Thursday, October 04, 2012

பெண் பாடலாசிரியர் எஸ்.எம்.முருகவேணி

பாடலாசிரியர் எஸ்.எம்.முருகவேணி
 http://www.cineulagam.com/photos/full/others/lyrist_murugaveni_001.jpg
முட்டி முட்டித் திறந்தேன் மந்திரக் கதவை!

சந்திரமௌலி
பாகன்படத்தின்பூந்தென்றலைத் தேடிச் சென்றுபாடலைக் கேட்கும்போது, மனசைத் தழுவுகிறது குளுமை. பாடலை எழுதிய பெண் பாடலாசிரியர் எஸ்.எம். முருகவேணி, தஞ்சை மண், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர். சினிமாப் பின்னணி துளியுமில்லாதவர். ஆரம்பத்தில் திறக்க மறுத்த கோடம்பாக்க மந்திரக்கதவை முட்டிமுட்டித் திறந்த கதையைச் சொல்கிறார்.

பட்டீஸ்வரத்தில் பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷனில் டிகிரி முடித்து, திருமணமாகி, சென்னை வந்து செட்டிலாகி விட்டேன். கணவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. எனக்கு பதினொராம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். படிக்கிற காலத்திலேயே நான் பேச்சு, கவிதைப் போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அப்போது சினிமா ஆசை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, மறுபடியும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதை ஏதாவது ஒரு டியூனில் பாடிப்பார்ப்பேன். சினிமாப் பாட்டுப் போல இருக்கும். நாளடைவில், சினிமாப் பாட்டு எழுதினால் என்ன? என்று தோன்றியது.
சினிமாப் பாட்டு எழுத வாய்ப்புத் தேடி, இசையமைப்பாளர்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தேன். என் முயற்சியை .ஆர்.ரஹ்மானிடமிருந்து ஆரம்பித்தேன். அவர்தான் பாடலாசிரியர் கபிலனை அறிமுகப்படுத்தியவர் அல்லவா! ரஹ்மான் இசையமைத்த படத்தின் பாடல் சி.டி.யின் கவரின் மேல் இருந்த முகவரியை வைத்துக் கொண்டு முதலில் அவருடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு ஃபோன் செய்து அவர் ஊரில் இருக்கிறாரா? என்று கேட்டபோது, ‘இல்லைஎன்று பதில் வந்தது. விடாமல் அடிக்கடி ஃபோன் செய்து அவர் இருக்கிறாரா என விசாரிக்க ஆரம்பித்ததும், ஒரு நாள் மறுமுனையில் இருந்து, ‘எதற்காகக் கேட்கிறீர்கள்?’ என்றார். சினிமாப் பாடல் எழுதும் ஆர்வத்தைச் சொன்னேன். அங்கே என் ஆறு மாத கால முயற்சி வெற்றி பெற வில்லை என்றாலும், அங்கிருந்த ஒருவரது உதவியோடு மற்ற இசையமைப்பாளர்களின் முகவரிகள், டெலிஃபோன் நம்பர்களும் கிடைத்தன.
அடுத்து நான் சந்தித்தவர் ரஹ்மானின் சகோதரி ரெஹைனா. அவர், தற்போது பாடல் எழுத வாய்ப்பு ஏதுமில்லை என்று சொன்னாலும், விகடகவி என்ற சிறு பத்திரிகையின் ஆசிரியரை அறிமுகப்படுத்தி வைக்க, அதில் நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், தரணி, சிற்பி, தினா, விஜய் ஆண்டனி, ஜேம்ஸ் வசந்தன்... என பலரிடமும் ஃபோன் செய்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி, நேரில் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். சிலர் என் கவிதைகளை வாசித்துப் பார்த்துவிட்டு, ‘வாய்ப்பு வரும்போது தகவல் சொல்கிறோம்என்றார்கள். இன்னும் சிலர் நேரடியாகவேஅப்புறம் சொல்லி அனுப்புறோம்என்று சொல்லி விட்டார்கள். இதற்கிடையில் ரெஹைனா, அவ்வப்போது ஏதாவது விளம்பரங்களில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு எந்தவிதமான பலனும் கிட்டாமல் மனம் சோர்வடைந்த சமயங்களில்... என் கணவர்தான் எனக்கு ஆறுதல் சொல்லி, உற்சாகமளிப்பார். பிறகு, மீண்டும் வாய்ப்புத் தேடும் முயற்சி.

ஒரு நாள் திடீரென்று ஜேம்ஸ் வசந்தனிடமிருந்து ஃபோன். ‘இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய அஸ்லாம் இயக்கும் ஒரு படத்துக்கு ஒரு பெண் பாடலாசிரியர் தேவை. அவரைச் சந்தித்துப் பேசுங்கள்என்று சொன்னார். அந்தப் படம்தான்பாகன்’. ‘சின்னச் சின்ன ஆசை மாதிரி கதாநாயகி அறிமுகமாகும் காட்சிக்கு ஒரு பாடல் தேவைஎன்று சொன்னார்கள். மாதிரிக்கு சில வரிகள் எழுதித் தரும் படி கேட்க, நான் உடனே எழுதிக் கொடுத்தேன். திருப்தியடைந்து, அதன்பிறகு டியூன் அடங்கிய சி.டி.யை என்னிடம் கொடுத்து, பாடலை எழுதச் சொன்னார்கள். நான் ரொம்ப இலக்கியத்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடல் எழுதிக் கொண்டுபோய்க் கொடுத்தேன். ‘இதுபோல வேண்டாம்; எளிதாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும்என்றார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், டியூனுக்கு ஏற்ப பாடல் எழுதும் நுட்பத்தை எனக்கு விளக்கினார். அதன்படி புதியதாக ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதுதான்பூந்தென்றலைத் தேடிச் சென்றுபாட்டு.
சில நாட்கள் கழித்து, இயக்குனர், படத்தின் நீளம் காரணமாக நான் எழுதிய பாடல் படத்திலிருந்து வெட்டப்பட இருப்பதாகத் தெரிவித்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தாற்போல மனம் நொந்து போனேன். ‘எனக்கு அதிர்ஷ்டமே இல்லைஎன்று நான் சொன்னால், என் கணவர்அப்படிச் சொல்லாதே! உனக்குத் திறமை இருக்கு! உனக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்என்று சொல்லுவார். ஆனால் சீக்கிரமே என் கணவரது வாக்கு பலித்தது. என் பாடல் படத்தில் இடம்பெறுவதை இயக்குனர் உறுதிப்படுத்தினார். மீண்டும் எனக்கு மகிழ்ச்சி. தியேட்டரில் திரையில் பாடலைப் பார்த்தபோது, ரசிகர் உற்சாகத்தில் குரலெழுப்பி ரசித்தார்கள். அதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொண்டேன். அடுத்த பாடல் அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் முருகவேணி.

நன்றி - கல்கி புலவர் தருமி  


பூந்தென்றலைத் தேடி எனத் தொடங்கும் அந்தப் பாடலில்


மினுமினுக்கும் வானத்தில்
மழை ரசித்திடப் போவோமா...
முதல் துளி எதுவென
தேடிப் பார்ப்போமா"

 பலரைக்கவர்ந்த வரிகள்