Monday, October 08, 2012

அம்மாவின் கைப்பேசி -தங்கர் பச்சான் - பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Ammavin-Kaipesi-Latest-Movie-Posters/Ammavin-Kaipesi-Latest-Movie-Posters-Stills7581Gg7.jpgஅன்பு + ஆதங்கம் = அம்மாவின் கைப்பேசி!

தமிழ் பேசறவரெல்லாம் தமிழர் இல்லை!

- தங்கர் பச்சான்
ராகவ் குமார்

ஆங்கில மொழி வழிக்கல்வி அதிகமானதுக்கப்புறம்தான் விவாகரத்து அதிகமாய் இருக்கு. மொழிப்பற்று, மண் பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று இப்படி எந்தப் பற்றுக்களும் இல்லாத கல்விமுறைதான் இன்றைக்குப் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படுது. நிறைய படிச்சவன்தான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான். படிக்கறது வேலைக்குப் போய் சம்பாதிக்கறதுக்கு மட்டும்தான்ற எண்ணம் இருக்கறதாலதான் இந்தப் பிரச்னை. இந்தக் கல்விமுறையை மாத்த வேண்டாமா?" என ஆதங்கத்துடனும் கோபத்துடனும் கேட்கிறார்அம்மாவின் கைப்பேசிபடத்தின் ரிலீஸுக்குக் காத்திருக்கும் தங்கர் பச்சான்.
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

என்னை மாதிரி நல்ல படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறவங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இதுதான் நிலைமை. நல்ல படம் தரணும்னு நினைக்கிற படைப்பாளி ஒவ்வொருத்தனும் போராடித்தான் படம் எடுக்க வேண்டியிருக்கு. மசாலா படம்னு சொல்லப்படுற பெரிய ஹீரோ படங்களை தியேட்டரில் போய்ப் பார்க்கிறவங்க, எங்களை மாதிரி ஆட்கள் எடுக்கும் படங்களை, திருட்டு சி.டி.யில பார்க்கறாங்க. ஒவ்வொருத்தரையும் தியேட்டரில் போய்த்தான் படம் பார்ப்பேன்னு சத்தியம் பண்ணச் சொல்லுங்க. நான் மூணு மாசத்துக்கு ஒரு படம் எடுக்கிறேன். மத்த மாநிலங்களில் சினிமாங்கிறது தியேட்டரில் பார்க்கறதுக்கு எடுக்கறதுன்னு உறுதியாய் நம்பறதால நூறு, நூற்றியம்பது நாள் சர்வசாதாரணமாய் படம் ஓடுது. இங்கு புது சினிமா விளம்பரம் வந்த மறுநாளே திருட்டு வி.சி.டி. கிடைக்குமான்னு கேட்கிறான். இதை அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு நிறைய பேர் சொல்றாங்க. அரசாங்கத்துக்கு நிறைய வேலைகள் இருக்கு. திருட்டு வி.சி.டி.யைக் கண்காணிக்கறது மட்டுமா வேலை? திருட்டுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாதுன்னு நம்ம மக்களுக்கே புரியணும்."
அம்மாவின் கைப்பேசி...?
இந்தஅம்மாவின் கைப்பேசி’ 2008ல் என் நாவலாய் வெளிவந்தது. இலக்கிய வாதிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இலக்கியம் வாசிப்பவர்களாக இருப்பதால் நிறைய பேருக்கு நாவலாக வந்த தகவல் தெரியவில்லை. ஏன் சில பத்திரிகையாளர்களுக்கேகூட தெரியவில்லை. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள காரணம்கல்கிஒரு எழுத்தாளருடைய பத்திரிகை என்பதால்தான்.
இன்றைய தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே மனோரமாவும், சரண்யா பொன்வண்ணனும்தான். இதைத் தாண்டி அம்மாவுக்கு என்று ஒரு முகம் இருப்பதை இதில் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் வாழ்வியல் அறம் இருக்கிறது. குத்துப்பாட்டு, வன்முறை ஆபாசம் இல்லாத இளைஞர்களுக்கான படம். என்னுடையஅம்மாவின் கைப்பேசிபடம் பார்த்து வெளியே வரும்போது நம் அனைவருக்குமே ஒரு குற்ற உணர்வு ஏற்படும். இந்தப் படம் வெளியான பிறகு நிறைய கைப்பேசிகள் விற்பனையாகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்."


 http://www.rateon10.com/wp-content/gallery/ammavin-kaippesi-movie-hot-stills/thangar-bachan-in-ammavin-kaippesi-movie-stills4.jpg?9d7bd4
தமிழ் உணர்வாளரான நீங்கள்இனியாவை நடிக்க வைப்பது ஏன்?

