Monday, October 08, 2012

வால்மார்ட் மர்மங்கள் -ஓ பக்கங்கள் ஞாநி

http://www.nidur.info/data/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2047%20%200%2065.jpg பக்கங்கள்

வால்பசங்க வர்றாங்க!

ஞாநி

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தற்காலிகமாக இருந்த வி.என். ஜானகி ஆட்சியின்போது அது கவிழ்ந்த கடைசி நாளில் ஏராளமான கோப்புகளில் அவசர அவசரமாகக் கையெழுத்திட்டுத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உதவிகள் செய்ததாக ஓர் அமைச்சர் பின்னால் நீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்டார்.
இப்போது பிரதமர் மன்மோகன்சிங் அதேபோன்ற பயத்தில் தமக்கு வேண்டியவர்களான அமெரிக்காவுக்கு உதவுவதற்காக அவசர அவசரமாக அறிவிப்புகளைச் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸே மறுபடியும் ஆட்சியைப் பிடித்தாலும், தாம் பிரதமர் பதவியில் இருக்கப் போவதில்லை என்பது மன்மோகனுக்குத் தெரிந்திருக்கும்.
அப்படி அவசரமாக அவர் செய்திருக்கும் அறிவிப்புதான் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு கம்பெனிகள் தாராளமாக முதலீடு செய்யலாம் என்பதாகும்.
இந்த அறிவிப்பால் அவர் ஆட்சியே கவிழும் ஆபத்தின் விளிம்புக்குப் போயும் கூட அவர் கவலைப்படவில்லை.

வெளிநாட்டு கம்பெனிகள் உள்ளூர் மளிகைக் கடை சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவதால் இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்று மன்மோகன் அரசு பெரிய பெரிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது. காய், பழம், தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இனி அவர்களுடைய பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். இடைத்தரகர்கள் லாபமடைவது இனி நடக்காது




 கிராமங்களிலிருந்து விளைபொருட்களை நகர சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் வசதிகளும், பல நாட்களுக்குப் பாதுகாத்து வைக்கும் வசதிகளும் வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீட்டால் அதிகமாகும். அதிகம் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கும் நுகர்வோருக்கு இனி எல்லாம் விலை குறைவாக ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். இவையெல்லாம்தான் மன்மோகன்சிங் அரசும் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு கம்பெனிகளின் வருகையை ஆதரிப்போரும் சொல்லும் விஷயங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijW6ic1gTLQGd8NM54O8nqdwlDh5OPLNn4eqbiDVWFpygiBwReyBnSRKKmn7weC7Ou6riUsLfbN0vTI3pyJAaTZ4xoyFlXGBKKltNhsRfDmc4_WiFD8nfNuIV2l7hQ5yYSzVWQK1mvzXM/s320/retailer.jpg

இவை நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா? உலக அளவில் சில்லறை வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் கம்பெனி அமெரிக்காவின் வால்மார்ட். வருடத்துக்கு சுமார் 420 பில்லியன் டாலர் அளவுக்கு அது வியாபாரம் செய்கிறது.
வால்மார்ட் இந்தியாவில் கடை விரித்தால் இந்திய விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்குமா? முதலில் வால்மார்ட் தனக்குத் தேவையான பொருட்களை இந்தியாவிலேயே தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லை. உலகில் எந்த ஊரில் எந்தப் பொருள் மலிவாகக் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவதுதான் வால்மார்ட்டின் வழக்கம்.
கடையில் விற்கும் பொருள்களில் குறைந்தது 30 சதவிகிதம் இந்தியாவிலேயே தயாரானதாக இருக்க வேண்டும் என்ற விதியை அரசு வலியுறுத்தும் என்கிறார்கள். ஏற்கெனவே ஒற்றை பிராண்ட் பொருள் விற்கும் கடைகளைத் திறக்க வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்த போதும் இதே விதி போடப்பட்டது. ஆனால் அதை யாரும் பின்பற்றவில்லை. அதை எதிர்த்து வழக்குப் போட்டு முடக்கிவிட்டார்கள்.
வால்மார்ட் அமெரிக்காவில் விற்கும் பொருட்களில் 60 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தவைதான். சீனாவிலிருந்துதான் மிக அதிகமாக வால்மார்ட் கொள்முதல் செய்கிறது. எந்த ஊரில் எது மலிவாகக் கிடைக்குமோ அதை வாங்குவது தான் வால்மார்ட்டின் கொள்கை.
எனவே இந்தியாவிலும் விவசாயிகள் விலை குறைவாக விற்றால்தான் வால்மார்ட் வாங்குமே தவிர விலை அதிகமிருந்தால் வாங்காது. தம்மை எப்படி வால்மார்ட் கொடுமைப்படுத்தியது என்று ஓர் அமெரிக்க விவசாயி இணையத்தில் எழுதியிருக்கிறார். அவரிடமிருந்து தினசரி புத்தம்புதிதாகப் பறித்த பழங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. பழங்களை அவரது பண்ணைக்கே வந்து தானே எடுத்துச் செல்வதாகவும் அவர் தன் கடைக்கு அனுப்பக் கூடாது என்றும் வால்மார்ட் நிபந்தனை போட்டது. ஆனால் முதல் நாளே அவர் பழங்களைப் பறித்துவைத்து விட்டுக் காத்திருந்த போது வால்மார்ட்டின் லாரிகள் வரவில்லை.



