Thursday, July 05, 2012

சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த ஜெ. + கலைஞர் குடும்பத்துக்கு 2 ஜி ஊழலில் ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?? ,

http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg 

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.



இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.



இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:



நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.


http://athikalai.files.wordpress.com/2011/02/2g-cartoon.jpg


 2. கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.



தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.


அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.



223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.



ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvtwsqNWE6NDerOtPlFj37dlMW7JyoLhTBcIgiMVRI1cE1MJRwRcXBwHDOWa8-KCIjD-yU78MmL7FLhX7ZmUxdrYk5wR31E0g9SMH2siGTnQaAZrP-MP6Fdimy3EEcsrqQPlnc4Whp4pnN/s1600/tamilmakkalkural_blogspot_madan_cartoon.jpg


நன்றி - தினமணி , மதி , தின மலர்