Thursday, October 04, 2012

விஜய் ஆண்டனி பேட்டி @ த சண்டே இந்தியன்

http://topnews.in/files/Vijay-Antony.jpg 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக ‘நான்’ படத்தில் நடிக்கிறார். நாக்கமுக்க, ஏ உச்சி மண்டையில என அதிரடி குத்துப்பாட்டு ரகங்களின் தந்தையான அவரோ, தான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று அடக்கம் காட்டுகிறார்.




சுக்ரன் தொடங்கி வேலாயுதம் படம் வரையிலான அனுபவத்தில் நீங்கள் அடைந்திருக்கிற வளர்ச்சி என்ன? 



நான் எதுவுமே செய்யவில்லை என்ற மனநிலை இருப்பதால்தான், புதுமை யாகச் செய்யவேண்டும் என்று நினைத்து நடிக்கவே வந்திருக்கிறேன். வளர்ச்சியடைந்து விட்டேன்  என்ற உணர்வே எனக்கு வரவில்லை. இன்னும் அடையவேண்டிய எல்லைகள் நிறைய இருக்கின்றன. எதையும் சாதித்துவி¢ட்டதாகவும் நினைக்கவில்லை. நான் வளர்ந்தேன் என்ற நினைப்பும் இல்லை. என்னுடைய திறமைக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது.. இன்னும் செல்லவேண்டிய தூரம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறேன்.


நீங்கள் இசையில் அடைந்திருக்கிற இடம்... 



ஆரம்பத்தில் என்னுடைய இசையை மக்கள் அறியவில்லை. இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. எல்லாவகையான இசையும் செய்கிறேன் என்று அவர்களிடம் ஒரு கருத்து இருக்கிறது. குத்துப்பாட்டு, மெலடி, வெஸ்டர்ன், கர்நாடக இசை எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமான இசையைத் தருகிறேன் என்று நினைக்கிறார்கள். அப்புறம் வார்த்தையை வைத்து விளையாடுகிறார் என்ற பேச்சும் இருந்தது. எல்லா பாடல்களிலும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி அமையும்.


இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்வதற்கான சுதந்தரம் கிடைத்திருக்கிறதா? 


நிறைய கிடைத்திருக்கிறது. எனக்கு எங்கே சுதந்தரம் கிடைக்கிறதோ அங்குதான் இதுபோன்ற பரிசோதனை களை இயக்குநர்களிடம் பேசி செய்துபார்க்கிறேன். எல்லோருமே வித்தியாசமான பாடல்களைத் தருவதற்கான முயற்சியை உற்சாகப்படுத்துகிறார்கள். யாரும் தடை சொல்வதில்லை.


நீங்கள் அதிரடியான சூப்பர்ஹிட் குத்துப்பாட்டுகளைத் தந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் தனித்துவமா?


அப்படியில்லை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது குத்துப்பாட்டு கிடையாது. அழகாய் பூத்ததே என்பது குத்துப்பாட்டு இல்லை. நெஞ்சாங்கூட்டில் நீயே குத்துப்பாட்டு அல்ல. வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற முளைச்சு மூணு எல விடலை குத்துப்பாட்டு கிடையாது இப்படி நிறைய மெலடிகள் சொல்லிக்கொண்டே போகலாம். குத்துப்பாட்டைத் தாண்டி நல்ல மெலடிகளையும் கொடுத்திருக் கிறேன். பலதரப்பட்ட வகையிலான பாடல்களைத் தருவதில்தான் எனக்கு விருப்பம். நாக்க முக்க... பாடல் பெரிய உயரத்தைத் தொட்டதால் அதனால் எனக்குக் கிடைத்த இமேஜை அழிக்க முடியவில்லை. அதைவிட பல பாடல்கள் செய்துகொண்டிருக்கிறேன். உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டி, டர்ட்டி பிக்சரில் அந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர். அதுபற்றிய ஒரு பேச்சு  இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது.


நாக்க முக்க...  போன்ற கேள்விப்படாத புதிய வார்த்தைகளை உருவாக்குவதில் நீங்கள் பங்குவகிக்கிறீர்களா?


