Thursday, July 21, 2011

ஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்

aஇவர் சக தோழி செலின் ( ரிசப்ஷனிஸ்ட்)


 பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை பாகம் 3-


பதிவுலகில் எப்படி வெட்டிப்பேச்சு சித்ரா காமெடிக்கும் ,பின்னூட்டத்துக்கும் புகழ் பெற்றவரோ அதே போல கவிதைக்கும் ,சீரியஸ் கட்டுரைகளுக்கும் பெயர் பெற்றவர் இலங்கை வலைப்பதிவர் ஹேமா.இவர் வானம் வெளி வந்த பின்னும் எனும் வலைப்பூவையும்   http://kuzhanthainila.blogspot.com/ உப்புமடச்சந்தி எனும் வலைப்பூவையும் நிர்வகித்து வருகிறார் http://santhyilnaam.blogspot.com/


 தற்போது ஸ்விச்சர்லாந்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக  பணிபுரியும் இவர் அடிப்படையில்
 ஈழத்தமிழருக்கான விடுதலையில் மாறாத ஈடுபாடு கொண்டவர். பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் லிஸ்ட்டில் இவர் 2ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டைப்பற்றியும், தாய்நாட்டு மக்கள் பற்றியும் கண் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சிந்திப்பதால் ,படைப்புகளில் ஈழ விடுதலை பற்றி சிந்திப்பதால் அவர் அந்த இடத்தை பெறுகிறார்,

தன் தாய் தந்தையை இலங்கையில் விட்டு விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அயல் தேசத்தில் பணியாற்றுபவர். அவருடன் ஒரு நேர்காணல்..

பெண் எழுத்து பாகம் 1 படிக்காதவர்கள் இந்த லிங்க் செல்க.

  http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html

பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல் (பெண் எழுத்து பாகம் 2 )  படிக்க http://adrasaka.blogspot.com/2011/05/10.html


. 1.  நீங்க பிளாக் உலகுக்கு வர்றப்ப என்ன நினைச்சு வந்தீங்க? யார் உங்களுக்கு வழி காட்டுனது?

எதுவுமே நினைக்கேல்ல சி.பி திடீரென்று நடந்த சந்தோஷமான நிகழ்வென்றுதான் சொல்லுவன்.நான் இலண்டன் போயிருந்த நேரம் என் வானொலி நணபர் தீபசுதனும், என் தமிழ்நாட்டு நண்பர் அரவிந்தும்தான் வலைத்தளம் தொடங்கக் காரணம்.நான் சிறுவயதிலிருந்தே ஏதாவது கிறுக்கியபடியே இருப்பேன்.

இங்கு வந்தபிறகும் அது தொடர்ந்தது.வானொலிக்கும்,சில இணையத் தளங்களுக்குக் கவிதைப் பகுதிக்கென்று அனுப்பிக்கொண்டிருந்தேன்.அப்போது கிடைத்த அன்பு நண்பர்தான் தீபசுதன்.அரட்டையில் கிடைத்த நண்பர் அரவிந்.இவர்கள் இருவரும்தான் எனக்கு ஊக்கம் தந்து வலைத்தளம் என்று ஒரு ஊடகம் இருப்பதாகச் சொல்லி ஆரம்பித்து வைத்தார்கள்.என்னவென்றே தெரியாது எனக்கு.பின்னூட்டம் போடக்கூட மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன்.இன்று என் எழுத்துக்கள் பதிவில் அழியாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்குத்தான் நன்றி சொல்வேன்.


2. உங்க 2 பிளாக்ல கவிதைக்கு 1, கட்டுரைகளுக்கு 1 என வகைப்படுத்திட்டீங்க.. அது ஏன்?


