Monday, August 06, 2012

ரூ 16,000 கோடி ஊழல் - கிரானைட் மோசடி -சகாயம் ஐ ஏ எஸ் அறிக்கை

சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அர”க்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய நிறுவனங்களின் மீது, ஆமை வேகத்தில், வேண்டா வெறுப்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை துவங்கி உள்ளது. 


இந்த நடவடிக்கைக்கு ஆதாரமானது, முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம், கடந்த மே மாதம் கொடுத்த ஆய்வு அறிக்கை. கனிமக் கொள்ளையர்களின் பணப் பலம் கருதி, இது கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள சில தகவல்கள், ஊடகங்களில் வெளிவந்த பின் தான் நடவடிக்கை துவங்கப் பட்டது. இது போன்ற விஷயங்களில், தடபுடலாக துவங்கும் விசாரணை, வீரியம் இழப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால், அறிக்கையில் உள்ள முழு தகவல்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.



புகாரும், தேடுதலும்: அறிக்கையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: தினபூமி நாளிதழின் ஆசிரியர், தன் புகார் மனுவில், ஆறு மாதங்களில் சுமார், 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப் பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால், இப்புகார் வருவதற்கு முன்பாக, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய, என் தலைமையில், துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன.



கடந்த ஆண்டு, டிச., 14 மற்றும் 24; இந்த ஆண்டு ஜன., 28 மற்றும் பிப்., 3 ஆகிய தேதிகளில், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. அப்போது, முறைகேடாக கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பிடிபடவில்லை. தினபூமி ஆசிரியர் குறிப்பிட்டப்படி, ஆறு மாதங்களில், 1,650 கோடி ரூபாய் மதிப்பு கிரானைட் கடத்தப் பட்டு உள்ளதாகக் கூறப்பட்ட தகவல் சரியானதாக இல்லை.



 ஏனெனில், இந்த கடத்தல் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருவது விசாரணையில் தெரிய வருகிறது. இருப்பினும், கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க செய்ததில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி, மேலூர் தாசில்தாரால் கிரானைட் கல் கடத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது.



நாளிதழ் ஆசிரியரின் புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களில் ஒருவரான துரைதயாநிதி மற்றும் சு.நாகராஜிற்கு சொந்தமான, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், கீழவளவு கிராமத்தில் வழங்கப் பட்ட குத்தகை உரிமத்தை தவறாக பயன்படுத்தி, அதே கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு குத்தகை உரிமம் வழங்கப் பட்ட இடத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும், நீர்நிலை, புறம்போக்குகளான ஊரணி, கண்மாய், பொதுப்பாதை, பாறை வாய்க்கால், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




ஆக்கிரமிப்பும், கொள்ளையும்: புகாரில் கொடுக்கப் பட்ட தொகை சரியாக வராததால், ஆக்கிரமிப்பு என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அப்போது, அது மட்டுமின்றி மேலும் பல கொள்ளைகள் அம்பலப் பட்டன. இது குறித்து, சகாயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது: 


இந்த இடங்களில் (புகாரில் குறிப்பிடப் பட்டவை), ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, உடனே அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது. தகவல்களின் அடிப்படையில், கீழவளவு மற்றும் கீழையூரில் அமைந்து உள்ள ஒலிம்பஸ், சிந்து மற்றும் பி.ஆர்.பி., கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில், அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டது கண்டறியப் பட்டு உள்ளது. ஆய்வில், இந்த மூன்று குவாரிகளில் மட்டும், உரிம இழப்பாக, 58.38 லட்சம் ரூபாய், கனிம மதிப்பு இழப்பாக, 13.52 கோடி ரூபாயும், உரிமத்திற்கான அபராதத் தொகை பத்து மடங்காக, 9.97 கோடி ரூபாயும் என, 23.42 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறியப் படுகிறது.




இந்த மூன்று குவாரிகளில் ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பு போல, மீதமுள்ள, 91 குவாரிகளிலும் வெட்டி எடுக்கப் பட்டு உள்ள கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால், இது போல், பல நூறு கோடி (ரூபாய்) இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் கற்கள் இருப்பு வைக்கும் இடத்தில், டாமின் குவாரிகளில் இருந்து, சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள, 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப் பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. 



