நாளைக்கும் வரும் கிளிகள்
பிரபஞ்சன்
ஓவியங்கள் :
மனோகர்
வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமானதாக
இல்லை. அவர் பெயரைச் சொன்னால், சின்ன குழந்தையும் வழிகாட்டும் என்று
ஆசிரியர் சொன்னது பொய் இல்லை. பஸ்ஸைவிட்டு இறங்கி அவன் விழித்துக்கொண்டு
நிற்கும்போது, ரோட்டோரம் இளநீர் விற்கும் அம்மாள் அவனை அழைத்து, மாமாவைப்
பார்க்க வந்தீங்களா என்று கேட்டு, முகவரியையும் சொன்னார்.
மாமாவின் வீடு, ஊருக்கு வெளியே, இன்னும் காங்கிரீட் காடாகிவிடாத,
மரங்கள் மற்றும் மைதானம்
காணப்படும் பகுதியில் ஒரு மாந்தோப்புக்குள் இருந்தது. அத்தனை காலையிலும்
நிறைய கார்கள் தோப்புக்குள் நிறைந்து இருந்தன. ஆசிரியர், மாமாவைப் பேட்டி
காணச் சொன்னபோது, அவன் தொலைபேசியில்
அவரைத் தொடர்புகொண்டு அவருக் குச் சௌகர்யமான நேரம் கேட்டான். உடனே மாமா
சொன்னார்,
''காலையில் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்?''
''எட்டு, ஒன்பதுக்குள் சார்.''
''அந்த நேரம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம், சரியா?''
அந்தக் குரல் ஒரு நண்பரின் குரலாக இருந்தது. பிரமுகர்கள் குரல்போல
இல்லை. பத்திரிகைக்காகப் பல பிரமுகர்களிடம் அவன் பேசி இருக்கிறான்.
அவர்களின் குரலில், ஒரு வெட்டுக் கத்தியின் முனை தெரியும். மாமாவோ,
தொலைபேசியில் கை குலுக்கினார்.
வரவேற்பு அறையில் அவனை அமரவைத்துச் சென்றார் உதவியாளர். அவனுக்கு முன்
பத்து இருபது பேர் இருந்தார்கள். பட்டு வேட்டி கட்டிய இரண்டு பேர், பட்டுப்
புடைவை கட்டிய நிறையப் பெண்கள் இருந்தார்கள். ஏதோ பிரச்னைகளைச்
சுமந்துகொண்டு, அந்தக் கணத்தில் ஆழ்ந்திருந்தார்போல, அவர்களின் அசாதா ரண
அமைதி, சூழ்நிலைக்கு ஓர் அழுத்த வர்ணம் தந்திருந்தது. ஒரு புகழ்பெற்ற
டாக்டரின் வரவேற்பு அறைக்குள் குழுமி இருக்கும் தீவிர நோயாளிகளின்
வாசனையால் அந்த அறை நிரம்பி இருந்ததைப் போல அவன் உணர்ந்தான். எத்தனை வகையான
வியாதிகள்? எவ்வளவு வியாதியஸ்தர்கள்?
அவர்கள், திறக்கப்பட்டும்
மூடப்பட்டும் இயங்கிய அறைக் கதவையே பார்த்தபடியே இருந்தார்கள். அந்த
அறைக்குள்தான் மாமா இருக்கிறாராக்கும். நாலைந்து பேர்கள் கொத்தாக அறைக்குள்
சென்றார்கள். அவன் மணியைப் பார்த்தான். எட்டாக இன்னும் இரண்டு நிமிஷங்கள்
இருந்தன. சற்றுப் பொறுத்து அவன் வந்திருக்கலாம். அத்தனைக் கடமை உணர்வு
தனக்குத் தேவைதானா என்று தனக்குள் விசாரித்துக்கொண்டான்.