ஆரம்பத்தில் கவிதை மட்டுமே எழுதுவது என்று நினைப்போடுதான் தொடங்கியிருந்தேன்.பிறகு பிறகு வேறு தளங்களுக்குப் போகும்போது எனக்கும் கொஞ்சம் எழுத வருமே என்கிற நினைப்பு வந்தத்து.அதோடு கவிதைகளில் சிரிக்க முடியவில்லை என்னால்.சிரிக்கலாம் கதைக்கலாம் என்றுதான் உப்புமடச்சந்தியில்  "கதை பேச வாங்கோ" என்று ஆரம்பித்தேன்.


இவர் ஹேமாவின் தோழி,ஈழத்தவரைத் திருமணம் செய்த துருக்கியப் பெண் ஸ்வேதா(பெயரை மாற்றிக்கொண்டவர்)


3. உங்க படைப்புகள் பெரும்பாலும் சோக உணர்வுகள் கொண்டதாகவே இருக்கு.. அது ஏன்?

ம்...இது ஈழத்தவர் எல்லோருக்குமுள்ள விதி.நாடு ,மண் ,அகதி வாழ்வு ,உறவுகள் ,தனிமை.மற்றும் ஊருக்குள் இருந்தாலும் நம் அரசியல், போர், வறுமை, இடப்பெயர்வு, எதற்கும் சுதந்திரமில்லாமை.....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எம் சோகக்கதையை.இதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுத்தான் நம் சில இளஞர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க எழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் நடுவில் ஒற்றைவரியிலாவது ஒரு சொட்டுச் சோகம் தடவாமல் இருக்காது.


4. நீங்க இலங்கைத்தமிழர்கள் நிலை பற்றி நினைக்கறப்ப எங்களைப்பொன்ற தமிழ்நாட்டு வாழ் தமிழர்களை வெறுப்பீர்களா? அதாவது இலங்கைத்தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாத, செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களை வெறுப்பீர்களா?

நிச்சயமாக இல்லை சி.பி.தனிமனிதனின் நிலை வேறு அரசியல் வேறு.தனிப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலரோடு எனக்குப் பழக்கம் இருக்கிறது.ஒருசிலருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது இலங்கை அரசு என்ன செய்கிறது என்று எதுவுமே தெரியவில்லை.தெரிந்திருக்கும் சிலருக்கோ ஈழத்தவர்களைவிட ஆவேசம் மனதில்.இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி.அரசியல் தன் தேவைக்கேற்ப தேவையான பக்கமெல்லாம் சாயும்.மனிதனைச் சாயவைத்து அழகு பார்க்கும் ஈழத்து அரசியலும் அதேதான்.

இதில் பொதுமக்கள் பங்கு என்ன இருக்கு.பாவம் அவர்கள்.ஆனாலும் பொதுமக்களும் தங்களால் முடிந்த பங்கைச் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்.சொல்லப்போனால் கருணாநிதி அவர்களைத் திட்டுகிறோம்.அரசியலுக்கு வெளியில் அவரும் மனிதமுள்ள மனிதராக நிச்சயம் எங்களுக்காக இரங்குவார்.அரசியலுக்குள் இருப்பதால் சொந்தநலன்தான் அவருக்குப் பெரிது ஈழத்தைவிட.


5. வானம் வெளி வந்த பின்னும் என்றால் நீங்க இலங்கையை விட்டு வந்த பின்னும் என அர்த்தம் பண்ணிக்கலாமா? உப்பு மட சந்தி என்றால்
 தமிழர்கள் இன்னும் கசப்பான உணர்வுகளுடனே வசிக்க வேண்டி இருக்கே ... அதை குறிப்பால் உணர்த்துவதா எடுத்துக்கலாமா?


வானம் வெளித்த பின்னும் என்றால்....வானம் தினமும்தான் வெளிக்கிறது.வெளிச்சம் ஈழத்தவர் வாழ்வின் இன்னும் இல்லையே அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஐயோ...உப்புமடச் சந்தி கசப்பா !பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்லியிருக்கிறேனே.நகைச்சுவைகூட இருக்கு செந்தில்.எப்பிடி கசப்புன்னு சொல்லுவீங்க.அது நான் வாழ்ந்த கோண்டாவில் என்கிற ஊரின் சந்தியின் பெயர். என் புழுதி மண் எனக்காகக் காத்திருக்கும்


ஊரின் நினைவாக வைத்த பெயர்.இனிப்பான நினைவுகள் இல்லாவிட்டாலும் என் நினைவுகளைத் தாங்கும் உப்புமடச் சந்தி.


