முத்தான முதலுதவி!
டாக்டர் ஆர்.பார்த்தசாரதி
தொகுப்பு: உஷா ராமகிருஷ்ணன்
மருத்துவ ரீதியான அவசரக்கட்டம் என்று வரும்போது, முதலுதவி தருவது இன்றியமையாதது. நம் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படும்போது, இயற்கையாகத் தோன்றக்கூடிய பதற்றத்தோடு உணர்வாலும் கலங்கி விடுவோம். பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர உதவி தர ஆளிருந்தும் அதைத் தரத் தெரியாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர் இறந்த பரிதாபத் தருணங்களும் உண்டு.
விபத்துக்குள்ளாவது அல்லது திடீரென்று நோய்வாய்ப்படுவது என்ற நிலையில், முதலுதவி தேவைப்படுகிறது. முதலுதவி தருவதற்கான நோக்கம் - உயிர் போவதைத் தடுப்பது, ஒருவரது பாதிப்பு நிலையின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது விரைவான நிவாரணம் தருவது. பெரும்பான்மையான நிலைகளில் முதலுதவி என்பது முதல்கட்ட நடவடிக்கையே. விரைவாக மருத்துவ வல்லுநரின் உதவியை நாடுவது முக்கியம்.
மாரடைப்பு
அறிகுறிகள்: தொடர்ந்தோ, விட்டு விட்டோ நடுமார்பில் வலி, மேல் வயிற்றில் வலி, மார்பில் தொடங்கி தோள், பல், தாடை, கைகள் வரை பரவும் வலி, வாந்தி, தலைச்சுற்றல், அதிகமான வியர்வை, மூச்சுத் திணறல்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் அதிக வலி தொடர்ந்தால், ஆம்புலன்ஸுக்குச் சொல்லுங்கள். சார்பிட்ரேட் 5 எம்.ஜி மாத்திரையை நாக்குக்கடியில் அடக்கச் சொல்லி, ஆஸ்ப்ரின் மாத்திரை அவருக்கு அலர்ஜி இல்லையென்றால், அதையும் மென்று விழுங்கச் சொல்லலாம். இதனால் இதயத்தில் தடைப்பட்ட ரத்த ஓட்டம் மீண்டும் இயங்கத் தொடங்கும். அவர் மயக்கமாகி விட்டால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் செயற்கை மூச்சு தாருங்கள் (செய்யும் முறை இத்தொகுப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது).
நெஞ்சு வலி
மேலே சொன்ன அறிகுறிகள் ஏதும் இல்லாமல் நெஞ்சு வலி இருந்தால், வாய்வுத் தொல்லையாக இருக்கக்கூடும். இதற்கு ஜெலுசில்/ரேன்டாக் மருந்து கொடுப்பதோடு குளிர்ந்த பாலோ மோரோ குடிக்கக் கொடுக்கலாம். வலி குறையாத பட்சத்தில் மருத்துவரிடம் செல்லுங்கள்.
நரம்புத் தளர்ச்சி அல்லது வலிப்பு
பொதுவாக வலிப்பு வரக்கூடியவர்கள், தன்னைப் பற்றிய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டிருப்பவரது உடைகளைத் தளர்த்தி, சுற்றுப்புறத்தைக் காற்றோட்டமானதாக ஆக்குங்கள். ஆம்புலன்ஸுக்கு சொல்லுங்கள். வலிப்பு எப்படியும் சிறிது நேரத்தில் நிற்கும் என்பதால், அதுவரை காத்திருங்கள். நின்ற பிறகு சுலபமாக மூச்சுவிட ஏதுவாக, பக்கவாட்டில் படுக்க வையுங்கள். அவர் சுய நினைவுக்குத் திரும்பும்போது ஊக்கமூட்டிப் பேசுங்கள்.
செய்யக் கூடாதவை: அவரை அடக்கி அசைவை நிறுத்த முயல்வது, இரும்புப் பொருள்களைக் கையில் அல்லது வாயில் கொடுப்பது.
