ஆரோக்யமான சினிமாக்கள் தமிழில் அபூர்வமாகத்தான் வருகின்றன. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அளவு புதிய கண்ணோட்டத்தில், வித்தியாசமான கதை அம்சத்தில் வந்த படங்கள் எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால் 14 படங்கள் 2011-ல் தேறியன..
அவற்றைப்பற்றி பார்க்கும் முன் அஜித், விஜய் போன்ற மசாலா ஹீரோ ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை. கமர்ஷியல் சக்சஸ் படங்கள் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.. அதற்காக எதிர்பாராத வெற்றி பெற்ற படங்களை விட்டு விடவும் இல்லை.. மசாலா சேர்ப்புகள் அதிகம் இல்லாத , நவீனமான கோணத்தில் கதை சொன்ன படங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது..
முதல் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 படங்கள் முதலில் வெங்காயம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய வெங்காயம்- சிறந்த சமூக சீர்திருத்தப்படம்.. விழிப்புணர்வுப்படமான இதில் நரபலி எதிர்ப்பு,மூட நம்பிக்கை,ஜாதகப்பைத்தியங்களால் நேரும் இழப்புகள், வலிகள் பற்றி எந்த விதமான கமர்ஷியல் நோக்கு இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.. ஆனால் கதையின் மைய இழையில் 8 வயசு சிறுவர்கள் ரமணா ரேஞ்சுக்கு ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுதல் போலீஸ்க்கு தண்ணி காட்டல் என்று திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம்..
அடுத்து தேசிய விருது பெற்ற ஆடுகளம்.. கமர்ஷியலாகவும் இந்தப்படம் நல்லா போச்சு. சேவல் சண்டை பற்றி முழுதான முதல் பதிவாக இந்தப்படம் அமைந்தது. ஆனால் படத்தில் வன்முறை அதிகம்.. பார்க்கும் ஜனங்களுக்கு மென்மையான உணர்வுகளை தூண்டுவதே நல்ல படம் என்று நான் நினைப்பதால் இந்தப்படம் தகுதி இழந்தது..ஆனாலும் வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா? பாடல் காட்சி உட்பட பல இடங்களில் தனுஷ் நடிப்பு கன கச்சிதம்.. அவர் லுங்கியை முகத்துக்கு நேர் மறைத்து ஆடிய துள்ளாட்டம் திருடா திருடி மன்மதா ராசா பாட்டுக்கு கிட்டே வந்தது..
விக்ரம்-ன் தெய்வத்திருமகள் - சாராவின் நடிப்பு டாப்.. விக்ரம் நடிப்பு க்ளைமாக்ஸில் கண் கலங்க வைத்தது. இருந்தாலும் இது 2 காரணங்களுக்காக தகுதி இழக்கிறது 1. விக்ரமின் நடிப்பில் ஆங்காங்கே செயற்கை இழை தட்டியது..2 படத்தின் பின் பாதியில் பல லாஜிக் ஓட்டைகள் , இருந்தாலும் இது பார்க்க வேண்டிய படமே..
