Showing posts with label functions. Show all posts
Showing posts with label functions. Show all posts

Saturday, November 24, 2012

கலைஞர் உருக்கம் ,வீரபாண்டி ஆறுமுகம் மறைவு

'வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம்'': கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி



சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.


 former minister veerapandi arumugam dead
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.


3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்:


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மறைந்தார்.


அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


ராமதாஸ் இரங்கல்:


வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, திமுகவின் மூன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
வீரபாண்டியாரின் மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தா.பாண்டியன் இரங்கல்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திமுக சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் தலைமைக்குழுவின் முக்கிய பொறுப்புக்களிலும், திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்து வந்த மூத்த அரசியல்வாதி வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டு, ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தார்க்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



திருமாவளவன்...


விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
வீரபாண்டியார் 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் சட்டமேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்பட மக்கள் பணியாற்றியவர். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து சாதனைகள் பல புரிந்தவர். அவரை இழந்து வாடும் திராவிட இயக்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 

வீரபாண்டியார் மரணம்: சேலத்தில் அறிவிக்கப்படாத 'பந்த்'; வன்முறை-3 பஸ்கள் உடைப்பு: திமுக தொண்டர் சாவு

 
 
 
சேலம்: மூத்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவையடுத்து சேலத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும்ம் விடுமுறை விடப்பட்டது.




சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். 3 அரசுப் பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கண்ணாடிகள் உடைந்தன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய இடங்களில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.




சேலம் மாநகரத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள் கூட மூடப்பட்டுவிட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் சேலம் நகரமே வெறிச்சோடிப் போனது.




இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக திருப்பூர் எஸ்.பி, நாமக்கல் எஸ்.பி ஆகியோரும் சேலம் வந்துள்ளனர். இவர்களுடன் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீஸார் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


இன்று மாலை 6 மணி முதல் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் நாலைந்து பேருந்துகளாக சேர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படவுள்ளன.




வீரபாண்டியார் மறைவை கேள்விப்பட்ட திமுக தொண்டர் மரணம்:




இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்ட சேலத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.




எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (45) டீக்கடை வைத்து நடத்தி வந்தார். தீவிர திமுககாரரான இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர்.


வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவைக் கேள்விப்பட்டதும் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.


  நன்றி - தட்ஸ் தமிழ்