Saturday, July 16, 2011

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் தோறும் நினைப்பது நடக்கும்..(ஆன்மீகம்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpjZKyvlYdSSSIcWlLyx_oBIwpymh0eYSBqMAGzdj3_Zx9hmtrzoBoN_22WE_f_mM3s622uw2QHA-mtmvWI33tuv87PrVhdNa9mJlsW7_i0g9DCbVd_tbWJpZmwHpvFlUDs1KNil82-eyC/s1600/zzzzz.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!


சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், குழந்தைகள் 50, 60 மார்க்குகள் வாங்கினாலே ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள், பெற்றோர்கள். ''அடடா..! எம் புள்ள என்னமா மார்க் வாங்கி, பாஸாகியிருக்கான் பாருங்க!'' என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்து, குழந்தையை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

ஆனால், இன்றைய காலமே வேறு! '60 மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா’ என்று அந்தக் குழந்தையை அவர்களின் வீட்டாரே இளக்காரமாகப் பார்க்கின்றனர். ''இப்படியெல்லாம் மார்க் எடுத்தா, எப்படி டாக்டராகிறது, எப்படி இன்ஜினீயர் ஆகுறது?'' என்று அலுத்துக்கொள்கின்றனர். 
அட... 90 மார்க்கே அந்தக் குழந்தை வாங்கியிருந்தாலும், ''ஏன், என்னாச்சு? பத்து மார்க் எதுல போச்சு? எங்கே கோட்டைவிட்டே? சரியா படிக்கலியா?'' என்கிற கேள்விகள்தான் பெற்றோர்களிடம் இருந்து வருகின்றன. கால மாற்றங்கள், போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்றாகிவிட்ட உலகம்தான் இன்றைய நிலை.
மனனம் செய்கிற திறனும், எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்கிற கூர்மையும் குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியும். அப்படியான திறமையும் புத்திக்கூர்மையும் இருக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துரைக்கவேண்டும்; பகவத்கீதையையும் ராமாயணத்தையும் விவரிக்க வேண்டும். அந்தக் கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால், செய்பவர்தான் மிகமிகக் குறைவு!

சரி... பகவத்கீதை படிப்பதற்கும், பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg
நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறபோது அல்லது டி.வி-யில் கார்ட்டூனைக் காட்டி இட்லியைப் புகட்டுகிறபோது, ''இதுதான் பகவானின் திருநாமம். இதையும் கடந்து கடவுளுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பகவத்கீதையில் இரண்டெழுத்தில் உள்ள திருநாமம், மூன்றெழுத்தில் உள்ள திருநாமம், நான்கெழுத்து திருநாமம் என்று எத்தனை உள்ளன தெரியுமா? பகவத்கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து, ஒரே திருநாமம் இரண்டு முறை வந்திருக்கிறது; 

அந்தத் திருநாமம் இதுதான்...'' என்றெல்லாம் குழந்தைகளுக்கு ஆன்மிகத்தையும் கொஞ்சம் ஊட்டலாமே! அப்படி ஊட்டினால், அந்தக் குழந்தை, பக்தி மார்க்கத்தை அறிந்து, சாஸ்திர- சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிற, எதிலும் ஓர் ஒழுங்கைக் கொண்டிருக்கிற அற்புதமான மனிதனாக வருவது உறுதி.

அதுமட்டுமா? பகவானின் திருநாமங்களையும், அந்தத் திருநாமங்களுக்கான காரணங்களையும், ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து... என இருக்கிற திருநாமங்களையும் அந்தக் குழந்தைகள் மிக அழகாக புத்தியில் ஏற்றிக்கொள்ளும். இப்படியாக... நாம் சொல்கிற விஷயங் களையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிற, கிரகித்துக்கொள்கிற திறனானது சிறு வயதிலேயே வந்துவிட்டால், எல்.கே.ஜி படிப்பதில் துவங்கி, 6-வது, 7-வது படிக்கும்போது அந்தத் திறன் இன்னும் அதிகமாகி, பள்ளியிறுதிப் படிப்பில் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு, கல்லூரிப் படிப்பை மிகச் சுலபமாக எட்டுவார்கள். 

அப்போது, விரும்பிய படிப்பைக் கல்லூரியில் தொடர்வதற்கு அதிக மதிப்பெண்களை எடுக்கிற புத்திக்கூர்மையும், ஞாபக சக்தியும், மனனம் செய்து உள்ளே உருவேற்றிக் கொள்கிற சாதுர்யமும் மூளையின் எல்லா மூலைகளிலும் பரவி, வியாபித்திருக்கும். ஆகவே, வீட்டில் குழந்தைகளிடத்தில், புராண- இதிகாச- காப்பிய- காவியங்களை சொல்லிக் கொடுங்கள்; அறிவும் மேம்படும்; ஆன்மிகமும் தழைக்கும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirODR_g94lSbIP0nmW562abtV0fkXwPyV0O96JGFTCOia3vLi1OKZ-XTEEjMNXL3MnBNKaVr62cEqjdxdukgFOjCl39IFj9o55KtL4cW9GcPN7aUJqFW1sasVhze3hj7hbHn5MOG6GPIs/s1600/1192radhakrishnab&w.jpg

பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரே திருநாமம், இரண்டு முறை வந்திருக்கிறது என்று சொன்னேன். அந்தச் சிறப்புக்கு உரிய திருநாமம் என்ன தெரியுமா? வசுப்ரதஹா!

இந்தத் திருநாமத்தின் அருமை- பெருமையைப் பார்ப்பதற்கு முன்பு, பகவானின் திருமேனியை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இதுவும், இன்றைய குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டிய ஒன்றுதான்!

ஜோதிமயமானவன் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்த்தோம், அல்லவா! பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி... அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், 'நன்பொன்’ என்று பாடுகிறார். 'மாசறு பொன்னே...’ என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!

'உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; 'உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது. 

இறுதியாக, 'சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்...  'இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப... சட்டென்று, 'சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். 'அடடா... பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’ என்று பாடி முடித்து, வணங்குகிறார்.

இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம் கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!

இப்படித்தான் பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். 'என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க... 'முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றாராம் பராசரர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwEBdYyJBnojIM5MS5DwwgNhkHmr3J6cjEkdvLR3X67t8OH6dFeD_r7kY999mxAn8HjLPzXnbd-BwkK79rwAGrUAJxBrKf8KbIj2_hksiijBtqoGnTzYqkgQdfLdNAmb7yHP5baMXy3XA/s1600/Lord_Krishna_1.jpg

'அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். ''மன்னிக்கவும் ரங்கா! உன்னை என்னால் பாட முடியாது!'' என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!

பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் 'பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

''என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!'' என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, ''அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!'' என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.

http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg

என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.

முடிந்தால்... இதையும் உங்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், பகவான் எப்போதுமே நம்மைவிட குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கமானவன்!

நன்றி - சக்தி விகடன்