Sunday, June 03, 2012

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை நகர வளர்ச்சியில் முதல் பாய்ச்சல் நடந்தது 1670-களில். சென்னை கோட்டையில் இருந்து பரங்கிமலை வரை மவுன்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்கிய காலகட்டம் அது. இன்றைய முழு வடிவத்தை மவுன்ட் ரோடு அடைய கிட்டத்தட்ட 130 வருடங்கள் பிடித்தன.


அந்தச் சாலையையட்டிதான் வளர்ந்தது சென்னை. இரண்டாவது பாய்ச்சல் 1856-ல் நடந்தது, ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் ஓடத் தொடங்கியபோது. 1875-ல் தொடங்கிய துறைமுக மேம்பாட்டுப் பணியை மூன்றாவது பாய்ச்சல் என்று சொல்லலாம். இப்போது நான்காவது பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறது சென்னை!

பெருநகரத்தின் பெரும் சவால்!

16 நகராட்சிகள், 20 நகரப் பஞ்சாயத்துகள், 214 கிராமங்கள் என 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிந்துகிடக்கும் சென்னைப் பெருநகரின் மிகப் பெரிய சவால் அதன் போக்குவரத்து. சென்னையைச் சுற்றி 732 தடங்களில் 3,500 பஸ்களை இயக்குகிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம். சென்னை கடற்கரை - தாம்பரம்; சென்ட்ரல் - அரக்கோணம்; சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பாதைகளில் 450 ரயில் சேவைகளை அளிக்கின்றன புறநகர் ரயில்கள்.


சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 62 ரயில் சேவைகளை அளிக்கின்றன பறக்கும் ரயில்கள். ஆனால், 50 சதவிகிதத்தினருக்குக்கூட இவை போதுமானவையாக இல்லை.


 பெருகும் லட்சக் கணக்கான கார்களாலும் மோட்டார் சைக்கிள்களாலும் சென்னையின் சாலைகள் நிரம்பி வழிகின்றன. துறைமுகத்துக்குள் செல்ல வாரக்கணக்கில் லாரிகள் அணிவகுத்துக் காத்திருக்கும் எண்ணூர் துறைமுகச் சாலையும் வண்டலூர் தொட்டதுமே வாகனங்கள் முக்கிமுக்கி நகரும் திருச்சி நெடுஞ்சாலையும் உதாரணங்கள். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க பொதுப்போக்கு வரத்தும் முக்கியமான நடவடிக்கை களில் ஒன்று.


 ஆனால், சென்னையில் அது பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குக் குறித்த நேரத்துக்குள் செல்ல வசதியாக ரயில் - பஸ் போக்குவரத்து இணைப்பு இல்லாதது. இந்தக் குறையைக் களையப்போகும் முதல் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவையைக் குறிப்பிட லாம்.


மெட்ரோ நல்ல மெட்ரோ!

14,600 கோடியில் நிர்மாணிக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை இரு தடங்களைக்கொண்டது. முதல் தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலானது.

23.1 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி - உயர் நீதிமன்றம் - சென்ட்ரல் ரயில் நிலையம் - தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான 14.3 கி.மீ. பாதை நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை யாக அமைக்கப்படுகிறது. சின்னமலை முதல் கிண்டி - ஆலந்தூர் - விமான நிலை யம் வரையிலான 8.7 கி.மீ. பாதை உயர் நிலைப் பாலத்தில் அமைக்கப்படுகிறது.


 இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலானது இரண்டாவது தடம். 22 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் - கீழ்ப்பாக்கம் - ஷெனாய் நகர் - திருமங்கலம் வரையி லான 9.7 கி.மீ. பாதை சுரங்கப் பாதையாக அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் அரும்பாக்கம் - வடபழனி - ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலான 12.3 கி.மீ. பாதை உயர்நிலைப் பாலத்தில் அமைக்கப்படு கிறது.