 ஃபோன் செய்து விசாரித்தார். பழம் பழையதாகிவிட்டால், தமக்குத் தரப்படும் விலை குறைக்கப்படும் என்று கவலைப்பட்டார். வண்டி அனுப்பாதது எங்கள் தவறுதான்; எனவே விலை குறைக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் கடைசியில் பழங்களை இரண்டு நாள் கழித்து எடுத்துக்கொண்டு அவை பழக்கூழ் தயாரிக்கத்தான் பயன்படும் என்பதால், குறைந்த விலைக்கே எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள். இனி உங்களுக்கு பழம் தரமாட்டேன் என்று விவசாயி சொல்லவும் முடியாது. ஒப்பந்தப்படி ஒப்பந்த காலம் முழுவதும் அவர் தர மறுத்தால், கம்பெனிக்கு அவர் அபராதம் கட்ட வேண்டும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7BslcQKMlkHfUK3TRvpfPSR1nlBunnixJAeHEQt9TqfGhdFArWSz-5vcYG9qMbuHpaAcrSvu6BgyZTDPNR8DbEXkhaB1SmWu8WwNhErLNpzUtOVSswXXJWUxSXaGsFBoBwHCWS-AgFio/s1600/wall+mart+%252810%2529%25281%2529.jpg
இடைத்தரகர்கள், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி நுகர்வோரிடம் அதிக விலைக்கு விற்பது மாறப் போவதில்லை. இடைத்தரகர் மட்டுமே மாறுவார். உள்ளூர் தரகருக்குப் பதில் வால் மார்ட் தரகராகி விடும். அது மட்டுமல்ல. அடுத்த வருடம் என்ன விலைக்கு விவசாயியிடம் பொருள் வாங்குவேன் என்பதை முன்கூட்டி இந்த வருடமே வால்மார்ட் நிர்ணயித்து ஒப்பந்தம் போடுகிறது. என்ன பொருளை விளைவிக்க வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. உள்ளூர் தரகர்கள் முன்கூட்டி கடனோ அட்வான்சோ கொடுத்துவிட்டு அந்தக் கடனுக்காக, குறைந்த விலைக்கே பொருளை வாங்கும் அதே உத்தியைத்தான் வால்மார்ட்டும் பின்பற்றுகிறது.
விவசாயப் பொருட்களை, குறிப்பாக அழுகும் பொருட்களை பத்திரப்படுத்தி, பல காலம் பயன்படுத்தத் தேவையான காப்பகங்களை உருவாக்க அன்னிய முதலீடு உதவும் என்ற வாதமும் ஓட்டையானது. ஏனென்றால் ஏற்கெனவே இந்திய அரசு இப்படிப்பட்ட ஸ்டோரேஜ் வசதிகளைக் கட்டும் தொழிலில் அன்னிய முதலீட்டுக்கு, தாராளமான அனுமதியை வழங்கி பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் அந்தத் துறையில் இதுவரை எந்தப் பெரிய முதலீடும் வரவில்லை.

