Saturday, July 02, 2011

மோர்க்குழம்பு, ரவா உப்புமா,அரிசி உப்புமா... சமையல் குறிப்புகள்




உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
.
2. மோர்க்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.

3.ரெடிமேட் சாம்பார் மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4.ரவா உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5. அரிசி உப்புமா மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். 

அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்