எட்டரை மணிக்கு அறைக்குள்
அழைக்கப்பட்டான். இரண்டு சாரிகளிலும் போடப்பட்ட சோபாக்களுக்கு எதிரில் ஒரு
பிரம்பு நாற்காலியில் மாமா அமர்ந்திருந்தார். மாமா இரண்டு கைகளையும்
முகத்துக்கு நேராகவைத்து அவனை வணங்கினார்.
மாமா என்பது வெள்ளை கதர் வேட்டியும் வெள்ளைச் சட்டையும். சுமார் அறுபது
வயது. முகம் பளிச்சென்று புன்னகையும் திருப்தியும் கூடியதாக, பசியறியாதது
என்று சொல்லும்படியாக இருந்தது. ரிட்டையர்டு ஆன, அடிமைச் சிரிப்பு இல்லாத
மேல்நிலை குமாஸ்தா போலவும், திமிர் இல்லாத பரம்பரை மிராசுதாரர் போலவும்
காணப்பட்டார்.
அறைகள் மனிதர்களை அடையாளம் காட்டும்தானே? அந்தப் பெரிய
அறையில் ஆறு பேர் அமரும் இருக்கைகள் மட்டுமாக, நிறையக் காலி வெளிகள்
இருந்தன. ஏதோ ஒரு கற்பூரமோ அல்லது மணப்பொருளோ, இந்திய வாசனை ஒன்று
கமழ்ந்துகொண்டு இருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட சாமியார் மாதிரியான
ஒருவரின் சிலை மட்டும் இருந்தது. வேறு எந்தச் சாமிப் படமும் இல்லை.
''ஒன்றும் சிரமம் இல்லையே... வீடு வந்து சேர...''
''இல்லை. எல்லோருக்கும் உங்களைத் தெரிகிறது.''
''என்னைத் தவிர'' என்று புன்னகைத்தார்.
அவன் உஷாரானான். எல்லோரையும்போல அல்ல அவர் என்று தோன்றியது.
''எங்கே உங்கள் வாசம்?''
அவன் ராணிப்பேட்டை என்றான்.
''அப்படியென்றால், ஏழு மணிக்குப் புறப்பட்டு இருப்பீர். பசிக்குமே...
சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.''
பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். உணவு மேசை நாற்காலிகள்
மட்டும். மூன்று இலைகள் போடப்பட்டு இருந்தன. ஒரு மத்திய வயசு அம்மாள் வந்து
பரிமாறினார். அவர்களுக்கு எதிரே, தனியாகப் போடப்பட்ட இலைக்கு இட்லி, வடை,
சட்னி போட்டுவிட்டு, அப்புறம், அவர்கள் இலையில் பரிமாறினார்.
''உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளவில்லையே...''
''நான் மூர்த்தி.''
''நான் சந்துரு. சந்திரசேகரன். ஜனங்க மாமான்னு கூப்பிடறாங்க. ஏன்னு
தெரியலை. தாயின் சகோதரருக்கு மாமான்னுதானே பேர். சரின்னு நான்
ஏத்துக்கிட்டேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?''
''இல்லை.''
''நல்லது. எனக்கு உண்டு. நாற்பது வயசுக்கு மேல ஏற்பட்ட நம்பிக்கை அது.
வெளியே ஒரு சிலையைப் பார்த்திருப்பீரே. அவர் என் குரு. அவர்தான் நம்பிக்கை
ஏற்படுத்தினார். எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி இருக்கே. வீடு
கண்டுபிடிக்கச் சிரமம் ஒண்ணும் இல்லையே?''
''சிரமமே இல்ல சார். குழந்தைகளுக்கும்கூட உங்களைத் தெரிகிறது.''
''எனக்குத்தான் தெரியவில்லை.''
மாமா சிரித்தார்.
மூர்த்தி, விழிப்புக்கு உள்ளானான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம்.
சம்பளம் தருகிற முதலாளி நினைவுக்குள் வந்தார். அவன் தொழில் கடையை
விரிக்கத் தொடங்கினான்.
''நீங்கள் எப்படி இந்த...'' - பொருத்தமான வார்த்தையைத் தேடினான்
மூர்த்தி.
