Showing posts with label s v sekar. Show all posts
Showing posts with label s v sekar. Show all posts
Saturday, November 17, 2012
Monday, January 30, 2012
சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 2
சிறந்த படிப்பாளி தான் சிறந்த படைப்பாளி ஆக முடியும்” அப்படீன்னு பல பெரிய மனுஷங்க எல்லாம் சொல்லி இருக்கறதால நானும் படிக்க முடிவு செஞ்சேன்.
ஸ்கூல்லதான் ஒழுங்கா படிக்கலை, இதையாவது படிப்போம்னு நான் ஜோக், காமெடி லைன்ல யார் எல்லாம் சாதனை செஞ்சாங்கன்னு கணக்கு எடுத்தேன். என் லிஸ்ட்ல முதல்ல சிக்குனது எஸ்.வி.சேகர். அவர் காமெடி டிராமாக்கள் ஆடியோ கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து கேட்க ஆரம்பிச்சேன். அப்போவே ஒரிஜினல் கம்பெனி கேசட் எல்லாம் 26 ரூபாய். அதே நாடகம் ஸ்டேஜ்ல போட்டப்ப அதாவது ஈரோடு கவிதாலயா சார்பா கொங்கு கலை அரங்கம்ல நடந்தப்ப பாக்கலாமுன்னு போனேன். டிக்கெட் 50 ரூபாய். அதனால வாசல்லியே நின்னு ஸ்பீக்கர் சவுண்ட் மட்டும் கேப்பேன். டிக்கெட் செக் பண்றவங்க முதல் அரை மணி நேரம் தான் இருப்பாங்க, அப்புறம் அவங்க உள்ளே போயிடுவாங்க. அதுக்குப்புறம் நானும் உள்ளே போயிடுவேன். (ஹிஹி)
எஸ்.வி.சேகரின் மேடை ஆளுமை மிகப் பிரமாதமா இருந்தது. அதாவது வசனங்களை அவர் மனப்பாடம் பண்ணிப் பேசறது மாதிரியே இருக்காது. சரளமா வரும். அதும் இல்லாம ஒரிஜினல் ஸ்கிரிப்ட்ல என்ன டயலாக் இருக்கோ, அது போக அப்பப்ப நாட்டில என்ன நடக்குதோ அதையும் டைமிங்கா ஜோக் அடிச்சு விடுவார். சொந்தச் சரக்கு. இது எனக்கு ஆனந்த விகடன்ல டாப்பிகல் ஜோக்ஸ் எழுத ரொம்ப யூஸ் ஆச்சு. அரசியல் தலைவருங்க ஏதாவது பேட்டி குடுக்கறப்ப அந்த லைன்ல இருந்து ஒரு ஜோக் தேத்தும் கலையை கத்துக்கிட்டேன்.
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் எல்லாரும் விடற அறிக்கையே காமெடியாத்தான் இருக்கும் என்றாலும், அதுல நம்ம டச் சேர்த்து ஜோக் ஆக்கும்போது நாம ரெகுலரா எழுதற ஜோக்கை விட அதிக கவனிப்பு இதுலே கிடைக்கும். அதும் இல்லாம பெரும்பாலாம பத்திரிகைகள் டாபிகல் ஜோக்ஸ், பாலிடிக்ஸ் ஜோக்ஸ் அதிகம் பிரசுரிச்சிட்டிருந்தாங்க.
அப்புறமா எஸ்.வி.சேகரின் முன்னோடி கிரேஸி மோகன்னு தெரிஞ்சுது. அவர் நாடகங்கள் கேசட் எல்லாம் வாங்கினேன். வார்த்தை ஜாலம், அதாவது எதிராளி பேசும் வார்த்தைகளை வெச்சே குழப்பி அதுல இருந்து ஒரு ஜோக் எடுக்கறது, இது பிரமாதமா அவருக்கு வருது. அவரோட படங்கள் எல்லாம் கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு படத்துல பொதுவா 25 ஜோக்ஸ், இல்லைன்னா அதிகபட்சமா 40 ஜோக்ஸ் தான் பொதுவா வைப்பாங்க, ஆனா கிரேசி மோஹன் டயலாக் எழுதுன படங்கள் எல்லாம் 60 ஜோக்ஸ் சர்வ சாதாரணமா வந்தது.
