எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.
இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,
1. ஜன்மம் சாபல்யம் அடையாது.
2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (”என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை… உச்… உச்… உச்” எக்ஸெட்ரா).
எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.
அமெரிக்காவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக எங்களிடம் ஒரு ‘ஸீ யு.எஸ்.ஏ.’ ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் டிக்கெட் இருந்தது. ரொம்ப சல்லிசான டிக்கெட். அதை வைத்துக்கொண்டு அந்த கம்பெனியின் ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்ப வராத வரையில். ‘பரவாயில்லையே’ என்று வியக்காதீர்கள். இந்தச் சுதந்திர சீட்டில் ஒரே ஒரு சிக்கல். பெரும்பாலான ஃப்ளைட்டுகளுக்கு அட்லாண்டா போய்த்தான் போக வேண்டும்.
உதாரணம் நியூயார்க்கிலிருந்து பஃபலோ போவதற்கு, நியூயார்க் அட்லாண்டா, அட்லாண்டா பஃபலோ என்ற ரூட்டில்தான் போக முடியும். இது சென்னையிலிருந்து பெங்களூரு போக, சென்னை டெல்லி, டெல்லி பெங்களூரு போகிற மாதிரி! எனவே அவர்கள் ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெள்ளென விளங்கும் (‘தெள்’ என்றால் என்ன?) எனவே பத்து நகரங்களைப் பார்ப்பதற்குள் எத்தனை முறை அட்லாண்டா பார்த்திருப்போம் என்று நீங்கள் சுலபமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அட்லாண்டா விமான நிலையத்தில் சிப்பந்திகள் அனைவரும். ”என்ன அண்ணா, மறுபடியும் வந்துட்டேளா” என்று விசாரிக்கும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.
நான் சொல்ல வந்தது நயாகரா பற்றி அல்லவா? நயாகராவுக்கு பஃபலோதான் விமான நிலையம். அங்கே போக வழக்கம் போல அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது, பொடி நடையாகப் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று சென்று திரும்பியபோது, என் மனைவியின் அருகில் இரண்டு இந்தியர்கள் உட்கார்ந்துகொண்டு கையைத் தீவிரமாக ஆட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிட்டே போனதில், ஒருவர் பிஸ்வாஸ். மற்றவர் சின்ஹா. பெங்காலிக்காரர்கள்.
இந்தியர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒரு வாக்கியம் இங்கிலீஷ் பேசினால் போதும். மலையாளியை காலேஜ் என்று சொல்லச் சொன்னால் மதி. பெங்காலிகள் போல்ட்டை வோல்ட் என்றும் வோல்ட்டை போல்ட்* என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பெயருக்கும் ஓகாரம் சேர்த்துக்கொண்டு, ரங்கராஜன் என்பதை ரொங்கொரோஜன் என்பர்.
பிஸ்வாஸ், கல்கத்தாவில்ரொம்ப பிஸியான சர்ஜன் என்று தெரியவந்தது. சின்ஹா, மெட்டலர்ஜிஸ்டோ என்னவோ. இருவரும் லண்டனில் சந்தித்துக் கூட்டணி அமைத்துக்கொண்டு அமெரிக்கா வந்திருக்கிறார்கள். எங்களைப் போலவே இடங்களைச் சுற்றிப் பார்க்க ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கைவசம் வைத்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது, ”சே! டிக்கெட்டா இது! அட்லாண்டா அட்லாண்டா!” என்றனர். ரொம்ப நொந்து போயிருந்தார்கள். சக சோகத்தால் சினேகிதமாகிவிட்டோம். இப்போது நயாகரா பார்க்க பஃபலோ போகிறோம் எனக் கேட்டதும் சந்தோஷப்பட்டு எங்களை ஆட்கொண்டு. ”கவலைப்படாதே. நாம் எல்லோரும் சேர்ந்தாற் போலப் போகலாம்” என்றனர். என் மனைவியும் ஒப்புக்கொள்ள, எனக்கு வயிற்றைக் கலக்கியது.
