Sunday, June 05, 2011

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா? ( ஆன்மீகம்)

http://adrishta.com/wp-content/uploads/2011/02/krish111.jpg 
 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்


'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!’ என்பார்கள். ஆனால், அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர் களாகும்போது, அதே குணங்கள் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்!

நமக்கெல்லாம் ஆத்மா என்பது இருக்கிறது. ஆனாலும், சரீர சம்பந்தத் துடன் உயிர் வாழ்கிறோம். அந்தச் சரீரத்தின் தேவைகளுக்குத் தக்கபடி, நம்முடைய குணங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது, சுபாவங்கள் இன்னதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லமுடியாமல், சட்சட்டென்று மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏனெனில், சரீரமானது, சுக-துக்கங்களுடன் தொடர்பு கொண்டது; நன்மை- தீமைகளுடன் பிணைந்திருப்பது.

ஆனால், நம்மைப் போலவே, சரீரத்தால் அவதாரம் எடுத்தவர்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால், அவருடைய எந்தக் குணங்களும், எப்போதும் மாறாமல் அப்படியே இருந்தன. சொரூபம் என்பதும், சுபாவம் என்பதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு மாறவே மாறாத ஒன்று. ஏனெனில், அவர்... பரமாத்மா!
 
இன்னும் ஆழ்ந்து பார்த்தால், மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்கிறது வேதம். சத்திய விரதம், சத்திய பரம், த்ரிசத்தியம் ஆகிய மூன்று சத்தியங்களுடன் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அதாவது, பரமபதத்தில் நிலையாகக் காட்சி தருகிற அதே ஸ்ரீமந் நாராயணன்தான், சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார். 'அங்கு வைத்தாற்போன்றே...’ எனும் வாக்கியத்துக்கு ஏற்ப, அதே குணங்களுடனும் சுபாவங்களுடனும் தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். 

ஜோதிர்மயமாகவும் அவதரித்தார். நித்திய சூரிகள் தீப- தூப ஆராதனை செய்து பரம்பொருளை வழிபடும் வேளையில், அந்தப் புகை பரவி, அந்தப் பகுதியையே மறைக்க... சந்திர- சூரியர்களை தன்னுடைய கண்களாகக் கொண்ட பரம்பொருள், அப்போது தனது கிருஷ்ணாவதாரத்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWjFAXUvXaEWkq0QcXw0Vzez8ho9Wp5F3jELvUtuICyXWfEh7cToy1V_lfdJ24bdRWf_B_w8f9o7z3QZ4HWEpeDqJ6QA2p5kiadw2UisDakmUmcADcOnUn8k7t84nWwUp4RwEf0zlqYg/s1600/krishna1baby.jpg
ஆகவே, தன் நிலையில் இருந்து பரம்பொருள் என்றைக்கும் நழுவவே மாட்டார் என்பதை அறிந்து உணர்வது அவசியம்.

வாழ்க்கையில், எவருக்குத்தான் ஆசை இல்லை?! நல்லவை அனைத்தும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றும், கெட்டவை எதுவும் நம்மை அண்டக்கூடாது என்றும் வேண்டுவதே நம் அனைவரின் பிரார்த்தனை! நம்முடைய ஆசைகள்தானே, பகவானிடம் பிரார்த்தனையாக வெளிப்படுகின்றன.

அதாவது, நல்லவை என நாம் நினைக்கிற விஷயங்கள், நமக்குக் கிடைக்கவேண்டும்; துன்பம் விளைவிக்கக் கூடியதாக நாம் நினைத்துப் பதறுகிற விஷயங்கள், நம்மை விட்டு விலகிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன... ஒருவருக்கு இருக்கிற ஆசை வேறொருவருக்கு இருக்காது.

