Thursday, September 13, 2012

பூனை- சுஜாதா- கற்றதும் பெற்றதும் -பாகம் 2

ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை.
கீழ்வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம்
செய்தபோது,ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணிநேரமாகப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல் அரக்கோணம்தாண்டியதும்கேட்டேவிட்டேன்.

“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”

“இல்லை….” என்று தலையாட்டினார்.

ஒருவேளை ஊமையோ என்றால், ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு
வாங்கும்போதுபேசியிருக்கிறார்.

“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”

“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக
எழுதிக் காட்டினார்.

“ஆமாம்….” என்றேன்.

“அந்தப் பூனையை அந்தக் கதையில ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”

“எந்தப் பூனையை எந்தக் கதையில ?”

“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்….”

“எந்தப் பூனை ?”

“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை….”

எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச்
சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர்அதை….


வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea . “அந்தப்
பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க்
கொன்னீங்க ?” என்று அவர் கேட்ட போது அவர் கண்களில் நீர் ததும்பியது.




“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன்
வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத்தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல்வாழ முடியும், தெரியுமா ?”



நான் மையமாகப் புன்னகைத்தேன்.



“நீங்க அதைக் கொன்னிருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக்
கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்….”



“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”



“அதைவிட்டு சுவத்துல…. சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க!
அஞ்சு மணி நேரமா உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ண வைக்கலாம்னு
யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக்
கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும்
அப்படிச் செய்ய மாட்டான்.”




தனது மஞ்சள் பையில் கை விட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத்
திக்கென்றது.ஆயுதம் தேடுகிறாரா, என்ன?




“ஸாரி… நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின்
வெளிப்பாடு….”



“வெளிப்பாடாவது, உள்பாடாவது…”



அவர் சமாதானமாகவில்லை.

வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே
ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் அண்ட்ரட் ருப்பீஸ் செலவழிச்சா, அந்த
ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”



“என்கிட்டே எய்ட் அண்ட்ரட் இல்லை…”



“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை….”



எப்படித் தப்பித்தேன் ?



“ஒண்ணு பண்ணுங்க…. அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ…. எனக்குத்
தெரிஞ்சவாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்…..”



அவர் என்னைக் கடைசி வரை சபித்துக் கொண்டுதான் சென்றார்.



அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.



– சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் II )