எனக்குத் தெரிந்த பெங்காலி நண்பர்கள் எல்லோரும் நல்லவர்களே. அவர்கள் சரோட் வாசிப்பார்கள். பிரிட்ஜ் ஆடுவார்கள். கவிதை எழுதுவார்கள். சங்கீதம், நடனம் எல்லாம் சரிதான். ஆனால், சுலபத்தில் கோபித்துக்கொண்டுவிடுவார்கள். கொல்கத்தாவில் ஒரு பெங்காலி நண்பருடன் பார்ட்னராக பிரிட்ஜ் ஆடிக்கொண்டு இருக்கும்போது, நாலு ஸ்பேடை டபிள் பண்ணி ஆயிரத்து இருநூறு பாயின்ட் கொடுத்துவிட்டேன் என்று, என் மேல் பெஞ்சு நாற்காலியை வீசினார். அதனால் இந்த பெங்காலி தமிழ் நட்பு, நயாகரா வரை தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயே உறவு அவ்வளவு பேப்பரில் போடும்படியாக இல்லை. சிநேகிதம் மெல்லிய கண்ணாடி போலிருந்தது. பிஸ்வாஸ் எதையாவது சொன்னால் அதற்கு நேர்மாறாக சின்ஹா சொல்ல, முணுக்கென்று சண்டை வந்துவிடும். சீ! நீ ஒரு மனுஷனா என்கிற தொனியிலே பெங்காலியில் ‘கீ!’ ‘கீ!’ என்று மூக்குக்கு மூக்கு தொட்டுக்கொண்டு எதிர்ப் பேச்சு துவங்கிவிடும்.
இருந்தும் இரண்டு பேரும் வலுக்கட்டாயமாக எங்கள் தோழமையை நாட, அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். ப்ளேனில் நாலு பேரும் வரிசையாக உட்கார்ந்துகொண்டோம். என் மனைவியிடம் சின்ஹா, ‘என்ன என்ன வாங்கினாய்’ என்று விசாரிக்க, நான் எழுத்தாளன் என்றதும் ‘சுனில் கங்குலியைத் தெரியுமோ?’ என்று பிஸ்வாஸ் கேட்க, ‘நான் தெரியாது’ என்று சொல்ல, நீ என்ன எழுத்தாளன் என்கிற மாதிரி பார்த்தார். பத்து நிமிஷத்துக்குப் பேசவில்லை. இவர்களிடமிருந்து பஃபலோவில் இறங்கின மாத்திரம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் வந்துவிட்டது.
இறங்கினவுடன், ‘வா’ என்று மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாகேஜ் செக்குக்கு ஓடிப் போய் சடுதியில் பெட்டி படுக்கைகளை விடுவித்துக்கொண்டு கலர் கலராக நகரத்துக்குப் போகும் பஸ்சுக்குக் காத்திருக்க, என் பின்னாலேயே, ”ரொங்கொரோஜன்!”
”ஓ, ஹலோ மிஸ்டர் பிஸ்வாஸ்! ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூ!”
”ஓட்டல் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.”
”அப்படியா சந்தோஷம்… ஸீ யூ!”
”உங்கள் இருவருக்கும் சேர்த்துத்தான்!”
”வாடகை ஒரு வேளை அதிகம் இருக்கப் போகிறது. நாங்கள்…”
”வாடகை பதினஞ்சு டாலர்!”
பதினைந்து டாலர் என்பது அமெரிக்காவில் ரொம்ப சீப். ”ஊருக்கு வெளியே இருக்குமோ என்னவோ?”
”சேச்சே! நயாகராவிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறதாம்!”
”சன்னலைத் திறந்தால் நயாகரா தெரியுமாம்” என்றார் சின்ஹா. என்னால் நம்ப முடியவில்லை.
”ஓட்டல் பேர் என்ன?”
கார்டைக் காட்டினான். ”இந்த பஸ் போகிற வழியில் இறக்கிவிடுமாம். டிரைவர்தான் சொன்னான். அமெரிக்காவில் கொஞ்சம் தீர விசாரித்தால் செலவு இல்லாத இடம் கிடைக்கும்.”
நான் என் மனைவியைப் பார்க்க அவள், ”அங்கேயே போகலாம்” என்றாள்.