மேலும், ஆய்வு செய்த குவாரிகள் தவிர, புகார் மனுவுடன் வந்த மேலூர், கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல், விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு, 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




கண்மாய்கள் நாசம்: கிரானைட் தொழிலால், இயற்கை வளங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் அழிக்கப் படுவதாக, பல ஆண்டுகளாக புகார்கள் வந்தும், முடிவு எடுக்க வேண்டிய அனைவரும் நன்கு "கவனிக்கப்பட்டதால்', அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 



இதுகுறித்து, அறிக்கையில், சகாயம் குறிப்பிட்டு உள்ளதாவது: புகார்கள் வருவதற்கு முன், அதிகாரிகள் ஆய்வு செய்து பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு முகாந்திரம் உள்ளது கண்டறியப் பட்டது. தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி, வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை கலெக்டர், கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன், கீழவளவில் உள்ள ஒலிம்பஸ் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் நானே தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்திருந்தது உறுதி செய்யப் பட்டது. 



அதே போல், கீழையூர் கண்மாயில், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தால் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் எடுக்கப்பட்டு, கண்மாய் நிர்மூலமாக்கப் பட்டதை நேரில் பார்த்தறிந்தேன். இதை தடுத்து நிறுத்தாத வருவாய், கனிம வள அலுவலர்களை கடிந்து கொண்டேன். தீவிரமாக கண்காணிக்குமாறும், தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிட்டேன். 


மேலும், மே மாதம் 17ம் தேதியும் ஆய்வு நடத்தப் பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் வெட்டப் பட்டு, அப்புறப்படுத்தப் படுவதை உறுதி செய்தனர். ஆய்வு நடத்தியவர்கள் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் இல்லை என்பதால், துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இருந்தாலும், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பது அறிய முடிந்தது.


 மதுரை மாவட்டத்தில், பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற குறிப்பிடத்தக்க கிராமங்களில், கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப் பட்டு உள்ளன.



 இதன் விளைவாக, இந்த கிராமங்களில் வேளாண்மை நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப் பட்டு உள்ளது. மக்களும், கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நடவடிக்கைகளை குறைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர்.



 சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர். இன்னொரு புறம், பி.ஆர்.பி.,- பி.ஆர்.எஸ்., போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக அசுரத்தனமாக பணப் பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளன. இது குறித்த புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர் பயத்தினாலோ அல்லது நிதி லாபம் பெறும் நோக்கத்திலோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை. 


கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பி.ஆர்.பி.,போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும், ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் அவர்களிடம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.




ஆழமான கூட்டு: இந்த கொள்ளையை கண்டும், காணாமல் மட்டும் இல்லாமல், கனிமவளத் துறை அதிகாரிகள், சகாயத்தின் விசாரணைக்கு தடங்கலாகவும் இருந்து உள்ளனர்.


இதுகுறித்து, அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளதாவது: இந்த முறைகேடுகள் குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்க எச்சரித்தபோது கனிமவளத் துறை அலுவலரிடம் இருந்து முழுமையான தகவல்கள் பெறமுடியவில்லை. தணிக்கைக்குச் செல்ல முயற்சிக்கும்போது, முன்கூட்டியே கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் தகவல் தெரிவிக்கும் நிலையும் இருந்தது.


 இருப்பினும், பல்லாயிரக்கணக்கான கிராமத்து மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பிரமிப்பூட்டும் பெரும் பலனை அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.



அடுத்தடுத்து நடந்தவை: இந்த அறிக்கை, கடந்த மே மாதம், 19ம் தேதி, தொழில்துறை செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சகாயம் திடீரென கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக மாற்றப் பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா எட்டு புதிய குழுக்களை அமைத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து ஆய்வை துவக்கி உள்ளார்.



 கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, மதுரையை சுற்றி உள்ள, 90க்கும்மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பி., கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. நேற்று, ரங்கசாமி புரத்தில் சட்ட விரோதமாக இயங்கிய கிரானைட் குவாரியின் நடவடிக்கைகள் முடக்கப் பட்டு உள்ளன. ஒலிம்பஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளும் முடக்கப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதே வேகத்தில் நீதி வழங்கப்படுமா? மதுரையில் கிரானைட் எடுப்பது நிறுத்தப்படுமா? என்பதை, தமிழக மக்கள் கவனிக்க வேண்டும்.



தூங்கி வழியும் "டாமின்': தனது அறிக்கையில், சகாயம், டாமின் பற்றி மேலும் குறிப்பிட்டதாவது: அரசு கனிம வள நிறுவனமான டாமின், சில லட்சங்களே சம்பாதிக்கிறது. இதை சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, பல்லாயிரம் கோடிகளாகும். டாமின் நிறுவன கிரானைட் சுரங்கங்களை, அந்த நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்புள்ளது என்பது உண்மை. 


மேலும், டாமின் குவாரியில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக இயந்திரங்கள் உதவியுடன் கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி, தனியார் நிலங்களில் எடுத்து வைக்கப்படுகிறது. பின், வாகனங்களில் அவற்றை கொண்டு சென்று தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார். 



இது குறித்து, வழக்கமான பதிலையே தொழில் துறை அதிகாரிகள் வழங்கினர்: "டாமின்' நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் இருந்தும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கிரானைட்டை வெட்டி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான அளவு குறித்து, தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின் போதே, கிரானைட் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 



மற்ற பகுதிகளிலும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். "டாமின்' தொழில் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயந்திரங்கள் மூலம், தங்கள் குவாரிகளில் இருந்து கிரானைட் அகற்றப்படும் போது, அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என்பது, தற்போது கேள்வியாக உள்ளது.


 நன்றி - தினமலர்



மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

வளத்தைக் காப்பாற்றுவாரா ஜெ.?
யற்கை வளத்தைக் கொள்ளை அடிப்பது இன்று... நேற்றா நடக்கிறது? கொடுமையிலும் கொடு​மை, அந்தக் கொள்ளை பல்லாயிரம் கோடியைத் தொட்டுவிட்டது. இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  சொல்லும்போது, 'இவனுக்கு வேற வேலை இல்லை’ என்று அதிகாரிகள் உதாசீனம் செய்வார்கள். ஆனால், ஓர் அதிகாரியே சொன்னால்..? 



கிரானைட் மாஃபியாக்களின் அஸ்திவாரத்துக்கே அணுகுண்டு வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்​பவர், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது கடிதம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



மதுரையில் இருந்து சகாயத்தை வேறு இடத்துக்கு நகர்த்தவே அவரது இந்த நடவடிக்கைதான் காரணம் என்பதை அப்போதே கழுகார் சொல்லி இருந்தார். 30.5.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ''சகாயத்தின் திடீர் மாறுதலுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்​டாலும் கிரானைட் குவாரிகளை இறுக்கிப் பிடித்தது​தான் முக்கியமான காரணம் என்கிறார்கள். மேலூர் பகுதியில் உள்ள சட்டவிரோதக் குவாரிகள் குறித்து சகாயத்துக்குப் புகார் அனுப்பியவர்கள், கண்மாய் குளங்களையும் கிரானைட் முதலாளிகள் ஆக்கிரமித்துப் போட்டிருப்பதாக ஆதாரங்களைக் காட்டினார்கள். 


அதில், பிரபல மூன்று எழுத்துக் கம்பெனி மீதான புகார்கள்தான் அதிகம். 'சசி அண்ட் கோ-விடம் நல்ல டீலிங் வைத்திருக்கும் அவர்களைத் தொட்டால் சிக்கல் வரும்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பே அட்வைஸ் செய்தார்கள். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், 'என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா...’ என்று சொல்லிவிட்டுத்தான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார். அதே வேகத்துடன் அந்த மூன்றெழுத்துக் குவாரி நிர்வாகம் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிக்கை தயாரித்தார். இதுதான் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்கிறார்கள்'' - என்று நாம் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்.


