமல்ல வட்டார வழக்கு என்பது எங்கெங்கும் நிறைந்து உள்ளது, அதை பல பெண்கள் உபயோகிப்பதை கூடக் கண்டிருக்கின்றேன், நண்பர்களுக்கு இடையே இதுபோன்ற வட்டார வழக்கு சொற்கள் வெகு இயல்பாக புழங்கும். புத்தகங்களில் இல்லாத வட்டார வழக்கு வார்த்தைகளா ? எத்தனை எழுத்தாளர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்காமல் எழுதி உள்ளார்கள் என்று யோசியிங்கள்? பத்திரிக்கைகள்,சினிமாக்கள் மற்றும் டிவிக்களும் தன் பங்கிற்கு நாகரீக மீறல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. நிற்க. ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒருவர் திட்டுவது என்பது சொந்தக் காரணத்திற்க்காகவா ?




 ஒரு சாதாரண பொதுஜனமாக,அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து வரும் அத்துமீறிய அநியாயங்களை எவ்வாறு கண்டிப்பது? அவர்களிடம் நேரில் சென்று நீதி கேட்பதோ,அவர்கள் மேல் வழக்கு தொடர்வதோ எத்தனை பேரால் முடியும் ? ஒருபுறம் அரசியல்வாதிகளின் சகிக்கமுடியாத அநீதிகள் மறுபக்கம் அதை தட்டிக் கேட்க்க முடியாத சூழ்நிலை, இத்தகைய நிலையில் ஒரு மனிதன் வெடித்து பேசத்தான் செய்வான், இதில் அவன் பேச்சை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே இல்லை. இவ்வாறு வெடித்து பேசாதவர்களும் இருக்கிறார்களே எனக் கேட்கலாம், அவ்வாறு பேசாதவர்களில் பெரும்பான்மையினர் மேட்டுக்குடியினர், பொதுப் பிரச்சனைகளால் பெரிய அளவில் பாதிக்கப்படாதவர், அதனால் இவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வது சரியல்ல.




நீங்கள் நம்பும் நாகரீக மனிதர்களும் உணர்ச்சிவசப்படும்போது நாகரீகத்தை உடைத்தே வெளிவருகிறார்கள், நமக்கு தெரிந்த உதாரணமான மாயவரத்தானை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் மற்றொருவரை மிக ஆபாசமான வார்த்தையால் வசை பாடினார், காரணமாக அந்த நபர் மட்டும் திட்டலாமா என்று கேட்டார். இதுதான் அனைத்து மனிதர்களின் நிலையும், இங்கு யாராலும் ஒரு கட்டத்துக்கு மேல் நாகரீகத்தை கடைபிடிக்க முடியாது. பாதிப்பை பொறுத்தே நமது நாகரீகம் நிக்கும் மற்றும் நிலைக்கும். பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆங்கிலத்தில் பல வசை சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே தான் இருக்கிறார் (WTF, Shit, Bullcrap, முதலியவை)





அதுமட்டுமில்லாமல் அவர் என்ற ஐடியில் இருந்து வரும் ட்வீடுக்களை RT செய்திருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மகேஷ் மூர்த்தி சின்மயியை சில ஆங்கில வன் சொற்களால் திட்டி உள்ளார்(Idiot, Fool). இதை சின்மயியோ அவரை ஆதரிப்பவர்களோ கூட கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் நாம் உணர்வது ஆங்கிலத்தில் பேசும்போது நாகரீகம் தேவையில்லை ஆனால் தமிழுக்கு மட்டும் அது கட்டாயத்தேவை என்பதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.




இங்கு பெரும்பாலான இடங்களில் மற்றும் சமயங்களில் கருத்து சுதந்திரம் இல்லாமல் தான் இருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு ஒரு ஆசிரியர் தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டினால் அதன் பலன் என்னவாக இருக்கும், அந்த ஆசிரியர் தமது பலத்தை தவறாக உபயோகித்து நம்மை சஸ்பென்ட் செய்வது, பெற்றோரை கூட்டி வரச்சொல்வது, இன்டர்னல் மார்க்கில் கை வைப்பது போன்றவையை செய்கிறார்.




 அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி வேலை செய்யச்சொல்லப்படும்போது எதிர்த்துக் கேட்டால் அப்ரைசல் சமயங்களில் "கவனித்துக்" கொள்ளப்படுகிறோம். சொந்த வேலைக்காக பிற அலுவலகங்களுக்கு செல்லும்போது அங்கு நம்மீது காட்டப்படும் அலட்சியங்களை சகித்துக்கொள்கிறோம். ஏன் குடும்பத்திலே தந்தைக்கோ, தாய்காகவோ, சகோதர சகோதரிக்காகவோ, வாழ்க்கை துனைக்காகவோ நாம் அடங்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். பின்பு எங்குதான் நாம் நம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தி கொள்வது, அதற்கு நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இந்த இணையம் தான்.இங்கும், நாம் நியாயம் என்று நினைப்பதுவே உலகப்பொது நியாயம் என்று நினைப்பவர்களால் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானதென்றே நான் நினைக்கிறன்.



