நாகேஷுக்கு நான் அடிமை !
க.ராஜீவ்காந்தி
கரையில் இருந்து ஹீரோயின்களை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டுமா என்று
தோன்றியதோ என்னவோ, ஒரு மலையாளக் காமெடியனைத் தனது 'கடல்’ படத்தில் அறிமுகம்
செய்கிறார் மணிரத்னம். மல்லுவுட்டில் பிரபல காமெடியனான அய்யப்ப பைஜு,
மணிரத்னம் படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார்.
மலையாளம் கலந்த கொச்சைத் தமிழில் அவருடன் சம்சாரித்ததில் இருந்து...
''ப்ரசாந்த் பைஜு ஆன கதை சொல்லுங்க..?''
''15 வருஷமா ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டு இருந்தவன் நான். ஒரு தடவை சினிமா
விழாவில் எங்க ஷோ. எனக்குக் குடிகாரன் கேரக்டர். போதைல தள்ளாடிட்டே வந்து
உருண்டு புரண்டு புலம்பிட்டே நடிக்கணும். சினிமா ஆட்கள்லாம் வந்திருந்த
அந்த நிகழ்ச்சியில என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டுதான் அனீஷ் பனிக்கர்
தன்னோட 'ஓகே சக்கோ கொச்சின் மும்பை’ங்கிற படத்துல நடிக்கவெச்சார். அப்படியே
'ரெய்ன் ரெய்ன் கம் அகெய்ன்’, 'ஃப்ரீடம்’ படங்கள் நல்ல பேர் வாங்கிக்
கொடுத்துச்சு. குடிகாரனா நான் நடிச்ச ஷோவில் என் கேரக்டர் பேர் அய்யப்ப
பைஜு. அதுவே இப்ப என் பேர் ஆகிடுச்சு!''
''நடுவுல ஒரு படத்துல ஹீரோவா நடிச்சீங்க போல?''
''அய்யோ! அது வேணாமே சாரு... (வெட்கப்படுகிறார்). எங்க தேசத்துல
ஹீரோன்னு சொல்லிக்கிட்டு நடிக்கிறதில்லை சார். கதைல ஸ்கோப் அதிகம் உள்ள
கேரக்டர் அப்படின்னு சொல்லுங்க. 'ஞான் சஞ்சாரி’ படத்துல அப்படி நடிச்சேன்.
கேரள ரசிகர்களோட நல்ல நேரம்... அந்தப் படம் சரியாப் போகலை. இனிமே, ஹீரோவே
வேணாம்னு முடிவுபண்ணிட்டேன்!''
'' 'கடல்’ படத்துல நடிக்க எப்படி வாய்ப்பு கிடைச்சது?''
''நான்
நடிச்ச படங்கள், ஸ்டேஜ் ஷோஸ் பார்த்துட்டு எழுத்தாளர் ஜெயமோகன் என்னைப்
பத்தி மணி சார்கிட்ட சொல்லியிருக்காரு.
ஆசை ஆசையா நடிக்க ஓடி வந்தா,
'கடல்’லயும் எனக்குக் குடிகாரன் கேரக்டர்தான். வேலைக்குப் போகாம வெட்டியா
சுத்திட்டு, குடிச்சுட்டு மப்புல வம்பு பேசுற கேரக்டர். படத்துல
அரவிந்த்சாமி கூடவே வருவேன். கதைல எது நடந்தாலும் கவலைப்படாத ஒரு ஜீவன்னா,
அது நான்தான். இங்கே ஒரு விஷயம் புரியுதா... படத்துல என்னைக் காமெடியன்னு
சொல்றதைவிட, ஒரு கேரக்டர்னு மட்டும்தான் சொல்ல முடியும்.''
''கௌதம், அரவிந்த்சாமிலாம் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்களா?''
''அட... நீங்க வேற அரவிந்த்சாமியைப் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரலை.
ஷாட் அப்போ மட்டும் ஏதோ சமாளிச்சு நடிச்சேன். கௌதம் செம ஸ்வீட் பையன்.
ரொம்ப ஈஸியா எல்லாரையும் ஃப்ரெண்ட் பிடிச்சுடுறார். இதுதான் அவருக்கு முதல்
படம்னு சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ பெர்ஃபெக்டா நடிக்கிறார்!''
''தமிழ்ல யார் காமெடி உங்களுக்குப் பிடிக்கும்?''
''நாகேஷ் சார் காமெடிக்கு நான் அடிமை. ஒவ்வொரு முறை அவர் காமெடி
பார்க்கும்போதும் புதுசா ஏதாவது கத்துட்டே இருப்பேன். இப்ப இருக்கிறவங்கள்ல
வடிவேலு, சந்தானம் ரெண்டு பேர் காமெடியுமே பிடிக்கும்!''
''மலையாள காமெடி, தமிழ் காமெடி என்ன வித்தியாசம்?''
''மலையாளத்துல காமெடிக்குனு தனியா காட்சிகள் வைக்க மாட்டாங்க. பிரதான
கதைலயே காமெடியும் சேர்ந்து வரும். ஆனா, தமிழ்ல அப்படி இல்லை. கதைக்குச்
சம்பந்தமே இல்லாத காமெடி டிராக்கூட இருக்கும். ஒரு காமெடி நடிகர், அவரோட
குரூப் அப்படின்னு தனிக் கதை தமிழ் சினிமால இருக்கு. எனக்கு ரெண்டுமே
பிடிச்சுருக்கு. தமிழ் சினிமால நானும் ஒரு குரூப் கிரியேட் பண்ணணும்.''
''அப்ப தமிழ் சினிமாதான் உங்க அடுத்த இலக்கா?''
''தமிழ் சினிமால பெரிய ரவுண்டு வரணும்னு எனக்கும் ஆசைதான். கடவுளோட
ஆசீர்வாதமும் அனுமதி யும் இருந்தா உங்க வார்த்தைகள் பலிக்கும்!''
நன்றி - விகடன்