Monday, November 08, 2010

ரோஜாவின் ராஜா (ஆர் கே செல்வமணி அல்ல)

      




சுதந்திர இந்தியாவை உருவாக்கிய சிற்பி

      பம்பாய் ஆஸாத் மைதானத்தில், 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேருஜி, மெளலானா ஆஸாத், புலாபாய் தேசாய் ஆகியோர் அதில் பேசவிருந்தார்கள்.

            நேருஜி பேசத் தொடங்கியபோது பெருமழை கொட்டத் தொடங்கியது. இருந்தாலும் கொட்டும் மழையிலும், இலட்சக்கணக்கான மக்கள் கொஞ்சங்கூட அசையாமல் அமர்ந்து, நேருஜியின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

            அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார். அதைக் கண்டு,”மக்கள் மழையில் நனையும்பொழுது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேரு. குடை பிடிப்பவரோ நேருஜி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டே இருந்தார்.

            நேருஜி பொது மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன்,”இவர் என் சொல்லையும் மீறிக் குடை பிடித்திருப்பதைப் பார்த்தால், இவர் ஒலிபெருக்கியின் சொந்தக்காரராக இருப்பார் என்றுநினைக்கிறேன். இவர் எனக்காகக் குடை பிடிக்கவில்லை. ஒலிபெருக்கியை மழையிலிருந்து
பாதுகாக்கவே குடையைப் பிடிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

            அதைக் கேட்டதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.


லால் பகதூர் சாஸ்திரி


     ஒரு முறை, பம்பாயில் குழந்தைகளின் விழா ஒன்றுக்கு லால்பகதூர்
சாஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதற்காக எழுந்தார், லால்பகதூர் சாஸ்திரி.

            ”குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய
அறிஞன் அல்ல. அப்படியிருக்க இந்தக் குழந்தைகள் விழாவிற்கு என்னை ஏன் அழைத்தார்கள் என்று யோசித்தேன். அப்புறந்தான் உண்மை தெரிந்தது. என் உடல் தோற்றம் ஒரு பத்து வயதுச் சிறுவனைப் போன்று அவ்வளவு
குள்ளமாக இருக்கிறது. ஒரு சிறுவனைப் போலவே நான் தோற்றமளித்த
காரணத்தால்தான் இங்கே என்னை அழைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.”

            இதைக் கேட்டதும், அங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்.