எலும்பு முறிவு
சௌகரியமான நிலையில் அவரை அமர்த்தவும். பாதிக்கப்பட்ட இடத்தை நகர்த்தக்கூடாது. கால், கை, விரல் என்று எந்த இடத்தில் எலும்பு முறிந்திருப்பது போல் தோன்றுகிறதோ, அதை சிறிய கொம்பு, தடியான போர்வை, குடை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கட்டி விடவும். விரல் பாதிக்கப்படும்போது பக்கத்து விரலோடு சேர்த்தும் கட்டலாம். மருத்துவ உதவி பெறுவதற்கு முன் இதைச் செய்வது அவசியம். முதுகுத் தண்டில் முறிவு இருந்தால், முடிந்த வரை தலை மற்றும் முதுகை அசைக்காமல் வைத்திருப்பது நல்லது. சொல்லத் தெரியாத குழந்தைக்கு வீக்கமோ, வலியால் அழுகையோ, நகர்த்த முடியாத நிலையோ இருந்தால் விரைந்து மருத்துவ உதவியை நாடுங்கள்.
லிஃப்ட் மற்றும் இயந்திரப் படிகளில் மாட்டிக் கொள்ளுதல்:
முன்னெச்சரிக்கையாக, காலணிகளில் இருக்கும் கயிறு(லேஸ்) கட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். புடவை புரளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்நோக்கி, படியின் நடுவில் நில்லுங்கள். குழந்தைகளின் கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். விளையாட அது இடம் இல்லை. எஸ்கலேடரில் யாராவது மாட்டிக் கொண்டால், பட்டனைத் தேடி, இயக்கத்தை நிறுத்த முனையுங்கள்.
லிஃப்டில் பயணிக்கும்போது, கைகளால் கதவு மூடுவதைத் தடுக்கக் கூடாது. லிஃப்ட் இடையில் நின்று விட்டால், எச்சரிக்கை பட்டனை அழுத்தி, உதவி கிடைக்கும்வரை காத்திருக்க சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
அடிபட்டதால் தோன்றும் ரத்தப்போக்கு:
அடிபட்ட இடத்தில் அழுக்கும் கிருமியும் இருந்தால் அகலும்படி சுத்தமாகக் கழுவுங்கள். துணி ஒன்றை காயம்பட்ட இடத்தில் வைத்து நன்றாக அழுத்துவது ரத்தப்போக்கை நிறுத்த உதவும். ரத்தம் நின்றுவிட்டால் களிம்பு தடவி மெல்லிய பேண்டேஜ் வைத்துக் கட்டுங்கள். ரத்தம் நிற்காத நிலையில், ஐஸ்கட்டிகளைத் துணியில் வைத்து மூடி, காயத்தின் மீது ஒத்தடம் கொடுங்கள். ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, வெட்டுப்பட்ட இடத்திற்கு மேலாக இறுகக் கட்டுவது கூடாது.
துண்டிக்கப்பட்ட விரல்
விபத்தில் விரல் துண்டிக்கப்படும்போது, அவரைக் காற்றோட்டமாக வைத்து நன்றாக மூச்சுவிட அனுமதியுங்கள். பாதிக்கப்பட்ட கையையோ காலையோ நிமிர்த்தி, முடிந்தால் இதயத்துக்கு மேலாகப் பிடித்துக் கொள்ளுங்கள். துண்டுபட்ட விரலை சுத்தமான நிலையில், நல்ல ப்ளாஸ்டிக் கவரில் வைத்து மூடி, அதை ஐஸ்கட்டிகள் கொண்ட டப்பாவிலோ கவரிலோ குளிர்ச்சியாக வைக்கவும். சரியான முறையில் பாதுகாத்து அறுவை சிகிச்சைக்கு விரைவாக எடுத்துச் சென்றால், துண்டான விரல் மீண்டும் இணைக்கப்படும் சாத்தியக்கூறு அதிகம். அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
செய்யக் கூடாதவை: துண்டுபட்ட விரலை நேரிடையாக ஐஸ்கட்டிகளில் உறையவைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு சாப்பிடவோ, குடிக்கவோ உணவு கொடுப்பது.