ஐம்பது சதவிகிதம். நாக்க முக்க என்கிற வார்த்தை அந்தப் படத்தின் இயக்குநரே கொடுத்த வார்த்தை. டைலமோ என்பது நான் கொடுத்தது. உஸ்மிலாரசே என்னுடைய வார்த்தை. ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருவர் தருகிறார்கள்.


ஒய் திஸ் கொலைவெறிடி போன்ற பாடல்களால் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா?


அப்படியெல்லாம் இல்லை. எப்போதும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை யாரும் பறிக்கமுடியாது. அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். திறமைசாலி எப்போதுமே திறமைசாலிதான். எது நல்லா இருக்கோ அதை மக்கள் வரவேற்பார்கள். மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுங்கள்.


சினிமாவில் இசையமைப்பாளராவதற்கு என்னென்ன அவசியம்? 


இசை அறிவு முதல் தேவை. அடுத்து தைரியம். அதற்கடுத்து பாமர மக்களின் நாடித்துடிப்பு. படித்தவர்கள் பற்றிய புரிதல். எல்லாவிதமான மக்களுடைய விருப்பம். இந்தப் பாடல் இவர்களுக்குப் பிடிக்கும். அந்தப் பாடல் பாமரர்களுக்குப் பிடிக்கும் என்ற தீர்மானம் வேண்டும். இதெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறேன்.


இசையறிவு இருந்தாலும் ஒரு புதிய ட்யூனை உருவாக்குவதற்கு கற்பனை தேவையில்லையா?


எல்லாம் உண்மைதான். ட்யூனை உருவாக்கும் திறனைக் கொண்டு வருவது கற்பனையா ரசனையா அறிவா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் தைரியம் நிச்சயம் வேண்டும். நல்ல இசை தெரிந்தவர்களாக இருப்பார்கள். ட்யூன் என்று உட்காரும்போது தயக்கத்துடன் இருப்பார்கள். அந்த இடத்தில் துணிச்சலாக இருந்தால்தான் ஒரு புதிய ட்யூனைக் கொண்டுவரமுடியும். என்னைவிட ஐம்பது மடங்கு திறமைசாலிகள் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கம்போசிங் என்று உட்காரும்போது பயந்துவிடுவார்கள். என்னமோ பெரிய விஷயம் போலிருக்கு என்று கருதுவார்கள். ஆனால் அது பெரிய விஷயமே கிடையாது. பெரிய கம்பெனிகள் பலவும் வீடு கட்டுகிறார்கள். சின்னப் பையனும் மணலில் வீடு கட்டிப் பார்க்கிறான். பெரிய வீடுகள் மணல்வீட்டிருந்துதான் கனவாகத் தொடங்குகின்றன. அதனுடைய வளர்ச்சிதான். ரசனையும் சேரும்போதுதான் அந்தப் பாடல் மக்களைப் போய்ச் சென்றடைகிறது. நம்முடைய ரசனையும் பொதுமக்களின் ரசனையும் ஒன்றாக இருக்கும் போதுதான் இசை வெற்றிபெறுகிறது.



உங்களுக்குப் பிடித்த மெலடிகள், இசையமைப்பாளர்கள் பற்றி...


இளையராஜாவின் இசையும் அவருடைய மெலடிப் பாடல்களும் எனக்குப் பிடித்தமானவை. அதேபோல ஏ.ஆர்.ரகுமானின் இசையும் குரலின் தரமும் பிடிக்கும். பிறகு ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன். ஜனனி ஜனனி... ஜெர்மனியின் செந்தேன் மலரே... இந்தக் கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது... தெய்வீக ராகம்... ராஜாவின் பழைய மெலடி பாடல்கள் அனைத்துமே இனிமையானவை. 


ஹிந்தித் திரைப்பட இசை, தமிழ்த் திரைப்பட இசை எப்படி இருக்கிறது? 


