Monday, July 11, 2011

நாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில டிரஸ்கோட் ஒண்ணு தான் இன்னும் கண்ணை உறுத்திட்டே இருக்கு.. ஹாய் மதன் சார் கோட் சூட்ல வர்றதைக்கூட ஓக்கே சொல்லிடலாம். நம்ம அண்ணன் பிரதாப் போத்தன் கோட் சூட்டிம் போட்டுக்கிட்டு ஒரு மப்ளர் வேற போட்டுட்டு வர்றார். ( மப்பா , ரப்பா பேச மப்ளரா? )... தொகுப்பாளினி இந்த வாரம் செம டைட்டா ஒரு பெட்டிகோட்டோ,நைட்டியோ ஃபேஷனா போட்டுட்டு வந்தார்,...(யோவ்.. குறும்பட விமர்சனம்னா படத்தை மட்டும் விமர்சனம் பண்ணு..)

முதல்ல ராகேஷ் வந்தாரு.. அவர் கிட்டே பாப்பா புத்திசாலித்தனமா கேட்கறதா நினைச்சுட்டு ஒரு கேள்வி கேட்டுது.

சார்.. உங்க படம் சீரியஸா? காமெடியா?

சீரியஸான காமெடி படம்.



1. ராகேஷ் - அப்பா வந்தாச்சு

படத்தோட கான்செப்டே நம்ப முடியல.. அதாவது கல்யாணம் ஆகி 3 குழந்தைங்க பிறந்த பின் “ நீ வீட்ல இருந்தா உன் குடும்பத்துக்கு நல்லது இல்ல,அதனால 25 வருஷம் பிரிஞ்சு இருன்னு ஒரு ஜோசியர் சொன்னதுக்காக யாராவது தன் மனைவி,குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு போயிடுவாரா?

25 வருஷம் கழிச்சு அவரை தேடி செல்லும் மகன்கள் திருச்சில இருந்து ஒரு அப்பாவையும், ஆந்திரால வுல இருந்து இன்னொரு அப்பாவையும் அழைச்சிட்டு வர்றாங்க..எஸ் வி சேகர் நாடகம் தத்துப்பிள்ளை மாதிரி காமெடியா சீன் போகுது. யார் ஒரிஜினல்னு கண்டு பிடிக்க போட்டி கேள்விகள் எழுப்பப்படுது.

திடீர்னு 3 வதா இன்னொரு அப்பா வர்றாரு?(அந்த அப்பாவோட அப்பா ஜெராக்ஸ் கடைல ஓனரா?) அம்மா மயக்கம் போட்டு விழுந்ததும் படம் முடியுது.

நம்ப முடியாத கதைன்னாலும் காமெடி கலக்கல். அப்பாவா வர்ற கேரக்டர் நம்ம விசு சாரோட அண்னன் கிஷ்மு மாதிரி இருந்தாரு..படத்துல என்ன குறைன்னா மெலோ டிராமா மாதிரி சீன்கள் அமைச்சது.

படத்தில் வரும் ரசனையான வசனம்.. அப்பா 25 வருஷம் கழிச்சு வர்றார். காலிங்க் பெல் அடிக்குது..

”நீ போய் கதவை திற.

ஏன்? நீ போய் திறக்க மாட்டியா?

போடி எனக்கு வெட்கமா இருக்கு..

ஹூம். இந்த வயசுல இது வேறயா?

இயக்குநருக்கு ஒரு கேள்வி

25 வருஷம் கழிச்சு அப்பா கிடைச்சுட்டதா திருச்சில இருந்து மகன் ஃபோன் பண்றார். உடனே அம்மா திரிசூலம் கே ஆர் விஜயா மாதிரி பிரமாதமா ஆக்ட் குடுக்கறாங்க ( அதாவது ஓவர் ஆக்டிங்க்) அது ஓக்கே. ஆனா அவர் கூட ஃபோன்ல பேச ஆசைப்படமாட்டரா?



