Saturday, June 11, 2011

ஏர்செல் ஊழல் vs தயாநிதி மாறன் -அதிர வைக்கும் உண்மைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w6TudwSeLIi9hyphenhyphenSEvmFijhf7pY6wvm5A1LjOUmLcbQL5KFVstBp2NnWaiQ5hmbtXsN7XDh0Pqr71e1YBFO9nX5hg9dE-9XoRBlz8fnahqSQpRGio93ep2cDltvLmH7XNPpKIFkgQI14/s1600/Aircel+wifi+service.jpgசிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!


யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

 பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.


கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

 சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.


தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!


தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன்.

பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன்.

என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 


''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!


நன்றி - ஜூவி