Saturday, August 04, 2012

உஞ்சவிருத்தி - சுஜாதா - சிறுகதை

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறா&ன பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.



‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.



‘‘நேத்திக்குதான்.’’



‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’



‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’



‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’



‘‘ஏர்போர்ட்ல.’’



‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’



‘‘ரங்கா… பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு > விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’



‘‘ரெண்டும் ஒண்ணுதான.’’




‘‘இல்…லை.’’



‘‘பின்ன… ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’



‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது… அவன்கூட பைலட் இல்லை.’’



‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’



‘‘மாட்டா!!’’



‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’



‘‘ஏர்போர்ட்… ஏர்போர்ட்!’’



‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’



‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’



‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தான இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’



நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.





அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல… ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்…’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.



‘‘ரங்கு, இது யாரு?’’



‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி>னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’



‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’



யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.



‘‘உஞ்சவிருத்தி.’’



‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’



‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’



‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’



‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திர மங்கலத் தில் நெலம் எல்லாம் இருக்கு.’’



‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’



‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே… அவ்ளவுதான்!’’



‘‘புரியலை ரங்கு.’’



‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’



ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சி>க்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்…



‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’



‘‘கண்ணு வேற தெரியலை.’’



‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’




‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’



‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’



இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கிய மாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க…




‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதா;ன? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’




‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’



‘‘ஜி.பிகிட்ட சொல்றதுதான?’’




‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’




‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’



‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’



ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.



‘‘நீ யாரு… கோதை பேரன்தா;ன?’’ என்றார் என்னைப் பார்த்து.




‘‘ஆமாம் மாமா!’’



‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’



‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில் தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’



‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’




‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாத வாளுக்கு!’’



‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு… அந்த நாராயண&ன மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’



‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக் காகவா?’’



‘‘ஆமா, வேறென்ன..?’’



‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’



‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’



‘‘இல்லை மாமா… உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’



‘‘அதனால?’’



‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னு தா&ன நினைச்சுப்பா?’’



‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’



ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.



‘‘ஓய்… உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி குஞ்ச விருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’




‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’



அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி>யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கபபா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா… வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’




‘‘தனியா இருந்து பாருமேன்.’’



‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’



‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’



‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நா;ன பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’



‘‘பிள்ளை?’’



‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’



‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’



‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள்… பார்க்கலாம். நான் செத்துப் போ&னன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’



‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத் தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’



அவர் மறுபடி வீதி பிரதட்சிணத் துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச்… வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.



ஹைஸ்கூல் எப்படி நடக்கிறது என்று… என் கிளாஸ்மேட்தான் கரெஸ்பாண் டெண்டாக இருந்தான், அவனை விசாரிக்கப் போயிருந்தபோது ஜி.பி-யைச் சந்தித்தேன். பொதுவாக மேத்ஸில் மல்ட்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் வந்து தரமே போய்விட்டதாகச் சொன்னார். அவரேதான் ஆரம்பித்தார்…



‘‘அப்பாவைப் பாத்தியோ..?’’



‘‘பாத்தேன் சார்.’’



‘‘என்ன பிடிவாதம் பாத்தியா?’’



‘‘அவர் சொல்றதைப் பார்த்தா அவருக்குச் சோறு தண்ணி கூட சரியா கொடுக்கறதில்லைன்னு…’’



‘‘அப்படியா சொன்னார்? ஒரு நா எங்காத்துக்கு வந்து மாமியை சந்திச்சுக் கேட்டுப்பாரு. என் அப்பாதான்… இல்லேங் கலை. ஆனா, அவர் கார்த்தாலை எழுந்திருக்கற திலிருந்து பண்ற அட்ட காசம்… எனக்கு நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லா ரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’



‘‘தனி வீடு பாத்துக் கொடுத்துர்றதுதா;ன?’’




‘‘போகமாட்டேங்கறாரே! ‘என் வீடு, நான்தான் இருப்பேன்’கறார்!’’



‘‘சரி, நீங்க போய்டறதுதா;ன?’’



‘‘யோசிச்சிண்டிருக்கேன். வாடகை கொடுத்து மாளுமா?’’



‘‘அவர்கிட்ட பணம் இருக்கில்லே?’’