ஆண்டின் கடைசியில் வந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தது.மகான் கணக்கு தனியார் வங்கிகள்-ன் அபத்தங்களை, முறைகேடுகளை சவுக்கடி அடித்து கேள்வி கேட்டது.. வசனங்கள் செம.. ஆனால் தேவை இல்லாமல் காதல், ஊடல் எல்லாம் கொஞ்சம் புகுத்தி கொஞ்சம் சொதப்பிட்டாங்க.. இந்தப்படத்தில் சீமான் ஹீரோவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
10. பயணம் - ராதாமோகன் அழகிய தீயே , அபியும் நானும் என்று வரிசையாக மென்மையான படங்களில் கவனம் செலுத்தி வெற்றி கண்டவர்.. இவர் பார்வையில் எல்லோரும் நல்லோரே எனும் கான்செப்ட் ரொம்ப பிடிக்கும்.. பிரகாஷ் ராஜ் நல்ல சினிமா ரசிகர். அவர் தயாரிப்பில் நடிப்பில் வந்த படம், விமானக்கடத்தல் தான் படம் என்றாலும் அதிலும் முடிந்த வரை காமெடி கலந்து கொடுத்தது சாமார்த்தியம்.. ஒரே குறை 1998-ல் வந்த பட்டுக்கோட்டை பிரபகர் எழுதிய ஒரு நாவலின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டதே.. ( எ நாவல் டைம்)
9. வாகை சூடவா - பீரியடு ஃபிலிம் எடுப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. கிராமத்துக்கல்வியின் தேவையை உணர்த்தும் படம்.. முடிஞ்ச வரை பிரச்சார நெடி இல்லாமல் இருந்தது.. விமல், இனியாவின் நடிப்பு மிக யதார்த்தம்.. சாரக்காத்து வீசும்போது பாட்டு யூ டியூப்பில் சக்கை போடு போட்டது.. கே பாக்யராஜ்-ன் முந்தானை முடிச்சு, சத்ய ராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி இவற்றின் கலவையாக திரைக்கதை இருந்தது ஒரு குறை. ஆனாலும் ஒளிப்பதிவு, மண் வாசனைக்காக பார்க்க வேண்டிய படம்..
8. குள்ளநரிக்கூட்டம் - போலீஸ் செலக்ஷனில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய படம்.. இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் இவ்வளவு டீட்டெயிலாக போலீஸ் செலக்ஷன் காட்டப்படவே இல்லை.. கமலின் காக்கி சட்டையில் கோடி காட்டினார்கள்.. தில் படத்தில் கொஞ்சம்.. சத்தம் இல்லாமல் வந்த படம்.. ஆனால் டைட்டில் இந்தப்படத்துக்கு மகா மைனஸ்.. ஒரு படத்துக்கு டைட்டிலும், போஸ்டர் டிசைனும் எவ்வளவு முக்கியம் என்பது இந்தப்படம் எடுபடாமல் ( எதிர்பார்த்த அளவு)போனதில் இருந்து தெரிந்தது.. படத்தின் முன் பாதியில் சும்மா ராங்க் கால் வெச்சே ஹீரோ ஹீரோயின் லவ் டெவலப் ஆவது செம ஸ்பீடு திரைக்கதை வித்தை.. ஆனால் சில பத்திரிக்கைகள் அது சுமார் ஐடியா தான் என சொன்னது எனக்கு ஆச்சரியம்.. காதல் காட்சிகள் மிக கண்ணியமாக இருந்தன..
7. முரண் - தமிழ் சினிமாவில் அழகிய வில்லன்களே வருவது இல்லை.. முகத்தில் அம்மைத்தழும்புகளுடன் கர்ண கடூரமாக வந்தாத்தான் அவன் வில்லனா? என்று பலர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.. பிரசன்னா அவர்கள் வருத்தம் களைய வந்த அழகிய வில்லன்.. இரு மாறுபட்ட குணங்கள் உடைய அறிமுகம் இல்லாத நபர்கள் ஒரு நெடுஞ்சாலைப்பயணத்தில் சந்திப்பதும், அதில் ஒருவன் மட்டும் தன் சுயநலத்துக்காக மற்றவனை தன் தந்தையை கொலை செய்ய சொல்வதும் ஆக வித்தியாசமான ட்ரீட்மெண்ட்.. STRANGERS IN THE TRAIN என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றாலும் தமிழில் இது வர்வேற்கத்தக்க முயற்சியே..
