Showing posts with label buvaneshvwari. Show all posts
Showing posts with label buvaneshvwari. Show all posts

Saturday, December 08, 2012

புனித வில்லி புவனேஷ்வரி - வழக்குகள்

சதியில் சிக்கினாரா புவனேஸ்வரி?

ஆளும் கட்சிப் புள்ளி மீது அதிரடிப் புகார்
 
 
திரையில் அடிக்கடி தலைகாட்டா​விட்டாலும், நடிகை புவ​னேஸ்வரியை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைதானபோது, நடிகைகள் சிலரின் பெயரைப் பட்டியல் போட்டதாக விவகாரம் கிளம்பி, கோடம்பாக்கமே கொந்தளித்தது. வழக்கில் இருந்து வெளியே வந்தவர், ஒரு கட்டத்தில் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கினார். இந்தநிலையில் மீண்டும் வம்பு, வழக்கு என்று சிக்கிக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்கின்றன.



 என்ன ஆச்சு?


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டிரைவ்-இன் தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி தன் நண்பர்களுடன் கடந்த 25-ம் தேதி இரவு படம் பார்க்கச் சென்றார். தியேட்டரில் கார் பார்க்கிங் செய்வதில் புவனேஸ்வரியுடன் வந்த வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனுக்கும் சேலையூர் குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஷயம் காவல் நிலையத்துக்குப் போனது. தப்பி ஓடிய புவனேஸ்வரி உட்பட ஏழு பேரை நீலாங்கரை போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.



புவனேஸ்வரி கோஷ்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் தாமோதர கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அன்றைய தினமே கார் மோசடி வழக்கு ஒன்றில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த புவனேஸ்வரிடம், நேரில் சென்று கைது விவரத்தை போலீஸார் கூறினர்.




இன்னொரு பக்கம், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புவனேஸ்வரி மீது ஏற்கெனவே பதிவாகி இருந்த வழக்குகளை போலீஸார் தூசி தட்ட ஆரம்பித்தனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குருநாதன் கொடுத்து இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி வழக்கில், கடந்த 5-ம் தேதி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட விவரத்தையும் புழல் சிறைக்குச் சென்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு புவ னேஸ்வரியை போலீஸார் ஆஜர் படுத்தினர். மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டதற்கு, இரண்டு நாட்கள் மட்டும் அனுமதித்தார்.



கோர்ட் வளாகத்தில் இருந்த புவனேஸ்​வரியிடம் பேசினோம். ''கேட்பதற்கு ஆள் இல்லை என்று அடுக்கடுக்காக வழக்குகளைப் போடுகின்றனர். நடிகை என்றால் கிள்ளுக்கீரையா? எங்களுக்கு ஆதரவு இல்லையா? தியேட்டர் வளா கத்தில் அடிதடி ரகளையில் நான் ஈடுபடவே இல்லை. ஒரு சாதாரணப் பிரச்னையை ஏதோ பெரிய வன்முறை சம்பவம்போலச் சித்திரிக்கின்றனர். தீவிரவாதியைப் பிடிப்பதுபோல ஸ்பெ ஷல் டீம் போட்டு என்னைக் கைது​செய் துள்ளனர். சினிமாவில் கடன், கைமாற்று வாங்காமல் தொழில்செய்ய முடியாது. இவை எல்லாம் சிவில் பிரச்னைகள். ஆனால், கொலை மிரட்டல் விடுத்தேன் என்று பொய் வழக்குப் போடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது. விரைவில் உண் மைகள் வெளிவரும்'' என்றார்.



சினிமா தியேட்டர் அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றவரும், புவனேஸ்வரியின் வக்கீலுமான தாமோதர கிருஷ்ணனிடம் பேசினோம். ''தியேட்டரில் எங்கள் கார் மீது இன்னொருவர் கார் மோதியது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் பிரச்னை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீஸார், லத்தியால் என் நெஞ்சில் குத்தி, அடித்தனர். காயத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். போலீஸார் அடித்தது பற்றி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். புழல் சிறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளேன்.



'பணப் பிரச்னைகளில் கொலை மிரட்டல்கள் விடுக்கும் எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 2011-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புவனேஸ்வரி புகார் அளித்தார். ஆனால், இப்போது ஏதோ உள்நோக்கத்தில் பழைய புகார்​களைத் தூசி தட்டி எடுக்​கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முக்கியப் புள்ளியின் குடும்பத்​தைச் சேர்ந்தவருக்கும்  புவனேஸ்​வரி குடும்பத்துக்கும் கடந்த 18 வருடங்களாகவே பிரச்னை உள்ளது. அதில் இருந்து புவனேஸ்வரி ஒதுங்க வேண்டும் என்றுதான் இந்தகைய டார்ச்சர்களை போலீஸ் மூலம் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவைப்பட்டால் அந்த பிரச்னையை வெளிப் படையாகத் தெரிவிக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.



இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, ''பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, பின்னர் அவர்களை அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில்தான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் இன்றோ, நேற்றோ பதிவான வழக்குகள் அல்ல. எல்லாம் பழைய வழக்குகள்தான்'' என்றனர்.



கடந்த 10 நாட்களில் மூன்று வழக்குகளில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி மட்டும் அவர் மீது 10 புகார்கள் சென்னை மாநகர போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி விவகாரத்தில் போலீஸ் காட்டும் வேகத்தைப் பார்த்தால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் போலவே தெரிகிறது.



- எஸ்.முத்துகிருஷ்ணன் 


படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி - ஜூ வி