நாய்க்கடி:
கடித்த இடத்தில் ரத்தம் வந்தால், ரத்தம் சிறிது நேரம் கசிய விடுங்கள். நாய்க்கடி பட்ட இடத்தை சுத்தமான நீரினால் கழுவுங்கள். முதலுதவிக்குப் பின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. ஆன்ட்டி-ராபீஸ் ஊசிக்கு இப்போது தொப்புளைச் சுற்றிப் போடும் பதினான்கு ஊசிகள் தேவையில்லை. கடிபட்ட அன்று, மூன்றாவது நாள், ஏழாவது நாள், பதினான்காவது நாள் மற்றும் முப்பதாவது நாள் என தலா ஒரு ஊசி கையில் போடப்படுகிறது. கூடவே முதல் நாளன்று டெட்டனஸும் எடுத்துக் கொள்வது நல்லது.
பாம்புக்கடி
அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் கொடுக்காதீர்கள். கடித்த இடத்துக்கு இரண்டு அங்குலங்கள் மேலே கட்டு போடுங்கள். கடித்த பாம்பின் தோற்றத்தைக் கண்டுகொண்டு மருத்துவரிடம் விவரிக்க முடிந்தால், அவர் அதை அனுமானித்து சிகிச்சை கொடுக்க முடியும்.
பூச்சிக்கடி
முதலில் பூச்சியை உடலிலிருந்து ஜாக்கிரதையாக அகற்றுங்கள். கடித்த இடத்தை நன்றாகக் கழுவி, கிருமிநாசினி களிம்பைத் தடவலாம். அலெக்ரா போன்ற அலர்ஜி மாத்திரை உட்கொள்ளலாம். ஜுரம், வாந்தி, மயக்கம் போன்றவை தோன்றினால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
அலர்ஜி
ஒவ்வாமையாலோ, பூச்சி கடிப்பதனாலோ சருமத்தில் தடிப்போ, அரிப்போ, சிவந்தோ காணப்படுவது அலர்ஜியின் அறிகுறி. ஆன்டி- அலர்ஜி மாத்திரை (அலெக்ரா) கொடுக்கலாம். நாக்கிலோ, உதட்டிலோ, மூச்சுக் குழாயிலோ வீக்கம் காணப்படுவது அலர்ஜியின் தீவிர நிலை. இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை.
தேள் கொட்டு:-
கடிபட்ட இடத்தை நன்றாகக் கழுவி, ஐஸ்கட்டிகளைத் துணியில் சுற்றி பத்து நிமிடங்களுக்காவது ஒத்தடம் கொடுக்கவும். அசாதாரண அறிகுறிகள் தோன்றினால் விரைந்து மருத்துவ உதவியை நாடுங்கள். டெடனஸ் ஊசி போட வேண்டியது அவசியம்.
மனிதக்கடி:-
குழந்தைகள் சண்டையில் ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்ளக் கூடும். கடிபட்ட இடத்தை சோப்பால் சுத்தம்செய்து நன்றாகக் கழுவவும். கடி ஆழமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆன்டி-டெடனஸ் ஊசிப் போடவும். அவர் தேவைப்பட்டால் உட்கொள்ள மருந்து கொடுப்பார்.
ரத்த வாந்தி:-
வாந்தியை அதிகம் தூண்டி விடாதீர்கள். ரேன்டாக் போன்ற மாத்திரை கொடுக்கலாம். அவரை நிமிர்ந்து உட்கார வைக்கவும். ரத்தமாக அதிகம் எடுத்தால் தாமதிக்காமல் மருத்துவ உதவி நாடவும்.
செய்யக் கூடாதவை: காரசாரமான உணவை உட்கொள்ளுதல்; மது அருந்துதல், புகை பிடித்தல், படுக்க வைப்பது.
