Saturday, April 02, 2011

கலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன்,அரசியல் வானில் அதிர்ச்சி அலை

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்
 
http://tamizharivu.files.wordpress.com/2008/10/kalaignar.gif
வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!
 
'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


தீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.


'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?



தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.