''துறைக்கு வந்தீர்கள்னு கேட்கிறீர் இல்லையா? தொழில்னு கேட்கத்தான்
தோணித்து இல்லையா. இது எனக்குத் தொழில் இல்லை.''
மாமா சற்று நேரம், அந்த மூன்றாவது, யாரும் சாப்பிடாத இலையைப்
பார்த்தார். பிறகு சொன்னார், ''என் மனைவி அவருடைய 26-வது வயதில் காலமானார்.
என்னுடைய 30-வது வயதில். ஏதோ ஒரு நோய். கடவுளுக்கு ஒரு காரணம்,
அழைத்துக்கொள்ள வேண்டி இருக்கே... அவர் வலியால் அவஸ்தைப்படும்போது நான்
பக்கத்தில் இருந்து ஆறுதல் சொன்னேன். நோய் குணமாயிடும்னு நம்பிக்கை
ஊட்டுவேன். நம்பிக்கைதான். அப்போல்லாம் அவர் முகத்தில் தோன்றின வெளிச்சம்
இருக்கே...
அப்பப்பா! அப்போ எனக்குத் தோன்றியது. துன்பத்துக்கு உள்ளாகிற
மனுஷங்களுக்குத் தேவை ஒரு வார்த்தை. ஒரு வார்த்தைதான் சார். எந்த மருந்தைக்
காட்டிலும் பெரிய மருந்து அது. எல்லாம் சரியாயிடும். நல்லாயிடும்.
பிரச்னையே இல்லை. இதுகூட மனிதர்களுக்குக் கிடைக்கிறது இல்லை. அதைச்
செய்வேன்னு, அதுதான் என் வாழ்க்கைனு முடிவு எடுத்தேன். இப்பவும் அதைத்தான்
செய்துக்கிட்டு இருக்கேன்.''
அவர், உண்ணப்படாத இலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். பிறகு சொன்னார்,
''என் அக்காள் மகள். ப்ளஸ் டூ படித்தாள். அவளைச் சராசரி என்று அவள்
அம்மாவேசொல்வாள். முட்டாள் ஆசிரியர்கள், அவளைக் கடைசி பெஞ்ச்னு
சொன்னார்கள். நான் மட்டும் அவளை நம்பினேன். அவள் படிப்பா. நல்லாப் படிப்பா.
ரொம்ப நல்ல மார்க் வாங்குவேனு சொன்னேன். என்ன மாயம்னு தெரியலை. நல்ல
மார்க் வாங்கி, பாஸ் பண்ணினாள்.எனக்கு இந்தப் படிப்பு மேல நம்பிக்கை இல்லை.
ஆனால், அவளுக்கு அதைச் சொல்ல முடியுமோ? முட்டாள் டாக்டர்கள், இந்த நோய்
குணமா காதுனு சொல்வார்கள்.
நான் சொல்றது இல்லை. சொல்லக் கூடாது. கேன்சர், ஹெச்.ஐ.வி. ஏதோ ஒரு எழவு.
வர வழி இருக்கும்னா, போகவும் வழி இருக்கும்தானே? வெளியில ஒரு பேஷன்ட்
இருக்கார். அவரை நான் குணப்படுத்திட்டு இருக்கேன். உங்களுக்குத் தெரியுமா?
நான் எம்.டி. படிச்ச டாக்டர். 20 வருஷ அனுபவம் எனக்கு உண்டு.''
''ஆனா, மருந்து கொடுக்கிறது இல்லை.''
''வேறு மருந்து கொடுக்கிறேன். நோயாளிகள் சாய்ந்துகொள்ள தோள்
தேடுபவர்கள், அன்புக்கு அன்பாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு
ஏங்குகிறார்கள். டாக்டர்கள் நோய்க்கு எதிராக வேறு ஒரு நோயை உடம்புக்குள்
ஏற்றுகிறார்கள். நான் ஆத்மாவுக்குள் எதையாவது கொண்டு செல்ல
விரும்புகிறேன்.''