வாந்தி:-
தொடர்ந்து இரண்டு மூன்று தடவைகள் எடுக்க நேர்ந்தால், முதல் கட்டமாக அஜீரணப் பிரச்னையா என்று பார்க்க ஜெலுஸில்/ரேன்டாக் வகை மருந்தைக் கொடுக்கலாம். தொடர்ந்து வாந்தி எடுக்காமல் இருக்க டோம்ஸ்டால் போன்ற மாத்திரை ஒன்று எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் நிவாரணம் கிடைக்கவில்லையெனில் மருத்துவ உதவியை நாடுங்கள். வாந்தியுடன் அதிகமான வியர்வை, மூச்சிரைத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனை செல்வது நல்லது. வெது வெதுப்பான நீரை அடிக்கடி சிறிய அளவில் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருங்கள்.
விஷம் உட்கொள்ளுதல்
ஆம்புலன்ஸுக்கு உடனே சொல்லுங்கள். எந்த வகையான விஷம் என்பது தெரிந்தால், மருத்துவரிடம் காட்ட அதை கையோடு எடுத்துக் செல்லுங்கள். நோயாளி மூச்சுப் பேச்சின்றி இருந்தால் செயற்கையாக மூச்சு கொடுக்கவும் (தொகுப்பின் இறுதியில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது).
செய்யக் கூடாதது: வாந்தியைத் தூண்டுவது
தீக்காயம்:
தீக்காயம் பட்டவுடன் பத்து நிமிடங்களுக்குக் குழாயடியில் குளிர்ந்த நீரில் காட்ட வேண்டும் அல்லது சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைக்கவும். பிறகு இலேசான காயமாக இருந்தால் சில்வெரெக்ஸ் போன்ற களிம்பு தடவி, மெல்லிய துணியால் கட்டவும்.
பெரிய தீக்காயமாக இருக்கும் நிலையில் சிவந்த சருமத்தோடு சேர்த்து கொப்புளங்களும் வீக்கமும், வலியும் காணப்படும். அதைவிட தீவிரமான காயத்தில் சருமம் வெளுத்தோ, கருகியோ காணப்படும். இந்நிலையில் நரம்பு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் வலி தோன்றாது. இதற்கு மருத்துவ உதவியை உடனே நாடுங்கள். அதுவரை ஈரமான மெல்லிய துணி கொண்டு கட்டலாம். காயம் பட்ட இடத்தை உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
செய்யக் கூடாதவை: பஞ்சில் மருந்து தடவி நேரிடையாக காயத்தின் மேல் வைப்பது; கொப்புளங்களை உடைப்பது; உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தீந்த உடையை அகற்றுவது.
மூக்கிலிருந்து ரத்தம் வழிதல்:
மூக்கின் மிருதுவான பகுதிகளை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக் கொள்ளவும். இதன் பிறகு மூக்கின் எலும்பை நோக்கி அழுத்தி விடவும். வெளிவரும் ரத்தத்தை மீண்டும் உறிஞ்சாமல் இருக்க, தலையை முன்நோக்கி சாய்த்து வையுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு, மேற்சோன்னவற்றை ரத்தம் நிற்கும் வரை தொடர்ந்து செய்யுங்கள்.
கண்ணில் தூசி விழுதல்
கண்ணைத் திறக்க முடியாமல் போனால் கட்டாயம் செய்யக் கூடாதது கண்ணைத் தேய்ப்பது. கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவலாம், ஊதி வெளியேற்ற முயற்சிக்கலாம். கண்ணில் விழுந்த பொருளை நீக்க முடிய வில்லையென்றால் மருத்துவ உதவி அவசியம். அப்படிப் போகும்போது கண்களை மூடி, மெல்லிய துணி வைத்து கட்டி, பாதுகாப்பாக வைத்திருங்கள்.