”வாருங்கள். எதற்கு முப்பது டாலரும் நாற்பது டாலரும் கொடுக்க வேண்டும்?” என்றார் பிஸ்வாஸ். பஸ்ஸில் ஏறினோம். பிஸ்வாஸ், சின்ஹா, நான், மனைவி என்ற நாலு பேரும் இ.பிரியாத நண்பர்கள் போல உட்கார்ந்துகொள்ள, ‘பஸ் டிக்கெட் நான்தான் வாங்குவேன், நான்தான் வாங்குவேன்’ என்று சண்டை போட்டு டிக்கெட் ஐந்து டாலர் என்று தெரிந்ததும், ‘ஓட்டல் போய் செட்டில் பண்ணிடலாம்” என்றார்கள்.
பஃபலோ நகரம் பிழைப்பதே நயாகராவுக்கு வரும் டூரிஸ்ட்டு களால்தான். எங்கு திரும்பினாலும் நயாகராவுக்கு வழி போட்டிருந்தது. பஸ் வெண்ணெய் போலச் செல்ல, தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சி சுந்தரமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அங்கங்கே ஒளிந்துகொண்டு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்தது. நயாகரா, கனடா அமெரிக்க எல்லையில் இருப்பது உங்களில் ஜியாக்ரஃபி தெரிந்தவருக்குத் தெரிந்திருக்கும். கனடா சைடிலிருந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கேள்வி. எங்களிடம் கனடியன் விசா இல்லை. அதற்கு மனுப் போடாமலிருந்தது என் மனைவிக்குக் குறை. ஷேக்ஸ்பியரின் ரோஜா போல, ஒரு நீர்வீழ்ச்சியை கனடாவிலிருந்து பார்த்தாலும் அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் அது நீர்வீழ்ச்சிதான் என்பது என் சித்தாந்தம். பிஸ்வாஸைக் கேட்டேன், ”கனடியன் விசா இருக்கிறதா?”
”இல்லை. ஆனால், தற்காலிகமாக விசா தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”
”நான் கேள்விப்பட்டது, அதெல்லாம் கிடையாது. ஒரு வாரம் முந்தி மனுப் போட்டால்தான் கிடைக்கும் என்று.”
”கேட்டுப் பார்க்கலாம்! கொடுக்காமல் போய்விடுகிறார்களா, பார்த்துவிடலாம்.”
பஸ் டிரைவர் சிரித்துக்கொண்டே நால்வரையும் இறக்கிவிட்டு, ”அதோ பார் ஓட்டல்” என்று காட்டிவிட்டு விலகினான்.
பிரமாதமாகத்தான் இருந்தது ஓட்டல் கட்டடம், சொன்னதெல்லாம் சரிதான். நயாகரா நீர்விழ்ச்சி அருகிலேயே இருப்பது தெரிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ”பிஸ்வாஸ் நீங்கள் சரியாகக் கேட்டுக்கொண்டீர்களா? தினத்துக்குப் பதினைந்து டாலர் சொன்னானா? மணிக்கு பதினைந்து டாலரா?”
”தினத்துக்குத்தான். நீ வாயேன்” என்றார்.
அந்தப் பளபளப்பான ஓட்டல் கட்டடத்தில் போய் விசாரித்ததில் நாங்கள் தேடிச் சென்ற ந்யூ மெட்ரோ அதில்லை என்றும் அதற்கு அடுத்த கட்டடம் என்றும் தெரிய வந்தது.
”அடுத்த கட்டடமா? கட்டடமில்லையே! காலி மனையல்லவா இருக்கிறது?”
‘உன்னிப்பாகப் பாருங்கள் தெரியும்.”
பார்த்ததில் சின்னதாக ஒரு அமெரிக்கக் குடிசை போல ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் மூஞ்சியையே மறைக்குமாறு ‘ஓட்டல் மெட்ரோ வேகன்ஸி’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது. அருகே சென்று பார்த்ததில் ஒற்றை மாடியுடன் மே ஃபிளவர் தினங்களில் கட்டிய கட்டடம் போல ஒன்று தெரிந்தது. வாயிற் கதவில் மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தியதில் சப்தம் வரவில்லை. கதவைத் தட்டினதில் லேசாகப் பொடி தூவித் திறந்துகொண்டது. உள்ளே டெலிவிஷன் அருகில் படுத்திருந்த நாய் என்னை ஒற்றைக் கண்ணால் பார்த்தது. இதுதான் ஓனரோ என்ற சந்தேகம் உடனே தீர்ந்தது. சுமார் எண்பது வயசு மதிக்கத்தக்க ஒரு கிழவர் மூக்கைத் தக்காளி நிறத்துக்குத் தேய்த்துக்கொண்டு வந்தார்.