வால்மார்ட் போன்ற பிரம்மாண்ட சில்லறை வணிகர்கள் வந்தால், அவர்கள் தங்கள் கடைக்குத் தேவையான ஸ்டோரேஜ் வசதியைத் தங்கள் வசம் உருவாக்கிக் கொள்வார்களே தவிர விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்டோரேஜ் வசதிகளை உருவாக்கப் போவதில்லை. விலை குறைவாக இருக்கும் போது விற்காமல் தானே பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு விலை கூடியதும் விற்கும் வாய்ப்பு விவசாயிக்கு ஏற்பட வேண்டுமானால், ஸ்டோரேஜ் வசதி அவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வால்மார்ட்டின் ஸ்டோரேஜ் வசதி, விவசாயியிடம் விலை குறைவாக வாங்கி தன்வசம் வைத்துக் கொள்ள அதற்குத்தான் பயன்படும்.
வால்மார்ட் போன்ற கம்பெனிகள் இங்கே வந்தால் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதும் நடக்கப்போவதில்லை. இப்போது இந்தியாவில் நடக்கும் மொத்த சில்லறை வணிகத்தின் அளவு ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது. இதை நம்பி இப்போது சுமார் 1.2 கோடி கடைக்காரர்களும் அவர்களிடம் வேலை செய்யும் 4 கோடி ஊழியர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மொத்த சில்லறை வணிகத்துக்கு சமமாக 420 பில்லியன் டாலர் வியாபாரம் செய்யும் வால்மார்ட் வெறும் 21 லட்சம் ஊழியர்களைக் கொண்டுதான் அந்த வியாபாரத்தைச் செய்து வருகிறது. எனவே பெரும் வெளிநாட்டு கம்பெனிகளால் வேலைவாய்ப்பு குறையும் ஆபத்துதான் இருக்கிறது.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn5rUt4tFG48Zbs8x1CQChfDJ2owdaefx0kAG4Hhk7q0q8H5qzWakJ3bdr8itVgMi2Ky70bR9AfvniaJCJDP5krolcAuH3Ge9BX25iWMrfI5QBTsiOjMrSfCg7BBT4OATiZs1Ui1l-GgI/s1600/fdi-cartoon.jpg
உள்ளூர் மளிகைக் கடை அண்ணாச்சி தம் கடை ஊழியர்களை நடத்துவதைவிட, வால்மார்ட் நன்றாக நடத்தும் என்ற உத்தரவாதமும் இல்லை. அழுக்கு பனியன், லுங்கிக்குப் பதில் பளிச்சென்ற யூனிஃபார்ம் கிடைப்பது மட்டுமே நிச்சயம். அமெரிக்காவில் வால் மார்ட் ஊழியருக்குத் தரப்படும் சம்பளம் அதே வேலையைச் செய்யும் வெளி ஊழியரின் சம்பளத்தை விடக் குறைவு என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் வறுமைக்கோடு என்பது ஆண்டுக்கு சுமார் 14 ஆயிரம் டாலர் வருமானமாகும். வால்மார்ட் ஊழியரின் சம்பளம் 13 ஆயிரம் டாலர்தான். கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் வால்மார்ட் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை ஊழியர்களின் சம்பளப் பிரச்னை பற்றியவை. தவிர, கறுப்பின மக்களும் பெண் ஊழியர்களும் தங்களை நிர்வாகம் பாரபட்சமாக நடத்துவதாக பல வழக்குகள் போட்டிருக்கின்றனர். வழக்குகளுக்கு வால்மார்ட் அஞ்சுவதில்லை. நியூயார்க் மாநிலத்தில் ஒரு வால்மார்ட் கடையில் தள்ளுபடி விற்பனை அறிவிப்பால், பெரும் கூட்டம் கூடி தள்ளுமுள்ளுவில் ஓர் ஊழியர் செத்ததையடுத்து வால்மார்ட்டின் பாதுகாப்பு ஏற்பாடு குறைபாட்டுக்காக ஏழாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்காட, 20 லட்சம் டாலர் வரை வால்மார்ட் செலவு செய்திருக்கிறது!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்குக் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து, வால்மார்ட் போன்ற கம்பெனிகளை அவரவர் மாநிலங்களில் அனுமதிப்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று மன்மோகன் சிங் அரசு கொஞ்சம் சமாளிக்கப் பார்க்கிறது. ஆனால் இது சாத்தியமல்ல. ஜி20 நாடுகளின் ஒப்பந்தப்படியும் உலக அளவில் நரசிம்மராவ் காலம் முதல் இந்திய அரசு போட்டு வந்திருக்கும் பல்வேறு ஒப்பந்தங்களின்படியும் இந்தியாவில் எந்த மூலையிலும் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதிக்க முடியாது என்று சொல்ல முடியாது.