தான் தயாரித்த அறிக்கையை தமிழகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த மே மாதம் 19-ம் தேதி அனுப்பி வைத்தார் சகாயம். அடுத்த ஒரே வாரத்தில் சகாயம் மதுரையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். ஆனாலும், சகாயம் அனுப்பிய கடிதம்... இன்னமும் உயிரோடு உலா வருகிறது.



அனல் கொதிக்கும் மே மாதம்தான் இந்த விவகாரம் ஆரம்பமானது. மேலூரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி போன்ற கிரானைட் தொழில் கொழிக்கும் பகுதிகளில் மே 1-ம் தேதி புகுந்து அதிரடி சோதனை நடத்தினார் சகாயம். உடனடியாக, சென்னையில் இருந்து அவருக்கு ஒரு போன். 'என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் இந்த ரெய்டுக்குச் சென்றீர்கள்? அந்த அதிபருக்கு யாரிடம் செல்வாக்கு இருக்கிறது தெரியுமா?’ என்று கேட்டது அந்தக் குரல். 


'இனிமே உங்க அனுமதி வாங்கிட்டுப் போறேன் சார்’ என்று அமைதியானார் சகாயம். மே 17 அன்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ. தலைமையில் ஒரு குழுவை அந்தக் குவாரிகளுக்கு அனுப்பி மீண்டும் சோதனை நடத்தினார். அதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு கடிதம் தயாரித்து தொழில் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். 


சகாயம் கணித்ததுபோலவே மே 23-ல் அவருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது.
''மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் சட்ட​விரோதக் குவாரிகள் மூலம் அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இயங்கி வரும் 91 குவாரிகளில் முறைகேடாகக் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.


 இந்தக் குவாரிகளைத் தனியாருக்குக் கொடுக்காமல் அரசே எடுத்து நடத்தினால், 1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்ட முடியும். எனவே, சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடிவிட்டு அவர்கள் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களைப் பொதுஏலத்தில் விட வேண்டும். சட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதையும் கடத்தலையும் கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் பெருமளவில் நிதி ஆதாரம் அடைந்துள்ளனர்.


சமூகச் சொத்தை தனி நபரும் தனியார் நிறுவனமும் சுரண்டிச் சூறையாடுவதை அனுமதிக்க இயலாது. அதுவும் பல ஆயிரம் ஏழை விவசாயிகளின் வாழ்​வாதாரங்களை அழித்து தனியார் நிறுவனங்கள் பெரும்பலன் அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இவற்றைத் தடுத்து நிறுத்த வெளி மாவட்டக் கனிமவளத் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு குவாரிகளை ஆய்வுசெய்து, முறைகேடாக கிரானைட்டை வெட்டிக் கடத்திய தனியார் நிறுவனங்களிடம் அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். 


அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிதி இழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படைகளை அமைத்து கிரானைட் குவாரிகளைத் தணிக்கை செய்ய வேண்டும்''  - இதுதான் சகாயம் அனுப்பிய அறிக்கையின் சுருக்கம்.


இந்த அறிக்கையை வைத்து சிந்து கிரானைட், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனங்களுக்கு 'உங்களது உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கனிமவளத் துறை, இன்னொரு நிறுவனம் குறித்து மூச்சே விடவில்லை. அது, பி.ஆர்.பி. நிறுவனம். நோட்டீஸுக்கு இதுவரை ஒலிம்பஸ் நிறுவனம் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும் சிந்து கிரானைட்ஸ் மட்டும் கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் உரிமையாளர்தான், தி.மு.க. ஆட்சி செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சி செய்தாலும் மேலூரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய பி.ஆர். பழனிச்சாமி. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக துரை தயாநிதி, க.நாகராஜ் ஆகிய இருவர் பெயர் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிதான் அவர்.