உயர்நிலைப் பாலத்தில், தரையில் இருந்து சுமார் 12 மீட்டர் உயரத்திலும் சுரங்கப் பாதையில் 17 மீட்டர் ஆழத்திலும் ரயில்கள் ஓடவிருக்கின்றன.

''முதல் கட்டமாக கோயம்பேடு - பரங்கிமலை வரையிலான பணிகள் 2013 டிசம்பருக்குள் முடியும்; முழுப் பணியும் 2015 டிசம்பருக்குள் முடியும்!'' என்கிறார் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பொது மேலாளரான க.ராஜாராமன்.


ஒரு ரயில் = 600 மோட்டார் சைக்கிள்கள்!


ஆறு பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1,580 பேர் பயணிக்கலாம். ஒரு தடத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கள். எனில், அலுவலக நேரத்தில் ஒரு மணிக்கு இரு தடங்களிலும் 54,162 பேர் பயணிக்கலாம்.


அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் 35 கி.மீ. நீங்கள் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு 45 நிமிடங்களில் வந்துவிட முடியும் (இதே பயணத்தை பஸ்ஸில் மேற்கொள்ள ஒன்றரை மணி நேரம் ஆகும்). மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்போது, ஒரே டிக்கெட்டில் ரயில்களிலும் பஸ்களிலும் பயணம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதால், ஒரு மெட்ரோ ரயில் 16 பஸ்கள் அல்லது 300 கார்கள் அல்லது 600 மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


விசேஷமான 2016

சென்னைக்கு 2016 விசேஷமான ஆண்டாக அமையலாம். டெல்லிக்கோ, பெங்களூருக்கோ அமைந்ததுபோல, மெட்ரோ ரயில் திட்டம் இங்கு மேலும் ஒரு வசதியாக மட்டும் அமையப்போவது இல்லை. அது இன்னொரு பெரிய அடித்தளமும் ஆகும்.



 தமிழக அரசு ஒரு பிரமாண்ட திட்டத்தில் இருக்கிறது. மேற்கில் ஸ்ரீபெரும்புதூர், தெற்கில் காஞ்சிபுரம், வடக்கில் திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களின் பகுதிகளையும் இணைத்து 2016-க்குள் 8 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட நகரமாக சென்னையை விரிவாக்க விரும்புகிறது அரசு.


 இப்போது இருப்பதைப் போல, கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிய நகரமாக சென்னை உருவாகும்போது, அதற்கான முக்கியமான அடித்தளமாக மெட்ரோ ரயில் பாதை அமையும். பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணி முடிந்து வேளச்சேரி - பரங்கிமலை இடையே ரயில் இயங்கும்போது மெட்ரோ ரயில் சேவைக்கும் பறக்கும் ரயில் சேவைக் கும் புறநகர் ரயில் சேவைக்கும் இடையே முழுத் தொடர்பு உருவாகும்.

அப்போ மோனோ?

இதற்கிடையே, மோனோ ரயில் திட்டம் நான்கு வழித்தடங்களில் கொண்டுவரப்பட உள்ளது. வண்டலூர் - வேளச்சேரி,  பூந்த மல்லி - கிண்டி, பூந்தமல்லி - வடபழனி,வண்ட லூர் - புழல் என நான்கு வழித் தடங்கள். 'மோனோ வெற்றிகரமான திட்டமா’ என்ற விவாதங்களைக் கண்டுகொள்ளாமல், அரசு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழு முனைப்போடு இருக்கிறது.


தொடரவிருக்கும் திட்டங்கள்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ள நிலையில், அங்கு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் பல திட்டங்கள் மெட்ரோ ரயில் ஓடும் பாதைகளாக அமையலாம். 2025 வாக்கில் திட்டமிட்டபடி இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக நிறைவேறினால், அப்போது உலகின் பெரிய நகரங்களில் ஒன்றான 'கிரேட்டர் சென்னை’யை நெருக்கடி இல்லாமல் நாம் பார்க்கலாம்!


நன்றி - விகடன்