எல்லாமே தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது. அதுதான் இது. இதுதான் அது. தமிழ் சினிமாவிலிருந்து ஒருவர் போய் அங்கு பெரிதாகச் செய்யமுடியும். அதேபோல அங்கிருந்து ஒருவர் வந்து இங்கு செய்யமுடியும். ட்யூன் நன்றாக இருக்கும்போது மொழி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ரசிக்கிறார்கள். நல்லா இருந்தால் கேட்கிறார்கள். அப்படி இல்லையென்றால் கேட்கமாட்டார்கள். எல்லா இடங்களிலும் எல்லாமே ஹிட்டாகிறது. எல்லாமே ப்ளாப் ஆகிறது. அந்தந்த படைப்பின் தரத்தைப் பொறுத்தது.


நீங்கள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் குடும்பவழியைச் சேர்ந்தவர். அதுபற்றி? 


ஆமாம். அவருடைய கொள்ளுப்பேரன் நான். என்னுடைய தாத்தா மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மகன். அவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருடைய மகன், என்னுடைய தாத்தா திருச்சியில் வேலைபார்த்தார். எங்க அப்பாவும் திருச்சியில்தான் இருந்தார். நான் திருநெல்வேலியில் படித்தேன். இன்றைக்கு ட்யூன் கம்போஸ் செய்யும்போதும், ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கும்போதும் அவருடைய ரத்தம் எனக்குள் ஓடுவதாக நினைத்துக்கொள்கிறேன். இது நல்ல வரி என்றும், இது இசைக்குள் இருக்கிறது என்றும் தீர்மானிக்க முடிவது அவரால்தான் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. நானும் உங்களைப்போலத்தான்.


திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது ‘நான்’ வெளிவரும்? 


பிப்ரவரியில் கண்டிப்பாக வெளிவந்து விடும். என் வகுப்புத்தோழர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். ஏதாவது வித்தியாசமாக செய்துபார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. நடிப்பது என்பது எந்த இசையமைப்பாளருக்கும் புதிய விஷயம் கிடையாது. மைக்கேல் ஜாக்சன், மடோனா வரையில் எல்லோருமே நடித்திருக்கிறார்கள். இளையராஜா, ரகுமான் வரையில் மூன்று நாள் கால்ஷீட்டில் விளம்பரத்தில் நடிக்கிறார்கள். நான் சினிமாவில் நடிக்கிறேன். அவ்வளவுதான். சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏன் கூடாது என்று தோன்றியது. தியாகராஜ பாகவதர் காலத்தில் பாட்டுப் பாடி நடித்திருக்கிறார்கள். நானே ஏதோ புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இங்கு என்னைவிட பெரிதாகச் செய்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது நானும் நடிக்கிறேன். நான் நடிக்கிறேன் என்பதை புதிதாகப் பேசுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்.


இந்தப் படத்தில் நடிப்பதற்காக பயிற்சிகள் ஏதும் உண்டா?



ஒன்றும் அவசியமில்லை. நடிக்கிறோம் என்ற கவனம் இருந்தால்தான் பிரச்னை. எதுவுமே தேவையில்லை. படப்பிடிப்பில் கோபப்படுங்கள், அழுங்கள் என்று சொன்னால் நீங்கள் இயல்பில் எப்படி இருப்பீர்களோ அதைச் செய்தால் போதுமானது. அதற்காக கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டால் சரிவராது.


பாடல்கள் இல்லாமல் படங்கள் வரவேண்டும் என்கிறார்கள். அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


அது நல்ல விஷயம்தான். அப்படி பாடல்களே இல்லாமல் படங்கள் தமிழில் வரும்போது அவை உலகளவில் பேசப்படும். எதுவரைக்கும் பாடல்கள் வருகிறதோ அதுவரைக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்காது. பாடல்கள் இல்லாததுதான் படம். இசையமைப்பாளர்களுக்கு அதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பின்னணி இசை இருக்கிறது. ஆல்பம் செய்துவிட்டுப் போய்விடுவோம். நீங்கள் காதலிக்கிறீர்கள். எப்போதாவது மனைவியோடோ காதலியோடோ சேர்ந்து ஆடியிருக்கிறீர்களா? பாடல் என்பது சுத்தமாக வெறும் கதைதான். நடைமுறையில் இல்லாத மலிவான ஒரு பிலிம்மேக்கிங்தான் இது. ஜிகினா உடைகள் போட்டுக்கொண்டு ஆடுவதெல்லாம் நல்ல படத்திற்குரிய அடையாளம் கிடையாது.