6. நீங்க ஸ்விஸ்ல  ஒர்க் பண்றது உங்க முழு மன திருப்தியுடனா? அதாவது மனசுக்கு பிடிச்ச வேலைதானா? அல்லது வேற வழி இல்லை என்ற எண்ணத்திலா?


ஆரம்ப காலத்தில் மொழிப்பிரச்சனை இருந்ததால் நிச்சயமாக மனசுக்குப் பிடிக்காத வேலைகளைதான் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலை செய்தேன்.ஆனால் இப்போது ஓரளவு மனசுக்குப் பிடித்த வேலைதான் செய்கிறேன்.ஆனாலும் அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே எங்கும் முன்னுரிமை கிடைக்கும்.என்னைப்பொறுத்தமட்டில் சொந்த நாட்டைவிட சுதந்திரமும் உரிமையும் மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு இங்கு கிடைக்கிறது.அதுவே பெரிய சந்தோஷம்.


7.  நீங்க புரொஃபைல்ல உங்க முகத்தை வெளிப்படுத்திக்கலை.. விளம்பரம் பிடிக்காது என்பதாலா? அல்லது நீங்க ஒர்க் பண்ற நிர்வாகத்துக்கு தெரிய விருப்பம் இல்லாததாலா>?

என் பதிவுலகத்திறகும் வேலைத்தளத்திற்கும் சம்பந்தமே இல்லை.சிலசமயம் சிலர் பார்ப்பார்கள்.ஆனாலும் நான்தான் மொழிபெயர்த்துச் சொல்லவேணும்.என்னை எனக்கே பிடிக்கவில்லை.அதுதான் நீங்கள் எல்லோரும் என்னைப் பார்க்கவேண்டாம் என்று முகம் காட்டாமல் மனதை மட்டும் காட்டிக்கொண்டிருக்கிறேன்.





8. நீங்க பதிவுகள் படிப்பதை இலங்கைதமிழர்கள் பதிவு, தமிழ் நாட்டு பதிவர்கள் பதிவு என பிரிச்சு பார்ப்பீங்களா? அதாவது இலங்கைதமிழர்கள் பதிவுக்கு உங்க மனசுல சாஃப்ட் கார்னர் உண்டா?

சி.பி...இது நீங்க கேக்கிறதே பிழை.இப்பவரைக்கும் என் மனசில இப்பிடி ஒரு நினைவு வந்ததே இல்லை.

9. இலங்கையில் ஒரு வேளை சுமூக நிலை தோன்றினால் மீண்டும் இலங்கயே செல்ல விருப்பமா? ஸ்விஸ்லயே தான் இருப்பீங்களா?

நிச்சயமாக சாகிற நேரத்திலயாவது ஊர்ல போய்த்தான் சாகவேணும் என்று இதுவரை சுவிஸ் கடவுச்சீட்டு எடுக்காமல் இருக்கிறேன்.


10..உங்க அம்மா அப்பா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் உங்க எழுத்தை பாராட்டுவாங்களா? அல்லது அவங்க பாராட்டனும்னு உங்க மனம் நினைக்குமா?

