அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.
பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.
சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள்.
பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன்.
இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.
அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர்.
எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது.
சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.
“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.
“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.
இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.
அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”
“இல்லை…”
அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.
“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”
அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.
“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.
“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”
“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”
“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”
அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.
“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”
“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.
“பின்ன என்னவாம் அது?”
“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”
“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”
நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.
அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”
“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”
“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”
“சரி மாமா” என்றேன்.
“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.
அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.
அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்
“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.
பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.
இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”
“ஏய் நீ போடா…”
“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”
நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!
அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.
அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது.
எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.
நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!
”
ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.
காரணம் – ஓலைப் பட்டாசு!
நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்