இப்போ தான் எனக்கு ஒரு பிரச்னை வந்தது. மெம்மரி பவர் எனக்கு கம்மி. படம் பார்த்துட்டு வந்து யோசிச்சு பார்த்தா 20 ஜோக்ஸ் மட்டும் தான் என்னால நினைவு வெச்சுக்க முடிஞ்சுது. அதை டெவலப் பண்ண ஆரம்பிச்சேன்.
இதிலே, உதாரணத்துக்கு எஸ்.வி.சேகர் நாடகத்துல இருந்து ஒரு சாம்ம்பிள் வசனம் :
ஹலோ அய்யா இருக்காருங்களா?
லேடி : மேலே படுத்திருக்காருங்க ( மொட்டை மாடில)
ஐயையோ, சாரிங்க, நான் அப்புறம் ஃபோன் பண்றேங்க
இந்த ஜோக் தான் அவர் நாடகங்கள்ல சூப்பர் ஹிட் ஆச்சு. நான் மக்கள் ரசனை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கே பாக்யராஜ் சார் டைப் இலை மறைவு, காய் மறைவா ஜோக் இருக்கனும், எஸ் ஜே சூர்யா மாதிரி பட்டவர்த்தனமாய் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
கூடவே, டைமிங்க் ஜோக் & டாப்பிக்கல் ஜோக் . அதாவது அந்தந்த கால கட்டத்துல என்ன சம்பவங்கள் நடக்குதோ அதை வெச்சு ஜோக் அடிப்பது,எதிராளி என்ன பேசறானோ அவன் வார்த்தைல இருந்தே ஜோக் எடுப்பது.
அடுத்த கட்டம் துக்ளக் ஆசிரியர் சோ.
இவர் அதிமுக அனுதாபின்னு ஒரு பேச்சு இருக்கு. அது பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. என் பார்வைல யார் எல்லாம் நல்லா காமெடி பண்ணறாங்களோ அவங்களை எல்லாம் ரோல் மாடலா எடுத்துக்க முடிவு செஞ்சுட்டேன்,. எனக்கு எதிரின்னு யாரும் கிடையாது. விருப்பமான கட்சி, அபிமான நடிகர்னு யாரும் கிடையாது.
முகம்மது பின் துக்ளக் நாடகம் தான் சோ எழுதுன மாஸ்டர் பீஸ். அந்த புக்ல மட்டும் 230 ஜோக்ஸ் தேறுச்சு. பல வருடங்களுக்கு முன்பே எம் எல் ஏ விலை போவது பற்றி மிகப்பிரமாதமா எழுதி இருந்தார். நாளை நடப்பதை இன்றே கணிப்பது என்ற கலை அவரிடம் அதிகம்.
பிளாக் & ஒயிட் படங்கள் என்றாலும், அவரு நடிச்ச படங்கள் கே டிவில எப்போ போடுவாங்கன்னு காத்திருந்து பார்க்கத்தொடங்கினேன். துக்ளக் பத்திரிக்கையும் வாங்க ஆரம்பிச்சிட்டேன். அதுல துக்ளக் சத்யா அபாரமான கார்ட்டூன்கள், காமெடி கட்டுரைகள் எல்லாம் எழுதுவாரு. அதை எல்லாம் ரசனையோட படிச்சேன்.
ஆனந்த விகடன்ல அட்டைபட ஜோக் எழுதி புகழ் பெற்ற படுதலம் சுகுமாரன் சிறுகதை செக்ஷன்க்கு போய்ட்டார். அவரை யாரும் மறக்கவே முடியாது, ஏன்னா எம் ஜி ஆர் பிரியட்ல ஒரே ஒரு அட்டைப்பட ஜோக்குக்காக ஆசிரியரே சிறை செல்ல நேரிட்டது.1000 ரூபாய் அபராதம் அரசே கொடுத்து விடுவித்தது. அதே போல் ஆனந்த விகடன் ஆசிரியரை உள்ளே அனுப்பும் அளவு ஒர்த் ஆன( !!!??) ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.