கிரானைட் ஊழல்களைக் கண்டுபிடிக்க சகாயத்துக்கு தோள் கொடுத்து நின்ற அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''புறம்போக்கில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை 'டாமின்’ நிறுவனத்துக்குத்தான் அரசு வழங்குகிறது. ஆனால், 'டாமின்’ நிறுவனத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. அதனால், 'டாமின்’ நிறுவனம் தனது குவாரிகளை 'ரைசிங் செல்லிங்’ சிஸ்டத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு  விடுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் கன மீட்டருக்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகையை 'டாமின்’ நிறுவனத்துக்கு தனியார் செலுத்த வேண்​டும். 


இதில்தான் புகுந்து விளை​யாடுகிறார்கள். தனியார் பட்டா நிலங்களை கிரானைட் குவாரிக்​காக வாங்கிப் போட்டு இருப்பவர்கள், 'டாமின்’ குவாரிகளில் பெரிய அளவில் கற்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பட்டா நிலங்களில் வெட்டி எடுத்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை.


கீழவளவு ஏரியாவில் 2010-ல் ஒரு குவாரிக்கு அனுமதி வாங்கியது ஒரு நிறுவனம். ஆனால், அங்கே கிரானைட் எடுக்காமல் டாமின் குவாரியில் கள்ளத்தனமாகக் கற்களை வெட்டி எடுத்துக் கடத்துகிறது. ஆனால், தாங்கள் குவாரிக்கு அனுமதி வாங்கிய இடத்தில் 4,000 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்ததாக அந்த நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. அங்கே அவ்வளவு கற்கள் வெட்டி எடுத்ததற்கான தடயமே இல்லை. இப்படி எடுக்கப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான கற்களை மேலூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். 2011-ல் இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு ஒன்று வந்தபோது, 'அது வேஸ்ட் கற்கள்’ என்று கலெக்டரையே அறிக்கை கொடுக்க வைத்தார்கள்'' என்றார்.



மேலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ''பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்போடு கிரானைட் கழிவுகளைக் கொட்டி மேலூர் பகுதிகளில் உள்ள 12 கண்மாய்களையும் எட்டு மீன் வளர்ப்புக் குளங்களையும் தூர்த்து விட்டார்கள். பெரியாறு வரத்துக் கால்வாய்களிலும் கழிவுகளைக் கொட்டி தண்ணீர் வரத்தை அடைத்து விட்டதால், சுமார் 2,000 ஏக்கர் நிலம் நீர் இன்றிப் பாழாகிவிட்டது. 


இதில் பெரும் பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு வளைத்துப்போட்டது. கோயில்கள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புப் பகுதிகளைவிட்டு 300 மீட்டர் தள்ளித்தான் கிரானைட் குவாரிகள் இருக்க வேண்டும் என்ற விதி எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. 2011-ல் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 10 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்பட்டதாக மதுரை கனிம வளத் துறையில் கணக்கு இருக்கிறது. 


ஆனால், அதே காலத்தில் ஒரு லட்சம் கன மீட்டர் கற்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததாக துறைமுகத்தில் கணக்கு இருக்கிறது. இதை வைத்து ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். 'முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதம் ஆவதால் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதியரசர் சந்துரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்​படவில்லை.  இங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் எல்லாவற்றுக்குமே கிரானைட் கம்பெனிகளில் இருந்து தனி சம்பளமே போகிறது. அதனால், முதல்வர் மனது வைத்தால் மட்டுமே இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியும்'' என்றார்.


''சகாயம் கண்டுபிடித்தது சமீபத்​திய ஊழல்களை மட்டும்தான். ஆனால், 16 வருடங்களாக குவாரிகள் நடப்பதால், எம்புட்டு சம்பாதிச்​சிருப்பாங்கன்னு பாத்துக்குங்க. சி.பி.ஐ. விசாரிச்சா ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரிய அளவுக்கு பூதம் கிளம்பும். சகாயம் அதைக் கண்டுபிடித்ததும் இப்போது, டாமின் குவாரியில் இருக்கும் கழிவுகளைக் கொண்டு​வந்து கொட்டி, அந்தக் குழியை மூடுறாங்க. இதை மூடக்கூடாதுன்னு சொன்னதுக்கே எனக்கே கொலை மிரட்டல் வருது'' என்கிறார் கீழவளவு பஞ்சாயத்துத் தலைவர் தர்மலிங்கம்.