‘‘இருக்கு. என்ன வெச்சிருக்கார்னு காட்டமாட்டார். வக்கீலைக் கூப்ட்டு நாலு தடவை வில்லை மாத்தி மாத்தி எழுதிட் டார். சீரங்கம்னு ஒரு பேத்தி மேல கொஞ்சம் பிரியம். அதுங் கிட்ட எதோ சொல்லிண்டிருக்கார்… ‘உங்க யாருக்குமே நன்னி கிடையாது. தொச்சுக்குத்தான் எல்லாம்னு உங்கம்மா கிட்ட சொல்லிடு…’ ’’



‘‘தொச்சுங்கறது…’’



‘‘பாடசாலைப் பையன். அவரை கார்த் தால கம்பு பிடிச்சு அழைச்சுண்டு போறா&ன அவன். கேக்கறதுக்கு நன்னாவா இருக்கு? எதுக்குக் கிழத்துக்கு நான் சிசுருஷை பண்ண ணும்கறா என் ஆம்டையா! நான்தான் அவளை சமாதானப்படுத்தி வெக்கறேன்… ‘அப்படியெல் லாம் செய்ய மாட்டார். கோபத்தில ஏதோ சொல் றார்’னு. அவ சொல்றது நியாயம்தா;ன?’’




‘‘தான தளிப்பண்றதா…’’




‘‘அதெல்லாம் வெட்டிப்பேச்சு! ஆடிக் கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தளிப்பண்ற உள்ளை மாடு கன்னுபோட்ட எடம் மாதிரி பண்ணிட்டுப் போவார். என் அப்பாவா இருந்தாலும், இந்த மாதிரி ஒரு பிடிவாதம் புடிச்ச கிழவனை நான் பாத்ததில்லை. போய்த் தொலைஞ்சாலும் பரவாயில்லைன்னு சில சமயம் அவ்வளவு வெறுப்பேத்தறார்.’’



‘‘அவருக்கு என்ன வேணுமாம்? எதாவது மனசில குறை வெச்சுண்டு இருக்கலாம் ஒரு இன்சொல், ஒரு பரிவு… அல்லது, ‘தாத்தா எப்டி இருக்கே?’னு பேத்திகள் கேட்டாலே போறுமா இருக்கலாம். உங்க மனைவியும் ‘அப்பா, எப்டி இருக்கீங்க? கண்ணுக்கு மருந்து போடட்டுமா’னு எதாவது கேக்கலாம்.’’



‘‘அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. நீ வேணா சீதாகூட பேசிப்பாரு. நான் சொன்னது பாதிதான். அவ ஆங்கிள்ள பார்த்தா கதை ரொம்பக் கடுமையா இருக்கும். டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சாப்பிட வா, எங்காத்துக்கு!’’




போயிருந்தேன். நான்கு பெண்கள் பதினைந்து, பதின்மூன்று, பத்து, எட்டு என்று அலைந்தன. எனக்கு முன்னால் ஸ்டூல் போட்டு தீர்த்தம் எல்லாம் பதவி சாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். எனக்காக மாமி ஜவ்வரிசிப் பாயசம் பண்ணியிருந்தாள். சமையல் எல்லாம் சூப்பராக இருந்தது.



நான் சென்றபோது, கிழவர் வாசல் திண்ணையில் காலை அகட்டி உட்கார்ந்து கொண்டு பனை விசிறியால் கீழே விசிறிக் கொண்டிருந்தார். நெற்றி சுருங்கி விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘இருக்கறவனுக்கு ஒரு வேப்பம்பூ சாத்துமது கிடையாது. வரவா போற வாளுக்கெல்லாம் பால்பாயசம். கேக் கறவா கிடையாது இந்தாத்துல’’ என்றார்.




‘‘வாங்களேன் மாமா… உங்காம்தான? வாங்கோ, பாயசம் சாப்டலாம்’’ என்றேன்.



‘‘இந்தாத்திலயா? ஒரு திருஸ்தம் கூட எடுத்துக்கமாட்டேன்.’’



வாத்தியார் ஜி.பி-யின் மனைவி வெளிப்படையாகப் பேசினாள். ‘‘எவ்வளவு தூரம் பொறுத்துக்கறது? ‘பொறுத்துப் போ’னு இவர் பாட்டுக்கு சொல்லிட்டுப் பள்ளிக் கூடம் போய்டறார். இருபத்துநாலு மணி நேரமும் இவர் கூட மல்லுக் கட்ட வேண்டியிருக்கு. ரெண்டு பொண் வயசுக்கு வந்துட்டா. அவா முன்னாலயே கோமணத்தை அவுத்துக் கட்டிக்கறேர். ரெங்கராஜுவை கூப்ட்டு திண்ணைல உக்காந்துண்டு சர்வாங்க க்ஷவரம் பண்ணிக்கறேர். சாக்லெட்டு, பப்பர்மிட்டுனு வாங்கி ஒளிச்சு வெச்சுக்கறேர். பாட சாலைப் பையன்களுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேர்… பேத்திகளுக்குக் கொடுக்க மாட்டேர். அதுகளைப் படிக்க வெக்கறதே அவருக்குப் பிடிக்கலை. என்னைக் கண்டா ஆகவே ஆகலை…’’




‘‘இதுக்கெல்லாம் ஆதாரமா ஒரு சம்பவம் அல்லது காரணம் இருக்கணும் மாமி.’’