ஆனா பாருங்க 2 வருஷமா ஜோக்ஸ் வந்ததே தவிர அட்டைப்படத்துல வரலை. அப்புறம் எப்படியோ போன ஜென்மத்தில நான் செஞ்ச புண்ணியத்துல ஒரு ஜோக் அட்டைப்படத்துல வந்தது.
தலைவரே, ரத்தத்தின் ரத்தமே-ன்னு கட்சிக்காரங்களை கூப்பிட்டது தப்பா போச்சு
ஏன்?
கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு
இந்த ஜோக் அட்டைப்படத்துல வந்தாலும் பெருசா பரபரப்பா பேசப்படலை. அட, குறைந்தபட்சம் ஆசிரியருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட வரலை.
அப்போதான் அதிரடியா ஜோக் உலகுக்கு வந்தார் தஞ்சை தாமு. இவர் என் மானசீக குரு எனலாம். பொதுவா என்னை விட திறமைசாலிங்க எல்லாரையுமே நான் மானசீக குருவா ஏத்துக்குவேன். இவரது வார்த்தை ஜாலங்கள் பிரம்மிக்க வைத்தன.
வி சாரதி டேச்சு பத்திரிக்கை எடிட்டர்களை கவர்ந்தார் என்றால் தஞ்சை தாமு சாதாரண வாசகர்களை கவர்ந்தார். அவரது ஜோக்குகள் தனித்துவம் பெற்றன. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர். உடனே அவரை சந்திக்க ரயில் ஏறிட்டேன்.
வல்லம் தாஜூ என்ற பெயரில் கவிதை எழுதியவரும், பல உள்ளூர் பட்டி மன்றங்களீல் பேசியவருமான அவரது நட்பு கிடைத்தது. பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
அவரது புகழ் பெற்ற ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்…
இவ்வளவு வசதி இருந்தும் தலைவர் தரைல பாய்ல படுக்கறாரே, அவ்வளவு எளிமையா?
அட நீங்க வேற, அவருக்கு காலைல எழுந்ததும் எதையாவது சுருட்டணும்.
இந்த மாதிரி மற்றவர்கள் யோசிக்காத கோணத்தில் ஜோக்ஸ் எழுதுவதில் அவர் கை தேர்ந்தவர்.
அடுத்து வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி. இவரது படைப்பாற்றல் பிரம்மிக்கத்தக்கது. கதை, ஒரு பக்க கதை, கவிதை, ஜோக்ஸ் என எல்லா ஏரியாவிலும் கல்லா கட்டும் ஆள். செம ஷார்ப்பாக இவரது படைப்புகள் இருக்கும். இவரை நேரில் சந்தித்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நடிக நடிகைகளை நேரில் சந்திக்கும் ஆர்வம் வந்ததே இல்லை. இலக்கியவாதிகள், படைப்பாளிகளை பார்க்கும் ஆர்வமே அதிகம் இருந்தது, ஆஃபீஸ் வேலையாகவோ, உறவினர், நண்பர் திருமணங்கள்க்காக வெளியூர் செல்லும்போது அந்த ஊரில் எந்த படைப்பாளி இருக்கார்னு பார்த்து வாலண்ட்ரியா ஆஜர் ஆகி அறிமுகப்படுத்திக்குவேன்.
இப்படி என் எழுத்துப்பணி சீரா போய்ட்டு இருக்கும்போதுதான் சாவி பத்திரிக்கையின் தீபாவளி சிறப்பிதழ்ல என்னோட 8 ஜோக்ஸ், ஒரு சினிமா விமர்சனம், ஒரு காமெடி கட்டுரை ( ஜெவை கிண்டல் பண்ணி) வந்தது. சாவி அவர்கள் எனக்கு ஃபோன் செய்து சென்னை வந்தால் அவசியம் சந்திக்க என்று சொல்ல எனக்கு அது ஒரு பெரிய அங்கீகாரமாக தோன்றியது.
அதுக்கு அப்புறம் தான்…
- தொடருவேன்…
டிஸ்கி - இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka .blogspot.com/2 012/01/1.html