ஜுரம்
சிறுவர்களுக்கு பேரசிட்டமால் மருந்து கொடுத்தும் இரண்டு நாட்களுக்கு மேல் ஜுரம் நீடித்தால், மருத்துவரிடம் செல்லுங்கள். ஜுரத்தை அவ்வப்போது தெர்மா மீட்டர் வைத்து சோதிப்பது அவசியம். ஜுரம் 101 டிகிரிக்கு மேல் சென்றால் வலிப்பு வரலாம். அப்போது கவனம் தேவை. குளிர்ந்த நீரில் கைத்துண்டை நனைத்து, நெற்றியில் வைத்தால் சூடு இறங்கும். யாருக்குமே ஜுரம் அந்த அளவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிறுநீரில் ரத்தம்
ஒருமுறை இந்நிலை தோன்றினாலும் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். வெளியேறிய ரத்தத்தின் நிறம், அதன் தன்மை, அளவு, எத்தகைய வலி இருந்தது போன்ற விவரங்களை மருத்துவரிடம் சொல்லத் தயாராய் இருங்கள்.
பக்கவாதம்
பாதிக்கப்பட்டவர் திடீரென்று கீழே விழுந்தால், அது பக்கவாதமா என்று அறிந்து கொள்வது சரியான மருத்துவ உதவியை நாட உதவும். அவரை சிரிக்கச் சொன்னால் ஒரு பக்கம் கோணிக் கொள்ளும்; ஒரு வார்த்தை பேசச் சொன்னால் பேச்சு குழறும்; இரு கைகளையும் மேலே தூக்கச் சொன்னால், ஒரு பக்கம் தூக்க முடியாமல் போகும்; நாக்கை நீட்டச் சொன்னால் அதுவும் கோணலாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை தர வேண்டும்.
தண்ணீரில் மூழ்குதல்
மூழ்கிய நபரைக் கரை சேர்த்தவுடன் ஈரத் துணிகளை அகற்றி, கம்பளியால் சுற்றி இதமாக்குங்கள். முகத்தை ஒருபக்கமாகத் திருப்பி படுக்க வைத்து, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வைக்கவும். உடலின் நடுப்பகுதியை உயர்த்தி வைத்து, வயிற்றை அழுத்தி நுரையீரலுக்குள் சென்ற நீரை வெளியேற்ற வழி வகுக்கவும். முச்சு குறைவாகவோ, இல்லாமலோ இருந்தால் வாயுடன் வாய் வைத்து மூச்சுக் கொடுக்க வேண்டும். மூச்சு வந்தவுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
டீஹைட்ரேஷன்
வாந்தி, பேதி போன்றவற்றால் உடலிலிருந்து நீர் அதிகம் இழக்கும் போது, யாரும் செய்யக்கூடிய, பாதிப்புகள் இல்லாத வைத்தியம், ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையும் கலந்து குடிக்கக் கொடுப்பது. பிற மருத்துவ உதவிகள் நாடுவதற்கு முன்பு, இதை எவ்வளவுக்கெவ்வளவு செய்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு ஆபத்தைத் தவிர்த்து விடலாம்.
தலையில் அடி:
வீட்டில் கதவு, அலமாரிகளில் யாராவது தலையில் இடித்துக் கொண்டால், உட்கார வையுங்கள். வீக்கம் இருந்தால் ஐஸ்கட்டி வைக்கலாம். சுயநினைவோடு இருந்தால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிறிது நேர ஓய்வில் சரியாகிவிடும். யாரையாவது காவலுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அடிபட்டது சிறிய குழந்தையென்றால், சில மணி நேரங்களுக்கு கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுங்கள். குழந்தை தூங்கினால், நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை எழுப்பி நிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண இடி என்றால் பெரும்பாலும் பதற்றப்பட வேண்டியதில்லை.