உங்களின் மற்றொரு கருத்தான ஒருவரைப்பற்றி விமர்சனம் வைக்கும்போது அதற்கான ஆதாரம் இருத்தல் வேண்டும் என்பதும் என்னால் ஏற்கமுடியவில்லை. 2G ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சில அரசியல் கட்சிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆதலால் இந்த விசயங்களை நான் இணையத்தில் பகிர்ந்தால் சம்பந்தப் பட்டவர்கள் என் மேல் வழக்குப்பதிவது நியாயமே என்பது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஆதாரங்கள் என்னிடம் இருந்தால் நான் நேரிடையாக நீதிமன்றத்துக்கு சென்று வழக்குபதிந்து விடமாட்டேனா? அதைவிட்டு இணையத்தில் எதற்காக புலம்பப்போகிறேன்? டீக்கடை விவாதத்தை கவனித்திருக்கிறீர்களா, அங்கு பல விசயங்கள் பேசப்படும், பேசுபவர்கள் பெரும்பாலும் நடுத்தரத்துக்கு குறைந்த பொருளாதார நிலை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களையும் அவ்வாறு பேசாமல் இருக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் எதுவும் இல்லை. ஆனால் அது போன்ற விவாதத்தை இணையத்தில் சராசரி மற்றும் அதுக்கும் மேலுள்ள பொருளாதார நிலை உள்ளவர்கள் பேசினால் இந்த அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை.



அதுக்கு காரணம் இத்தகைய சராசரி மக்கள் தங்களை தாண்டி எதையும் பார்க்கும் திறன் இல்லாமலே இருந்திருக்கிறார்கள், அதனாலேயே இந்த அரசாங்கம் பல தவறுகளை துணித்து செய்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இந்த சராசரி மனிதர்கள் உலகத்தை புரிந்துகொள்வதில் உள்ள ஆபத்தை இந்த அரசாங்கம் பயத்துடன் கவனிக்கிறது, இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது, அதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன் ட்விட்டரை தடை செய்யவேண்டும் என்ற பரிசீலனையை முன்வைத்தது. இப்போது சைபர் கிரைம் மூலமாக சில கைதுகளை நிகழ்த்தி மக்களை பயமுறுத்துகிறது.




சரி,அப்பிடியே இணையம் மூலம் செய்யப்படும் தனிப்பட்ட அவதூறுகளை கண்டிக்கும் விதமாக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில் அதனால் அனைவரும் பயன் அடைவார்களா என்று பார்த்தால் அதற்கான பதிலும் சந்தேகமே. உங்களையோ என்னையோ ஒருவர் திட்டிவிடுகிறார் என்று வைத்துகொள்வோம் நாம் சென்று சைபர் கிரைமில் புகார் குடுத்தால் அவர்கள் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைகிறீர்களா? இப்பொழுது சின்மயி சொன்ன கருத்தை எடுத்துக்கொள்வோம், இப்பொழுது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சரியானது இல்லை என்று சொல்கிறார்.




 இவருக்கு இட ஒதுக்கீட்டு பற்றி முழுவது தெரியுமா இல்லை இவர் கூறிய கருத்துக்கு ஏதேனும் வலுவான ஆதாரம் இவரிடம் உள்ளதா ? இது கட்டாயம் என்னை பாதிக்கிறது, எனவே நான் இதை எடுத்துக்கொண்டு சைபர் கிரைம்முக்கு செல்வது தான் சரியா ? அப்பிடி நான் சென்றால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமா ? இதை பற்றி உங்களுடைய கருத்து எப்படிப்பட்டது என தெரியவில்லை ஆனால் நான் தெளிவாக நம்புவது இந்த சட்டமும் நடவடிக்கையும் தங்களின் செல்வாக்கை தவறாக பயன்படுத்தி அடுத்தவர்களை அடக்குபவர்களுக்கு மட்டுமே உரியது என்பதே.




நான் கடேசியாக சொல்ல விரும்புவது என்னவென்றால், மேலே நான் குறிப்பிட்ட அணைத்து கருத்துகளும் இந்த இணைய வசதியினால் நான் மற்றவர்களிடமிருந்து உள்வாங்கிக் கொண்டவையே. இந்த வரம்பற்ற இணையம் இல்லை என்றால் இது சாத்தியப்பட்டு இருக்காது. நீங்கள் நியாயம் என நினைக்கும் கருத்தடக்கும் சட்டப் பாய்ச்சலினால் இவை போன்ற கருத்துபகிர்வுகள் சாத்தியம் இல்லாமல் போய்விடும். அது ஆரோக்கியமற்றது சகோ, தொடர்ந்து பல சமூக விசயங்களை பகிரும் நீங்களுமா இதற்கு ஆதரவாக இருக்கப் போகிறீர்கள், வேண்டாமே. இவ்வளவு விளாவரியாக நான் இதை எழுதி இருப்பதற்கு உங்களின் ஏற்றுக்கொள்ளும் புரிதலும் ஒரு காரணமே, அந்த வகையில் உங்களுக்கு நன்றிகள்.

நன்றி,


கணேஷ்-வசந்தாகவே அறியப்பட விரும்பும் சக தோழர்.