”இங்கே ரூம் இருப்பதாக..?”
‘ட்வென்டி டாலர்ஸ்!”
”பஸ் டிரைவர் பதினைந்து என்று சொன்னான்.”
”ஓ.கே, ஃபிஃப்டீன்டாலர்ஸ்!” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து விரைவில் பதினைந்து பதினைந்து டாலருக்கு இரண்டு ரசீது எழுதி, ”ஐ டேக் அட்வான்ஸ்” என்றார்.
”ரூமைப் பர்க்கலாமா” என்றார் சின்ஹா.
”குட் ரூம், பே ஃபிஃப்டீன் டாலர்ஸ்.”
அட்வான்ஸாகப் பதினைந்து டாலர் கொடுத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட அறையை நோக்கிப் போனோம். சாவியைத் துவாரத்தில் தொடுவதற்கு முன்னமேயே கதவு திறந்துகொண்டது. உள்ளே ரூமை ஏழில் எட்டு பாகம் ஒரு கட்டில் அடைத்திருந்தது. குட்டியாக மேசை போட்டு, அதன் மேல் மேசை விளக்கு வைத்திருந்தது. உத்தரத்தில் இருந்த விளக்கைப் போடுவதற்கு ஸ்விட்சுடன் ஒரு கயிறு கட்டியிருந்தது. அதை இழுத்துப் பார்த்ததில், மாடியில் தடால் என்று உருண்ட சப்தம் கேட்டது.
பிஸ்வாஸ் என் அறையை எட்டிப் பார்த்து, ”உன் அறையும் இப்படித்தானா? ரொம்ப மோசம், இதற்குப் போய் பதினைந்து டாலரா? வழிப்பறி. கிழவனிடம் போய்ப் பணத்தைக் கேட்டு வேறு ஓட்டலுக்குப் போகலாம்” என்றார்.
”பாத்ரூம் எங்கே இருக்கிறது?” என்று என் மனைவி கேட்க, அந்த ஓட்டலில் தங்குபவர்கள் அத்தனை பேருக்கும், கிழவனுக்கும், நாய்க்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் என்பது தெரிய வந்தத
ு.
”வேண்டாம். வேறு இடத்துக்குப் போய்விடலாம்” என்றான் பிஸ்வாஸ்.
”நீதானே இங்கே அழைத்து வந்தாய்” என்றார் சின்ஹா.
”நீதான் பதினைந்து டாலரில் அறை வேண்டும் என்றாய்” என்றார் பிஸ். ‘நீதான் நீதான்…’ என்று இரண்டு பேரும் அடிதடிக்கு வந்துவிட்டார்கள். இடம் போதவில்லை.
”இது என்ன சோப்பா, மெழுகுவத்தியா?” என்று டேபிள் விளக்கை சின்ஹா போட்டுப் பார்க்க, ‘ஊய்’ என்று ஷாக் அடித்து விளக்கிலிருந்து பிசுபிசு என்று புகை வந்தது. விளக்கின் அடியில் ”டோண்ட் ஸ்விட்ச் ஆன்” என்று எழுதியிருந்தது. ”அமெரிக்காவில்கூட இந்த மாதிரி ஓட்டல் இருக்கிறது ஆச்சர்யம்தான்” என்றேன்.
”எங்கே அந்தக் கிழவன்?” என்று கீழே போய் விசாரிக்கப் போன பிஸ்வாஸ் உடனே திரும்பிவிட்டார். ”நாய் துரத்தறது” என்றார்.
”பதினைந்து டாலர் கொடுத்தாகிவிட்டது. ராத்திரி படுக்க மட்டும்தான் இந்த இடம்! என்ன போச்சு? முகம் கழுவிக்கொண்டு வாருங்கள். நயாகரா போய்ப் பார்க்கலாம்” என்றேன்.
நாய் போனதும் சின்ஹா பாத்ரூம் போய்விட்டார். கால்மணி கழித்து பிஸ்வாஸ் பாத்ரூம் வாசலில் காத்திருப்பது தெரிந்தது. ”இந்த ஆள் எப்போதும் இப்படித்தான். பாத்ரூம் போனால் ஒரு மணி நேரம்!” என்றார்.