தலையில் அடிபட்டதில் ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டால், சுற்று வட்டாரத்தைக் காற்றோட்டமாக ஆக்குங்கள். மூச்சு இல்லாதது போல் தோன்றினால், செயற்கை வழி மூச்சு தரலாம். நினைவும் தப்பி, வாந்தியும் எடுத்தால், தாமதிக்காமல் மருத்துவ உதவி நாடுங்கள். கண்ணைத் திறக்க முடியாமல் செருகிக்கொண்டு போனாலோ அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தலைச் சுற்றலோ, மயக்கமோ, வாந்தியோ இருந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
அடி பலமாக இருந்து, சுய நினைவு இருந்தால், முடிந்த வரை நினைவு தப்பாமல், கன்னத்தைத் தட்டியோ பேச்சுக் கொடுத்தோ, பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனை விரைவது முக்கியம். வெளிக்காயம் பட்டிருந்தால் தகுந்த முதலுதவியும் நடவடிக்கையும் எடுப்பது அவசியம்.
செய்யக் கூடாதது: தலையில் அடிபட்டவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்து தூக்க மாத்திரை கொடுக்கக்கூடாது. வெளியே சென்ற இடத்தில் அடிபட்டால், சில மணி நேரத்துக்கு வண்டி ஓட்டாதீர்கள்.
குழந்தை எதையாவது விழுங்கி விட்டால்...
விழுங்கிய பொருள் ஆபத்தானதா? வயிறு வலிக்கிறதா? மூச்சுத் திணறல், தொடர்ந்து இருமல், தலை தொங்குதல், மயக்கம் போன்றவை இருந்தால், மூச்சுக் குழாயில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எதுவாக இருந்தாலும் உடனே மருத்துவமனை விரைய வேண்டும். பொருள் ஆபத்தில்லாததும், மிகச் சிறிய அளவானதுமாக இருந்தால் இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்கலாம். ஆனால், அசாதாரண அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று விடுங்கள்.
காதுகளில் வேற்றுப் பொருள் சென்றால்...
காதை நிலத்தை நோக்கிச் சாய்த்து, பொருள் விழுகிறதா என்று பார்க்கலாம். பூச்சி காதுக்குள் சென்று விட்டால் மட்டும் மிதமான சூட்டில் இருக்கும் ஆலிவ் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை காதுக்குள் விட்டால் பூச்சி அதில் மிதந்து வெளியே வந்துவிடும்.
செய்யக் கூடாதது: காதில் இருக்கும் பொருளை எடுக்கும் பொருட்டு காட்டன் பட்ஸ் உட்பட எதையும் கொண்டு குத்துவதால் காது பாதிப்படைவதோடு, பொருள் மேலும் உள்ளே செல்லும் அபாயம் அதிகம்.
மூக்கில் வேற்றுப் பொருள் சென்றால்...
மெள்ள மூச்சை வெளியே விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். மூக்கின் இன்னொரு துவாரத்தை விரலால் மூடி, பொருள் விழுந்த துவாரத்தை சிந்துவது போல் மூச்சு விட்டு வெளியே வருகிறதா என்றும் பார்க்கலாம். மூக்கை உறிஞ்சுவதோ, மூச்சை இழுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். மெள்ள வாயால் மூச்சு விடுவது, பொருள் மேலும் மூக்கினுள் செல்வதைத் தடுக்கும். மருத்துவ உதவி நாடுவது அவசியம், அதிலும் மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்க வேண்டாம்.
செய்யக் கூடாதது: படுக்க வைப்பது, மூக்கை மேல்நோக்கி வைப்பது.
மயக்கம்
மூளைக்கு ரத்தம் கிடைக்காதபோது மயக்கம் ஏற்படுவது உண்டு. முடிந்தவரை அவர் விழுவதற்குள் பிடித்துப்படுக்க வையுங்கள். மூச்சுப் பேச்சின்றி இருந்தால் செயற்கை மூச்சு தாருங்கள். (விளக்கம் இறுதியில்). தெளிந்த பிறகு, தலையை சற்றே உயர்த்தி, குடிக்க சிறிது தண்ணீர், பழச்சாறு, காபி, டீ இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுங்கள். மயக்கத்தின் காரணம் தெரிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை குறைவால் மயக்கம் வந்தால், அரை கப் பழச்சாறு, க்ளூக்கோஸ் மாத்திரை, சில மிட்டாய்கள் போன்ற ஏதாவது கொடுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்த பிறகும் நிலை சரியாகவில்லை என்றால் மீண்டும் தரலாம். அதற்கும் குணம் தெரியாதபோது மருத்துவரிடம் செல்லுங்கள்.