இதற்கான பதிலை அறிவதற்கான பி.ஆர்.பி. நிறுவனத்தைத் தொடர்புகொண்​டோம். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன மேனேஜர் சண்முகநாதனிடம் கேட்டதற்கு, ''சகாயத்தின் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, நாங்களே உங்களிடம் பேசுகிறோம்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இந்த இதழ் அச்சேறும் வரை அவர்களது பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் முழுமையாக வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.


சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ் நம்மிடம், ''கனிமவளத் துறை அதிகாரிகளை நம்பாமல் வேறு அதிகாரிகளை வைத்து எங்களுக்கும் தெரியாமல் சகாயம் தன்னிச்சையாக எங்கள் கம்பெனிக்குள் வந்து சோதனை செய்துள்ளார். எங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நாங்கள் நேர்மையாக தொழில் செய்து வருகிறோம். ஒன்றரை வருஷம் இங்கே கலெக்டராக இருந்த சகாயம் அப்போதே எங்களைக் கூப்பிட்டு விசாரணை நடத்தி இருக்கலாம். அதைவிட்டுட்டு டிரான்ஸ்ஃபர் ஆகிப்போன பிறகு நோட்டீஸ் விடுகிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிற கல்லுக்கு 35 ஆயிரம்னு ரேட் போட்டு எங்களுக்கு 4 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். அதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறோம். தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும். ஆனால் நாங்கள் நிரபராதிகள்'' என்றவர் மேலும், ''உண்மையை சொல்லணும்னா, கிரானைட் பிசினஸ் இப்போது 10 சதவிகிதம்தான் சக்சஸாப் போயிக்கிட்டு இருக்கு. மேலூர் பகுதியில இருக்கிற மொத்த கிரானைட் கம்பெனிகளோட ஒரு வருஷ டர்ன்ஓவரே 700 கோடிதான். இதுல லாபம்னு பார்த்தா அதிகபட்சம் 25 சதவிகிதம் நிற்கும். இதுல எப்படி 16,000 கோடிக்கு ஊழல் பண்ண முடியும்?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார்!



சகாயத்திடம் இதுபற்றிக் கேட்டோம். ''மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து என்னிடம் வந்த புகார்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினேன். இப்போது நான் மாறுதலாகி வந்துவிட்ட நிலையில், அதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ''மதுரை மாவட்டத்தில் மொத்தம் 175 கிரானைட் குவாரிகள் இருக்கின்றன. 




இதில் 149 தனியார் குவாரிகள். 26 குவாரிகள் புறம்போக்கில் உள்ளவை. இவற்றில் எட்டு மட்டுமே டாமினுக்கு சொந்தமானது. மீதி 18-ல் டெண்டர் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் 13 குவாரிகளில் பெரும் பகுதியை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எடுத்து நடத்துறாங்க. இந்த 13 குவாரிகளையும் க்ளோஸ் பண்றதுக்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவங்க, கோர்ட்டுக்குப் போயி எக்ஸ்டென்ஷன் வாங்கி இருக்காங்க.


 எல்லாவற்றையும் சேர்த்தால் இப்போதைக்கு மொத்தமே 50 குவாரிகள்தான் இருக்கு. இங்கு நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 17 குழுக்களை அமைச்சிருக்கோம். கண்மாய்களில் கொட்டி இருக்கும் கிரானைட் கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவு போட்டுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதி அளித்தார்.சொன்ன மாதிரியே கடந்த வியாழக்கிழமை அன்று கிரானைட் குவாரிகளில் தங்களது அலுவலர் படையை இறக்கி விட்டுள்ளார் மதுரை கலெக்டர். இந்த அதிரடி இறுதிவரை தொடர வேண்டும் என்பதே மதுரை மக்களின் ஆதங்கம்.


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசிய பேச்சுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
'... இந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு! தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய். இதைப்பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளில் இருந்து, கிரானைட் கொள்ளையில் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்’ என்றார் ஜெயலலிதா.


அப்போது அவர் கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தார். இப்போது நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்.


எடுப்பாரா?


நன்றி - ஜூ வி