”சேச்சே ! இவ்வளவு மோசம் என்று தெரியாமல் போய்விட்டது. ராஸ்கல் அந்த டிரைவரை உதைக்க வேண்டும். சின்ஹா! என்ன தூங்கிவிட்டாயா!”
அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று என் மனைவியை அவசரப்படுத்தி, வேறு ரூட்டாக நடந்து போய் நயாகரா பார்க்கச் சென்றோம். அங்கே நயாகராவின் அடிமடிக்கே அழைத்துப் போகும் படகுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு க்யூவில் போய் நின்றால், ”ரொங்கோ ரோஜன்” என்று கேட்க பின்னால் சின்ஹாவும் பிஸ்வாசும்!
நயாகராவில் எத்தனை காலன் ஒரு நிமிஷத்துக்கு ஊற்றுகிறது. எத்தனை மெகா வாட் சக்தி பண்ணுகிறார்கள், எத்தனை அழகு என்றெல்லாம் விவரம் கொடுத்து உங்களை அறுக்க விரும்பவில்லை. நயாகராவில் எனக்குப் பிடித்தது படகு அதன் அடியில் செல்லும்போது ஆரவாரமும் நம்மேல் படரும் குளிர் மழையும்தான். இந்தக் குளிர் மழையில் சின்ஹாவை பிஸ்வாசும், பிஸ்ஸை சின்னும் படம் பிடிக்க, காமிரா லென்ஸ் முழுவதும் நீர் கோத்துக்கொண்டுவிட, ‘சொன்னேன். கேட்டாயா?’ என்று நயாகராவைவிடச் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். படகைவிட்டு மேலே வந்து நாங்கள் கழன்றுகொள்ள விருப்பப்பட, ”வா கனடா பகுதிக்கு நடந்து போகலாம்” என்றார் பிஸ்வாஸ். ”வேண்டாம் விசா கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்ல, ”யார் சொன்னது? பாஸ்போர்ட்டுகளை சரண்டர் பண்ணிவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். அங்கேயிருந்து பார்ப்பதுதான் உத்தமம்” என்றார்.
நிஜமாகவே இங்கிருந்து தெரிந்த கனடியப் பகுதி கலகலப்பாகத்தான் இருந்தது. வ்யூவிங் டவர், வண்ண வண்ண விளக்குகள், ஜிலுஜிலுப்பு எல்லாமாக ஆசை காட்டியது. போய்த்தான் பார்க்கலாமே என்று பாலத்தைக் கடந்து கனடியப் பகுதிக்குச் சென்றோம். வாட்டசாட்டமாக ஒரு போலீஸ்காரி, ”லெட் மி ஸீ யுவர் பாஸ்போர்ட்ஸ்” என்றாள். ஆளுக்கு ஐந்து சென்ட் வாங்கிக்கொண்டாள். ”இங்கே நில்லுங்கள் பிஸ்வாஸ்” என்று பவ்யமாகச் சொன்னாள். ‘பார்த்தாயா!’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். காத்திருந்தோம். அந்தப் பெண் மற்றொரு அதிகாரியைக் கொண்டுவந்து எங்களைச் சுட்டிக்காட்டினாள். பற்பல அமெரிக்கர்கள் உற்சாகமாக லைனைக் கடந்து சென்றுகொண்டிருக்க, எங்கள் நாலு பேரை மட்டும் தண்டையார்பேட்டை ஐ.டி. ஆஸ்பத்திரியில் போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். மற்றொரு வெள்ளைகார ஆபீஸர் வந்து இடது கையால் எங்கள் பெயர்களை ஒரு ஃபாரத்தில் எழுதி நிரப்பி, ”விசா இல்லை. அது இல்லாமல் கனடிய மண்ணில் அனுமதி கிடையாது. திரும்ப அமெரிக்கா செல்லுங்கள்” என்றார்.
சின்ஹாவுக்குக் கோபம். ”எதற்காக எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல முடியுமா?”
”விசா இல்லை. அனுமதி இல்லை.”
”நாங்கள் இந்தியர்கள் என்பதால்தானே இந்த மாதிரி நடத்துகிறீர்கள்?”
”அதெல்லாம் இல்லை.”
”அமெரிக்கர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள்?”
”அவர்களிடம் விசா இருக்கிறது.”
”எப்படித் தெரியும்?”