செய்யக் கூடாதது: மயக்கத்தில் குடிக்கக் கொடுப்பது, உலுக்கி எழுப்ப முயற்சிப்பது.
செயற்கையாக மூச்சுத் தருவது எப்படி?
ஒருவர் மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தாலோ, மூச்சுவிடத் திணறினாலோ, மூச்சுக் கொடுக்கும் விதம்:
1. அவசர உதவியைக் கூப்பிட்டு, அவர்கள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவருக்கு உதவி கொடுங்கள்.
2. மார்புக் கூட்டின் நடுவில், ‘தி’ போல் விரியும் இடத்தில் கைகளை ஒன்றன் மேல் மற்றொன்றை வைத்து இரண்டங்குலத்துக்கு அழுத்துங்கள். ஒரு நொடிக்கு ஒன்று என்ற விதத்தில் பதினைந்து தடவை மீண்டும் மீண்டும் நன்றாக அழுத்தி விடுங்கள்.
3. தலையை பின்நோக்கி வைத்து, தாடையை நிமிர்த்தி வையுங்கள். மூக்கைப் பிடித்து, அவர் வாயை உங்கள் வாயால் மூடி மூச்சு விடுங்கள். ஒரு நொடிக்கு ஒரு மூச்சு என்ற விதத்தில் இருமுறை செய்யும்போது மார்பில் மூச்சு ஏறுவது தெரிகிறதா என்று பாருங்கள்.
4. இல்லையென்றால் இரண்டாவது கட்டளையை மீண்டும் பின்பற்றுங்கள்.
முதலுதவி டிப்ஸ்
விபத்தில் ஒருவரைக் காப்பாற்ற முற்படும்போது உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். காப்பாற்ற முனைபவர் பதற்றப்படாமல் பொறுமையாகச் செயல்படுவது அவசியம்.
* முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவும்போது, அவரைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் உடன் இருக்கிறதா என்று பாருங்கள். சரியான உதவியைத் தர அது உதவும்.
* நீங்கள் மருத்துவர் இல்லையென்றால், உங்களை மருத்துவராக பாவித்து சுயமாக மருந்துகள் உட்கொள்ளாதீர்கள். ஆன்டி-டெடனஸ் ஊசி ஒரு மாதத்திற்குள் போட்டிருந்தால் மீண்டும் தேவையில்லை.
* ‘முதலுதவி கிட்’ - இதை உங்கள் வீட்டில் தயார் நிலையில் வைத்திருங்கள். அந்தப் பெட்டியை குழந்தைகள் கையில் எட்டாத உயரத்தில் வைக்கவும்.
* வீட்டில் கண்ணுக்குத் தெரியும்படியாகவும் உங்கள் அலைபேசியிலும் ICE (IN CASE OF EMERGENCY) என்று தொடங்கி உங்கள் குடும்பத்தவர், குடும்ப மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்றோரது தொடர்பு எண்களைக் குறித்து வைக்கவும்.
* வீட்டில் வைத்திருக்கும் மருந்துகள் காலாவதி ஆகவில்லை என்பதை அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலுதவிப் பெட்டி
இதில் குறைந்தபட்சம் இருக்க வேண்டியவை:
பேண்ட் எய்ட், பேண்டேஜ், ஒட்டும் டேப், பஞ்சு, கத்தரிக்கோல் புண்ணை ஆற்றும் களிம்பு சீழ்பிடிக்காமல் வைக்கும் திரவம் தெர்மாமீட்டர் பாதிக்கப்பட்டவரைக் கலவரப்படுத்தாமல் சரியான முறையில், தெளிவான சிந்தனையோடு முதலுதவி கொடுக்க முடியுமானால், பெரும்பான்மையான நிலைகளில் நோயாளியை ஆபத்திலிருந்து காப்பாற்றி விடலாம்!