பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.
பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!
சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.
1. சத்துமாவு மிக்ஸ்
தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
--------------------------------------------------
2. ரவா தோசை மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ், உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து இதில் சேர்க்கவும்.
சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
---------------------------------------------
3. தேங்காய் பொடி
தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
-----------------------------------------
4.சேமியா பகாளாபாத் மிக்ஸ்
தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.
பகாளாபாத் செய்ய: உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்), கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
--------------------------------------
5.ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ்
தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
---------------------------------
டிஸ்கி 1 - பெண்கள் படிக்கற மாதிரி சி பி எழுதறதே இல்ல என்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.. ஹி ஹி
டிஸ்கி 2 - அவள் விகடன் ல இருந்த கட்டுரையைத்தான் இதுல போட்டிருக்கேன்.. அதனால இதுல ஏதாவது டவுட்னா என்னை கேட்காதீங்க.. எனக்கு ருசியா யாராவது சமைச்சா சாப்பிட மட்டுமே தெரியும்..
டிஸ்கி 3 - சி பி க்கு என்ன ஆச்சு? வீட்ல சண்டையா? சொந்த சமையலா? மாமியார் வீட்ல மனைவியா ?போன்ற கமெண்ட்கள் கடுமையாக மறுக்கப்படும்.ஹி ஹி
டிஸ்கி 4 - நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடற ஜெ புத்தி எனக்கு கிடையாது என்பதால் என் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க வை கோ மாதிரி ஏமாந்து போகாம இருக்க சில ஸ்டில்களை இணைத்துள்ளேன்.. பார்த்து ரசித்து விட்டு செல்லவும்..