”எங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதிகம் வாதாடினால் உங்களைச் சிறைக்கு அனுப்புவோம்” என்று காகிதங்களை எங்களிடம் கொடுத்தார்.
”இந்தக் காகிதங்களை நயாகராவிலேயே போடுகிறோம்” என்று பிஸ்வாஸ் சிரித்தார்.
”அது உங்கள் இஷ்டம்! இந்தக் காகிதம் இல்லையென்றால் மறுபடி அமெரிக்காவில் அனுமதி கிடைக்காது. உங்கள் வாழ்நாளை இந்தப் பாலத்தின் மத்தியிலேயே கழிக்க விருப்பமென்றால் சரி.”
நான் அவசரமாகக் காகிதங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.
சின்ஹா திரும்பும் வழியெல்லாம், ”இந்தியர்கள் என்றால் எவ்வளவு மட்டமாக ட்ரீட் பண்ணுகிறார்கள்” என்று அரற்றிக் கொண்டே வந்தார்.
”நாம் அந்த மாதிரி நடந்துகொள்கிறோம்” என்றார் பிஸ்வாஸ்.
”நாம் என்ன தப்பாக நடந்துகொண்டுவிட்டோம்?”
”இல்லீகல் இமிக்ரேஷன்.”
”அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”
”உனக்குத்தான் தெரியுமோ?”
இருவரும் கனடிய அமெரிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டு இரைச்சலாகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். கம்யூனிஸம், மார்க்ஸிஸம், விவேகானந்தா… என்று என்னென்னவோ வார்த்தைகள் எல்லாம் கேட்க, நான் மனைவியை அழைத்துக்கொண்டு விரைவாக நடக்க, சட்டென்று பிஸ்வாஸ், ”ரொங்கொரோஜன் எங்கே போகிறாய்?” என்று காலரைப் பிடித்து நிறுத்தினார். விதியே என்று நடந்து அமெரிக்கப் பகுதிக்கு வந்தோம்.
சின்ஹா தாகமாக இருக்கிறது என்று கோக்கோ கோலா மெஷினில் ஒரு ஐம்பது சென்ட் நாணயத்தைப் போட்டார். அமெரிக்காவில் இருந்த ஒரே ஒரு பழுதடைந்த கொக்கோ கோலா மெஷின் அது. காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்தது.
சின்ஹா அதை அடித்து உதைத்து பற்பல சித்ரவதைகள் செய்து பார்த்தார். ஹ§ம்! போட்ட காசையோ, கோக்கோ கோலாவையோ தர மாட்டேன் என்று சொல்லிவிட்டது.
”அமெரிக்கர்கள் இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் அடைந்து என்ன பிரயோசனம்? ஒரு கோக்கோ கோலா மிஷினைச் சரியாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையே!”
”உனக்கு ஒரு கோக்கோ கோலா கிடைக்கவில்லை என்றால் மேற்கத்திய நாகரிகத்தைச் சாடுவது என்ன நியாயம்?”
”இதெல்லாம் வைத்து என்ன பிரயோசனம்? ஒழுங்காக வைக்க வேண்டும், இல்லை மிஷின் வைக்கவே கூடாது.”
”இந்த ஒரு மிஷின் வேலை செய்யவில்லை. எத்தனை மிஷின் வேலை செய்திருக்கிறது அதாவது எத்தனை கோக் சாப்பிட்டிருக்கிறோம்.”
”தட்ஸ் நாட் தி பாயின்ட்.”
”தட் இஸ் தி பாயின்ட்!”
”நீ ஒரு பூர்ஷ்வா… அடிவருடி!”
”நீ ஒரு சிவப்பு எலி…”
யார் சிவப்பு எலியோ, இரண்டு பேருக்கும் முகம் சிவந்து போனதென்னவோ வாஸ்தவம்.
கம்யூனிஸம் காபிடலிஸம் என்று குடுமியைப் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து, ”வா ஓடலாம்!” என்றேன்.
அதிகாலை எழுந்து சொல்லாமல்கொள்ளாமல் பஸ் ஏறி திரும்ப ப்ளேன் பிடித்து, உட்கார்ந்ததும் பெருமூச்சுவிட்டேன்.
”அப்பாடா ஒழிஞ்சாங்க.”
”ரொங்கோரோஜன்!” என்று பின் ஸீட்டில் ஒரு குரல் கேட்டது!