அதாவது, நீங்கள் விரும்புகிற விஷயத்தை இன்னொருவர் விரும்பமாட்டார்; வேறு ஏதேனும் ஒன்றை நாடுபவராக இருக்கலாம். அதேமாதிரி, நீங்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கிற விஷயத்தை அவரும் புறக்கணிப்பார் என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் கெட்டது என்று நினைத்து நடுங்குகிற ஒரு விஷயம், அவருக்குச் சாதாரணமாகப் படலாம். மாறாக, 'இந்த விஷயம் மட்டும் என்னை நெருங்கவே கூடாது ஸ்வாமி!’ என்று வேறு ஏதேனும் ஒன்றைக் கெட்டதாக நினைத்து, பிரார்த்திப்பார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNtPk-PrcQzT44G8LwI1Lb0G7VWJ08gHEUc0LjluQRxJuLefdsWHMZjoN1oNBfrc6a_2614KZeK4Bo1ZRl2Ha9U93zbhFbS21i3C047aLJh9XQjW6Ci5Dqag2mU-SRV8goX9Njeqma_mk/s320/BARATAM.jpg
அவ்வளவு ஏன்... நாமேகூட, சின்ன வயதில் நல்லதையும் கெட்டதையும் பட்டியல் போட்டு வைத்திருப்போம். பிறகு இளைஞனாகும் தருணத்தில், நமது 'தேவைப் பட்டியலில்’ வேறு சில விஷயங்கள் இடம்பெற்றுவிடும்; 'தேவையற்றவை’ என வேறு வேறு விஷயங்களைக் குறித்து வைத்திருப்போம். வயதுக்குத் தக்கபடி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும்!

ஆனால், இந்தப் பூவுலகில், எவருக்கும் மாறவே மாறாத ஓர் ஆசை உண்டெனில், அது பகவானின் திருவடித் தாமரையை நாடுவதுதான்! இறுதிக் காலத்தில், அவனைச் சரணடைந்து, அவனது திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, மனிதர்களாகிய நம்முடைய ஆசையும் பிரார்த்தனையும்! மகாபாரதத்திலும் ஸ்ரீபகவத் கீதையிலும் இதை வெகு அற்புதமாக உணர்த்தியிருக்கின்றனர், ஆச்சார்ய பெருமக்கள்.

நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைக்கவேண்டும் எனில், அதற்கு நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும் அல்லவா?! எதுவுமே சும்மா நம் மடியில் வந்து விழுந்து விடுமா, என்ன? நாம் மெனக்கெட வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம்.

சரி... பகவானின் திருவடியில் சரணடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
கைங்கர்யம்... கைங்கர்யம்... கைங்கர்யம்! கிட்டத்தட்ட ஸ்வாமிக்கு தாசனாக வேண்டும். அதாவது, அவனுக்கு அடிமையாக வேண்டும். ஏனெனில், அவன்... ஆண்டான்; ஆண்டவன். நாம் எல்லோருமே அவனுக்கு அடிமைகள்!
 http://elayarajaartgallery.com/images/oilpainting/imb3.jpg

'என்னது இது... அடிமைத்தனத்தைக் களைய வேண்டும் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள்! இதென்ன குழப்பம்?’ என்று தவிக்காதீர்கள். 'சுதந்திர இந்தியா என்று சொல்லும்போதே, எவ்வளவு சுகமாக இருக்கிறது. அப்படியிருக்க... ஆண்டான்- அடிமை இப்போது அவசியம்தானா?’ என்று கலங்கிவிடாதீர்கள்.  

என்னதான் நாம் இப்போது சுதந்திர தேசத்தில் வாழ்ந்தாலும் சில நியமங்களுக்கு உட்பட்டு, சட்டதிட்ட வரையறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்கிறோம்?! அதேபோல், பூவுலகில் சில நியமங்கள் உள்ளன; சில விதிகள் இருக்கின்றன. இங்கே, இந்த உலகை ஆட்சி செய்கிற மிகப் பெரிய அதிகாரம் பரம்பொருளிடம் இருக்கிறது. அவனே ஆண்டான். அப்பேர்ப்பட்ட ஆண்டவனிடம் நாம் அடிமையாக, தாசனாக இருப்பதில் தவறே இல்லை. சொல்லப்போனால், இறைவனுக்குத் தாசனாக இருப்பதைவிட, வேறென்ன பெருமை இருக்கிறது, சொல்லுங்கள்!

முக்கியமாக, இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும். வார்த்தைக்குத்தான் அவன் ஆண்டான்; நாம் அடிமை - தாசன். ஆனால், அவனுக்கு நாம் தாசனாகிவிட்டால், உடனே அந்தப் பரம்பொருள், நமக்குத் தாசனாகிவிடுவான். அவனது குணம் அப்படி; சுபாவம் அப்படி! இதை எந்த நாளும், எவருக்காகவும் மாற்றிக்கொள்ளவே இல்லை, பகவான்!

மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாசனாக இருந்தான் அர்ஜுனன். ஆனால், மெள்ள மெள்ள அவனுக்கு தாசனாகிப் போனான், ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனன் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, அவனது தேரை ஓட்டியது கிருஷ்ண பரமாத்மாதானே?! தான் பரம்பொருள், இதோ... இந்த அர்ஜுனன் ஜீவாத்மா என்றெல்லாம் நினைக்காமல், அர்ஜுனக் கூட்டத்துக்காகத் தூதுபோன கண்ணனின் கதையை அறிவோம், இல்லையா?

பகவானுக்கு நாம் தாசனாகிவிட்டால், அவன் நமக்குத் தாசனாகிவிடுவான் என்பது, இப்போது புரிகிறதா? ஆக, பகவானின் திருவடிக் கமலத்தைச் சரணடைவதற்கு, அவனுக்குத் தாசனாக இருந்து கைங்கர்யம் செய்ய வேண்டும். என்ன கைங்கர்யம்..? எப்படிச் செய்யவேண்டும்?

எமலோகம். பூமியில் வாழ்ந்த ஒருவன், இறந்ததும் அங்கே வந்தான். அப்போது, எமதருமன் அவன் அருகில் வந்து, ஆதுரத்துடன் அவனுடைய தோளைத்தொட்டான். நடுநடுங்கிப் போனான் வந்தவன். ஆனால், எந்த முரட்டுத்தனமும் எமதருமனிடம் இல்லை; அந்த மானிடனின் தோளை மிருதுவாகத்தான் பற்றிக்கொண்டான். அதில் தனது வலுவையெல்லாம் எமதருமன் காட்டவில்லை. முகத்திலும் எந்தக் குரூரமோ ஆவேசமோ இல்லை. மாறாக, எமதருமனின் கண்களிலும் முகத்திலும் மெல்லிய சோகம்தான் படர்ந்திருந்தது.
 http://mykathiravan.com/Annmeegam/krishna.gif
அந்தச் சோகம் அவனுடைய குரலிலும் எதிரொலித்தது. வந்தவனின் தோளைப் பற்றிக்கொண்டு, மிகுந்த கனிவான, கருணை அடர்ந்திருந்த குரலில், ''எத்தனை வருடங் களாகப் பூமியில் இருந்தாய் நீ? இருபது வருடம் இருந்திருப்பாயா? முப்பது வருடங்கள் வாழ்ந்திருப்பாயா? அறுபது எழுபது வருடங்கள் வரை பூவுலகில் இருந்தவனா நீ?

சரி, இத்தனை வருடங்களாக பூமியில் இருந்திருக்கிறாயே? ஒரு முறை, ஒரேயரு முறை 'கேசவா’ என்று ஏன் உச்சரிக்கவில்லை? உன் நாக்கு 'கேசவா’ என்று உச்சரிக்க ஏன் மறுத்தது? கேசவனைப் பற்றிய சிந்தனை உனது புத்திக்குள் எட்டவே இல்லையா? உன் மனதில் ஒருமுறைகூட, கேசவனின் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே கிடையாதா?

என்னுடைய ஊரான எமலோகத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால், சந்தோஷப்பட மாட்டேன், நான்! 'அடடா... என்ன கொடுமை இது!’ என்று வருந்தத்தான் செய்வேன். வாழ்வில், ஒருமுறையேனும் கேசவனின் திருநாமத்தைச் சொல்லியிருந்தால், இப்போது நீ இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

தண்டனை பெறுவதைவிட, தண்டனை கொடுப்பதுதான் ரொம்பவே கஷ்டமான காரியம். கேசவ நாமத்தைச் சொல்லாததால், இப்போது உனக்கும் கஷ்டம்; உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமே என்பதால், எனக்கும் கஷ்டம்!'' என்று கனிவுடன் சொன்னாராம் எமதருமன்.

'கேசவன்’ எனும் திருநாமத்தின் வலிமையைப் புரிந்து கொண்டீர்களா? அந்தத் திருநாமத்தைச் சொல்வதால் கிடைக்கிற மோட்ச பலனை அறிந்துகொண்டீர்களா?

எங்கே... சொல்லுங்கள், கேசவா... கேசவா... கேசவா!

thanx - sakthi vikatan