''ஆத்மா மருத்துவம்?''
''ஆம், நாம் எல்லோரும் நோயாளிகள் சார். எந்த மருந்தாலும் குணப்படுத்த
முடியாத நோயாளிகள். படுக்கையிலே சாய்க்கப்பட்டால் ஒழிய, நாம் அதை நம்பறது
இல்லை. நாம் ஆரோக்கியமா இருக்கிறதா நம்பறோம். இல்லை. நான் உங்களை உங்களையே
உள்நோக்கிப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக்கொடுக்கிறேன். அவ்வளவுதான்.''
நாங்கள் கை கழுவ எழுந்தோம்.
''சார்... இந்த இலைக்கு யாருமே வரலையே. யாரையாவது
எதிர்பார்க்கறீங்களா?''
''என் மனைவி அங்கே சாப்பிடறார்.''
மாமாவுடைய நூலகத்துக்குள் மூர்த்தி அமர்த்திவைக்கப்பட்டான். நண்பர்களைப்
பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார் மாமா. பேஷன்ட்டுகளை அவர்
நண்பர்கள் என்றார். ஆங்கிலப் புத்தகங்களால் நூலகம் நிரம்பி வழிந் தது.
ஐரோப்பிய, ஆசிய தத்துவத்தரிசிகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு
இருந்தார்கள். மேசை மேல் சிலர் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தார்கள். வெளி
வாசலை ஒட்டிய திறந்தவெளியில் மிளகாய் காய்ந்துகொண்டு இருந்தது. மூர்த்தி
கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்
.
மேலே சுவரில் ஓர் இளம்பெண்ணின் படம் மாட்டப்பட்டு இருந்தது. அதன் கீழே,
ஏ.வி.எஸ்.மணிமேகலை என்று எழுதப்பட்டு, பிறப்பு, இறப்பு குறிப்பிட்டு
இருந்தது. அந்தத் தலைப்பு எழுத்துகள் தொடர்ந்து அவன் நினைவுக்குள்
வந்துசேர்ந்தன. அடிக்கடி கேட்ட பெயர் அது.
மாமா வந்து சேர்ந்தார். ''காக்கவைத்தமைக்கு மன்னியுங்கள்'' என்றார்.
''இந்தப் படம்...''
''என் மனைவி.''
''ஏ.வி.எஸ். என்கிற எழுத்துகளை அடிக்கடி கேட்டதாக இருக்கிறது.'
'
''பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அந்தப் பெயரில்தான் இருக்கும். எல்லாம்
இலவச அமைப்புகள்.''
மூர்த்திக்கு நினைவுவந்தது. அவன் தங்கை, அந்த மருத்துவமனையில்தான்
சேர்க்கப் பட்டாள். சிலவருடங்களுக்குமுன்பு. அதைச் சொன்னான்.
''அப்படியா?'' என்ற மாமா, ''என்ன பிரச்னை. இப்போ நன்றாக இருக்கிறாரா?''
''நன்றாகி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். ஸ்டவ் வெடித்து
ஆஸ்பத்தி ரிக்கு வந்தாள். பூர்ண குணமாகி, ஆட்டோவில் வீடு திரும்பும்போது,
லாரி மோதிப் பலியா னாள்.''
''கல்யாணம் ஆனவரா?''
''அதனாலதான் ஸ்டவ் வெடித்தது.''
''ம்... கணவன் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு இருப்பானே?''
''அதேதான்!''
''புரிகிறது'' என்றார் மாமா.
சற்று அமைதிக்குப் பிறகு, மாமா சொன் னார்... ''இந்தியாவில் பெண்கள்
பிறப்பதே பாவம்.''
அப்புறம், மாமா சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். ''மதியம் ஒரு மணிக்கு,
நீங்கள் இங்கு இருந்தால் பார்க்கலாம் சார். இரண்டு பச்சைக் கிளிகள் இங்கே
வந்து, இந்தச் சுவரில் உட்காரும். நான் தயாராக கொய்யாப் பழமோ, வாழைப் பழமோ
அவற்றுக்கு முன்னால் வைப்பேன். சாப்பிட்டுப் போய்விடும். ஒரு விஷயம்...
