ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.
சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.
பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.
நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.
ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.
தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.
பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.
இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.
குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.
நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
உனக்கும் ஒரு ஓரத்தில்
ஒரு இதயம் இருக்கும்.
அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?
டிஸ்கி - 1 : தமிழ்மணம் 2010 விருதுக்கான போட்டியில் சினிமா பிரிவில் மைனா விமர்சனமும் , நகைச்சுவை பிரிவில் கோர்ட்டில் நயன்தாரா காமெடி கும்மி போஸ்ட்டும்,படைப்பு கவிதை பிரிவில் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை போஸ்ட்டும் இணைத்துள்ளேன்.இதில் கவிதை மட்டும் பலரால் படிக்கப்படாமல் இருந்தது.(நிறைய பேருக்கு நான் கவிதை எழுதுவேன்னே தெரியாது.)எனவே அதை மீள் பதிவாக்கி உள்ளேன்.
டிஸ்கி 2 - கவிதை எழுதுவதில் என்னை விட திறமையும்,அனுபவமும் அதிகம் உள்ள கேபிள் சங்கர்,கே ஆர் பி செந்தில்,கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர்,தேவா போன்றவர் கவிதைகளுடன் ஒப்பிடுகையில் 40 % பின்னடைவில் இருந்தாலும் சும்மா கல்லை விட்டு பார்ப்போம்னுதான் .....