‘‘இருக்கு. அதைச் சொல்லிட்டுத் தான் ரசாபாசமாய்டுத்து! எங்காத்தில எனக்கு நிறைய செஞ்சிருந்தா. அதை அவர் அலமாரில வெச்சுப் பூட்டியிருந்தார். மாமியார் போறவரைக்கும் அதை நான் பார்த்தேன். பண்டிகை நாளில் என்னை எடுத்துப் போட்டுக்கச் சொல்வா. மாமியார் தங்கமான மனுஷி. அவர் போனதும், இது எதோ தங்கை பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்துக் கொடுத் துடுத்து போல! பாலிஷ் போட்டு வெள்ளிப் பாத்திரத் தையெல்லாம் கொடுத்திருக் கேர். போனாப் போறது, சொல்லிருக்கலாமில்லையா? ரங்கநாதன் கிருபை இவரும் சம்பாதிக்கிறேர். ஒரே ஒரு தடவை எச்சுமிக்கு தோடு செஞ்சு போடலாம். ‘அப்பா, அம்மா என் நகையெல்லாம் எங்க வெச்சிருக்கா?’னு கேட்டதுக்கு, ‘‘நகையா… உன்னை எதிர்ஜாமீன் இல்லாம இலவசமா கல்யாணம் பண்ணிண்டோம். உங்காத்துல உனக்கு என்ன போட்டா? உங்கப்பன் ஏமாத்திட்டான்’னார்.




எனக்கே தெரியும்… எனக்கு எத்தனை கேஷா கொடுத்தா, வைர மோதரத்துக்கு, பட்டு வேஷ்டிக்குன்னு… எத்தனை நகை போட்டான்னுட்டு. அதை எடுத்துச் சொன்னப்ப எல்லாம் கவரிங்னார். ‘இதை அப்பவே சொல்லியிருக்கறதுதா&ன?’ன்&னன். இவ்வளவுதாம்பா கேட்டேன். அதிலேர்ந்து என் மேலயும் என் பெண்கள் மேலயும் வெறுப்புன்னா வெறுப்பு அப்படிப்பட்ட வெறுப்பு. நின்னா குத்தம்.. உக்காந்தா குத்தம்…

’’

இந்தச் சம்பாஷணை முழுவதும் அவருக்குக் கேட்டிருக்கவேண்டும்.



திண்ணையிலிருந்து சத்தம் போட்டார்… ‘‘எல்லாத்தையும் சொன்னியே, உன் நகை அத்தனையும் சப்ஜாடா நான் திருப்பித் தந்ததைச் சொன்னியா?’’



இவள் ‘‘மொத்தத்தில கால்பாகம் கூடத் திரும்ப வரலைப்பா. ரெட்டை வடம் சங்கிலி என்ன ஆச்சு, பச்சைக்கல் தோடு என்னாச்சு, பேசரி என்னாச்சு, ஒட்டியாணம், நாககொத்து என்ன ஆச்சு, வங்கி என்னாச்சு..?’’ என்றாள்.



‘‘பச்சைப்பொய். உங்களுக்கெல்லாம் என் கெட்ட குணம் மட்டும் தான் தெரியும். நல்ல குணம் எதும் கண்ணுக்கே தெரியாது.’’

இவள் சன்னமாக ‘‘நல்லது எதாவது இருந்தா சொல்லுங்கப்பா’’ எனறாள்.



நான் இந்தச் சண்டை ஓயாது என்று புறப்பட்டு வந்துவிட்டேன். என் சமாதான முயற்சிகள் அத்தோடு முடிந்தன.



அடுத்த வாரம், புறக்கடையில் பாசி வழுக்கி விழுந்துவிட்டார் கிழவர். தொடை எலும்பும் இடுப் பிலும் முறிந்துபோய் ஜி.பி. அவரை புத்தூருக்கு அழைத்துப் போக, அங்கே இன்னமும் சீரியஸாகி, அப்புறம் தில்லைநகரில் அவரை அட்மிட் பண்ணி, மாற்றி மாற்றி வாத்தியாரும் மாமியும் பதினைந்து தினம் அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய்… ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்தான் இறந்து போனார்.