2.தீபக் - ஃப்ரீ மைண்ட்

கவுதம் மேணன் எடுக்கற ரொமாண்டிக் படம் மாதிரி இருந்தது.. படத்தோட மொத ப்ளஸ். ஹீரோயின். ( அதானே பார்த்தேன்.. )

ஹீரோ ஒரு விஞ்ஞானி..  டைம்மிஷின் கண்டு பிடிக்கறாரு. அவருக்கு என்ன பிரச்சனைன்னா அவரோட லவ்வர் ஒயிஃப் (அதாவது லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட பொண்ணு )அவ ஓவரா டார்ச்சர் பண்றா. வெளில எங்கேயும் கூட்டிட்டுப்போறதில்லை.தன்னை கவனிக்கறதில்லைன்னு. (இந்த பொண்டாட்டிங்க எப்பவும் இப்படித்தான்)அதனால இவரு கடந்த காலத்துக்குப்போய் தான் காதலை புரப்போஸ் பண்ணுன நாள்ல தகிடுதித்தம் பண்ணி அவளை அவாய்டு பண்ணலாம்னு ஐடியா பண்றான்..

கடந்த காலத்துக்கு போறான்.. என்னென்னமோ ப்ளான் பண்றான்.. முடியல.
. ( விதி வலியது.)

அவ சொல்றா. நான் அடிக்கடி கோபப்படற கேரக்டர். யார் மேல அன்பு வெச்சிருக்கோமோ அவங்க கிட்டே த்தானே நம்ம கோபத்தை வெளிக்காட்ட முடியும்?அப்டின்னு செண்ட்டிமெண்டலா பேசி அவனை மெண்ட்டல் ஆக்கி லவ்வுல விழ வெச்சுடறா..

இவன் மறுபடி நிகழ்காலத்துக்கே வர்றான். மனைவி கிட்டே வா. டான்ஸ் பண்னலாம்னு கூப்பிடறான்.. கவித்துவமான காட்சியோடு படம் முடியுது.

இந்த இயக்குநர்க்கு செமயான எதிர்காலம் இருக்கு.. (அப்போ நிகழ்காலம் இல்லையா?)நல்லா வருவார்.. வாழ்த்துக்கள்.இந்தப்படம் தான் முதல் பரிசை தட்டிச்சென்றது.





3. ரங்கநாதன் - மிச்சம் ஒரு மச்சம் 

இயக்குநர் ஏதோ ஒரு ஃபிகரை புதுசா லவ்விட்டு இருப்பார் போல.. டைட்டில்லயே கலக்கறார்..

கடல்வாழ் உயிர் இனங்களை ஆராய்ச்சி செய்யும் குழு ஒரு கடல் பிரதேசத்துக்கு வருது.. நாடான் தீவு..

குழுவில் இருக்கும் ஒரு ஃபிகர் ( 80 மார்க்) இவர்தான் ஹீரோயின்.. இவரை மாதிரியே முகச்சாயல்ல ஒரு கடல் கன்னியை பார்க்கறார்.. அது இந்த ஃபிகரை பார்த்து சிரிக்குது.. இவ கிட்டே போய் அவ கிட்டே பேசறா. அதுக்குள்ள ஆராய்ச்சிக்குழுல ஒருத்தன் கடல் கன்னியை ரிவால்வர்ல சுடறான். அது குறி மாறி ஹீரோயின் நெற்றில விக்ரம் படத்துல அம்பிகாக்கு பட்ட மாதிரி பட்டி மர் ஹோ கயா..

மனதை கவர்ந்த வசனம்

1. இயற்கையோட படைப்புகள்ல எல்லா உயிரினங்களுக்கும் வாழ சம வாய்ப்பு உண்டு..

2. ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவுலயும் பல உயிர் இனங்களின் மரணம் மவுனமாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது,

இந்த படம் இன்னும் நல்ல எஃபக்ட் குடுக்க  ஹீரோ- கடல் கன்னி காதல் அப்டின்னு கதையை கொண்டு போய் இருக்கலாம். எந்தக்கதைலயும் லைட்டா காதலை டச் பண்ணிட்டா அது மக்கள் மனசை டச் பண்ணிடும்கறது என்னோட அவதானிப்பு..