முதலில் தனியாகத்தான் ஒரு கிளி வந்துச்சு. அப்புறம் அது துணையைக் கூப்பிட்
டுக் கொண்டுவந்தது. இணை பிரியாத கிளிகள். எனக்கு என்ன பிரச்னைன்னா, என்னால்
ஊர்ப் பயணம் போக முடிவது இல்லை. அதுகள் வந்து காத்திருந்து ஏமாந்து
போயிடுமோனு கவலையா இருக்கு.''
''சமையல் பரிமாறினாங்களே, அந்த அம்மாள்...''
''அந்த அம்மாள் எங்களோட ரொம்ப காலமா இருக்கிறவர். என் மனைவி இருக்கும்
போதே இங்கே இருந்தவர். அவங்க வெச்சாலும் கிளிகள் சாப்பிடுவது இல்லை. ஏன்
நாமே எல்லோரிடமும் சிநேகம் பண்றமோ? இல்லையே? அந்த உணர்வு பறவைகளுக்கு
இருக்க முடியாதா... இருக்கு.''
''கல் வெச்சுக் கட்டிய வீடுகளுக்கு முகம் இருக்கு. அது நம்மோடு பேசும்னு
ஒரு எழுத் தாளர் எழுதியிருக்கார்.''
''தஸ்தயேவ்ஸ்கிதானே?''
''ஆமாம்.''
மூர்த்தி புறப்படத் தயார் ஆனான்.
''மத்தியானம் சாப்பிடலாமே, சேர்ந்து.''
''இருக்கட்டும் சார். அதிகம் சாப்பிடுட் டேன்.''
மாமா சிரித்தார். சொன்னார்... ''ஒரு வேண்டுகோள்...''
''சொல்லுங்கள்...''
''பேட்டின்னோ, கட்டுரைன்னோ என்னைப் பற்றி எதுவும் எழுத வேணாம்.
எனக்குக்கூச்சமா இருக்கும். பேசணும்னு தோணியது.பேசினேன். உங்க எடிட்டர்
எனக்கு வேண்டியவன். ரொம்ப வருஷத்துச் சினேகன். முகத்துக்கு முன்னால மறுக்க
முடியலை. தயவு செய்து ஒண்ணும் எழுத வேண்டாம். நான் அவன்கிட்ட பேசறேன்.''
''எனக்கும் தோணுச்சு சார்... எழுதலை.''
அவர் கைகுலுக்கினார். ''கார்ல போகலாமே...''
''வேணாம் சார். பல இடங்களுக்குப் போக ணும்...''
வெயில்
கடுமையாக இருந்தது. வெயில் எப்போதுதான் நடந்து செல்பவர்களுக்கு இனிமையாக
இருந்தது? இந்நேரம், கிளிகள் மாமா கொடுத்த பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டு
இருக்கும். அவனுக்குத் திடுமெனச் சந்தோஷமாக இருந்தது. சங்கரபவனில் பார்சல்
சாப்பாடு வாங்கிக்கொண்டான். அறைக்குத் திரும்பியவுடன் குளித்தான். மேசை
மேல் சாப்பாட்டைப்பிரித்துவைத்தான். இலையை விரித்து சாதம் பரிமாறினான்.
கூட்டு, பொரியல் பரிமாறினான். சாம்பார் ஊற்றினான்.
வழக்கமாகச் சாப்பிடும் தட்டை எடுத்து தனக்கு முன் வைத்துக்கொண்டான்.
அதில் சோறு பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான்.
சுமதியோட சேர்ந்து சாப்பிட்டு எத்தனைக் காலமாயிற்று?
அவனுக்கு அந்தக் கிளிகள் நினைவுக்கு வந்தன!
நன்றி - விகடன்