இத்தனைப் பாடுபட்டதுக்கு ஜி.பி>க்கோ மனைவிக்கோ பேத்திகளுக்கோ எந்தவிதப் பயனும் இல்லை. சொத்து முழுவதையும் தொச்சு என்கிற துரைசாமியின் பேரில் எழுதி வைத்துவிட்டு, அவன் மேஜராகும் வரை > பதினெட்டு வயசு வரும் வரையில் வக்கீலை அந்தச் சொத்துக்கு கார்டியனாகப் போட்டு பதினெட்டாம் வயதில் அந்தச் சொத்து அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் போகவேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.



பாடி எடுக்குமுன் துக்கம் விசாரிக்க அவர் வீட்டுக்குப் போய் திண்ணையில் சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன். உள்ளே பேத்தி ஒருத்தி மட்டும் ‘தாத்தாஆஆஆ…’ என்று அழுது கொண்டிருந்தது. உஞ்ச விருத்திக்கு அழைத்துச் சென்ற பாடசாலைப் பையன் ‘‘மாமா, நாளைலருந்து வரவேண்டாமா? வேற எதாவது ஒத்தாசையா இருக் கே&ன!’’ என்றான். ‘‘இந்த ஆமே உன்னுதுரா’’ என்றார் ஜி.பி. விசும் பலுடன். அவனுக்குப் புரியவில்லை. மாமிக்கு ஆத்து ஆத்துப் போயிற்று. ‘‘என்ன பாவம் பண்ணோம்னு இந்தத் தண்டனை கொடுத் துட்டுப் போனார் கிழவனார். எங்கப் பாம்மா போட்ட நகை எங்கேனு கேட்டது ஒரு பெரிய தப்பா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா?’



ரங்கு ஜி.பி-யிடம் ‘‘ஓய்… இது பிதுரார்ஜித சொத்து. அதை எழுதி வெக்க கிழத்துக்கு உரிமையே கிடையாது. கிறுக்குப் புடிச்சாப்ல இப்படியெல்லாம் வில் எழுதினா கோர்ட்டில ஒத்துக்க மாட்டா. சண்டை போட்டு வாங்கிடலாம்.’’





ஜி.பி-தான் ‘‘ரங்கு, நமக்கு எது உண்டு, எது இல்லைன்னு தீர்மானிக்கிறதெல்லாம் ஸ்ரீரங்கநாதன்தான்’’ என்றார்.



அதன்பின் நான் அலகாபாத் போய்விட்டு கல்கத்தா, டெல்லி, அல்மோரா, பதான்கோட், கொலம்போ என்று சுற்றிவிட்டு ஆறு வருஷம் கழித்துதான் ஸ்ரீரங்கம் திரும்ப முடிந்தது. ரங்குவை முதல் காரியமாக விசாரித்தேன்… ‘‘ஜி.பி. வாத்தியார் என்ன ஆனார் ரங்கு?’’



‘‘ஏன் கேக்கறே… ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டேர். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தேர். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டேர். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டேர். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போ



றேன்னு காலை ஓடிச்சுண்டேர். மனசொடிஞ்சு போய்ட்டேர். அப்றம்…’’ என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

நான் சன்னமாக, ‘‘எதாவது விபரீதமா ரங்கு?’’ என்றேன்.



‘‘அதை ஏன் கேக்கறே… கடைசியா ரங்கநாதன் கண்ணைத் திறந்துட்டார்.



‘‘எப்படி?’’



‘‘மூத்த பொண்ணு எச்சுமி இருக்கு பாரு, தொச்சுவைக் கல்யாணம் பண்ணிண்டு டுத்து. எல்லாம் சரியாப் போய்டுத்து. உஞ்சவிருத்தி தேசிகாச்சாரி சொத்து மறுபடி ஃபேமிலிக்கே வந்துடுத்து!’’



‘‘அந்தப் பையன் அதிகம் படிச்சிருந் தானா?’’


‘‘எட்டாம் கிளாஸ்க்கு மேல படிப்பு ஏறலை…’’



‘‘இந்தப் பொண்ணு?’’


‘‘எம்.சி.ஏ.’’


நான் வியப்புடன் ‘‘எப்படிக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது அந்தப் பொண்ணு… ஃபேமலிக்காக தியாகமா?’’


‘‘அதெல்லாம் இல்லை, காதல்!’’ என்றான் ரங்கு.

நன்றி - அமரர் சுஜாதா , உயிர் மெய் , சிறுகதைகள்