6. காஞ்சனா (முனி -2 ) - ஒரு திகில் படத்தில் பெரும்பாலும் பயப்படத்தான் வைப்பார்கள்.. ஆனால் இதில் காமெடி மிகச்சிறப்பான அளவில் சேர்க்கப்பட்டிருந்தது .. பொதுவாக எந்தப்படமும் முதல் பாகத்தை விட 2ம் பாகம் ஒரு மாற்று கம்மியாத்தான் இருக்கும். இது விதி விலக்கு.. முதல் பாகம் மாமூல், இது செம ஹிட் ஃபார்முலா.. தமிழ் சினிமாவில் வந்த பேய்ப்படங்கள் லிஸ்ட்டில் இதற்கு முக்கியமான இடம் உண்டு.. பலரது கணிப்பையும் மீறி இந்தப்படம் மாபெரும் ஹிட் ஆனது.. திரைக்கதையில் செம விறுவிறுப்பு
5. யுத்தம் செய் - மிஷ்கின் எடுத்த இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் விறுவிறுப்பான திரைக்கதையுடன், சேரனின் யதார்த்தமான நடிப்புடன் வெற்றி பெற்ற படம்.. இந்தப்படத்தில் ஒய் ஜி மகேந்திரனின் வில்லன் நடிப்பும், அவரது மனைவியாக வந்தவரின் க்ளைமாக்ஸ் கோபமும் செம.. பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம்
4. மவுன குரு - எந்த வித ஆரவாரமும் இன்றி டைட்டில்க்கு தகுந்தாற்போல அமைதியாக வந்து செம கலக்கு கலக்கிய படம் இது.. ஒருசாதாரண 2 வரிக்கதை.. அதை வாய்ப்பு இருந்தும் எந்த விதமான ஹீரோயிஸமும் சேர்க்காமல் விறு விறுப்பாக திரைக்கதை அமைத்து படம் எடுத்த விதம் மெச்சக்கூடியது..
3. ஆரண்ய காண்டம் - டைட்டிலிலேயே இயக்குநர் இது ஆண்களுக்கான படம் என உணர்த்தி விடுகிறார்.. இந்தப்படம் எடிட்டிங்க், காமரா ஆங்கிள், நறுக் சுறுக் வசனம் என உலகப்பட ரேஞ்சுக்கு இருந்தது.. நல்ல கம்பெனி சன் டி வி மாதிரி யாராவது மார்க்கெட் பண்ணி இருந்தால் இதன் லெவெலே வேற.. ஜாக்கிஷெராப் வரும் சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இது அனைவரும் பார்க்க வேண்டிய படமே..
2. கோ - கே வி ஆனந்த் இயக்கிய இந்தப்படம் பாலைவன ரோஜாக்கள்க்கு பிறகு பத்திரிக்கைத்துறை அடிப்படையில் எடுக்கப்பட்டு ஹிட் ஆன ஒரு படம்.. ஒளிப்பதிவு, இசை செம.. என்னமோ ஏதோ மின்னி மறையுது.. பாட்டு இந்த ஆண்டின் கலக்கல் பாட்டு.. படத்தில் காட்டப்பட்ட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது.. ஜீவாவின் ஸ்டைலிஸ் ஆக்டிங்க்..படத்துக்கு பலம்.. திரைக்கதையில் தொய்வில்லாத படம்.
1. எங்கேயும் எப்போதும் - இரண்டு மாறுபட்ட லவ் ஜோடிஸ்.. துடுக்குத்தனமான அஞ்சலி, காதலியிடம் பம்பும் ஜெய் இது ஒரு ஜோடி.. அநியாயத்துக்கு உஷார் பார்ட்டியாக வரும் கிராமத்து அநன்யா -சர்வா ஜோடி இரு காதல் கதைகளை பேலன்ஸ் செய்து காட்சிகளை நகர்த்திய விதம் அபாரம்.. வேகமாக போகும் வாகங்களால் ஏற்படும் விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த விதமான டாக்குமெண்ட்ரி ஃபீலிங்க்கும் இல்லாமல் திரைக்கதை அமைத்த விதம் செம.. படம் பார்த்த அனைவருமே அந்த பாதிப்பில் இருந்து வர கொஞ்ச நாள் ஆனது..
படம் பார்த்து வெளி வந்த மக்கள் கொஞ்ச நாள் கண்டிப்பாக வாகனங்களில் மித வேகம் கடை பிடித்திருப்பார்கள்.. அதுவே படத்தின் வெற்றி.. கதையின் டெம்ப்போவை எங்கு எப்படி ஏற்ற வேண்டும் என்ற டெக்னிக்கை மிக பிரமாதமாக கையாண்டதால் இந்த ஆண்டின் சிறந்த படமாக இது அமைகிறது..