Thursday, May 03, 2012

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!




மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்




டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.