ம்...நினைக்கும்.என்னோட நெருங்கினவங்க சரி பிழை சொன்னாத்தானே நான் திருந்த வழி.சந்தோஷமும்கூட.என்னோட இணைய நண்பர்களுக்குக்கூட நிறையத்தரம் சொல்லியிருக்கிறேன்.என்னைத் திருத்த உங்களுக்கு உரிமை இருக்குன்னு.சொல்லணும்.ஏன் நீங்ககூட ஒன்றிரண்டு தரம் சொல்லியிருக்கிறீங்க.என் வீட்டில் அப்பா மட்டும்தான் ஏதாவது சொல்வார்.மற்றும்படி இணைய நெருங்கின நண்பர்கள்தான்.அப்பிடி உரிமையோட சொல்லிக்கொண்டிருந்த நட்பொன்றை இழந்துவிட்டேன்.அது மனசில் பெருங்கவலை.


11. பதிவுலகில் உங்களுக்கு பிடித்த ஒரு இலங்கை பதிவர், ஒரு தமிழ் பதிவர் பிளாக் சொல்லுங்க..


இது என்னை வம்பில மாட்டிவிடுற கேள்வி. சி.பி ஏன் இப்பிடிக் கொலை வெறி உங்களுக்கு.எல்லாருக்குமே ஒவ்வொரு திறமை.இத்தனை காலமும் போர்ச்சூழலுக்குள் உழன்றவர்கள் கொஞ்சம் காற்றாட ,எதையாவது அதுவும் மனம் விட்டுச் சொல்லக்கூட முடியாமல் மனம்புளுங்கி அதற்குள் கொஞ்சம் நகைச்சுவை ,ஆன்மீகம் ,யதார்த்தம், இலக்கியம், வைத்தியம், பொது ஏன் சமையல் என்றுகூட எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.சந்தோஷமாக இருக்கிறதே தவிர வேறேதும் இல்லை அப்பனே.எல்லாரும் என் சகோதரர்கள்.
Photo


12. வேலை நேரத்தில் பதிவு பற்றியோ படைப்பு பற்றியோ சிந்திப்பீங்களா? அல்லது வீட்டுக்கு வந்த பிறகா?


அப்பாடா....கடைசிக் கேள்வியா.முடிஞ்சுபோச்சு சி.பி கேட்டு மாசக்கணக்காப்போச்சு.நடுவில கேள்வியெல்லாம் தொலைஞ்சும்போச்சு.இதில இருந்து எல்லாருக்கும் என்ன தெரியுது எண்டா சி.பி க்கு நிறையப் பொறுமை இருக்கு.ரொம்ப நல்லவர்.

ம்...வேலை நேரத்தில் தனிமை கிடைத்தால் ஏதாவது சிந்திப்பேன்.மனதின் எண்ணங்கள் உணர்வுகள் வெளிப்பட வீடு ,வேலை ,பேரூந்து நிலையம் என்று இல்லைத்தானே சி.பி .தெருவில் நடக்கும்போது  சமிக்ஞை விளக்குகள் விட்டு விட்டு அணையும்போதுகூட அதன் வெளிப்பாட்டில் ஒரு வரி வரையலாம் மனதிற்குள் !

எல்லாம் சரியாச் சொல்லிட்டேசி.பி  !ஆனால் சொன்னதெல்லாம் உண்மையான என் உணர்வின் வெளிப்பாடு !

அன்போடும் நட்போடும் உங்கள் அன்பு ஹேமா.


டிஸ்கி -1 இங்கே தரப்பட்ட படங்கள் ஹேமாவின் ஹோட்டல் மற்றும் அவரது தோழிகள் ஃபோட்டோ.. அவர் படம் இல்லை..  அவர் தன் படம் பகிரப்படுவதை விட தன் படைப்புகள் பகிரப்படுவதில் தான் ஆர்வமாம்..

டிஸ்கி 2 -  கேள்வி எண் 6 , கேள்வி எண் 8 இரண்டும் எதேச்சையாக கேட்கப்பட்ட கேள்விகள்.. இப்போது பார்க்கும்போது அவை சிலருக்கு ஏன் இது போல் கேட்க வேண்டும் என்ற மன வருத்தம் அளிக்கக்கூடும் என உணர்கிறேன். அப்படி யாருக்காவது ஒரு ஃபீல் இருந்தால் என்னை மன்னிக்கவும்.