ஆனால் அமெரிக்காவுக்குள்ளே சொல்லிக் கொள்ளும் அதிகாரம் அங்கிருக்கும் மாநிலங்களுக்கு, ஏன் மாநகராட்சிகளுக்கே இருக்கிறது. இன்றுவரை வால்மார்ட் கடையை நியூயார்க் மாநகராட்சி தன் நகருக்குள் அனுமதிக்கவில்லை. பாஸ்டன் நகரத்திலும் வால்மார்ட் கடை கிடையாது.
ஆனால் தொடர்ந்து தன்னை அங்கெல்லாம் அனுமதிக்கச் செய்வதற்காக வால்மார்ட் கடும் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. பெரும் தொகையை அதற்காகச் செலவு செய்துவருகிறது.
மெக்சிகோ நாட்டில் வால்மார்ட் கடைகளைத் திறக்க அந்த நாட்டு உயர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக பல மில்லியன் டாலர்கள் கொடுத்ததை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இந்தியாவில் தங்களை அனுமதிக்கச் செய்வதற்காக அரசுடன் லாபி செய்ய மட்டும் 52 கோடி ரூபாய்களை வால்மார்ட் செலவிட்டிருக்கிறது. இந்தப் பணம் எப்படி செலவிடப்பட்டது என்ற விவரங்கள் இல்லை.
எனவே வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கடை விரித்தால், மன்மோகன் அரசு சொல்லும் லாபங்கள் எதுவும் விவசாயிகளுக்கோ, வேலை தேடும் இளைஞர்களுக்கோ கிடைக்கப் போவதில்லை. அரசாங்கங்களை, அரசியல்வாதிகளை தங்கள் சார்பாக வளைத்து வசப்படுத்த நம் ஊர் முதலாளிகளை விடப் பல மடங்கு அதிக பணபலம் உள்ள அன்னிய கம்பெனிகள் வருவது பலவிதங்களில் அரசியலுக்கும் ஆபத்தானது.
உடனடியாகக் கொஞ்சம் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நடுத்தர வகுப்பினர்தான். அண்ணாச்சி கடைக்குப் போய் பொருள் வாங்கும் அனுபவத்தை விட, .சி. செய்த பிரம்மாண்டமான கடையில் டிராலியைத் தள்ளியபடி ஒரே கூரையின் கீழ் பல பொருட்களை வாங்கும் அனுபவம் சுகமாகவே தோன்றும். முதலில் விலைகள் குறைவாகவும் தரம் சிறப்பானதாகவும் தோன்றும். போகப்போக அந்த மாயைகள் கொஞ்சம் விலகும். எனினும் சின்னக் கடையில் நெரிசலில் பொருள் வாங்கும் அனுபவத்தை விட, பெரிய சூப்பர் மார்க்கெட் அனுபவமே மிடில் க்ளாசைத் தொடர்ந்து ஈர்க்கும்.
அண்ணாச்சிக் கடைகள் இதனால் அழிந்து விடுமா என்றால், கொஞ்சம் அழியும். கொஞ்சம் பிழைக்கும். ஏழை எளிய மக்களுக்குப் பொருள் விற்கும் கடைகள் பாதிக்கப்படாது. அஞ்சு ரூபாய்க்கு பருப்பு வாங்குவதெல்லாம் வால்மார்ட்டில் நடக்காது. மிடில் க்ளாசுக்கு விற்றுப் பிழைக்கும் அண்ணாச்சிக் கடைகள் எடை மோசடிகள், கலப்படங்கள் செய்யாமல் தங்களையும் மினி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பார்கள். ஏற்கெனவே பல நகரங்களில் அது நடக்க ஆரம்பித்துவிட்டன. அது முடியாத கடைகள் மூடப்படும். இந்தக் கடை ஊழியர்களைப் பொறுத்தமட்டில் கொஞ்சம் பேருக்கு அண்ணாச்சிகளிடம் இருக்கும் கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் அது வாணலிக்கு தப்பி அடுப்பிலேயே விழுந்த கதைதான்.
மன்மோகன் போன்ற அரசியல் தரகர்கள் இருக்கும்வரை (எல்லா கட்சிகளிலும் அவர்கள் உண்டு !) இந்தியாவில் வால்மார்ட் போன்ற அமைப்புகள் வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் கடுமையான எதிர்ப்புகளின் மூலம், அவற்றைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் விதிகளை, சட்டங்களை உருவாக்கி உள்ளூர் சில்லறை வணிகரும் வெளிநாட்டு வணிகரும் சமமான விதிகளின் கீழ் தொழில் செய்யும் ஒழுங்கை ஏற்படுத்த முடிந்தாலே அது ஒரு வெற்றிதான்.


நன்றி - கல்கி , ஓ பக்கங்கள் ஞாநி 


http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/09/One-Walmart-supermarket-can-displace-over-1300-Indian-small-retail-stores-270x170.png