உங்களுக்குத் தெரிஞ்ச தமிழ்ப் பொண்ணு யாராவது நடிக்கத் தயாராய் இருந்தா சொல்லுங்களேன். தமிழ்ப் பெண்கள் நடிக்கத் தயங்கறதும் இதுக்கு ஒரு காரணம். இப்படி யோசிச்சா, தமிழர் அல்லாத நிறைய நடிகர்களை இங்கே துரத்த வேண்டியிருக்கும். ‘பாரதிபடத்தில் பாரதியாரா நடிச்ச சாயாஜி ஷிண்டே, ஷூட்டிங் சமயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, பல கிலோமீட்டர் நடந்தே வந்தார். ரொம்ப எளிமையாய் பந்தா இல்லாமல் பாரதியாராகவே வாழ்ந்தார். இங்க எந்த நடிகராவது இப்படி இருப்பாரா? தமிழ் பேசறதாலேயே தமிழனாகி விட முடியாது. இது புரியாமையால் வந்த கேள்வி. இனியா நல்ல திறமையான நடிகை. படம் பார்த்த பின்பு இந்தக் கேள்வியே கேட்க மாட்டீங்க."
நல்ல சினிமா ரசனையை உருவாக்க இயக்கம் தொடங்கும் எண்ணம் உண்டா?
அமெரிக்காவில் அரசியல்வாதிகளுக்கு ஒரு சதவிகித பங்குகூட ஊடகங்களில் இருக்கக்கூடாது. ஆனால், நம் நாட்டில் நிறைய ஊடகங்களை அரசியல்வாதிகளும், வியாபாரிகளும்தான் நடத்துறாங்க. ஒரே செய்தியை ஒவ்வொரு மீடியாவிலும் ஒவ்வொரு விதமாய் சொல்றாங்க. இங்கே எந்த இயக்கத்தை வளர்க்க முடியும்..?"
அரசியல் விழிப்புணர்வு நம்மிடையே எப்படி இருக்கிறது?
பணம் கொடுத்து, வாக்குப் போடச் சொல்லும் அரசியல்வாதிகளை கண்டிக்காதவரை எந்த மாற்றமும் இங்கே வராது. வாக்குரிமையைக் காசுக்காக விற்பவர்கள் எந்த உரிமையையும் கேட்க முடியாது. தமிழ்ச் சமூகம் போராட்ட சமூகமாக இல்லாமல் வேடிக்கை பார்க்கும் சமூகமாகத்தான் இருக்கிறது.
ஈழப் பிரச்னையின் போதாவது இங்கே சில போராட்டங்கள் நடந்தன. ஆனால், கூடங்குளம் அணுஉலை பிரச்னை ஏதோ கூடங்குளத்தோடு சம்பந்தப்பட்டது; நமக்கும் இதற்கும் தொடர்பில்லை எனப் பலரும் நினைக்கிறார்கள். மௌனமாக இருக்கும் நான்கூட குற்றவாளிதான்."
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கம் கவலையளிக்கிறதே?
சில நாட்களுக்கு முன்புமதுபானக் கடைஎன்ற படம் வந்தது. அனைத்து ஊடகங்களும் பாராட்டி எழுதின. ஆனால் சுயபொறுப்பும், தார்மிக உணர்வும் உள்ளகல்கிஇதைப்பற்றிய சிறிய பதிவைக்கூடச் செய்யவில்லை. கல்கி போல மக்களும் விழிப்புணர்வோடு மதுவை விட்டு ஒதுங்கி இருந்தால், வெகு சீக்கிரமேமதுபானக் கடைகள்காணாமல் போய்விடும்."





http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-ammavin-kaipesi-latest-movie-stills/images/tamil-cinema-ammavin-kaipesi-latest-movie-stills19.jpg