Sunday, June 26, 2011

வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்



சொத்து வரிக்கும், செல்வ வரிக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி-பதில்
1. ''சொத்து வரி, செல்வ வரி வேறுபாடு என்ன? விளக்க முடியுமா?''
அசோக்குமார், பென்னாகரம், தருமபுரி.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

'' பிராபர்டி டேக்ஸ்’ என்ற சொத்து வரி என்பது குறிப்பிட்ட சொத்து இருக்கும் பகுதியை பராமரிப்பு செய்யும் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டும் வரி. இந்த வரி உள்ளாட்சி அமைப்பின் கணக்கில் ஏறிவிடும். அவை, இதைக் கொண்டுதான் சாலைகள், தெரு விளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கின்றன. 


செல்வ வரி என்பது ஒருவர் அளவுக்கு அதிகமான சொத்துகள் குவிப்பதைத் தடுக்கும் விதமாக வசூலிக்கப்படுகிறது. குடியிருக்கும் வீடு மற்றும் வாடகை வருமானம் வரும் வீட்டை தவிர்த்து சும்மா போட்டு வைத்திருக்கும் வீடு, மனை, தங்க நகைகள், கார் போன்றவற்றின்  மதிப்பு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 'வெல்த் டேக்ஸ்’ என்ற செல்வ வரி கட்ட வேண்டும். இது மொத்த சொத்து மதிப்பில் 1% விதிக்கப்படும். இந்த வரி மத்திய அரசின் கணக்குக்கு செல்லும்.''


2.''வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் (என்.ஆர்.ஐ.) இந்தியாவில் விவசாய நிலம் வாங்க முடியுமா?''

அந்தோனி ஜோசப், மெயில் மூலமாக.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர், மனோகர் அண்ட் சவுத்ரி அசோசியேட்ஸ்.

''வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ.க்கள் அப்பார்ட்மென்ட், மனை போன்றவற்றை இந்தியாவில் வாங்கலாம். ஆனால், விவசாய நிலங்களை வாங்க முடியாது.''


3.''தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

சி.எஸ். நிவாஸ்குமார்,      திருவள்ளூர்.

டி.பார்த்தசாரதி, பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சார்ட்டர்ட் என்ஜினீயர்.

''ஒரு மனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கப்பட்டு இருந்தால், அந்த மனை அவரது பெயரில் கிரயம் (SALE DEED) செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மிக முக்கியமாக பார்க்க வேண்டும். மேலும், அந்த நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் ஏதும் வழக்கு தொடர்ந்தாரா, வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பதையும் கவனித்து கொள்ள வேண்டும்.''   
   

4.''என் தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். சித்திக்கு பிள்ளை இல்லை. நான் மற்றும் எனது அக்கா என இரண்டு வாரிசுகள். தற்போது குடியிருக்கும் வீடு, என் தந்தையின் தாய் வழிப் பாட்டனாரின் உயில்படி என் தந்தையின் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டை எங்கள் மூவரின் அனுமதியின்றி தந்தையால் விற்க முடியுமா?''

ஆர்.சுரேஷ், திருவண்ணாமலை.

என். ரமேஷ், வழக்கறிஞர்.

''தாய் வழிப் பாட்டனார் எழுதி வைத்த உயில் மூலம் தங்கள் தகப்பனாருக்கு கிடைத்த சொத்து அவரின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். பரம்பரை சொத்தாக கருதப்பட மாட்டாது. எனவே, அந்த சொத்தை தன் விருப்பப்படி மாற்றி அமைக்க உங்கள் தகப்பனாருக்கு உரிமை உள்ளது. அவரின் காலத்திற்கு பின்பு, உயில் எதுவும் எழுதாவிட்டால் உங்கள் மூவருக்கும் (நீங்கள், அக்கா, சித்தி) சம பங்கு உரிமை கிடைக்கும்.''


5.''நண்பர் ஒருவர் அண்மையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டார். சாலை விபத்தில் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைப்பதுபோல ரயிலில் அடிபட்டு இறப்பவர்களுக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?'
'
ஜே.மகேஷ், செங்கல்பட்டு.

சுந்தர்ராஜன்கிளை மேலாளர், வெல்த் மேனேஜ்மென்ட், ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி

''பொதுவாக சாலை விபத்தில் மட்டுமே மூன்றாம் நபர் பாலிசி பொருந்தும். ரயிலில் அடிபட்டு இறந்த உங்கள் நண்பருக்கு மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் கிடைக்காது. தனிநபர் விபத்துக்கான பாலிசி உங்கள் நபர் எடுத்திருந்தால் மட்டுமே அவருக்கு கிளைம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.''


6.''வீட்டுக் கடன் மாதத் தவணையை இரு மடங்குகளாக அதிகரித்து கட்டலாம் என திட்டமிட்டுள்ளேன். அப்படி கட்டினால் அபராதம், வேறு கட்டணம் ஏதாவது உண்டா?''

எஸ்.இ. முத்து, மெயில் மூலமாக.

பத்மநாபன்கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருவண்ணாமலை.

பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரையில், மாதத் தவணையை அதிகரித்து கட்டும்போது எவ்வித கட்டணமும் இருக்காது. கூடுதலாக கட்டும் தொகையும் உடனடியாக அசலில் கழிக்கப்பட்டுவிடுவதால் வட்டி செலவும் குறையும். அதேநேரத்தில், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஓராண்டில் பாக்கி கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் மற்றும் சில இ.எம்.ஐ.-களை மொத்தமாக கட்டத்தான் அனுமதிக்கும் நிலை இருக்கிறது. நீங்கள் கடன் வாங்கியிருப்பது பொதுத் துறை வங்கியா? அல்லது தனியார் துறை வங்கியா என்பதை பொறுத்து முடிவு எடுங்கள்..''

7.''என்னிடம் 50 அம்புஜா சிமென்ட்ஸ் பங்குகள் உள்ளன. ஏ.சி.சி. நிறுவனம், அம்புஜா நிறுவனத்துடன் இணைய போவதாக பேசப்படுகிறது. அப்படி இணையும்பட்சத்தில்  விலை எவ்வாறு கணக்கிடப்படும்?''

ரமேஷ்பட், சி.இ.ஓ. அனிராம் நிறுவனம்

''அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி. நிறுவனத்துடன் இணையப் போகிறது என்பது புரளி. அப்படியே இணைந்தாலும் எந்த விகிதத்தில் பங்குகள் கொடுப்பார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே விலையைப் பற்றி கூறமுடியும். அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி. இந்த இரண்டு நிறுவனங்களுமே நல்ல வலிமையான நிறுவனம். எனவே அதிகாரப்பூர்வ தகவல் நிறுவனங்களிடமிருந்து வந்த பிறகு எந்த முடிவையும் எடுக்கவும்.''


நன்றி - நாணயம் விகடன்