Sunday, March 27, 2011

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். பரபரப்பு பேட்டி - சி எம் போஸ்ட்டுக்கு கலைஞர், ஜெ இருவருமே தகுதியானவர்கள் இல்லை


http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg
நிமிடத்துக்கு நிமிடம் அரசியல் நிலை மைகள் மாறிக்கொண்டே இருக் கின்றன. கூட்டு, பிளவு, மீண்டும் கூட்டு எனத் தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத கூத்துக்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.அரசியல் கட்சிகளின் அனுதின அதிரடிகளில் நியாயமும் நிலைப்பாடும் கேலிக்கு உள்ளாகின்றன

. கண் முன்னே நடக்கும் அத்தனை தலைகீழ் நிகழ்வுகளையும்  அப்பாவியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் வாக்காளன். 'இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது?’ என மனசாட்சியோடு மல்லுக்கட்டும் வாக்காளனுக்கு நம்பிக்கை பகர்கிறார் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். 


''கொடைக்கானலுக்குக் குடும்பத்தோடு கிளம்பினோம். 120 கி.மீ. வேகத்தில் சென்ற எங்களுடைய கார், திடீரெனத் தலை குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அவ்வளவு பெரிய விபத்து நடந்தும் எங்களுக்குச் சிறு சிராய்ப்புகூட இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு கார் வரவழைத்து, எவ்விதப் பதற்றமும் பயமும் இல்லாமல் கொடைக்கானல் பயணத்தை முடித்தேன். 'இந்த விபத்தில் நமக்கோ, குழந்தைகளுக்கோ ஏதும் ஆகிஇருந்தால்...’ என நான் யோசிக்கவே இல்லை.

'நான் நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடனும் இருக்கிறேன். அதனால், எந்த நிகழ்வாலும் என்னைக் குலைக்க முடியாது. நான் என் பாதையில் போய்க்கொண்டே இருப்பேன். நியாயமாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பவர்களுடன் கடவுள் எப்போதும் உடன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை மந்திரம். இது என் மனசாட்சியை வழிநடத்துகிறது. இத்தகைய மந்திரம் ஒவ்வொரு வாக்காளரின் மனத்திலும் எதிரொலித்தால், நமக்கான தலைமை தகுதி வாய்ந்ததாக இருக்கும்.


'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என ஒரு சொலவடை சொல்வார் களே... அதைப்போல் நமக்கான தலைவர் களைத் தகுதிமிக்கவர்களாக நாம் தேர்ந்தெடுத்தால், இந்த தேசமே தகுதியான தேசமாகிவிடும்!

இன்றைய அரசியலில் 95 சதவிகிதத் தலைவர்கள், சுயநலனை மட்டுமே குறிக் கோளாக வைத்திருக்கிறார்கள். அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்தால் போதும். மக்களைப் பற்றி யோசிக்க வேண்டியதே இல்லை. 

முடிந்தவரை நான்கைந்து தலைமுறைகளுக்குத் தேவையானவற்றைக் குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும். இன்றைய தலைவர் களில் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் பிரதான கனவு. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற சிறு அக்கறைகூட இன்றைய தலைவர்களுக்கு இல்லை.

பிரதமர் என்கிற உயரிய பதவி தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர் என்கிற பதவி வரை இதே மாதிரியான பாராமுகங்கள்தான் மக்களுக்கான பரிசாகக் கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் புறக்கணிக்கவும், சில நேரங்களில் மக்களை அடக்கி ஆளவும் நினைக்கிறார்கள். தேர்தலின்போது மட்டுமே திரும்பிப் பார்க்கப்படுகிற ஜீவன்களாக மக்களைப் பார்க்கிறார்கள்.


இன்றைக்கும் மக்களின் ஊழியனாகத்தான் என்னை அடையாளப்படுத்துகிறேன். அதன்படியே நடக்கிறேன். திருவாரூரில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சாலைகள் போடப்படும் இடத்தை நேரடியாக ஆராய்வேன். டேப் பிடித்து அளந்து பார்ப்பேன். வெறும் 40 சதவிகிதக் கற்களைப் போட்டுவிட்டு, 100 சதவிகிதம் போட்டதாகச் சொன்னதை, களத்திலேயே கண்டு பிடித்தேன்.


'என்னுடைய எஜமானர்கள் மக்கள்தான்!’ என்கிற எண்ணமே, நேர்மையான அதிகாரிகளை மக்களின் கடைக்கோடி வாழ்க்கை வரை உற்றுப் பார்க்கவைக்கிறது. அரசியல் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது இத்தகைய அக்கறையான கவனிப்பைத்தான். ஆனால், ஓட்டு வாங்கி ஜெயித்த உடனேயே மக்களின் எஜமானர்களாக அரசியல் தலைவர்கள் மாறிவிடுவதுதான் காலம் காலமாக இந்த சமூகத்தைத் துரத்தும் அவலம். 'தானாக எதுவும் மாறாது’ என்கிற பேருண்மை ஒவ்வொரு வாக்காளரையும் உந்தித்தள்ளும்போது, இந்த அவலம் நிச்சயம் அகற்றப்படும்!

யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், வாக்காளர்கள் மிகுந்த நிதானத்துடனும் ஆராய்ந்து தெளிந்த அறிவுடனும் செயல்பட வேண்டும். முதலில் வேட்பாளர் போட்டியிடும் கட்சியின் நிலைப்பாட்டை யும், அவர்களின் முந்தைய செயல்பாட்டை யும் கவனிக்க வேண்டும். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தெரிந்து, அவரைப்பற்றியும் தேர்ந்த அறிவோடு ஆராய வேண்டும். 

முதலமைச்சர் வேட்பாளர் சரியில்லாதவராக இருந்தால், அவருடைய கட்சி வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவருக்கு நம் வாக்கைச் செலுத்தக் கூடாது. காரணம், நல்ல வேட்பாளருக்கு நாம் செலுத்தும் வாக்கே தவறான ஒருவரைப் பதவியில் அமர்த்த அடிகோலிவிடும் அபாயம் இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் நல்லவராக இருந்து, நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தவறான வராக இருந்தாலும், அவருக்கு நாம் வாக்களிக்கக் கூடாது.


யாராவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என முடிவு எடுத்தால், போட்டியில் இருக்கும் கட்சிகளில் யார் குறைந்தபட்ச ஊழல் பேர்வழி என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாக்களிக்கலாம். 'நமக்கான பிரதிநிதி கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’ என்கிற அக்கறை வாக்களிக்கும்போது நமக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்க வேண்டும். போட்டியிடும் யாரையுமே பிடிக்கவில்லை என்றால், சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கலாம். இல்லையேல், 49 ஓ-வுக்கு வாக்கு அளிக்கலாம்.


தேர்தல் தினத்தில் எத்தகைய வேலைகள் இருந்தாலும், வாக்குப் போடும் வாய்ப்பை மட்டும் தவறவிடக் கூடாது. கிராமங்களைக் காட்டிலும் நகரவாசிகள்தான் வாக்களிப்பது வெட்டி வேலை என எண்ணி, அன்றைய தின விடுமுறையை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

க்யூவில் நிற்பதைக்கூட அவர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இருக்கிறது என்கிற ராஜ மரியாதையை அவமானமாக நினைக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஐந்து வருட ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் தகுதியைத் தவிர்த்துவிட்டு, வாக்குப் போடாமல் புறக்கணிப்பது தேசத் துரோகம். 

வாக்களிக்க மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். எத்தனையோ பேர் சிந்திய ரத்தத் துளிகளின் வடிவம் தான் நமக்கான சுதந்திரம். அதை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமமானதுதான் வாக்களிக்காமல் புறக்கணிப்பது!


அடுத்தது அன்பளிப்பு... ஐந்தாவது ஆண்டின் 11-வது மாதம் வரை மக்களைத் திரும்பியே பார்க்காதவர்கள், திடீரென அன்பு அவதாரம் எடுப்பார்கள். வலிய வந்து வணங்குவார்கள். ஏழைகளைப் பணத்தால் லபக்க முடியும் என்கிற ஆணையத்தில் இல்லாத 'தேர்தல் விதி’ அவர்களின் ஆணவத்தில் இருக்கும். அதனாலேயே வற்புறுத்திப் பணத்தைத் திணிப்பார்கள்.
Hilarious political cartoon images
அன்பளிப்புகள் தாராளமயமாகும். தேர்தல் நேரத்துத் தூண்டில்கள் துரத்தும்போது, எதற்கும் ஆசைப்படாத நிமிர்தலோடு, நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவது சாபத்துக்குச் சமமானது. அந்தப் பணமோ, பொருளோ, நம் வீட்டில் இருக்கவே கூடாது. நம் உழைப்பை விஞ்சி ஒரு பைசா கிடைத்தாலும், நாம் பிச்சைக்காரர்களே! 

இந்த உண்மையும் உளமார்ந்த வன்மையும் இன்றைக்கும் நிறைய கிராம மக்களிடம் இருக்கிறது. 'ஒன்னோட பணம் எனக்கெதுக்கு... நீ யார் வயித்துல அடிச்சு சம்பாரிச்சியோ?’ என வேட்பாளர்களைத் துரத்தும் பல பாட்டிகளை நான் பார்த்துஇருக்கிறேன். அத்தகைய நேர்மையும் வன்மையும் அனைத்து வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும்.


நம் கையில் இடப்படும் ஒரு துளி மையால் இந்த தேசத்தையே திருத்தி எழுத முடியும் என்கிற நம்பிக்கை நம்முள் எழுந்தால்... லஞ்சம், ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு, மக்களை மதிக்காத போக்கு என அத்தனை கேடுகளும் அகற்றப்பட்டுவிடும். மீண்டும் சொல்கிறேன்... தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும். 'தலை’யைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதிபடைத்த நாம், தலைஆட்டும் வர்க்கமாக இனிமேலும் இருக்கக் கூடாது!''

டிஸ்கி 1 - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 3 SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்