Thursday, May 10, 2012

கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் -தடுப்பது எப்படி?

ன்றிக் காய்ச்சல் பரவுகிறது’ என்று பீதி பரவுகிறது. 'காலரா தாக்குகிறது’ என்று எகிறுகிறது பதற்றம். விநோத வைரஸ் காய்ச்சல் வாரக்கணக்கில் ஆட்களை முடக்கிப்போடுகிறது என்று மறுபுறம் வதந்தி. சாதாரணக் காய்ச்சல்தான்... ஆனால், அசாதாரணப் பாதிப்புகளை உண்டாக்கி விடும் கோடை காலக் காய்ச்சல்கள்.


 கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் என்னென்ன; அவை வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி; வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலக்ஷ்மியும் ஓய்வுபெற்ற மாநகராட்சி பொதுமருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜனும் விளக்குகிறார்கள்.


1. வைரஸ் காய்ச்சல்


இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பினால் வரும் காய்ச்சல் இது. நாள் முழுவதும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடுமையான உடம்பு வலி இருக்கும். தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி இருமல் ஏற்படலாம். ஆனால், சளிப் பிரச்னை இருக்காது. அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். சாதாரண பாரசிட்டமால் மாத்திரை போதுமானது.


 ஆனால், ஓய்வு முக்கியம். மருந்து மாத்திரை போட்டுக்கொண்டு வேலை செய்து உடலை வருத்திக்கொள்வதைவிட, ஓய்வு எடுத்தாலே குணமாகிவிடும். நீர்ச் சத்து மிக்க பழங்கள், பழச் சாறு, மோர், தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



2. மலேரியா


மலேரியா நான்கு வகையான வைரஸ் களால் உருவாகிறது. பொதுவாக, தமிழகத்தில் வைவாக்ஸ் என்கிற வைரஸ் மூலமாகவே மலேரியா உருவாகும். இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால், சமீப காலமாக வட மாநிலப் பயணிகள் மூலம் ஃபால்சிபேரம் என்கிற வைரஸ் மூலம் ஒருவிதக் காய்ச்சல் பரவுகிறது. இது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. 


ஆகையால், அதீத எச்சரிக்கை அவசியம். மலேரியாவுக்கு முக்கியமான காரணம் கொசுக்கள். மலேரியாவைப் பரவச் செய்யும் அனாஃபிலஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் வளரும். எனவே, நீர்நிலைகள், வீடுகளில் தண்ணீர்த் தொட்டிகளில் டெமிஃபாஸ் என்கிற மருந்தை வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரில் தெளிக்கலாம் (இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது). 


ஆனால், இந்த மருந்து வெளியே கிடைக்காது; உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும்தான் கிடைக்கும். ஆகையால், உங்கள் ஊர்/பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுங்கள். இதேபோல, வீட்டி லும் தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.



அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டுத் தாக்கும் கடும் குளிர்க் காய்ச்சலும் கடும் தலைவலியும் இதற்கான அறிகுறிகள். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், 'குளோரோக்வைன் ப்ரைமாக்வைன்’ மருந்தை எடுத்துக்கொண்டால், மலேரியா மூன்று, நான்கு நாட்களில் சரியாகும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும்.



3. டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு காய்ச்சலுக்கும் சூத்திரதாரிகள் கொசுக்கள்தான். எய்டெஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்களும் சுத்தமான நீரில்தான் வாழும். சிக்குன் குனியாவுக்கும் இதே கொசுக்கள்தான் காரணம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், மூன்று நாட்கள் வரை நல்ல காய்ச்சல் இருக்கும். இதைத் தொடர்ந்து கண் வலிக்கும். பின்பு கடுமை யான தலைவலி உருவாகும். இது எலும்பு களைப் பாதிப்பதால், மூட்டுப் பகுதிகள் அதிக வலியெடுக்கும்.


 வீரியம் அதிகமா னால், மூக்கில் இருந்து ரத்தம் வெளிப்படும். அதிகபட்சம் மூன்று நான்கு நாட்கள்தான் நீடிக்கும். சிக்குன் குனியாவுக்கும் கிட்டத் தட்ட இதே அறிகுறிகள்தான். முதியவர் களை அதிகம் பாதிக்கும். காய்ச்சல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், மூட்டு வலி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இந்த இரு வகைக் காய்ச்சலுக்குமே 'பாரசிட்டமால்’ மாத்திரைதான் வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ஐஸ் ஒத்தட மும் குழந்தைகளுக்கு மிதமான தண்ணீரில் ஒத்தடமும் கொடுக்கலாம். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். நல்ல சத்து மிக்க ஆகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


4. டைஃபாய்டு


சால்மோனெல்லா என்கிற பாக்டீரியாவால் டைஃபாய்டு உருவாகிறது. தமிழில் இதைக் குடல் அம்மை நோய் என்பார்கள். டைஃபாய்டு ஏற்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சல் கடுமையாகும். தொடர்ந்து பசியின்மை, உடல் எடை குறைதல், பேதி உருவாகும். காய்ச்சல் வந்து ஒரு வாரம் கழிந்த நிலையில்தான் பரிசோதித்து, அதை உறுதிசெய்துகொள்ள முடியும்.


 இந்த நோயால், பாதிக்கப்பட்ட வர்கள் கார உணவுகளைத் தவிர்த்து, வயிற்றைப் புண்ணாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 'பாரசிட்டமால்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குத் தடுப்பு ஊசி உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இதைப் போட்டுக் கொண்டால், டைஃபாய்டு வராமல் தவிர்க்க முடியும். நீர்ச் சத்து மிக்க, மிதமான உணவாகச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.


5. சின்ன அம்மை


சின்ன அம்மை 'வேரிசெல்லா’ என்கிற வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது. 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும். 


அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயாளி இருக்கும் இடம் மிகுந்த சுத்தத்தோடு இருக்க வேண்டும். தடுப்பு ஊசி உண்டு.


6. பன்றிக் காய்ச்சல்


ஹெச்-1 என்-1 என்கிற கிருமி மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் முதல் 24 மணி நேரத்துக்குக் காய்ச்சல் குறையாது. இது நுரையீரலைப் பாதிப்பதால், சளிப் பிரச்னையோடு மூச்சுத் திணறலும் இருக்கும். கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழியும். இவை தான் அறிகுறிகள். இந்தப் பிரச்னை கள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகளையோ, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 


பன்றிக் காய்ச்சல்தான் என்று உறுதிப்படுத்தப் பட்டால், உடனடியாக இதற்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பாதிக் கப்பட்டவரை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், பன்றிக் காய்ச்சலுக்கு எல்லா மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவமனைகளில் 'ஓஸ்டில் டாமிவிர்’ என்கிற மாத்திரை கொடுக்கப் படுகிறது.


இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 


ஆஸ்துமா, சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.



முக்கியமான மூன்று...


கோடைக் காலத்தில் எல்லா வகையான காய்ச்சலில் இருந்தும் தப்பிக்க மூன்று விஷயங்கள்தான். 


1. கொசுக்களை அண்ட விடாதீர்கள்; 


2. தண்ணீர் நிறையக் குடியுங்கள், நீர்ச் சத்து மிக்க, ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளுங்கள்; 



3.சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுங்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள்!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.