Saturday, July 09, 2011

அரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எப்படி?



1..அரிசி - பருப்பு தோசை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு.  

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2.  வெங்காய குழம்பு 

தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

3. உளுந்து வடை மிக்ஸ் 

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

4. பருப்பு வடை மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்